Skip to main content

Posts

Showing posts with the label பொது

அதே பாடலாசிரியர்

 விஷ்ணுபுரம் விழாவில் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது 'கல்லூரி முதலாமாண்டில் நூலகத்தில் பாடலாசிரியர் வைரமுத்து புத்தகங்கள் இருந்த முழு அடுக்கையும் வாசித்தேன் ' என்றேன். அந்த பதிலை சொல்லும் போதே அந்த இலக்கிய அவையில் அந்த பகிர்தல் என்னை கீழிறக்கும் என்று தெரியும். ஆனாலும் உண்மை அது தான்.  ஒரு மலையடிவார கிராமத்திலிருந்து கல்லூரி சென்ற நான் கல்லூரியின் முதல் நாள் நூலகத்தை தேடி கண்டுபிடித்து சென்றேன். இன்றும் மனதில் உள்ள பரவசமான சாயங்காலம் அது. தமிழ் புத்தக அடுக்கில் வரிசையாக வைரமுத்து புத்தகங்கள் தான் இருந்தன. அப்போது கல்லூரியில் தமிழ் துறை இல்லை. கல்லூரி தொடங்கி  ஐந்தாண்டுகள் இருக்கலாம்.  நான் புத்தக அடுக்கின் முன் சென்று நின்ற போது நம் இலக்கிய முன்னோடிகளின் புத்தகங்கள் இல்லை. முதுகலை படிக்கும் போது தான் நவீன இலக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் நூலகத்தில் கிடைத்தன.   ஏற்கனவே வலுவான இலக்கிய பின்புலம் உள்ளவர்கள் நல்ஊழ் கொண்டவர்கள். வீட்டில் சிறார்நூல்களிலிருந்து கல்கி வரை வாசிப்பு அறிமுகமிருந்த நான் பாரதியார் கவிதைகள் நூலை மட்டும் பெட்டியில் எடுத்துக்கொண்டு வ...

முதல் குயிலோசை

 எப்பொழுதும் கோடை முடியும் தருணத்தில் ஜூன் மாதத்துவக்கத்தில் குயிலின் முதல் குரல் கேட்கும். ஒரு வாரமாக தினமும் மதிய நேரத்தில் மழை துவங்கி பெய்வதும் நிற்பதுமாக இருக்கிறது. திடீரென்று நல்ல மழை. பின் தூரல். வெயில் இல்லாத புழுக்கம். இன்று காலையில் சமையலறையில் இருக்கும் போது கூகூகூ என்று இந்த ஆண்டின் முதல் குயில் குரல். ஒரே ஒரு கூவல் தான். பின்பு கேட்கவில்லை. வீட்டின் மேற்கு புறம் பின்வாசலின் பக்கவாட்டில் பெரிய காலிஇடம் உண்டு. முருங்கை ,தென்னை, பெரிய நுணா மரம், செடிவகைகள் வளர்ந்த இடம். அங்கு குயில்களை பார்க்கமுடியும்.  குயில் குரலை கேட்தும் முதலில் 'ஐ' என்று ஒரு குதூகலம். அது ஒரு வெயிலின் குரல் என்று என் மனதில் பதிந்துவிட்டது. ஒரு ஆண்டு என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் மனம்படி பலமுறை தொடங்கும். சிலருக்கு அவர்களின் பிறந்தநாள். சிலருக்கு வேலை கிடைத்தநாள். பலருக்கு திருமண நாள் என்று பலவிதங்களில் மீண்டும் மீண்டும் நம்மை புதிதாய் துவக்கிக்கொள்ள முயல்கிறோம்.  எப்போதும் ஓடக்கூடிய வண்டி என்றாலும் காற்று குறைவது போல...டயர் மாற்றுவது போல...ரயில் தண்டவாளங்களை பழுது பார்ப்பது போல ஒன்று. அவர...

