Posts

Showing posts from September, 2022

அகமும் புறமும் : 4

Image
                வாசகசாலை இணைய  இதழில் செப்டம்பர் 1 ல் வெளியான கட்டுரை.             கொற்றவையாக்கும் காதல் முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்! ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு ஆ! ஒல்! கூவுவேன் கொல்! அலமர அசைவு வளி அலைப்ப என் உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே குறுந்தொகை_28 பாடியவர்: ஔவையார் திணை: பாலை வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன் குறித்தகாலத்தில் மீளாமையால் உண்டான துயரை தலைவி தோழிக்கு உரைத்தது. இயற்கை நிகழ்வு ஒன்றின் மீது உணர்வுகளை ஏற்றிக்கூறும் சங்கக்கவிதைகளில் இதுபோன்ற நேரடியான கவிதையை கண்பது அரிது. ‘நீர் வார் கண்ணை’  ‘உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி’  ‘நோம் என்றால் நோம் நெஞ்சே’  என்ற வரிகளுக்கு மத்தியில் முட்டுவேன்,தாக்குவேன் என்று உரத்துக் கூறி ‘மனதின் முச்சந்தியில்’ வந்து நிற்கும் குரல் இது. சங்கப்பாடல்களில் காதல் என்ற சொல் இல்லை. காமம் என்ற சொல் மட்டும்தான். இன்று நாம் காதல் என்றும், காமம் என்றும் பிரித்து கூறும் உணர்வுகளை இந்தப்பாடல்களில் உள்ள வரிகளை முன்பின்னாக வைத்து புரிந்து கொள்ளலாம். சங்ககால சொல்லாட்சியில் காதல் உணர்வுகளை ‘நோய்’ என்ற சொல்லால் குறிப்பது குறித்து எனக்க

உயிர்த்தெழும் சொற்கள்

Image
 நினைவு நாளான 16 ம் தேதி எழுதி இன்றுதான் வெளியிட முடிந்தது. இன்று கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் நினைவுநாள். ஏனோ இறப்பிற்கு பின் கவிஞர்கள் மனதிற்கு இன்னும் நெருக்கமாகிறார்கள்.  என் படுக்கையின் கைத்தொடும் இடத்தில் கவிதை புத்தகங்கள் இருக்கின்றன.  விழித்ததும் கவிஞர் தேவதேவனோ,பிரான்சிஸோ,சங்கக்கவிதைகளோ இன்னும் யார் யாருடைய கவிதை வரிகளையோ தான் முதலில் வாசிக்கிறேன். வரிகள் எல்லாம் மறந்து விடுகின்றன. ஆனாலும் ஆழத்தில் எங்கோ சென்று அதன் உணர்வு நிலைகள் மட்டும் என்னை ஆள்கின்றன என்று நினைக்கிறேன். என்னால் ஒரு வரியைக்கூட திருப்பி சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். என்னுடைய பதினாறாவது வயதிலிருந்து  கவிதைகளை வாசிக்கிறேன்.  என் தங்கையின் திருமணத்தன்று காலையில் வாசிக்க முடியவில்லை. அனைவரும் அயர்ச்சியில் உறங்கும் இரவில் ,கழிவறையின் முன்பிருந்த சிறு வெளிச்சத்தில் கவிதை வாசித்தேன். எதிர்பாராத விதமாக அன்று பிராசிஸ்ஸின் கவிதை புத்தகம் தான் கையில் அகப்பட்டது.  யாரவன் ? அலகில் காலம் காலில் பூமி வாலில் வானம் தோளில் சிறகு நாவில் இசை கண்ணில் ஓளி சின்னஞ்சிறு கிளையில் மின்னல் தனிமையில் பறவைபோல் ஒருவன் ஏறக்குறைய இறைவன

