Posts

Showing posts from March, 2022

மூச்சே நறுமணமாக

Image
2022 மார்ச்மாத சொல்வனம் இதழில் வெளியான வாசிப்பனுபவக் கட்டுரை. சிவகாமி நேசன் எனும் இனிமை பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த  கன்னட பக்திக் கவிஞரான அக்கமகாதேவி சிவனை நினைத்து எழுதிய வசனங்களை எழுத்தாளர் பெருந்தேவி மொழிபெயர்த்துள்ளார்.  அவை ‘மூச்சே  நறுமணமானால், என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. நூற்றி இருபது வசனங்கள் கொண்ட இந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கம் அல்ல. குரல்,ஒலி,கவித்துவம்,மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக் கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை என்று பின்னட்டைக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  நான் இந்த நூலை ஒரு இலக்கிய பிரதியாக அல்லது கவிதையாகவே வாசித்தேன். என்னால் இந்த எல்லைக்குள் தான்  அக்கமகாதேவியின் எழுத்துகளில் உள்நுழைய முடிந்தது. கவிதை வாசகி என்ற தகுதியின் அடிப்படையில் மட்டுமே இந்தநூலைப்பற்றி எழுத முடியும் என்று நினைக்கிறேன்.  நூலில் பெருந்தேவி குறிப்பதைப்போல சென்னமல்லிகார்ச்சுனா என்று அக்கமகாதேவி சிவனை அழைக்கும் அழைப்பே எத்தனை அன்பானத

எல்லைகளை விரித்தல்

Image
 சொல்வனம் இணையஇதழில் வெளியாகும் எனது கதைகளுக்கு சரஸ்வதி தியாகராஜன் ஒலிவடிவம் தருகிறார். இது மாதிரியான முயற்சிகள் வாசிக்கமுடியாதவர்கள்,முதியவர்கள்  என்று பலதரப்பட்ட வாசகர்களுக்கு செய்யும் ஆகப்பெரிய உதவி. இது அவர்கள் மற்றொருவர் உதவியின்றி தன்னிச்சையாக, தன் நேரத்திற்கு கதைகளை கேட்பதற்கான அழகான வழி. அதற்காக சொல்வனத்திற்கும் ,சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கும் என் அன்பு. மத்தளம் கொட்ட சிறுகதைக்கான சுட்டி https://youtu.be/4U0ecR_wT6w

ஊற்றுகள்: சிறுதை

Image
      2017 ஜூலை சொல்வனம்  இணைய இதழில் வெளியான    சிறுகதை                ஊற்றுகள்                   அதிகாலைப்பறவைகளின் உவகைமொழிகளை மூழ்கடித்தபடி கணபதிபாளையத்தை எழுப்பிக்கொண்டு ஃபோர்வண்டியின் ஒலி எழுந்தது. அது முடக்குவேம்பைக் கடந்து நின்றது. பறவைகள் எழுந்து வயல்காட்டுப்பாதையில் பறந்தன. அப்போதுதான் அசந்துபடுத்த நாய்கள் சுழன்றெழுந்து குறைத்து, பின் நிதானம்கொண்டு சுற்றிவந்தன. மாசிமாதகிழக்கு கொள்ளைச்சிவப்பாக விடிந்தது. சில வெள்ளைநிற கூரைவீடுகளும்,முற்றம் வைத்த மஞ்சள்ஓட்டுவீடுகளும்,தகரம்வேய்ந்த மண்வீடுகளும்,மில்லினியத்திற்குப் பின் கட்டிய பச்சை,ரோஸ்,ஊதா நிற திண்ணைகள் இல்லாத சிறுமாடிவீடுகளுமாகத் தெரு வளைந்து நெளிந்திருந்தது. இரும்புக்குழாய்களை இறக்கிபோட்டுவிட்டு சந்தின் முனையில் பெருஞ்சத்தத்துடன் துளைக்கத் துவங்கினர். வெயிலேறத் தொடங்கியது.  வயல்வேலையில்லாததால் ஆட்டுமாட்டிற்கு தண்ணீர்காட்டி ,தீனிபிடுங்கிப் போட்டுவிட்டு வந்தவர்கள் அந்தஇடத்திற்கு அருகிலிருந்த வேம்படியில், வீடுகளின் நிழல்களில் குத்துகால் இட்டு உட்கார்ந்தனர். களிங்கன்வீட்டுப் பின்பக்கம் வெட்டிப்போட்டிருந்த புங்கைமரத்தின் அடிமரத்தில

