Posts

Showing posts from May, 2023

சுவை

Image
  மழையையே பார்த்துக்கொண்டு கைகளை மறந்து போனேன்... சட்டென்று குனிந்து பார்த்தேன் என் வெல்லக்கட்டி எப்போதோ கரைந்து போயிருந்தது. வெல்லக்கட்டியை வைத்திருந்த கையையும் வழிந்தோடும் நீரையும் மாறி மாறி பார்த்தேன். கலங்கல் நீரில் ஒன்றுமில்லை. குழிந்திருந்த மறுகையின் உள்ளங்கை நீருக்கு குளிரின் சுவை.

அகமும் புறமும் : 20

Image
   2023  மே 1   வாசகசாலை இணையஇதழில் வெளியான கட்டுரை: அகமும் புறமும் நிறைவு   காதலெனும் ஔி கவிதை:1 மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகில் எருக்கங் கண்ணியும் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ் கொளினே குறுந்தொகை : 14 பாடியவர் : பேரெயின் முறுவலார் திணை : குறிஞ்சி தலைவன் கூற்று. நற்றிணை, குறுந்தொகை,கலித்தொகையில் மடலேறுதல் குறித்த பாடல்கள் உள்ளன. மடல் ஏறுதல் பெருந்திணைக்கு உரியது. பெண் மடலேறுதல் இல்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது. பெருந்திணை என்பது பொருந்தாக்காமம். ஒரு தலைக்காதல் பொருந்தாக்காம வகையை சேர்ந்தது.  தலைவி தன் காதலை ஏற்காத நிலையிலோ அல்லது தலைவியின் இல்லத்தார் தன் காதலை ஏற்காத போதோ தலைவன் மடலேறுகிறான். என்றாலும் உடன்போக்கு என்ற வழக்கம் உள்ளதால் குடும்பத்தாரின் ஏற்புக்காக தலைவன் மடலேறும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று நினைக்கிறேன்.  தலைவன் பனைமரத்தின் கருக்கு ஓலையால் செய்யப்பட்ட குதிரையில் ஊர் மன்றிற்கு வருகிறான். சிறுவர்கள் அந்தக்குதிரையை இழுத்து வருவது மடலேறுதலின் வழக்கம்.  தலைவன் தான் விரும்பும் தலைவி யார் என்று ஊருக்கு அறிவிக்கிறான். அவளை பழித்துக்கூறுகிறான். தலைவ

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

Image
  பெண்கல்வியிலிருந்து தன்னறம் நோக்கி https://www.jeyamohan.in/182820/ மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் எழுத்தாளர் லோகமாதேவி,ஜெயந்தி ஆகியோர் எழுத்தாளர் ஜெயமோகனிற்கு எழுதிய கடிதங்கள் உள்ளன. அவர்களுடைய கல்வி வேலை சார்ந்த போராட்டங்களை,கல்வியால் தாங்கள்  பெற்றவைகளை எழுதியிருந்தார்கள். உண்மையில் அவர்களுடையது நிறைவான வெற்றிக்கதைகள்.                             எழுத்தாளர் லோகமாதேவி லோகமாதேவியை கவனிக்கும் போது 'இந்த மாதிரி நானும் பள்ளி அளவிலாவது ஆசிரியராகியிருந்திருக்க வேண்டும்' என்று எனக்குத் தோன்றும். ஆனால் மூன்று நான்கு முறை ஆசிரியர் தகுதி தேர்வுகள் எழுதியும் ஒருமதிப்பெண் ,இரண்டு மதிப்பெண்கள் என்று வழக்கம் போல கணிதம் காலைவாரிவிட்டது . தனியார் பள்ளி வேலை பற்றி உங்களுக்கே தெரியும். ஒரு மாதிரி சக்கையாகப் பிழிந்து வீட்டிற்கு அனுப்புவது. என் உடல்நிலைக்கு ஒத்துவரவில்லை. இரு வண்டிகளை ஒரு மாட்டை வைத்து ஓட்டுவதற்கு இயலாத என் திறமையின்மையும் ஒரு காரணம். இவர்கள் இருவரின் வாழ்க்கைக்கு கொஞ்சம் தள்ளி இன்னொரு பக்கம் உள்ளது என்பதற்காக இந்தப்பதிவை எழுதுகிறேன். என்னுடையது  ஒரு மாதிரி லௌகீகத்திற்கு அரு

