Posts

Showing posts from November, 2022

பதி_ வாசகர் கடிதம்

  பதி - கமலதேவி: Simpleஐஆன Story ஆனால் ஒரு உளவியல் அதில் ஒளிந்திருக்கிறது. பெண்களுக்கு மகனுக்குப் பிறகே கணவன். சிலர் அதை வெளிப்படையாகக் காட்டுகிறார்கள், பலர் அதை மறைத்துக் கொண்டு அவர் தான் எனக்கு எல்லாம் என்கிறார்கள். வேண்டாத விருந்தாளி போல் குடிபுகுந்து எல்லோரது மனதையும் கவர்ந்த தாத்தா. பொம்பளைப் பிள்ளைய கால் செருப்பா நினைக்கிறவனோட எதுக்கு வாழனும்?  தாத்தா அதிக நாட்கள் உயிரோடு இருக்க மாட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. சரவணன் .M பதி சிறுகதை வாசிக்க https://kamaladeviwrites.blogspot.com/2022/06/blog-post_17.html

மூள் தீ

Image
        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள் வெடிக்கும் சத்தம் நெஞ்சை அதிர செய்தது.எதிர்வீட்டு கதவின் கம்பியில் கட்டப்பட்ட முதுகு தோல

அலைபேசிகள்

Image
    2021 நவம்பர் புரவி இதழில் வெளியான சிறுகதை                    அலைபேசிகள்                           பவித்ரா மடியிலிருந்த கைக்கணினியை இறக்கி மெத்தையில் வைத்தாள். அருகில்  ஜெய் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். சன்னலுக்கு வெளியே இருள்அடர்ந்திருந்தது. இன்றுடன் திருமணமாகி அறுபதுநாளாகிறது. அவளுக்கு இது ஒரு கனவாக இருந்திருக்கக்கூடாதா? என்ற எண்ணம் எழுந்தது. எரிந்தகண்களை உள்ளங்கைகளைக் கொண்டு மூடினாள். நாளை அலுவலகத்தில் ஆடிட்டிங் இருக்கிறது. உறங்கி எழுந்தால் தடுமாறாமல் தாக்குப்பிடிக்கமுடியும்.  இணையத்தை அணைக்கும் போது சரியாக அலைபேசியில் குறுஞ்செய்தி ‘டப்’ என்றது. நேரம் பதினொன்றை கடந்திருந்தது. யார்? என்று பார்த்தாள். நிவாஸ்… புன்னகையுடன் எடுத்தாள்.  எருமை… கல்யாணத்திற்கு வராமல் இத்தனை நாள் கழித்து, இந்தநேரத்தில் குறுஞ்செய்தி அனுப்புகிறான். ஒரு வேலைக்கு செல்லாதது இவனுக்கு எத்தனை வதையாக மாறிவிட்டது. எப்படி இருந்தவன்? அறிவாளிகளுக்கு எதுவுமே எளிதில்லையா? சராசரியாக பிறந்திருந்தால் இந்த அலைச்சல் இல்லாமல் இருந்திருப்பானோ? என்று நினைத்தபடி வாட்ஸ்ஆப்பை திறந்தாள். மேரேஜ்க்கு வரமுடியலக்கா… நீ வேணுன்னுதாண்ட

அகமும் புறமும்: 8

Image
          விண்மீனை தேடித்திரிதல் காலே பரிதப்பினவே கண்ணே நோக்கி நோக்கி வாள் இழந்தனவே, அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்ற,இவ்வுலகத்துப் பிறரே. பாடியவர்: வெள்ளிவீதியார் குறுந்தொகை 44 திணை: பாலை செவிலிக்கூற்று பாடல்  அகத்திணையில் தலைவன் தலைவியின் காதலை,துயரை காணும் அளவே, தலைவியின் மீது காதலும் அவள் பிரிவால் பெருந்துயர் கொள்ளும் ஒருத்தி உண்டு. அது அவளின் செவிலித்தாய்.  அந்த ‘செவிலித்தாய் மனநிலை’ தமையன் என்ற உறவிற்கும் உண்டு. தமையன் என்ற உறவு தாயாகவும், தந்தையாகவும், தோழனாகவும் உருமாறக்கூடியது. ஒரு பெண் தன் இளையவனின் முன்னால் அதிகார மனநிலையில் நிற்கிறாள் அல்லது அவனை சிறுவனாகவே வைத்துக்கொள்கிறாள். அவளால் மூத்தவனுடன் தான் தோழியாக பழக முடிகிறது என்று நினைக்கிறேன்.  அதே மாதிரி ஒரு ஆணிற்கும் தன் தமக்கையை விட தங்கை அணுக்கமாக இருக்கிறாள். அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறான். அவளைப்பற்றி தனக்குத் தெரியாத எதுவும் இல்லை என்றே நினைக்கிறான். கிட்டதட்ட சங்கப்பாடல்களில் உள்ள செவிலித்தாயின் மனநிலையும் இதுவே. பெற்றவள் அறியாததைக் கூட நானறிவன் என்ற பெருமிதம் உள்ள மிக மென்மையான உறவு. தலைவி வயதெய்துவது, காதல் கொ