பொன்சிறகு சிறுகதையின் ஒலிவடிவம்

Image
சொல்வனம் இணையஇதழின் யூடியூப் சேனலில் வாசிக்கப்பட்ட கதை. வாசித்தவர் சரஸ்வதி தியாகராஜன் அவர்கள். அவருக்கு என் நன்றிகள். அதற்கான சுட்டி: https://youtu.be/1xT_sUWifm8

கதை பேசுதல்

Image
  செய்திவாசிப்பாளரும்,நடிப்புத்துறையில் உள்ளவருமான பாத்திமா பாபு அவர்கள் கிளப் ஹவுஸ் என்ற சமூகஊடகம் மூலம் சிறுகதைகளை வாசித்து எழுதுபவர்களுடன் விவாதிக்கிறார். அதை தன் யூ டியூப் சேனலில் பதிவிடுகிறார். இரவு ரதி மன்மதன் கதை கூத்து நடைபெற்றது. சிவராத்திரிக்குப் பிறகு வருடாவருடம் நடைபேறுவது. தெருவில் நல்ல உரத்த சப்தங்கள். ஈசனையும்,ரதி,மன்மதன் பற்றிய பாடல்கள். ஈசன் மீது வசவாக எய்யப்படும் வசனங்களும் ரதியின் திருமணவசனங்களும்,விடியலில் மன்மதன் எரிப்பிற்கு பிறகு புலம்பல்களுமாக நீண்டு காலையில் நிறைவுபெறும்.  இந்த வருடம் புது இளைஞன் ரதியாக வேடம் ஏற்றிருந்தான். முன்னால் வேடம் ஏற்கும் அவனின் தாத்தா உடன் வந்தார். அவரிடம் எத்தனை நாட்கள் ஆண்டுகளாக இந்தப் பாடல்களை பழகினான் என்று தெரியவில்லை. நல்ல வலுவான குரல்.  இந்த நிகழ்வில் பேசும் போது இதுமாதிரி சுற்றி ஒலிக்கும் பலகுரல்களில் என் குரலை எப்படி கையாள்வது என்ற யோசனை இருந்து கொண்டே இருந்தது. சத்தங்கள் நிறைந்த சூழல். எப்படியோ உரத்த சத்தங்களுக்கிடையில் நம் குரலை எடுக்க வேண்டிய அவசியம் அனைவருக்குமே உள்ளது தானே. நேற்றுஇரவு 'சொல்பேச்சு கேட்காத கரங்கள்' எ

அமுதம் சிறுகதையின் ஒலிவடிவம்

 சொல்வனம் இதழில் வெளியான அமுதம் என்ற கதையின் குரல் வடிவம். நன்றி: சொல்வனம் மற்றும் கதைக்கு குரல் கொடுத்த சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கு நன்றி.  https://youtu.be/haIBNtdI5MI