மழைமுகம்

பனிநீர்,குளிர்,தண்மை,நளிர்,அளி என்று பல சொற்கள் நம்மிடம் உண்டு. எனக்கு தண்மை என்ற சொல் மீது ஈர்ப்பு உண்டு. அந்த சொல்லிலேயே அந்த உணர்வு தெரியும். குறைச்சல் கூடுதலில்லா ஒரு இதநிலை. அன்பு போல. இங்கு அனைத்து பருவநிலைகளுமே கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். கோடை, குளிர், மழை,காற்றுகாலம் என்று அனைத்துமே.  கோடை மழைக்கான முதல் முழக்கமே எங்காவது பக்கத்தில் இடிவிழும் சத்தத்துடன் நம்மை அதிரவைத்தடி வரும். இந்த கோடைமழையும் எப்பொழுதும் போல இரண்டு நாட்களுக்கு முன் ஒரு வீட்டில் இடிவிழுந்தபடி வந்தது. சென்ற முறை ஒரு பனைமரத்தை எரிய வைத்தது. இரண்டுநாட்களுக்கு முன் மழைப்பெய்யாமல் முழக்கமாக மட்டும்  அமைதியாகிவிட்டது. அடுத்தநாள் காலையில் மாடியில் படிந்திருந்தன புழுதியில் நீர்சொட்டுகளின் தடங்கள். கண்ணன் தன் மழைக்கால்களுடன் சீராக நடந்து விளையாடியது போல தூரலின் காய்ந்த தடங்கள். மாடியின் சிவப்பு ஓட்டுத்தரை முழுவதும் ஏதோ ஒரு லிபியை தூரல்கள்  எழுதி சென்றிருந்தன. நேற்று இரவு அரைமணி நேரத்திற்கு மேல் மழை. ஒரு உழவு மழை. காய்ந்து கிடக்கும் மண்ணை கலப்பையால் மேலாக ஒரு கீறுகீறிப்போடலாம். ஆனால் பெரும்பாலும் இங்கு அ...

சொல்லென்று வந்து நிற்பது

சொற்கள் உணர்வுகளின் ஒலிவடிவங்கள். சில சொற்கள் முன் நாம் ஸ்தம்பித்து நின்றுவிடுவது உண்டு.  அப்படி ஒரு சொல் அறம். https://kamaladeviwrites.blogspot.com/2024/05/blog-post.html மேற்கண்ட பதிவில் என் கதையை பற்றிய ஒரு விவாதம் உள்ளது.  அதில் உள்ள அறம் என்னை தொந்தரவு செய்தது. அந்தப்பதிவின் இறுதியிலேயே சரியான இடத்திற்கு வந்துவிட்டேன். ஏன் ஆளுமைகளை புனைவாக்கும் கதைகள் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். ஏன் சட்டென்று அப்படி சொன்னேன் என்று யோசித்தேன். சுந்தரராமசாமி நினைவிற்கு வந்தார். சில நேரங்களில் அவர் தன் பேச்சின் அனைத்து கதவுகளையும் அடைத்துவிடுவார். மேற்கொண்டு எதுவும் பேசமாட்டார் என்று அவரைப்பற்றி வாசித்தது நினைவிற்கு வந்தது. அது மாதிரியான ஒரு விஷயம் தான் நான் செய்தது. மிக அண்மையில் வாழ்ந்தவர்களோ சங்ககாலத்தில் வாழ்ந்தவர்களோ யாராயிருந்தாலும் அவரின் வாழ்க்கை எழுத்தாளரின் கச்சா பொருள். அந்த வாழ்வில் இருந்து நம் மனம் உணர்வது இருளாகவோ வெளிச்சமாகவோ இருக்கலாம். நாம் தரிசிப்பது நேர்மறையான உணர்வாகவோ,எதிர்மறையான உணர்வாகவோ இருக்கலாம். அதை தன்னிலையில் படர்க்கையில் என்...