ஒரு உரையாடல்

Image
அனல் பறக்கும் வெளி என்றாலும் என் கேள்விகளுடன் மீண்டும் மீண்டும் அங்கேயே செல்கிறேன். மனிதகுமாரன் சிலுவையில் காயங்களுடன் புன்னகைத்தார். இவர் எப்போதும்  காயங்களுக்கே சாதகமானவர். இலக்கை தைத்து வெளியேற முடியாத அம்பின் விசையே காயம்  என்று சொன்னேன். இன்னும் என்னருகில் வா என்றார். குருதி பிசுபிசுக்கும்  நிணவாடை வீசும்  அவர் அருகில் சென்றேன். தன் காயங்களை  தன் கண்களால் தழுவியபடி... விசையுடன் வந்த  அம்பின் தவிப்பே காயம்  என்றும் சொல்லலாமில்லையா? என்றார். வெப்பம் தாளாது ஓரடி பின்வாங்கினேன். அவர் புன்னகைத்தபடி ஒரே ஒரு கேள்வி மகளே... உனக்கு சிலுவை என்பது என்ன? சகித்தல் என்றேன். அவர் பறத்தல் என்றார். அனல் தாங்காமல்  இன்னும் ஓரடி  பின்னே நகர்ந்தேன். அம்பும் இலக்கும் வேறுவேறு அல்ல மகளே... நான் இதுவரை அம்பும் வில்லும் ஒன்று என்றிருந்தேன். கல்வாரி மலை எங்கும்  அவரின் நிழல் இருந்ததை  அப்போதுதான் பார்த்தேன். பின் அவர் நிழல் எங்கும்  மணம் சூழத்தொடங்கியது. அங்கிருந்து வெளியறுகையில் மீண்டும் அங்கேயே வருவேன்  என்பது தெரிந்தே வெளியேறுகிறேன்.  

ஒவ்வொருமுறையும்

Image
அந்தச்சிட்டுக்குருவி மண்ணிலிருந்து சிறகை உதறிக்கொண்டு வானத்தில் எழுகிறது... அந்த கம்பத்தில், கிணற்றின் சுற்றுசுவரில், செம்பருத்தி செடியின் கிளையில், வீட்டுத்திண்ணையில், ஒவ்வொருமுறை எழும்போதும் சிறகை உதறிக்கொள்கிறது. எத்தனை இயல்பாய் சிறகுகளை விரித்து சிறுஉடலை ஆட்டி தலையை உயர்த்தி விரிந்த ஒரு பூவைப்போல தன்னை உலுக்கிக்கொள்கிறது. அதன் சிறகில் சிறு பூவிதழோ, சிறு மகரந்தத்துகளோ , சிறு புழுதியோ இருக்கலாம். இல்லை எதுவுமே இல்லாமலும் இருக்கலாம். என்றாலும் உதறிக்கொள்கிறது. ஒவ்வொரு முறையும் உதறி எழுவது... அமர எத்தனிக்கும் தன்னையே தானோ... இல்லை பறக்க எத்தனிப்பதை சிலிர்த்துக்கொள்கிறதா? இல்லை பறத்தல் என்பதே  ஒவ்வொருமுறையும் சின்னஞ்சிறிய சிறகிற்கு அத்தனை பெரிய பேரின்பமா?

செம்புலம் சிறுகதையின் ஒலிவடிவம்

Image
 ஓலைச்சுவடி இணைய இதழில் வெளியான செம்புலம் சிறுகதையின் ஒலிவடிவம். எழுத்தாளர் மதுமிதா அவர்களுக்கு அன்பும் நன்றியும். மதுமிதா அவர்களின் உணர்வுபூர்வமான குரலிற்கு வணக்கங்கள். சிறுகதை கேட்பதற்கான இணைப்பு https://youtu.be/aZ5m06BMv3A

இளநகை

Image
அக்டோபர் 16 வாசகசாலை இணைய இதழில் வெளியான சிறுகதை. இளநகை பத்துநாட்களுக்கு மேலாக தினமும் சாயங்காலம் வரும் மழை இன்றும் தப்பாமல் வந்து கோலத்தை நனைத்து அழித்துக் கொண்டிருந்தது. பக்கத்துவீட்டு ஓட்டுக்கூறையில் இருந்து வழிந்த நீர்த்தாரைகள் சாக்கடையில் கலந்து மறைந்தன. மழையைப் பார்த்தபடி வாசல்படியில் பால்காரனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன்.  வித்யாவின் கணவர் சதீஸ் ஆயுள் காப்பீட்டு முகவராக பதிவு செய்திருந்தார். சென்னையிலிருந்த வேலையை விட்டுவிட்டு நிரந்தரமாக ஊருக்கு திரும்பி இரண்டு மாதங்களாகிறது. சங்கர் அவரை வீட்டிற்கு அழைத்து வருவதாக சொல்லியிருந்தான். இன்னும் சற்று நேரத்தில் இருவரும்  வந்துவிடுவார்கள். அலைபேசியில் ஒலித்தது. எடுத்து,“எப்ப வரீங்க,” என்றேன். “உன்னோட டிகிரி சர்ட்டிஃபிகேட்.. ஆதார் கார்டை எடுத்து வை…அப்பறம் ஏதோ சிரிச்சபடிக்கு செல்ஃபி எடுக்கனுமாம்..புரியுதுல்ல,” “எதுக்கு செல்ஃபி,” “இப்பெல்லாம் லைவ் ஃபோட்டா தானாம்,” என்று வைத்துவிட்டான். மதியம் கேட்டதற்கும் சரியாக பதில் சொல்லாமல் அவசர அவசரமாக தயிர்சோற்றை அள்ளிப்போட்டு கொண்டு வண்டியில் பறந்தான். அவனுக்கு எப்போதும் நெல் மிஷின், அரிசி, தவி