ஊசல் :சிறுகதை

Image
 2017 ஜீன் மாத சொல்வனம் இதழில் வெளியான கதை   ஊசல் கல்லூரி நூலகக்கடிகாரத்தின் ஊசல், சட்டியில் பயறை வறுக்கும் கரண்டியென இடவலமாக ஆடிக்கொண்டிருந்தது.அனைத்து நொடிகளும் ஒன்றேயான முடிவிலாக் காலத்தின் சாட்சியென நினைத்த அமுதா சன்னலை ஒட்டியிருந்த வட்டமேசையில் புத்தகத்தை வைத்து இடதுமுழங்கையை ஊன்றி கன்னத்தில் கைவைத்து, வலதுகையால் பக்கங்களை புரட்டினாள் . “இந்த அர்த்த ராத்திரியில் என்னடாதெருவில் நடை?” ...நாயைப்பார்த்த பாபு வாயை முடிக்கொண்டான் என்ற வரியைப் படித்துவிட்டு சன்னலுக்கு வெளியே பார்த்துப் புன்னகைத்தாள்.மாலை ஔியில் புல்வெளியில் இருந்த மரம் மஞ்சளாய் கொழித்திருந்தது.பெயர் என்ன?...மஞ்சள்புங்கை என வைத்துக்கொள்ளலாம். கையிலிருந்த காகிதக்குறிப்பில் இந்தமாதத்திற்குள் வாசிக்கவேண்டுமென குறித்த புத்தகப்பட்டியலில் கால்பாகம் கூட முடிக்கப்படாததைக் கண்டு காகிதத்தை மேசையில் வீசினாள். கல்லூரி சேர்ந்து இந்த நான்குமாதங்களில் மனதினுள்ளே சிலாம்பாக அருவிக்கொண்டேயிருப்பது ‘எல்லாம் போச்சு’ என்ற ஏக்கம்.இந்த மைக்ரோபயாலஜி என்ற பெயரே ஒட்டவில்லை. மனதை எந்தக்காரணம் கொண்டும் தட்டிக்கொடுக்க முடியவில்லை.தனக்குப் பிடித்தப் ப

மனஅலைகள் மீட்டும் முரசம்

Image
 நன்றி:எழுத்தாளர் முனைவர் பா.சரவணன். ‘புனைவுலகில் ஜெயமோகன்’ என்ற நூலுக்கு எழுதப்பட்ட அணிந்துரை மனஅலைகள் மீட்டும் முரசம் கமலதேவி, எழுத்தாளர். (வெளியீடு - எம்.ஜெ. பப்ளிஷிங் ஹவுஸ், விலை – 400, தொடர்புக்கு -  9943428994.) ‘வெண்முரசை வாசிப்பது’ என்பது, அதன் அளவிற்கே மிக நீண்ட கனவு. இதைப் போன்ற ஒரு மாபெரும் படைப்பை, அது எழுதப்படும் காலத்திலேயே அதன் கர்த்தாவுடன் இணைந்து வாசிப்பது நமக்குக் கிடைத்த அபூர்வமான வாய்ப்பு. அதைப் பற்றி எதைச் சொன்னாலும் அது அதன் கர்த்தாவின் மொழியிலேயே அமையும். அந்தப் போக்கிலேயே சென்றால் நம்முடைய திசையைக் கண்டுகொள்ளலாம். எனக்கு, ‘வெண்முரசை வாசிக்கும் அனுபவம்’ என்பது, பச்சைமலை மற்றும் கொல்லிமலையை அனுதினமும் காண்பதை ஒத்த அனுபவம். வெவ்வேறு தொலைவிலிருந்து, வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு பொழுதுகளில் பார்ப்பதற்கு ஒப்பானது.   பச்சைமலைத்தொடரின் ஏதோ ஒரு குன்றில் உதித்து, கொல்லிமலைத் தொடரின் ஏதோ ஒரு குன்றின் பின்னால் மறையும் சூரியனின் ஔியில் இரு மலைத்தொடர்களையும் காண்பதைப் போன்றது. முழுநிலவின் குளிர்வெளிச்சத்தில், மழைநாளில், கோடையில், வசந்தத்தில் என்று பலவாகக் காட்சியளிக்கும் மலை

வாசகசாலை கதையாடல்

Image
     பிப்ரவரி தமிழினி இதழில் வெளியான என் கதை 'ஜீவா' பற்றி வாசகசாலை காதையாடல் நிகழ்வில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான காணொளி இணைப்பு. https://youtu.be/r3U-u-xeFUQ வாசகசாலைக்கும்,கதைப் பற்றி தன் வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொண்ட ஸ்ரீதேவி அரியநாச்சிக்கும் என் அன்பு. ஜீவா கதைக்கான இணைப்பு: https://tamizhini.in/2022/02/24/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%be/