வெளிச்சம் கதை பற்றிய உரையாடல்

 [அண்மையில் நான் எழுதிய வெளிச்சம் என்ற சிறுகதை குறித்து நடந்த ஒரு உரையாடல்...எழுத்தாளர் அம்பை வெளிச்சம் கதை பற்றி தான் எழுதியதை என்னிடம் பகிர்ந்தார்..பகிர்ந்ததற்காக அவருக்கு என் நன்றியும் அன்பும்.] கமலதேவி நான் 'வெளிச்சம்' கதை பற்றி இன்னொரு பதிவர் சுவரில் எழுதியிருப்பதை கேள்விபட்டிருப்பீர்கள். உங்கள் பார்வைக்காக இங்கு... கமலதேவியின் கதைகள் பிடிக்கும். ஆனால் 'வெளிச்சம்' கதை எழுதியது அறமற்ற செயல். மறைந்துபோன ஒரு எழுத்தாளரைப் பற்றி எவ்வளவு அறிந்திருந்தாலும் அதை கதையாக்குவது சரியல்ல. அதுவும் அதை தன்னிலை கதையாக்குவதற்கு எவ்வித உரிமையும் இல்லை. சூடாமணியை நான் என் எம்.ஏ படிக்கும் காலத்திலிருந்து அவர் மறையும் வரை அறிவேன். அவரின்  சகோதரர் சகோதரிகளுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். யாரும் இப்போது இல்லை. ஆனால் அவர் வாழ்க்கையையோ கருத்துகளையோ கதையாக்க துணிந்ததில்லை. காரணம் அது அறம் இல்லை. அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் இதை படிக்கமாட்டார்கள் என்று தெரிந்திருப்பதால் இந்தக்கதை எழுதியிருந்தால் அது மிகப்பெரிய தவறு. கமலதேவி இதை செய்திருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. K.ரவிசங்கர் இதைப்ப...

துறைமுகம் என்னுரை

 நாளை என்னுடைய ஆறாவது சிறுகதைத் தொகுப்பான துறைமுகம் வெளியாகிறது. வழக்கம் போல சென்னை இக்சா மையத்தில்... சமர்ப்பணம் அம்மாவுக்கு…. நன்றி சொல்வனம் தமிழினி ஆவநாழி ஓலைச்சுவடி வாசகசாலை மற்றும் இந்தத்தொகுப்பிற்கு பிழை நோக்கியவர்களுக்கும்,அட்டைப்பட வடிவமைப்பாளருக்கும் அன்பும் நன்றியும். வாசகசாலை நண்பர்களுக்கு எப்போதும் என் அன்பு. பெருங்கடலில் அவரவருக்கான கரைகள் இந்தத்தொகுப்பில் இரண்டு கதைகளைத் தவிர மற்ற கதைகள் இந்த ஆண்டில் எழுதப்பட்டவை. எழுத்தில் ஒரு சிறிய  திசை திரும்பல் உள்ளதை கதைகளைத் தொகுக்கும் போது உணரமுடிகிறது. புத்தகங்கள் வாசிக்கும் போது வரலாற்றில் உள்ள மனிதர்களின் வாழ்வின் சில தருணங்கள் மனதிற்குள் கிடந்து தொந்தரவு செய்ததால் பாலாமணி பங்களா,அந்த கிச்சிலி மரத்தடியில், சுவடிகள்,துறைமுகம்,இலையுதிர் காலத்து மழை போன்ற கதைகளை எழுதினேன்.  ஒரு நாவலுக்கான முன்னுரை சிறுகதை எழுதுவதற்கான தூண்டுதலாக இருக்கும் என்பது வியப்பு தான். போரும் அமைதியும் நாவலில் ஹீயூ வால்போல் எழுதியிருக்கும் முன்னுரை என்னை மிகவும் கவர்ந்தது. போரும் அமைதியும் நாவல் எப்படி அவரின் பதின்வயதில் அவரை ஆட்கொள்கிறது பின்...

