Posts

Showing posts from June, 2021

இந்தியா டுடே இலக்கியஇதழ்

Image
                  கண்ணனை அழைத்தல்    1994 ஆம் ஆண்டு இலக்கியஆண்டுமலர் இந்தியாடுடேவின் இந்தஇதழும்,முன்னால் பிரதமர் இந்திராகாந்தி பற்றிய முழுஇதழ் ஒன்றும் எனக்கு மிகவும் ப்ரியமானது. இந்தப்புத்தகத்தின் தாள்கள் ஔிமங்கி,சிதையத்தொடங்கி விட்டன. ஒருஇதழ் இத்தனை ஆண்டுகள் வாசிக்கும்படி இருப்பதே வியப்புதான். ஒரு மேமாதத்தில் பழையபுத்தகங்களை பிரித்து வைக்கும் போது அய்யா இதை எடுத்துக்கொடுத்தார்.  எழுத்தாளர்கள் எஸ்.ரா,ஜெயமோகன்,இரா.முருகன்,கோமல் சுவாமிநாதன்,சி.சு.செல்லப்பா,கல்யாண்ஜீ,கலாப்ரியா,யுவன்,தெளிவத்தை ஜோசப், அம்பை,வாஸந்தி என்று நீளும் இந்த இதழின்  படைப்புகளின்,படைப்பாளர்களின்  இலக்கியமுக்கியத்துவத்தை அன்று அறியவில்லை. புலிக்கட்டம்,அனந்தசயனம் காலனி,நஞ்சு,சிலிகன் வாசல்,ஆயிரம்கால் மண்டபம்,பீலி மேலே போகிறது,வேறு வேறு,பார்வைகள்,வாடிவாசல் என்ற குறுநாவல்,காதில் வெண்டைக்காய் என்ற நாடகம் என்று அனைத்துமே மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டும் படைப்புகள். இந்த இதழில் எழுத்தாளர் அம்பையின் ' பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்' என்ற இந்தக்கதை எனக்கு மிகவும் பிடித்தக்கதை. முதன்முதலாக நான் வாசித்த அம்பை

இருளின் ஔி

Image
                            இருளின் ஔி மேகங்களில்லா வானில் ஔியை இழையாய் பிரித்து நெய்த கோடானுகோடி ஔிப்படலத்தை அழுத்தி செய்த முழுநிலா, உற்றுப்பார்த்தால் வானிலிருந்து பிரிந்து எழுகிறது. பதறி கண்மூடித்திறக்கையில் மென்ஔி கரும்பட்டுத்திரையில் வட்டஔிக்கல். ஔி ஒருஊற்றிலிருந்து பீரிடுகிறது, ஔி ஒருமாயம் என விரிகிறது. இத்தனை வார்த்தைகளாலும் ஆவது ஒன்றுமில்லை. “சந்தமாமா பாரு” அம்மாச்சி அழைத்துக் கொடுத்த வார்த்தை. ஆமாம் சந்தமாமா .  நகர்ந்து கொண்டிருக்கும் சந்தமாமா பஞ்சுப்போர்வையை போர்த்திக் கொள்ளும் முன் ஒருவாய்…ச்.. இல்லை  ஒருமுறை புன்னகைத்தேன்.

பாட்டையா

Image
                                                                            முத்தத்தின் சுவை                                                        சிறுகதை:பாட்டையா  எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மரத்திலேயே கனிந்த கனிகள் சுவையானவை என்றாலும் பறவைகள் தேர்ந்தெடுத்து கொத்திய கனிகள் இன்னும் சுவையானவை. அதுபோலவே சிறுபிள்ளைகளுக்கு மூத்தவர்கள் சொல்லும் கதைகளும். அதனாலேயே குழந்தைகள் பெரும்பாலும் சிலகதைகளை மீண்டும் மீண்டும் “அந்தக்….கதை…சொல்லு” என்று கேட்பார்கள்.அந்த கதைசொல்லி தாத்தாக்களும் பாட்டிகளும் நம் உறவாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவர்களே ஒரு சமூகத்திற்கான முன்னவர்கள். எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமியின் ‘பாட்டையா’ என்ற கதை ஊருக்கே தாத்தாவான கதைசொல்லியைப் பற்றியது. ஒவ்வொரு கிராமத்திலும் அப்படி ஒருவர் இருப்பார் அல்லது இருந்தார். அவரை “காந்திகாலத்தில பெறக்கவேண்டிய மனுசன்,” என்ற ஒரே வாக்கியத்தில் அலட்சியமாகவும் பெருமையாகவும் ஊருக்குள் சொல்வார்கள்.  இந்தக்கதையில் வரும் அரிஞ்சர் பாட்டையா போன்ற பாலுப்பிள்ளைதாத்தா எனக்கும் ,என்அய்யாவுக்கும் ,ஊரில் சிலருக்கும் கதைசொல்லியாக இருந்தார். என்நி

