Posts

Showing posts from January, 2022

கடல் சிறுகதை தொகுப்பின் முன்னுரையும்,என்னுரையும்

Image
 'கடல்' என்னுடைய நான்காவது சிறுகதைத்தொகுப்பு. இந்த ஆண்டு ஜனவரியில் வாசகசாலை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.  எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் முன்னுரை எழுதியுள்ளார். அவருக்கு என்  அன்பு.             எளிமையும் ஆழமும் கமலதேவியின் கதைகள் காட்சிகளாக விரிபவை. காட்சிகளின் வழியாகவும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல்களின் மூலமாகவும் அவர்களுடைய வாழ்வு முழுவதையும் சொற்களாகவும் உணர்ச்சிகளாகவும் சொல்பவை. வெறும் கதை சொல்லலாக மட்டும் அவை நின்றுவிடுவதில்லை. உறவுகளுக்குள் ஏற்படும் பல்வேறு மோதல்களையும் அவற்றின் ஆழங்களையும் அபத்தங்களையும் தொட்டுக் காட்ட முயல்கின்றன. விவசாயத்தில் தொழிற்படும் மண் சார்ந்த நுட்பங்களைப் பேசுகின்றன. கிராமத்து வாழ்வில் இன்னும் எஞ்சியிருக்கும் நம்பிக்கைகளை, மதிப்பீடுகளை, விழுமியங்களை நினைவுபடுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக வாழ்வின் பொருள் குறித்தும் அல்லது பொருளின்மையைக் குறித்துமான பலமான கேள்விகளை எழுப்புகின்றன. எந்தவொருக் கதையையும் அவை முழுமையாக விரித்துச் சொல்வதில்லை. கதையின் மையத்தை மிகக் குறைவான சொற்களில் அவை குறிப்புணர்த்துகின்றன. சம்பவங்களை அல்லாது அவற்றுக்கு முன்னும

கிஞ்சுகம்

Image
          டிசம்பர் 2021 சொல்வனம் இதழில் பிரசுரமான சிறுகதை.                                                                                              கிஞ்சுகம் தண்டகத்தின் நீர், நிலம், அனல், வளி ,வெளி என அனைத்தும் சமநிலை குழைந்துகொண்டிருந்தன. அது ஆழத்தில் ஈரத்தைப் பதுக்கி உயிர்கள் வாழும் வறல்நிலக்காடு. சருகுகள் செறிந்த நிலத்தை சுழல்காற்று எழுப்பியது. சருகுகள் விசைகொண்டு எழுந்து பறந்து அலைந்து சுற்றின. அன்று கானக இருளில் ஆதவன் தீட்டிய பொன்னொளியில் மயங்கிய பறவைகள் தம் மணிக்கண்களை படபடத்துக்கொண்டு சிறகினடியிலிருந்த குஞ்சுகளை அணைத்து சிறகுகளை செறித்துக்கொண்டன. மண்ணில் விழும் ஔியிலிருந்து எழுந்து பறக்கும் காற்றுவரை வழக்கத்திற்கு மாறாக முறுக்கிக்கொண்டிருந்தன.  அவனை ஒருபுறம் அறுத்து வீசியதைப்போல வலதுபுற உடல் துடித்துக்கொண்டிருந்தது. அன்று இளம்காலை பொழுதில் அயோத்தி அரண்மனையிலிருந்து வெளியேறி பின்னிரவில் கங்கையை கடந்த பொழுதில் எங்கிருந்தோ வந்து அவனை பற்றிக்கொண்ட துடிப்பு அது… சீதையை கானகத்தில் தொலைத்துவிடக்கூடாது. எங்காவது தொலைந்து விடுவாள் என்ற பதற்றத்திற்கு மாற்றாக அந்தகணத்திலிருந்து ராமனின