ஆலய சிற்பங்களின் நிர்வாணம்

Image
          ஆலயசிற்பங்களின் நிர்வாணம்      [சதீஸ்குமார் சீனிவாசன் கவிதைகள்] நாம் சில புத்தகங்களை விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன் தான் கவனித்து வாங்குகிறோம். ஏற்கனவே எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் சதீஸ்குமாரின் கவிதைகளை அவ்வப்போது வாசித்திருந்தாலும் விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது அறிவிக்கப்பட்டவுடன் தான் 'உன்னை கைவிடவே விரும்புகிறேன்' கவிதைத் தொகுப்பை வாங்கினேன். தலைக்குப்புற விழுந்த மாதிரி தான். புத்தகத்தை அங்கங்கே திருப்பியவுடன் முகத்தில் அடித்து வெளியே தள்ளிவிட்டது. சாமிஅறையில் அமர்ந்து வாசிப்பதே வழக்கம் என்பதால் கைநீட்டும் இடத்தில் இருந்த குட்டிகிருஷ்ணரின் அருகில் வைத்துவிட்டேன். முகநூல் கணக்கு இல்லை என்பதால் நிசப்தனை எனக்கு அறிமுகம் இல்லை. இந்த மாத புத்தக பட்ஜெட்டில் 160 ரூபாய் [அஞ்சல் செலவு உட்பட] வம்பாய் வீணாக  போச்சு என்ற எண்ணம் மறுபக்கம். அனைத்தும் சேர்ந்து 'டிப் டிப் டிப்' தொகுப்பை பற்றிய நினைவேக்கமாக மாறிவிட்டது.  இன்னமும் அது டெடி பொம்மைக்கு அருகில் தான் இருக்கிறது.  ஒரு வாரமாக இந்த புத்தகத்தை கிருஷ்ணனின் பக்கமிருந்து எடுக்காமலே இருந்ததால் அம்மா கடுப்பாகி,'ஒரு

அகமும் புறமும் : 19

Image
      2023 மார்ச்  16 வாசகசாலை இணைய இதழில் வெளியான    கட்டுரை.        அகநக நட்பு யாழொடும் கொள்ளா,பொழுதொடும் புணரா, பொருள் அறிவாரா; ஆயினும் தந்தையர்க்கு அருள் வந்தனவால்,புதல்வர்தம் மழலை: என் வாய்ச் சொல்லும் அன்ன_ ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி! நீ அருளன்மாறே புறநானூறு : 92 பாடியவர்: ஔவையர் பாட்டுடைத்தலைவன்: அதியமான் நெடுமான் அஞ்சி திணை : பாடாண்திணை துறை : இயன்மொழி ஔவையார் அதியமானை பாட்டுடை தலைவனாக்கி ‘எண்தேர்செய்யும் தச்சன்’ [புறம் 87] போன்ற புகழ் பெற்ற பலப்பாடல்களைப் பாடியுள்ளார். உவமை அழகுகள் மிக்க பாடல்கள் அவை.  தனக்கு கிடைத்த அரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவைக்கு கொடுத்ததை கூறும் பாடல் உள்ளது. புலால் நாற்றமடிக்கும் என்  தலையை அவனுடைய நறுமணம் மிக்க  கையால் தடவுவான் என்று ஒளவை ஒருபாடலில் சொல்கிறார். ‘முழவுத்தோள் என் ஐயை’[புறம் 89] என்ற வரியில் தலைவனாக,இறைவனாக,தந்தந்தையாக அவனைப் பாடுகிறாள். அதியமானை ‘என் ஐயை’ என்று இன்னும் சில பாடல்களிலும் கூறுகிறாள். ‘நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை’[ புறம் 94] என்ற பாடலில் அவன் எங்களுக்கு நீர்த்துறையில் சிறுவர்கள் ஏறி விளை

அம்பையின் படைப்புலகம் : 1

Image
 பிப்ரவரி 2023 நீலி இணைய இதழில் வெளியான கட்டுரை. எழுத்தாளர் அம்பை அவர்களின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து….                 விழிப்பிற்கான சொல் ‘ஒரு வேளை நீங்கள் அந்த ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம். புதுக் கண்டங்களை கண்டுபிடித்திருக்கலாம். குகைகளுக்குள் ஓவியம் தீட்டியிருக்கலாம். பறந்திருக்கலாம். போர்கள்,சிறைகள்,தூக்குமரங்கள்,ரஸாயன யுத்தங்கள் இல்லாத உலகத்தை உண்டாக்கியிருக்கலாம். நீங்கள் எங்கே போய்விட்டீர்கள் ஜீஜி?’ என்ற எழுத்தாளர் அம்பை அவர்களின் வரிகளுடன் இந்தக் கட்டுரையை தொடங்குகிறேன். வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற கதையில் வரும் வரிகள் இவை. பொதுவாகவே அம்பையின் கதைகளின் ஆதாரமான, பெண்களை நோக்கிய அம்பையின்  சொற்கள் இவை. ஒரு பிரார்த்தனையைப்போல ஒரு வேண்டுகோளைப்போல பெண்களை நோக்கி ஒலிப்பவை.  இந்த சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினோரு கதைகள் உள்ளன. நான் முதன்முதலில் வாசித்த பெண் எழுத்தாளர் அம்பை. பதினாறு வயதில் என்று நினைக்கிறேன். அதுவரை எழுத்தாளர்கள் என்றால் ஆண்கள் தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எழுத்தாளர் என்றில்லை பேருந்து ஓட்டுனர், நடத்து

வெயில்நேர மதியம்

Image
விழித்துப்பார்க்கும் போது அந்தரத்தில் மரக்கிளைகள், அங்கங்கே இலைகள் வழிவிட்ட ஔிவில்லைகள், மிச்சமெல்லாம் நிழல். கண்களை மூடினால் இலைகளின் சலசலப்பு காதுகளையும் மறந்தால் காற்றின் தொடுகை. 'நின்னா சும்மா மரம் மாதிரி நிக்கனும்'