Posts

Showing posts from June, 2022

சினிமாவில் பொருட்வயப்பிரிவு

Image
 சங்ககாலத்திலிருந்து இன்று வரை பொருட்வயப்பிரிவு ஒரு நிரந்தர வாழ்வியல் சிக்கல். இன்றைய உலகமயமாக்கல் காலத்தில் இந்தப்பிரிவு அதிகமாகி உள்ளதாக நினைக்கிறேன். இயக்குனர் ராம் இந்தப்பாடலில் அதை அழகாக காட்சிபடுத்தியுள்ளார். காட்சிகள் கவிதைகளாகும் பல தருணங்கள் இந்தப்பாடலில் உள்ளன. என்றைக்குமே எனக்கு சலிக்காத ஒரு பாடல். இந்தப்பாடலில் மற்றும் படத்திலும் ராம் மற்றும் செல்லம்மா இருவரும் தந்தை மகளாகவே மாறியிருப்பார்கள். இந்தப்பாடலில் வருகிறமாதிரி சைக்கிளின் முன் கம்பியில் அமர்ந்து அய்யாவுடன் காடு மேடெல்லாம் சுற்றி இருக்கிறேன். கம்பியில் அமர்ந்தால் பின்புறம் வலிக்கும். அதற்காக ஒரு ஆரஞ்சு நிற தேங்காய்ப்பூ  துண்டு மடித்து வைப்பார். நாள்முழுதும் சைக்கிளில் கொல்லிமலையடிவாரம்,வயல்பாதைகளில் சுற்றி இருக்கிறோம். இந்த மாதிரி சைக்கிளில் அமர்வது கோழியின் சிறகிற்குள் கோழிக்குஞ்சுகள் இருப்பதை ஒத்தது. இந்தப்பாடலிற்கு முன் ராம் சில வசனங்களை சொல்வார்.  சைக்கிளில் தந்தையுடன் அதிகம் பயணித்த பிள்ளைகளும்,அந்த அளவு ஆரோக்கியமாக இருந்த தந்தைகளும் பாக்கியவான்கள் என்று எனக்குத்தோன்றும். ஒன்பதாம் வகுப்பு படிக்க நான் இரண்டு ஊர்

பூமுள் கதைகள்

Image
     எழுத்தாளர் கா.சிவா அவர்களுக்கு அன்பும் நன்றியும். சொல்வனம் இணையஇதழில் வெளியான கட்டுரை. பூமுள் கதைகள்- கமலதேவியின் "குருதியுறவு" நூலை முன்வைத்து      எழுத்தாளர் கா.சிவா           திருச்சிக்கும் நாமக்கல்லுக்கும் இடையே கொல்லிமலைக்கு அருகே வசித்துவரும் கமலதேவியின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு "குருதியுறவு". இந்நூலில் முன்னுரை, என்னுரை, ஆசிரியர் குறிப்பு எதுவுமில்லாமல் பதினேழு கதைகள் உள்ளன. பின்னட்டையில் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி எழுதியுள்ள குறிப்பிலிருந்துதான் ஆசிரியரைப் பற்றிய சிறிய அறிமுகம் கிடைக்கிறது. அவர் ஆசிரியையாக பணியாற்றுபவராக  இருக்கக் கூடும்  என்று  சில கதைகளை வாசிக்கும் போது தோன்றுகிறது.         பதினேழு கதைகளில் "வேலி" என்ற ஒருகதை மட்டும்  மிகுபுனைவாகவும், "குன்றத்தின் முழுநிலா" கதை வரலாற்றுக் கதையாகவும், "ராதேயன்" புராணக் கதையாகவும் உள்ளன. மற்ற கதைகளெல்லாம் யதார்த்த வாழ்வை உரைப்பதாக  உள்ளன.         இத்தொகுப்பை வாசிக்கத் தொடங்கும்போதே ஈர்ப்பது இதன் மொழி. ஒருவித மாயத்திரை விரிக்கும் புகை மூட்டம்போல. இல்லையில்லை அது போன