அணி நிழற்காடு

Image
              மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் இந்தக்கட்டுரை மனதை சஞ்சலமாக்குகிறது.  கட்டுரைக்கான சுட்டி: http://vallinam.com.my/navin/?p=5673 அணி நிழற்காடு உலகம் முழுவதுமே இது போன்ற அழித்தல்கள்  நடைபெறுகின்றன. ஒருமுறையேனும் தன்னை சுற்றியுள்ள இயற்கை அழிக்கப்படுவதை பார்த்தவர்களுக்கு இந்த பதட்டம் புரியும். நேசித்த ஒரு மரம் வெட்டப்படுவதை, புயலில் அடியோடு சாய்வதை கண்டவர்களால் புரிந்து கொள்ள முடியும். எங்கோ நடப்பதல்ல இது. என்னென்னவோ காரணங்கள் முன்வைக்கப்பட்டு நூற்றாண்டுகள் கண்ட மரங்கள் ஒரு நாளில் அறுத்துத் தள்ளப்படுகின்றன. மனிதனால் காட்டிற்குள் இருக்க முடியாமல் தான் வீடுகட்டிக்கொண்டான். நமக்கு காட்டினுள் நிற்க, அங்கே போராடி வாழ முடியவில்லை. அதிலிருந்து பாதுகாப்பு சுவரை உண்டாக்கிக் கொண்டோம். அதனுள் ஔிந்து கொள்வது நமக்கு நிம்மதி. ஆனால் நம் மனம் காட்டை விழைவது. அதனால் மீண்டும் அதை நோக்கி சென்று.. சென்று...  திரும்பி வருகிறோம். அதையும் வேவ்வேறு காரணங்களை முன் வைத்து அழிப்பது எந்த வகையில் அறம். நாம் ஒன்றை புரிந்து கொள்ள மறுக்கிறோம். நாம் இயற்கையின் ஒரு சிறு அங்கம். இயற்கை என்பது நமக்காக, நம் பயன்பாட்

சுண்டைக்காய்: சிறுகதை

Image
  2019 ஆகஸ்ட் 1 வாசகசாலை இணைய இதழில் வெளியான சிறுகதை சுண்டைக்காய்       மீவெயில் காலத்தின் நடுப்பகல் மெல்ல நகர்ந்து சாய்வெயில் எழும் நேரத்தில் அந்த பிளாட்டினா நாற்சந்தியிலிருந்து மேற்கு சந்திற்குள் நுழைந்தது.வண்டி ஓட்டுபவனின் கண்கள் சுருங்கிய நேரத்தில் , சுண்டைக்காய் செடி அவர்களின் கால்களில் கீறி கீழே சாய்ந்தார்கள்.  விழுந்த இடத்திலேயே கிடந்து,“அந்தக்கொடுவாளை எடுத்துட்டு வாடான்னா..”என்ற கோட்டப்பாளையத்தானின் குரல் அமைவதற்குள், வண்டி ஓட்டிய சுப்ரமணி கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு நாலுவீடுகள் தள்ளியிருந்த தன் வீட்டிலிருந்து கொடுவாளை எடுத்து வந்தான்.கிணற்றில் நீரிறைத்து அடிவாங்கிய ஈயவாளியைப் போன்ற பிளாட்டினா ஒருக்களித்துக் கிடந்தது. சுண்டைக்காய்செடி தன் கிளை இலைகளை விரித்து தானும் ஒருவிருட்சம் என்று காட்டியபடி சந்தின் குறுக்கே விழுந்தது.சத்தம் கேட்டு வளியே வந்த சோலையம்மா சிறுவெண்பூக்களும், பிஞ்சுகளும், காய்களும், முற்றிகாய்ந்த சில விதைக்காய்களுமாகக் செடிகிடப்பதைப் பார்த்து, “அய்யோ…பாவிங்களா...” என்றபடி கையிலிருந்த அரிவாள்மனையை குந்தானியின் கீழிருந்த பலகைக்கல்லில் போட்டபடி வந்தாள். “சந்துங்

அகமும் புறமும் : 3

Image
     2022 ஆகஸ்ட் 16 வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை.                   இழப்பின் ஔி      அற்றைத் திங்கள் அவ் வெண்நிலவின், எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்; இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின், வென்று எறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! புறநானூறு : 112 பாடியவர்: பாரி மகளிர் திணை: பொதுவியல் துறை : கையறுநிலை எறி என்ற சால்லுக்கு பல பொருள்கள் உள்ளன. [தள்ளு throw away ,அடி,கொள்ளையிடு,அழி,சீறு,காற்று வீசு blow as the wind.] இங்கு அழித்தல் என்று பொருள்கொள்ளலாம். ஏனெனில் வென்ற நாட்டை நெருப்பிட்டும், கொள்ளையிட்டும்  அழிக்கும் வழக்கம் இருந்தது] இது மிகவும் புகழ் பெற்ற அனைவரும் அறிந்த புறநானூற்றுப் பாடல். இழப்பின் வலியை,போரின் விளைவை மிக எளிமையாகவும், எளிமைக்கு உரிய ஆழஅகலத்துடன் துயரத்தை சொல்லிச்செல்லும் பாடல். வாழ்வின் இரு துருவங்களை இணைக்கும் பாடல். போருக்கு முன் அனைத்தும் இருந்தன, போருக்குப்பின் எதுவும் இல்லை என்பதே பாடலின் பொருள். ஆனால் அனைத்திற்கும் நித்தியமான சாட்சியாய் விண்ணில் நின்றிருக்கும் ஔி என்ன? என்பதே பாடலை கவித்துவத்தின் உச்சத்திற்கு எடுத்து