செங்காந்தளின் ஒற்றை இதழ்

Image
2017 மே மாத சொல்வனம் இதழில் வெளியான சிறுகதை. செங்காந்தளின் ஒற்றை இதழ் ஊரைச்சுற்றியுள்ள சாமிகளுக்கு ஆடும்,கோழியுமாகக் கொடுத்து ஊர்மணக்கும் மும்மாரியின் மூன்றாம் காலகட்டம். மழைபெய்து வெள்ளம் நிதானித்திருந்தது.பிடிங்கி நட்ட நாற்றுகள்  தலையெடுத்து மென்னிளம் பசுமையால் கொல்லிமலையின் அடிவாரக்காட்டையடுத்த விளைநிலங்கள் முழுவதும் போர்த்தப்பட்டிருந்தன. தெற்குவாய்கால் கரையில் மெய்யாயி அம்மாயி  அமர்ந்து கால்களை நீருக்குள் விட்டிருந்தாள்.இளம்சிகப்பு கல்பதித்த பம்படம் நீண்டகாதுகளில் ஊஞ்சலாட கொல்லிமலைக் குன்றுகளில் பார்வையை ஓடவிட்டுக் கொண்டிருந்தாள்.அவளின் இரண்டு பசுக்கள் அறுத்துப் போட்ட புல்லை, “நறுக்க்..நறுக்க்..”கென மென்று கொண்டிருந்தன. வடக்குதெற்காக கண்களுக்கு எட்டும்வரை நீண்டிருந்த மலைத்தொடர் மழைதந்த பசுமையில் சிலிர்த்திருந்தது.ஒவ்வொருமரத்திலும், செடிகொடிகளில், புல்பூண்டுகளி்ன் இளந்தளிர்களிலிருந்து சொட்டியநீரும் சேர்ந்த மழையோடைகள் மலையின்கண்ணீர் போல வழிந்து ஆற்றில்சேர்ந்து பலவாய்கால்களில் பிரிந்து மீண்டும் ஆற்றில் கலந்துகொண்டிருந்தன. தாண்டவன்தாத்தா வீட்டைவிட்டு இறங்கியபின் இந்தசில மழைகாலங்களில் இ

குரல் என்பது குரல் மட்டுமல்ல

Image
     கல்லூரி நாட்களில் தான் மகளிர் தினம் என்ற ஒன்றைப் பற்றி தெரியும். அந்த ஆறுஆண்டுகளும், ஒவ்வொரு ஆண்டு கொண்டாட்டத்தின் போதும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்து எனக்கான  பதட்டங்கள் தொடங்கிவிடும். நான் பயின்ற கல்வி நிறுவனத்தின் 'ப்ளே ஸ்கூல்' குஞ்சு குழுவான்கள் முதல் முனைவர் பட்டம் படிக்கும் பெண்கள் வரை அந்தப் பெரிய பந்தலில் ஐஸ்க்கிரீம் சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்கும் போது என் வினை என்னை விடாது துரத்தும்.  மார்ச் முதல் தேதி வாக்கில் கவிதை எழுதி கொண்டு வரும்படி தமிழ் துறை விரிவுரையாளர் ராதா அழைப்பார். அவர் என்னுடைய இளங்கலை படிப்பில் முதலிரண்டு ஆண்டுகள் தமிழாசிரியராக இருந்தவர். ராதா என்ற பெயருக்கு ஏற்றபடி அத்தனை அழகானவர். வெண்முரசு வரையான  என்னுடைய மனதில் இருக்கும் அத்தனை ராதைகளும் அவருடைய சாயல் கொண்டவர்கள். அவர் என்னுடைய சுபாவம் தெரிந்தவர். நான் மேடையில் நின்று பழக வேண்டும் என்று முயற்சிசெய்து அவரை தொல்லைப்படுத்திக் கொண்டவர். எப்படியோ நிற்க வைத்து பழக்கி எடுத்தவர். என் குரலோடு போராடிக் கொண்டே இருந்ததுதான் மகளீர் தின நினைவுகளாக எனக்கு எஞ்சி நிற்கிறது. என்னால் மூச்சுப் பிடித்து பேச முட