தெருவெங்கும் அவளின் நடமாட்டம்

Image
 2018 ஆகஸ்ட் மாத சொல்வனம் இதழில் வெளியான சிறுகதை தெருவெங்கும் அவளின் நடமாட்டம் வீட்டைஅடுத்த தென்னைமரத்துத் தெருவில் இப்பொழுதெல்லாம் எட்டுமணிக்கே கதவை சாத்திவிடுகிறார்கள்.இங்கிருந்தே ஆள் நடமாட்டமில்லாதத் தெருவை மாடியிலிருந்து பார்க்கையில், தென்னைமரங்களின் கீற்றுகள் தங்களுக்கு அடியில் தங்கியிருக்கும் இருளைத்  தலையாட்டிக் கலைப்பது போல இருந்தது.நித்யா சுற்றும் முற்றும் பார்த்தாள். அனேகமாக மாடிகளில் எவருமில்லை.இந்த வெயில்நாட்களின் துவக்கத்தில் தெருவில் கட்டிலில் படுத்திருக்கும் வயசாளிகளைத்தவிர, மாடிகளில் ஆள்நடமாட்டமே இல்லை.மனித மனதை என்றவென்று சொல்வது.கள்ளமற்று திரிந்த சிறுமிகளின் மனதிலும் பயத்தை ஊன்றி நிறுத்திவிட்டார்கள்.குழந்தைகள் மட்டும் எதுவும் அண்டாத தெய்வங்களாக எப்போதும் போல, அவர்கள் நேரத்திற்கு அழுது சிணுங்கிக் கொண்டிருக்கும் சந்தடிகள் கேட்டன. குடித்துவிட்டு தெருவில் பெண்களைப் பற்றியே பேசும் குரல்கூட பத்துநாட்களாக கேட்கவில்லை.அவன் குடித்துவிட்டு பேசினானா இல்லை வேண்டுமென்று பேசினானா என்ற ஐயம் தீர்ந்துவிட்டது. அசையாத கிணற்றுநீரில் விழுந்த கல்லால், நிதானமாக கலையும் நீர் போல அன்று பத்தும

பதி : சிறுகதை

Image
    ஏப்ரல் ஆவநாழி இதழில் வெளியான சிறுகதை                                   பதி கிணறு வெட்டுவதற்கு நீரோட்டம் பார்க்க சென்ற போடி நாயக்கர் தாத்தா பின்மதிய நேரத்தில் அந்த குறுக்கு சந்தில் நுழைந்து தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார்.  அந்தசந்தில் இருந்த ஐந்தாறு வீட்டுப் பெண்களில் யார் அவரிடம் பேசுவது என்று தயங்கினார்கள். பணம் இல்லாத கொடுமையிலும் இந்தக்கிழவர்  கட்டினவளை வைத்திருந்த இருப்பு இந்த சந்தில் உள்ள ஆண்பிள்ளைகளுக்கு சாவல் விடுவது மாதிரிதான். தினமும் யார் வீட்டிலாவது அவர் பெயர் அடிபடும். “கல் ஒட்டர்தான்…மனுசன் பொண்டாட்டிய எப்படி வச்சிருக்காரு. தொண்ணூறு வயசிலயும் காலையில சாணி கரைச்சு வாசல் தெளிக்கிறாரு…தண்ணியெடுத்து வைக்கிறாரு…”என்று தெருப்பெண்கள் தங்கள் வீட்டில் சலித்துக் கொள்வார்கள். இந்த சந்தில் உள்ள வீடுகளில் தனக்கென நிலமில்லாத, சரியான வேலையில்லாத, சொந்த வீடில்லாதவர் தாத்தா மட்டும்தான். இந்த பழையகாலத்து  ஓட்டுவீட்டிற்கு அவர் வாடகைக்கு வந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. இது வயலில் குடியிருக்கும் செங்காணியப்பனின் வீடு. எலிகளாலும், பெருக்கான்களாலும் வீடு அழிகிறது என்று வாடகைக்கு விட்

