மார்ச் 2019 பதாகை இதழில் வெளியான கதை. குன்றத்தின் முழுநிலா மூவேந்தரின் எரி நின்ற பறம்பு மலையை சூழ்ந்து சாம்பல் புகை பறந்து கொண்டிருந்த அந்தி மறைந்து இருள் எழுந்திருந்தது.அவர்கள் நிலவுதித்து ஔி சூழ்ந்திருந்த வெளியில் சென்று நின்றார்கள். சிறுகாட்டிலிருந்து நிமிர்ந்து நோக்குகையில் தொலைவில் என்றாலும், பறம்பு இங்கு இதோ நான்கடிகளில் என்றே அவர்களுக்குத் தோன்றியது. பரந்து கைவிரித்திருந்த கரும்பாறையில் அமர்ந்த கபிலர், “இன்றிரவு இங்கு துயின்று கருக்கலில் செல்லலாம்,”என்று கால்களை நீட்டிக்கொண்டார். அங்கவையும் சங்கவையும் ஒன்றும் நவிலாமல் பாறையில் அமர்ந்து கொண்டனர்.இலைகள் குறைந்த கிளைகளுக்கு இடையில் நிலவொளி மேலும் தெளிவு கொண்டது. ஒருத்தி,“பறம்பின் தொலைதூர தோற்றம்,” என்றாள...