இனிக்கும் முத்தம்: சிறுகதை

Image
     2017 ஏப்ரல் மாத சொல்வனம்  இதழில் வெளியான சிறுகதை.                இனிக்கும் முத்தம் பள்ளிக்கூடம்  முடிந்து உள்ளூர்ப்பிள்ளைகள் வீட்டிற்கு சென்றிருந்தனர். ஐந்தாம்வகுப்புப் பிள்ளைகள் மைதானத்தின் கிழக்கு ஓரத்திலிருந்த தரைத்தொட்டியிலிருந்து நீரெடுத்து செடிகளுக்கு  ஊற்றிக் கொண்டிருந்தனர். மதிலோரம் கிழக்கு மேற்காக நீண்ட தோட்டம்.  மதிலின் மேல்காரையில் உடைந்த கண்ணாடிச்சில்லுகள் நெடுக குத்தி வைக்கப்பட்டிருந்தன.சிலிர்த்து நிற்கும் முள்ளம்பன்றி முதுகென நிற்கும் மதில். கருங்கற்களால் வரம்புக்கட்டப்பட்டு மைதானத்திலிருந்து தோட்டம் பிரிக்கப்பட்டிருந்தது. மஞ்சள், நீல,இளஞ்சிவப்பு  மலர்கள் நிறைந்த நிறங்களின்வரிசைகளாய் செடிகள். செடிகளை பிள்ளைகள்  உலைத்ததால் பூச்சிகளும்,கொசுக்களும், வெள்ளை பட்டாம்பூச்சிகளும் எழுந்து பறந்தன. ஏஞ்சலின் சிஸ்டர்,“போதும்மா…போய்விளையாடுங்க. பஸ் வர நேரமிருக்கு,”என்றார்.மேற்கே வானம் செம்மையேறிக் கொண்டிருந்தது. கைத்தவறி தரையில் சிதறிய மணிகளாய் மைதானத்தில் பரவினர் பிள்ளைகள். நொண்டி, ஓடிப்பிடித்தல், கயிறுதாண்டுதல் என்று அவரவர் விருப்பப் படி ஆடிக் கொண்டிருந்தார்கள். வெள்ளைச்சட்டை ஊத

சுழலில் மிதக்கும் பூ: சிறுகதை

Image
     இது என்னுடைய மூன்றாவது கதை. 2017 ஆம் ஆண்டு மார்ச் மாத சொல்வனம் இதழில் வெளியானது. நன்றி: சொல்வனம்               சுழலில் மிதக்கும் பூ            தேர்வறையிலிருந்து ராமர் வெளியேவந்து தூணில்சாய்ந்து முதுகை சற்று குனித்து கருப்புஷீவைப் பார்த்தபடி நின்றான். ஆறடிக்கு சற்று குறைவானவன். மேமாதவெயில் முதுகில்படிந்து கொண்டிருந்தது. தேர்வு பற்றிய பேச்சுக்கள் இணைந்து இரைச்சலாகியது. மேகங்களற்ற தெளிவானை வெறிக்கத் தொடங்கினான். கருப்புவெள்ளை சீருடைகளுக்கிடையே புகுந்து நீலவண்ணச் சீருடையில் வந்த இவள் அவன் கைப்பற்றி புருவம் தூக்கினாள். “பாஸாயிடுவேன்..”என்றவனின் அடுத்திருந்து வந்தவன் “இதுல பாஸாயிட்டா போதுமா?”என்றபடி சிரித்தான். கடைசியாக வந்த பாலா அவனிடம் கீழே சைகைகாட்ட படியிறங்கி சிரித்தவன் ஓடினான். "வெயிலடிக்குதுடா...இந்தட்டம் வா,” என்ற பாலாவின் குரலால் கலைந்து தலையாட்டியபடி ராமர்  நகர்ந்தான். வியர்வை பெருகி முதுகை நனைத்திருந்தது. “கீழப்போய் சாப்பிட்டு போலாம்” என்றவனிடம் ராமர் மறுத்தான். மீசையை தடவியபடி பாலா புருவம்சுருக்கி, "ஏண்டா...இன்னுமா?” என்றபடி திரும்பிக் கொண்டான். நிற்கையிலேயே கடந்து