உடுக்கை ஒலி: சிறுகதை

Image
   மே மாத வாசகசாலை இணைய இதழில் வெளியான சிறுகதை    உடுக்கை ஒலி அதிகாலையிலேயே ‘தக்குபுக்கான் தம்பி சடையன் பூசாரி செத்து போயிட்டாங்க’ என்று சக்திமாமா அலைபேசியில் தகவல் சொல்லியபடி சென்றார். மாடி ஏறி பார்த்தேன். அடுத்த சந்தில் கும்பலாக இருந்தது. கீழே வாசலில் நின்று,“தக்குபுக்கானோட கடைசி தம்பி தானே இவுங்க,”என்று ஒரு கிழவி கேட்டுக் கொண்டிருந்தது. “அண்ணன் தம்பி நாலு பேரு..ஒரு பிறந்தவ..இந்த மாமாவுக்கு நூறுவயசுக்கும் கூடுதலா இருக்கும்,”என்றார் ஐயாண்டி பாட்டனார். பின் நடுங்கும் குச்சியை பிடிமானமாகக் கொண்டு வாசல்படியில் அமர்ந்தார்.  வீட்டுக்கிழவி, “எனக்கே தொண்ணூறுக்கும் கூடுதலா  இருக்கும்…சடையன் மாமா எனக்கும் பத்து வருஷமாச்சும் கூடுதலா இருப்பாக,” என்றது. ஒன்பது மணி போல வாசல்படியில் பத்து பேருக்கும் மேல் வயசாளிகள்  கூடியிருந்தார்கள். “போய் சோறு தின்னு,” என்று ஒரு குரல் கேட்டது. “நேரங்கடந்து போச்சு. சோறு திங்க முடியாது ஆண்டி..திகட்ட சீனி போட்டு ஒரு தம்ளரு பாலு குடிச்சிட்டேன்,” என்று வீட்டுக்கிழவி பதில் சொல்லியது. தெருவில் இந்தமாதிரி வயசாளிகள்  குறைந்து விட்டார்கள். என் சிறுவயதில் அத்தனை வீட்டிலும் இ

சிறுகதை: பாலுவிலிருந்து பாபுவிற்கு

Image
 2018 ஜூலை சொல்வனம் இதழில் வெளியான சிறுகதை பாலுவிலிருந்து பாபுவிற்கு பனிரெண்டாம் வகுப்புப் பிள்ளைகள் டீயூசன் ஹாலிலிருந்து படிகளிலிறங்கி தோட்டத்தின் நடைபாதையில் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.பாலு வெளியே வந்து படிகளில் அமர்ந்து தானே இல்லையென்பது போல தலையாட்டிக் கொண்டான். “தேங்க்யூ சார்,”என்று படிகளில் இறங்கிய சிவாவைப் பார்த்து பாலு தலையாட்டினான்.தன் நீல நிற டீசர்ட்டிலிருந்த சாக்பீஸ் துகள்களை  தட்டிவிட்டான். “பேப்பர் கட்டை நைனா டேபிள்ல வக்கறேண்ணா,”என்றபடி சுபா படிகளில் குதித்திறங்கினாள்.கீழே வராண்டாவில் வீல் சேரிலிருந்து நைனா, “காலேஜ்க்கு நேரமகல,”என்றார்.அவன் கீழே குனிந்து தலையாட்டினான். கிட்டத்தட்ட பத்துநாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வினோ,மதிஅக்கா,மணி,மனோவும் வந்து போனதிலிருந்து மனது தத்தளித்துக் கொண்டேயிருக்கிறது.இப்படி கண்ட நேரத்தில் உட்கார்ந்திருப்பவனல்ல பாலு.கைப்பிடி சுவரைத் தாண்டி வந்த எட்டுமணிவெயில் கண்களை கூசச் செய்தது.கண்ணாடியை வேட்டியில் துடைத்து  துடைத்துமாட்டினான். இவர்கள் வந்து போன மறுநாள் கல்லூரி இடைவேளையில்  மணி, “திமிரு பிடிச்சவனே..இப்படி ஒருஅம்மா இருக்கயில பெரிய இவனாட்டம் வ