வெயில் பறந்தது

Image
                    சின்னஞ்சிறு கதிர்கள் வெயில் பறந்தது என்ற தலைப்பை பார்த்ததும்,வெவ்வேறு அதிகாலைகளின் நிறத்திட்டுக்கள் நினைவிற்கு வந்தன. அங்கங்கே ஔியாக எழுந்து பறக்கும் வெயில். கவிஞர் மதார்  மதாரின் கவிதைகள் ஒருகாட்சி அல்லது நிகழ்ச்சியை காட்டி, அதுநீளும் கவிமனதின் வேறொரு தளத்தை சொல்கிறது. புறமாக நிகழ்வது அனைவருக்கும் அகத்திலும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா. அந்தவகையில் இந்தக்கவிதைகள் ஒருகாட்சியின் வழக்கமில்லாத இன்னொரு சாத்தியத்தை காட்டுவதால் வாசிக்கும் தோறும் புன்னகை எழுகிறது. வாசல் தெளிப்பவள் மழையாக்குகிறாள் நீரை .... என்று தொடங்கும் கவிதையை மதாரின் கவிதைகளின் பாவனையாக கொள்ளலாம். கைநீரை மழையாக்கும் கரங்கள். முகமறியா காற்றில் என்ன அழகைக்கண்டு இப்படிக் கொஞ்சிக் கொஞ்சி பறக்கிறது வண்ணத்துப்பூச்சி வண்ணத்துப்பூச்சியின் அழகை கண்டு, பேசி அதை எழுதியது போக, அது இத்தனை அழகாக இருக்க வேண்டுமென்றால் அதுகாணும் அழகென்ன? என்று கவிதை கேட்கிறது. வண்ணத்துப்பூச்சிக்கு உலகே வண்ணமயமாக இருக்கலாம் என்ற சாத்தியம் உலகையே ஒரு ஓவியப்பலகையின் வண்ணங்களாக்குறது. கூப்பிய கரங்களில் மன்றாட எதுவுமில்லை.

சக்யை

Image
 ‘சக்யை’ என்னுடைய முதல் தாெகுப்பு. ஜனவரி 2019 ல் வெளியாகியது. மூன்றாவது தொகுப்பான 'கடுவழித்துணை' க்கு பிறகு முதல்தாெகுப்பிற்கு முகமறியா வாசகியின் பகிர்வை காண்பது நிறைவளிக்கிறது. கோமதிக்கு என் அன்பு. சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர் : கமலதேவி ‘வாசக சாலை’  வெளியீடு கமலதேவி அவர்களின் இந்த சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்துமே பூடகம் பேசுபவை. நேரடியாகக் கதை சொல்லலைப் பின்பற்றியவை ஆனாலும் ஆழமான வாசிப்பை வேண்டுபவை. பாய்ச்சல் நடையில் மொழி கதைகளில் ஓடுகிறது.. பெரும்பாலான தருணங்களில் இந்தத் தாவிப் பாய்ந்து கதை சொல்லும் தன்மையால் கதைப் போக்கினில் நாம் தடுமாறிக் கொண்டு சமநிலைக்கு வருவதற்காக மீண்டும் கடந்து போன வாக்கியங்களுக்கு வந்து விரும்ப வேண்டியுள்ளது.. கதாசிரியருக்குத் தமிழ்த் தொல்லிலக்கியங்களில் ஆழ்ந்த புரிதலும் பழக்கமும் இருப்பது அவரது மரபுசார் சொல்லாடல்களில் வெளிப்படுகிறது.. எழுத்தாளர் சிறந்த கதைசொல்லி என்பதற்கு கதைக் களங்களும் கருக்களும் கட்டியம் உரைக்கின்றன. கதாசிரியரே முன்னுரைப்பது போல¸’ அவரைப் பாதித்த மனிதர்களின் கதைகள்.. அவற்றை நிகழ்வென்றும் புனைவென்றும் அடையாளப் படுத்தலாகும்’

கவிதைகள்

Image
                                                                                        மேய்ப்பனின் புல்லாங்குழல் இசை நான் உன் லிபியில்லா மொழியென காற்றில் பரவுகிறேன். ஒரு மந்திரக்கோல் சுழற்றலாக யுகங்கள் மாறிய மேடையில் நீ எங்கே?                               மேய்ப்பன் கையிலிருக்கும் ஆட்டுக்குட்டி எத்தனை சிலுவைகள் பிதாவே! முதுகில் தலையில் கரங்களில் வயிற்றில் கால்களில் இறக்கிவைத்து இளப்பாற முடிந்தவை. இறக்கி வைக்க முடியாத ஒன்றுடன் உன்னிடம் வருகிறேன்.. அது உன்நெஞ்சில் குருதியீரத்துடன் எரிகிறது.