முதல் கனி

 2018 டிசம்பர் 5. நான் எழுதிய முதல் சிறுகதை தொகுப்பான சக்யை நூலை தொகுத்து முடித்தநாள். சக்யை வெறும் புத்தகம் மட்டுமல்ல. நான் கொண்ட விடாத பிடிப்பின் முதல் கனி . இந்த புத்தகத்தில் சில பல போதாமைகள் இருக்கலாம்.  நுண்ணுணர்வு நிரம்பிய சிறுகதைகளை கொண்ட தொகுப்பு என்பதில் எனக்கு ஐயமில்லை.  நேற்று காலை வானத்தை பார்க்கும் போது போதவிழ் வான் பூ என்ற சங்கப்பாடல் வரி மனதில் ஓடியது. எப்பொழுதோ எழுதப்பட்ட ஒரு வரி.  குறிப்பிட்ட செய்யுளில் அதற்குள்ள உறவு வேறு. தனி வரியாக நம் மனதிற்குள் பதிவது வேறு. சிலநாட்களாக தொடர்ந்த மழையால் அவ்வளவாக சூரியஉதிப்பு கண்களுக்கு புலப்படவில்லை. தினமும் காலைமழையால் வெளிச்சமாக மட்டுமே சூரியனின் இருப்பை உணர முடிந்தது. மந்தமான இருள் கலந்த வெளிச்சம். நேற்று வானம் தெளிந்து சூரியன் உதிப்பதற்கு முன்பான வெளிச்சத்திலிருந்து, சூரியன் உதிக்கும் வரை இந்த வரியே மனதில் இருந்தது.  வானம் இதழ் விரிக்கிறது. காலைவானம் ஒரு அமைதியான மொட்டு விரிவதைப்போல ஔிவிரித்து ஔி  எழுந்தது. மேற்கே உள்ள கொல்லிமலை மரகத பச்சைக்கு மாறத்தொடங்கியது. அங்கங்கே மேகம் சிதறிக்கிடந்தது. இதை சங்...

அணையா தீபம்

 ஊரில் வழக்கம் போல கார்த்திகை மாத பயிர்ப்பொங்கல்.  வரிசையாக சிறுதெய்வங்களுக்கும், வயல்தெய்வங்களுக்கும் வழிபாடுகளும் பலிகொடுத்தலும் நடந்து கொண்டிருக்கிறது. நாளை கோட்டைப்பிள்ளையாருக்கும்,ஊமைப்பிடாரிக்கும் பொங்கல் என்று நேற்று ராஜேந்திரன் அண்ணா தண்டோரோ போட்டுவிட்டு சென்றார். சின்னய்யாவின் பள்ளித்தோழர். சின்னய்யாவின் இறப்பால் ஒரு ஆண்டுக்கு கோவில்கள் வழிபாடுகள் வீட்டில் விழாக்கள் வழிபாடுகள் என்று எதுவும் கிடையாது. எங்கள் தலைமுறையில் சின்னய்யா வீட்டில் முதல் இழப்பு. அய்யாவின் திருமணத்திற்கு முன்பு தாத்தா இறந்தார்.  காரியத்தன்று புரோகிதர் அண்ணா 'இந்த வருஷம் உங்களுக்கு அமாவாசை விரதம் தவிர எதுமில்லை..மனசை காத்துண்டிருக்கனும்' என்று சொல்லிவிட்டு சென்றார். அப்போது சாதாரணமாக இருந்தது.  [ஆனால் இந்த நான்கு மாதங்களில் இரண்டு முறை 'வீட்ல எல்லாவளும் எப்படி இருக்கேள்...'என்றபடி வந்துவிட்டார். இவரும் ,இவர் அப்பா கண்ணன் அய்யாவும், பாட்டனார் சப்தரிஷிதாத்தாவும் மிகவும் உற்சாகமானவர்கள். வரும் போதே உற்சாகத்தை அங்கவஸ்திரத்தில் முடிந்து கொண்டு வருபவர்கள்] ஆனால் இந்த நான்கு மாதங்களில் 'மனசை க...