உடன்போக்கு

Image
        டிசம்பர் 10, 2020 வாசகசாலை இணையஇதழில் வெளியான சிறுகதை.                                                                    உடன்போக்கு கார் முன்னிருக்கையில் விரல்களால் தட்டிக்கொண்டு குமரன் அமர்ந்திருந்தான். கண்கள் சிட்டுக்குருவியின் உடல் அசைவுகளென படபடத்துக்கொண்டிருந்தன. வழக்கத்துக்கு மாறாக பிராண்டட் பேண்ட் சட்டையில் பள்ளிக்கூடத்து வாத்தியார் போல இருந்தான். “என்ன முதலாளி நீங்க இப்பதான் புதுசா கல்யாணம் பண்றாப்ல பதட்டப்படுறீங்க… தங்கச்சியே தைரியமா இருக்கு,” என்று பின்னிருக்கையிலிருந்த காமாண்டி கார் அதிர சிரித்தான். டிரைவர் பெருமாள் திரும்பிப்பார்த்து புன்னகைத்து,“நாமல்லாம் மட்டையாகற நிதானத்துலதான் காமாண்டி சரியா பேசுவாப்ல…”என்றான். “பின்ன…நம்ம முதலாளிய யாருன்னு நெனச்ச? இல்லாட்டி தங்கச்சியே வர சொல்லுமா,” “வாயமூடுங்கடா…உங்களையெல்லாம் நம்பி என்னாகுமோ…  எம்மாமன நெனச்சா அஞ்சுஉசுரும் தனித்தனியா போவுது,” குறுகிய ஈரதார்சாலையில் இருள்அடந்துகொண்டிருந்த நேரம் அது. குளிர்காற்றினுள் கரும்சிகப்பு ஹீண்டாய் கார் புகுந்து சென்று கொண்டிருந்தது.  “அனுமார்சாமி கணக்கா தன்பலம் தெரியாத ஆளாயிருக்கீங்க. மு

நீலகண்டன்

Image
 2019 செப்டம்பர் 15 வாசகசாலை இணையஇதழில் வெளியான சிறுகதை நீலகண்டன் ஈரஉடலைத் தழுவிய காற்றை உணர்ந்த நீலகண்டன் எங்கியோ மழை பெய்யுது என்று நினைத்தபடி  தக்காளிப்பழங்களைப் பொருக்கி கூடையில் போட்டுக்கொண்டிருந்தார்.பக்கத்திலிருந்த மேனகா, “இந்த அழிகாட்டு பழத்த யாரு வாங்குவாப்பா,”என்றாள்.மஞ்சளும் பச்சையும் சருகுமாக தக்காளி செடிகள் வயலெங்கும் படுத்துக்கிடந்தன.  “வாங்க ஆளிருக்கு..சின்ன சைஸ்ன்னாலும் ருசிக்கிறப்பழம்...நமக்கு வண்டிபெட்ரோல் செலவு கட்டுனா போதும்..” “நம்ம செய்யற வேலக்கி கூலி..?” நீலகண்டன் புன்னகைத்தார். “கணக்குப்பாடத்துல இருக்குப்பா…இதுக்கு பேரு எதிர்மாறல்,” என்று சொல்லியவாறு வரப்பிலிருந்து குதித்தாள். “ஐ..ஐ..கணக்கு புரிஞ்சிருச்சே…”என்று கைகளை ஆட்டிக் காண்பித்தாள். “இதெல்லாம் இருக்கா....மூணாப்பு படிக்கையில வயிறுவீங்கி எங்கப்பாரு போனப்பிறவு இந்த வயக்காடு தான்.வயவேலக்கு கணக்குப்பாக்கக்கூடாது கண்ணு…?” என்றவர் அவள் கன்னத்தை செல்லமாக நிமிண்டினார். “இந்தா..மாமா… கேக்கலியா..”என்றபடி பாக்கியம் வரப்பில் ஓடிவந்தாள். “மெதுவா..என்ன வெள்ளமக்காட்டல மாடு மேயற அவசரமா போகுது ..மெதுவா..” “எங்க அக்காவூட்டு