Posts

Showing posts from June, 2020

கவிதை:நீரென எழும் காலம்

                                                               நீரென எழும் காலம் எங்கும் நீர் நிறைந்து நப்புத்தட்டி முடங்கிக் கிடக்கிறது ஊர். தட்டியெழுப்ப எண்திசைகளிலிருந்தும் எழும்சாமிகள் உடுக்கையோடும் முழவுகளோடும்  தெருக்களில் நடமாடும் இரவுகளில்… அவன் குளிரென எழுகிறான்.  ஒவ்வொரு வீடாக திண்ணையில் அமர்ந்து இற்றுப்போனவைகளை சேர்த்துக்கட்டி வடக்குநோக்கி விரைகிறான். சாமிகள் செய்வதறியாமல் வழிவிட்டு நிற்கின்றன. ஊரெங்கும் பரவிக்கிடக்கும் ஈரக்குளிரை இருளோடு போர்த்திக்கொண்டு ஒலிக்காத தண்டைகளுடன்  நடந்து செல்கிறான். அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஊர் தன்னை உலுக்கிக்கொள்கிறது.                                                                                                                                                        

கதை

Image
   சிதை              சிறுமேட்டிலிருந்த நாதமாளிகையின் பின்புறம் அந்திச்சிவப்பில் எரிந்துகொண்டிருந்தது இலங்கை.கருங்கல்மாளிகையை சுற்றியோடிய சிற்றோடையில் கால்களை நனைக்கையில் ரணங்கள் எரிந்தன.இருகரைமேட்டிலிருந்த செடிகளில் புலரிமலர்கள் குவிந்தும் அந்திமலர்கள் மென்முகைகள் பிரித்துமிழ்ந்த மணத்தை காற்று தன்னுள் நிறைத்துக்  கொண்டது. முகட்டிலிருந்து விழிதாழ்த்தி மென்நூலாடையை தோளில்வீசியபடி மளிகையின் படிகளிளேறிய வேந்தன் காத்திருந்த தாதியிடம் மைய அகலை கைக்காட்டினான்.படிகளை கடக்கையில் மாளிகை பார்வைபுலத்தை சூழ்ந்து மெல்லிருள் கவிந்தது.படிகள் தண்ணென பாதங்களை ஒற்றின.நாளை என்ற ஒன்று எதற்கு? இன்றோடு நிறைவடைய வேண்டியது....எண்ணியபடி வாயிலில் சற்றுநின்று  பின் நடந்தான். உள்ளே தாமரைத்தூண்கடந்து,செங்காந்தள் தூணருகே நின்றான்.விரிந்த ஒற்றைமண்டபத்தைச் சுற்றி நோக்கினான்.ஆம்பல்,பலாசம்,தோன்றி....புன்னகைத்துக்கொண்டான்.கல்லாகவும்....பின்னே மலராகவும்....”நாளை வா” என்றவன் அளித்த வெகுமதி.கைகளை விரித்துமூடி எண்ணங்ககளைத் தடுத்தான். அல்லித்தூணருகே மேடையில் சுடரொளியில் ஔிர்ந்தது பொன்வீணை.சுடரசைகையில் மாறிமாறி அமைந்து...ஆம

தன்னை எழுதுதல்:வாசகசாலை இதழில் வெளியான வாசிப்பனுபவக் கட்டுரை

Image
                                          தன்னை எழுதுதல் நாவல்:நிலாக்கள் தூரதூரமாக ஆசிரியர்:பாரததேவி வாசிப்பனுபவம்:கமலதேவி நிலாக்கள் தூரதூரமாக என்ற தன்வரலாற்றுப்புதினம் உண்மையான வாழ்விற்கு மிக நெருக்கமாக இருக்கிறது.எந்த சாயலுமில்லாத கதைசொல்லியின் உண்மையான குரலைப் போன்ற மொழிநடை.அம்மாக்களின் மடியில் படுத்துக்கொண்டு அவர்களின் கதையை அவர்களே சொல்லக் கேட்பதைப் போன்ற அனுபவத்தை இப்புதினத்தை வாசிக்கையில் அடைவோம்.துளியும் விலகிப் போகாத ஒருநெருக்கமான வாசிப்பனுபவம். தந்தையோடு அறிவுப் போகும் என்ற சூழலில் புதினம் துவங்குகிறது.பெரும்பாலும் கிராமங்களில் உறவில், ஊரில் ,பாட்டி ,அத்தை, சித்தி சொன்னதைப் போன்ற கிராமத்து வாழ்க்கைப்பாடுகளே இந்தப்புதினத்தின் கதையம்சமாக இருக்கிறது  . கோவில்பட்டியை சுற்றிய நிலக்காட்சிகளின் வசீகரம் வாசிப்பனுபவத்தில் உடன்வந்து கொண்டிருக்கிறது. இன்று குழந்தைகளுக்கு பெரும்பாலும் ஒரே வாழ்க்கை என்று எனக்குத் தோன்றும்.கிராமத்திலும் பிள்ளைகளை வெளியில் பார்ப்பது குறைக்கிறது.எல்லாம் தொலைக்காட்சிகள் முன் தவமிருக்கின்றன.அலைபேசிகள் இப்போது இலவச இணைப்பாக, கண்ணனை உரலில் கட்டிவைத்ததைப

சிறுகதை

Image
சக்யை ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்  பாடி பள்ளியெழுச்சி கொள்ள அவன் அரங்கத்தில் இல்லை.இன்று தேய்பிறை ஆறாம்நாள்..மூன்றாம்நாள் சந்திவேளையில் மணிவெளிச்சத்தோடு மாதவனும் மறைந்துவிட்டான்.அரங்கனில்லா அரங்கம் . “மனம்கொள் மாதவனே எழுந்தருள்வாய் தனம்உறை மார்பனுக்கு மங்களம்” என மனதினுள் ஒலிக்க வெள்ளையம்மாள், செங்கரையிட்ட வெண்பட்டு புறத்தே ஒலிக்க கரவுவழியின் இருளில் தோழியின் கைவிளக்கு வழிகாட்ட நடந்து அந்த கருங்கல் அரங்ககினுள் நுழைந்தாள்.புலரிமென்னொளி சாளரத்தின் வழி மூங்கில்களென  சரிந்திருந்தன. விரிக்கப்பட்ட நாணல்பாய்களில் அரங்கத்தின் காவலர்களும் ,அரங்கனுக்கு உரிமையானவர்களும் வந்து அமர்ந்தபடியிருந்தார்கள்.மேற்குநோக்கியிருந்த பாயில் வெள்ளைம்மாள் அமர ,தோழி தூணின் பின்னால் நின்று கொண்டாள். தனியள் என்ற எண்ணம் வெள்ளையம்மாளை நிலையழிக்க விழிகளைச் சுழற்றினாள்.கண்ணசைக்கையிலேயே ஓடிவரும் இவன் ...அன்று களித்தோழனான அவனே என அவள் நெஞ்சம் மயங்கியது. மெல்லியதோள்கள் ,செவிப்புற மென்கன்னத்து இள மயிர்கள்,செப்பு உதடுகள்…என்று அவள் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மடியிலமர்ந்து கொண்டான்.கரங்களை அவன் மா