இலக்கியத்திற்கான கடவுச்சீட்டு

 நேற்று யூட்யூபில் எழுத்தாளர் சுந்தரராமசாமியின் ஆவணப்படம் பார்த்தேன். ஏற்கனவே இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் கி.ரா, சு.ரா, ஜெயகாந்தன் ஆவணப்படங்களை ஒரே நாளில் சேர்த்து பார்த்திருக்கிறேன்.  ஜெயகாந்தனின் சிரிப்பும் அந்த தலைப்பாகைக்கட்டும் மனதில் இருந்து அகலவே அகலாது. யோசித்தால் மூவரின் குரலும் சிரிப்பும் பேச்சும் இன்று வரை அவர்களை நினைக்கும் போதெல்லாம் மனதை சுற்றிக்கொண்டே இருக்கிறது. அன்றிலிருந்து வரிசையாக யூடியூபில் கிடைக்கும் எழுத்தாளர்களின் ஆவணப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கும் போது அவ்வப்போது இடைஇடையே மனஎழுச்சியினால் அம்மாவை கூப்பிட்டுக்கொண்டே இருப்பேன். அம்மாவுக்கு ஜெயகாந்தனை தெரியும். அவரைப்பிடிக்கும். அவரின் ஒன்றிரண்டு கதைகளை இளம்வயதில் வாசித்திருக்கிறார்.  சு.ராவிற்கு வார்த்து எடுத்ததைப் போன்ற குரல். ஆவணப்படத்தில் நேர்காணல் செய்யும் இளம் பெண்ணுடன் சு.ரா பேசும் இடம் அழகானது. அதே போல படம் துவங்கும் போது ஆற்றும் உரை.  சு.ராவை பள்ளி வயதில் முதலில் வாசித்தேன். 'உழவுமாடும் கோயில் காளையும்' சிறுகதை பாடப்பகுதியாக இருந்தது. அதற்கு முன்பே 'ஜன்னல்' கதை வாசி...

பதி_ வாசகர் கடிதம்

  பதி - கமலதேவி: Simpleஐஆன Story ஆனால் ஒரு உளவியல் அதில் ஒளிந்திருக்கிறது. பெண்களுக்கு மகனுக்குப் பிறகே கணவன். சிலர் அதை வெளிப்படையாகக் காட்டுகிறார்கள், பலர் அதை மறைத்துக் கொண்டு அவர் தான் எனக்கு எல்லாம் என்கிறார்கள். வேண்டாத விருந்தாளி போல் குடிபுகுந்து எல்லோரது மனதையும் கவர்ந்த தாத்தா. பொம்பளைப் பிள்ளைய கால் செருப்பா நினைக்கிறவனோட எதுக்கு வாழனும்?  தாத்தா அதிக நாட்கள் உயிரோடு இருக்க மாட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. சரவணன் .M பதி சிறுகதை வாசிக்க https://kamaladeviwrites.blogspot.com/2022/06/blog-post_17.html

