இதழ்கள்
இந்த மார்ச் மாதத்துடன் புரவி இதழ் தன்னுடைய முதல் ஆண்டை நிறைவு செய்கிறது.
ஓவியம்: பார்கவி
சிறுவயதில் விடுமுறையில் கோகுலம்,அம்புலிமாமா புத்தகங்களுக்காக அஞ்சல்கார அய்யாவுக்காக காத்திருப்போம். அவர் பெயர் ராமராஜ். என்னுடைய பள்ளி வகுப்பு தோழன் பாஸ்கரனின் தந்தை. அஞ்சல்காரர்களின் சைக்கிள் மணிஒலிக்கு என்று விஷேசமான தன்மை உள்ளது. 'சீக்கிரம் வா' என்று கண்டித்து அழைப்பது. அவர் எங்கள் ஊர் மட்டுமல்லாது இரண்டு மைல் தொலைவில் உள்ள கொல்லிமலை அடிவார பசலிகோம்பை வரை செல்லவேண்டும். அந்தப்பதட்டத்தில் அதட்டிக்கொண்டே இருப்பார்.
அஞ்சலில் வரும் இதழ்கள் மீதுள்ள ஆர்வம் இன்னும் குறையவில்லை. சிறுவயது பரவசங்கள் மெல்ல மெல்ல இயல்பான விஷயங்களாக மாறிவிடுவதுதான் வாழ்வின் இயல்பான அபத்தம் அல்லது துயரம் அல்லது முதிர்ச்சியோ என்னவோ தெரியவில்லை. சில பரவசங்கள் இயல்பாகவே எந்த முயற்சியும் இன்றி உதிராமல் இருப்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.
எனக்கு அந்த மாதிரியான சில விஷயங்களில் ஒன்று இதழ்கள். எங்கள் ஊர் நூலகத்தின் மேசைகளில் கிடக்கும் இதழ்களை முதன்முதலில் பார்த்த காட்சி இன்னும் மறக்கவில்லை. சின்ன பிள்ளைகளுக்கான இடம் செய்திதாள்களுக்கு அடுத்ததாக உள்ள மேசை. சிறுவர்தங்க மலர்கள் மற்றும் காமிக்ஸ்களும் உள்ள மேசை. வயதாக ஆக மெல்ல மெல்ல இந்தப்புறம் நகர்ந்து வரலாம்.
நாங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே அமுதசுரபி,முத்தாரம்,கலைமகள்,கல்கண்டு,கல்கி என்று நீண்டு தொடர்ந்து இந்தியா டுடே,பாக்யாவின் முதல் சில இதழ்கள் என்று அய்யாவின் நீளும் ஒரு பட்டியலில் எங்களின் மாயாவி,கரும்புலி காமிக்ஸ்களுக்காக மணி சத்தம் கேட்டதும் ஓடி ராமராஜ்அய்யாவிடம் கைநீட்டுவோம்.
இன்று நான் மட்டும் ஓரிரு இதழ்கள் வாங்குகிறேன். அஞ்சல் துறை தான் இன்றுவரை கிராமங்களுக்கு கைக்கொடுக்கும் ஆபத்பாந்தவர்.
நான் முதன்முதலாக ஒரு இதழ் துவங்கப்பட்டு நடத்தப்படுவதை கண்முன் காண்கிறேன். அதன் பின்னுள்ள எந்த விஷயங்களும் எனக்கு தெரியாது என்றாலும் கூட அது எத்தனை சிரமமான பணி என்பதை உணர முடிகிறது.
'ஒரு இதழ்' என்பது பாரதி முதல் எத்தனை எத்தனை பேருடைய ஆசை. புரவி வாசகர்களால் நடத்தப்படும் இதழ் என்பதே அதன் மீதுள்ள மதிப்பிற்கும் அன்பிற்கும் காரணம்.
உலகில் எத்தனையோ விஷயங்கள் இருக்க ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்று அமரும் உள்ளங்கள் குறைவு. அந்த வகையில் புரவியின் ஓராண்டு நிறைவை மகிழ்வுடன் பார்க்கிறேன். இனிமேலான பயணத்தில் புரவி தன் தனித்த பாதைகளை,இலக்கியத்தில் தான் அடைய வேண்டிய இடத்தை கண்டு கொள்ளும் என்று நம்புகிறேன்.
கனவுகளுடன் தொடங்கப்படும் முயற்சிகள் இலக்கை அடைதல் என்பது காலத்தின் கைகளின் உள்ளது. காலம் தரத்திற்கு கைக்கொடுக்கும் என்பது மாறாத உண்மை.
பின்குறிப்பு: புரவியை வரைந்திருக்கும் பார்கவி பள்ளி மாணவியாவார்.
Comments
Post a Comment