எழுத்தாளர் திருச்செந்தாழை

 எழுத்தாளர் பா.திருச்செந்தாழைக்கு இலக்கியத்திற்கான புதியதலைமுறை தமிழன் விருது வழங்கப்படுகிறது என்ற அறிவிப்பை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் பார்த்தேன். கண்விழித்ததும் பார்த்த முதல் செய்தி. உடனே அவரின் கதைகள் மனதில் சுழன்றன. அவற்றைப்பற்றி நான்கு வரிகளாவது எழுதிவிட வேண்டும் தோன்றியது. நேற்று முன்தினம் தமிழினி இணையஇதழில் திருச்செந்தாழையின் வீழ்ச்சி சிறுகதை வாசித்தேன். அந்தக்கதை மனதிலேயே சுழன்று கொண்டிருந்ததால் சமைக்கும்போது அம்மாவிடன் கதையாக கூறினேன். ஒரு வாசகியாக செந்தாழையின் கதைகளில் என்னைத் தொட்டு அசைப்பவை அவரின் கதைமாந்தருக்குள் இருக்கும் 'வெகுளித்தன்மை' . வியாபாரத்திற்கு சரியான எதிர்நிலை என்றால் அது வெகுளித்தனம் தானே. வியாபரம் என்பது எத்தனை பெரிய ஆடுகளம். வியாபாரத்தை ஒருவர் கையிலெடுக்கும் போது முதலில் எழும் எண்ணம் வீழ்ச்சி பற்றியதாகத்தான் இயல்பிலேயே நமக்கு எழுகிறது. வியாபாரத்தை கதைக்களனாக் கொண்டு எழுதும் போது வியாபாரத்தில் வெல்லும் ஒருவரை விட தோற்கும் ஒரு கதாப்பாத்திரம் நம்மை பதட்டமடைய வைக்கிறது. பொதுவாக வியாபாரத்தில் வெல்லும் தலைமுறைக்கு அடுத்தத்தலைமுறை வியாபார சூட்சுமங்களை மன...

புரவி சிறப்பிதழ் வெளியீட்டு விழா

 புரவி இதழின் ஓராண்டு நிறைவை ஒட்டி நடந்த சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உரை. எப்பொழுதும் போல எஸ்.ரா வின் அன்பும் ஆதுரமும் செறிவும் கனிவும் சிரிப்பும் நிறைந்த உரை.  https://youtu.be/c3-FDGBA3T4 பத்திரிக்கை, எழுத்து சார்ந்த செயல்கள் எப்பொழுதும் நல்ல கனவுகளுடன் தொடங்கப்படுகின்றன. அவை அப்படியே  தொடர வேண்டும் என்று இந்த ஓராண்டு நிறைவில் நினைத்துக்கொள்கிறேன். பத்திரிக்கை நடத்துபவர்களின் கனவு என்பது எழுத்தாளர்களையும் இணைத்த கனவுதான். புரவி ஆசிரியர்கள் கார்த்திகேயன் வெங்கட்ராமன் மற்றும் அருண் இருவருக்கும் அன்பும் வாழ்த்துகளும். 

இதழ்கள்

   இந்த மார்ச் மாதத்துடன் புரவி இதழ் தன்னுடைய முதல் ஆண்டை நிறைவு செய்கிறது.                      ஓவியம்: பார்கவி சிறுவயதில் விடுமுறையில் கோகுலம்,அம்புலிமாமா புத்தகங்களுக்காக அஞ்சல்கார அய்யாவுக்காக காத்திருப்போம். அவர் பெயர் ராமராஜ். என்னுடைய பள்ளி வகுப்பு தோழன் பாஸ்கரனின் தந்தை. அஞ்சல்காரர்களின் சைக்கிள் மணிஒலிக்கு என்று விஷேசமான தன்மை உள்ளது. 'சீக்கிரம் வா' என்று கண்டித்து அழைப்பது. அவர் எங்கள் ஊர் மட்டுமல்லாது இரண்டு மைல் தொலைவில் உள்ள கொல்லிமலை அடிவார பசலிகோம்பை வரை செல்லவேண்டும். அந்தப்பதட்டத்தில் அதட்டிக்கொண்டே இருப்பார்.  அஞ்சலில் வரும் இதழ்கள் மீதுள்ள ஆர்வம் இன்னும் குறையவில்லை. சிறுவயது பரவசங்கள் மெல்ல  மெல்ல இயல்பான விஷயங்களாக மாறிவிடுவதுதான் வாழ்வின் இயல்பான அபத்தம் அல்லது துயரம் அல்லது முதிர்ச்சியோ என்னவோ தெரியவில்லை. சில பரவசங்கள் இயல்பாகவே எந்த முயற்சியும் இன்றி உதிராமல் இருப்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.  எனக்கு அந்த மாதிரியான சில விஷயங்களில் ஒன்று இதழ்கள். எங்கள் ஊர் நூலகத்தின் மேசைகளில் கிடக...

புனைவின் வரை படம்

    எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் இரு நேர்காணல்களின் தொகுப்பானது புனைவின் வரைபடம் எனும் சிறுநூலாக வெளிவந்துள்ளது.  இந்த நூலில் எழுத்தாளர்களின் நேர்காணல் முக்கியத்துவம் குறித்து எஸ்.ரா குறிப்பிட்டிருக்கிறார். எழுத்தாளர்களின் மனமும்,வாழ்வும்,அன்றாடமும் எழுத்தாளர் அல்லாதவர்களிடமிருந்து மிகவும் மாறுபட்டவை. பொதுவாக வைக்கப்படும் கோட்டிற்குள் நிற்க திணறுபவை. எழுத்தாளர்களுடைய படைப்புகளுடன் இணைத்து அவர்களுடைய அந்த படைப்பு சார்ந்து அவர்கள் சொல்வதை எழுதுவதை கேட்பதும் வாசிப்பதும் ஒரு துணை வாசிப்பு போல. சிலருக்கு புத்தகமே போதுமானது. அந்த வகையில் துயில் நாவல் குறித்து எனக்கு இருந்த கேள்விகளுக்கு அல்லது நாவல் பற்றிய என் எண்ணங்களின் பகிர்தலிற்கு இந்த நேர்காணல் உதவியாக இருந்தது. அது அவருக்கும் நல்ல நேர்காணலாக அமைந்தது குறித்து மகிழ்கிறேன். புரவி இதழிற்கு நன்றி.

கவிஞர் பிரான்சிஸ் கிருபாவிற்கு அஞ்சலி

         கவிஞர் பிரான்சிஸ் கிருபா 16.11.21 அன்று மாலை இயற்கை எய்தினார். "மனதின் மிகப்பழைய வரைபடத்தின் வரம்புக்குள்ளேயே மலர்கின்றன பூக்கள்"                 _பிரான்ஸிஸ் கிருபா        பிரான்ஸிஸ் கிருபாவின் கவிதைகள் கண்முன் பெய்யும் மழைபோல அப்பட்டமானவை. அதற்கு எந்த வடிகட்டுதலும் இல்லை. அவை மிகையான உணர்வுகளை கொண்ட கவிதைகள் என்று சொல்லப்படலாம். என்றாலும் அவை அந்தத் தன்மையாலேயே அழகு கொள்கின்றன.  "கணங்கள்தோறும்  என்னை நானே தண்டித்துக்கொண்டிருக்கும் போது….ஏன் நீயேனும் கொஞ்சம் என்னை மன்னிக்கக்கூடாது" பிரான்ஸிஸ் கிருபாவின் இந்தக்கவிதை சாதாரணமாக பார்த்தால் காதல்கவிதையாக தோன்றக்கூடும். ஆனால் ஒரு கவிதை வாசிப்பவருக்கு எப்படியாகவும் இருக்கலாம் என்பதே கவிதை என்னும் வெளிப்பாட்டை மிக வசீகரமானதாகவும், அந்தரங்கமானதாகவும் ஆக்குகிறது. இந்தக்கவிதையை இறையை நோக்கி திருப்பும் போது அது எத்தனை விரிவு கொள்கிறது! "நடைபோடும் வழிகள் கடைகள் வரை நினைக்கின்றன பிள்ளைகள் பற்றிக்கொள்ள ஒருவிரல் போதுமென்று ஒற்றை விரலுக்குப் பின்னே மு...