Skip to main content

நீலகண்டன்

 2019 செப்டம்பர் 15 வாசகசாலை இணையஇதழில் வெளியான சிறுகதை

நீலகண்டன்

ஈரஉடலைத் தழுவிய காற்றை உணர்ந்த நீலகண்டன் எங்கியோ மழை பெய்யுது என்று நினைத்தபடி  தக்காளிப்பழங்களைப் பொருக்கி கூடையில் போட்டுக்கொண்டிருந்தார்.பக்கத்திலிருந்த மேனகா, “இந்த அழிகாட்டு பழத்த யாரு வாங்குவாப்பா,”என்றாள்.மஞ்சளும் பச்சையும் சருகுமாக தக்காளி செடிகள் வயலெங்கும் படுத்துக்கிடந்தன. 

“வாங்க ஆளிருக்கு..சின்ன சைஸ்ன்னாலும் ருசிக்கிறப்பழம்...நமக்கு வண்டிபெட்ரோல் செலவு கட்டுனா போதும்..”

“நம்ம செய்யற வேலக்கி கூலி..?”

நீலகண்டன் புன்னகைத்தார்.

“கணக்குப்பாடத்துல இருக்குப்பா…இதுக்கு பேரு எதிர்மாறல்,” என்று சொல்லியவாறு வரப்பிலிருந்து குதித்தாள். “ஐ..ஐ..கணக்கு புரிஞ்சிருச்சே…”என்று கைகளை ஆட்டிக் காண்பித்தாள்.

“இதெல்லாம் இருக்கா....மூணாப்பு படிக்கையில வயிறுவீங்கி எங்கப்பாரு போனப்பிறவு இந்த வயக்காடு தான்.வயவேலக்கு கணக்குப்பாக்கக்கூடாது கண்ணு…?” என்றவர் அவள் கன்னத்தை செல்லமாக நிமிண்டினார்.

“இந்தா..மாமா… கேக்கலியா..”என்றபடி பாக்கியம் வரப்பில் ஓடிவந்தாள்.

“மெதுவா..என்ன வெள்ளமக்காட்டல மாடு மேயற அவசரமா போகுது ..மெதுவா..”

“எங்க அக்காவூட்டுக்காரருக்கு ஆச்சுபோச்சுன்னு இருக்காம்..தர்மாஸ்பத்திரியில இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லீட்டாங்களாம்,”என்றாள். மேனகா அம்மாவின் பக்கத்தில் கண்களை உருட்டி விழித்தபடி நின்றாள்.

“நேத்து பேசறப்ப உடம்புசூடுன்னு தானே சகல சொன்னாப்ல…”என்று தலைப்பாகை துண்டை அவிழ்த்து உடலைத் துடைத்துக் கொண்டார்.

“நீ இப்பவே போ..பின்னாலயே வர்றேன்..”என்றபடி தக்காளிக் கூடையைத் தூக்கினாள்.அது வசமிழந்து மண்ணில் விழுந்தது.பாக்கியத்தின் தலையில் கைவைத்தபடி ,“பதறாம பிள்ளைகளை ஆத்திக் கூட்டிக்கிட்டு வரனும்…”என்றப்பின் வரப்பில் தாவி ஏறினார்.

அரசு மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்த ராஜா, “சகல..இங்க என்னக் கொன்னுபுடுவாளுக..வீட்டுக்குக்கூட்டிட்டு போயிரு..”என்றார்.

“கொஞ்சம் பொறுத்துக்கப்பா..வலின்னா வைத்தியம் பாக்கனுமில்ல..”

கடம்பூர் அத்தையின் கைகளை கடித்து வைத்திருந்தார்.நர்சுகள் ராஜாவின் வசவுகள் பொறுக்காமல் வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.

நீலகண்டன், “என்னம்மா இவருக்கு? இப்பிடி பேசற ஆளில்ல அவரு.தயவுப்பண்ணி சொல்லுங்க..”என்று கைகளை கட்டிக்கொண்டு  நின்றார்.

“ஈரல் வீணாப்போயி எத்தன வருசமாவுது..”

“ரெண்டு வருசமா மருந்து வாங்கித் திங்கறாப்ல,”

“ம்..அப்ப குடிக்காம இருக்கனுமில்ல..ஆட்டுக்கறி வேணாண்ணு சொல்லியிருக்கோம்.கேக்கல..” நீலகண்டன் தலைகுனிந்து கொண்டார்.

“காய்ச்சல்,உள்ளுக்க இருக்கறப் பிரச்சனை எல்லாம் சேந்துக்கிச்சு.கல்லீரல மாத்தனும்..நெறய செலவாகும்..முடியுமா?”

தன் சிறிய ஓட்டுவீட்டின் முன்அறையில் இரண்டுநாட்கள் கயிற்றுக்கட்டிலில் கிடந்த ராஜா மூன்றாம் நாள் கண்திறந்து பசிக்கிறது என்றார்.

ஆராயிக்கிழவி,“சோறு கேக்கறானே..கடங்காரன் வாசல்ல நிக்கிறான்.உலக்கய தூக்கி நெலப்படியில போடுங்க புள்ளைங்களா,”என்று பதறினாள்.

“ஏங்கழவி பதறி கூட்டற…அதுக்குதானே காத்துக் கிடக்குறாப்ல,”

“எஞ்சகல எங்க..எங்க..” என்ற ராஜாவின் குரலை நீலகண்டன் கேட்டும் கேட்காமல் நின்றார்.

“சாவுக்கெடப்புல கூப்புடுறான்..பனமரமாட்டம் நிக்கிறியே…”

“நம்ம சொல்பேச்சுல ஒருபேச்ச வச்சுகிட்டாரா..இப்பமட்டும் என்னவாம்..” என்றபடி வேட்டியை இழுத்துவிட்டுக் கொண்டு கட்டிலின் அருகில் தரையில் ராஜாவின் முகம்பார்த்து அமர்ந்தார்.

“என்னப்பா…ஒன்னுமில்ல சரியாப்போயிரும்..”என்ற நீலகண்டனையே உற்றுப்பார்த்தார் ராஜா.நீலகண்டன் தானாகவே,“அக்கா தங்கச்சிக்கு குறுக்க நம்ம ரெண்டுபேரும் எப்பவுமே நின்னதில்ல…”என்றார்.ராஜா பார்வையை மாற்றவில்லை.

“அண்ணியோட சேந்து பிள்ளைய கரையேத்தி விட்டுறேன்” என்றவர் சிறிது நேரம் கழித்து, “இன்னிக்கி நீ சாவக்கெடறன்னு தலையாட்ட முடியாது..எங்கட்டை படுக்கற வர உறுத்திக்கிட்டு கெடக்கும்.பயலுகள கையில வளச்சி பிடிக்கமுடியாதுப்பா அவனுங்களுக்கு நான்வேணுன்னா கூட இருப்பேன்..”என்றார்.ராஜா பிரயத்தனப்பட்டு வலதுகையை நீட்டி நீலகண்டனின் தோளைத்தொட்டார்.அவர் குனிந்து தரையைப் பார்த்தபடியிருந்தார்.

எதாச்சுன்னா பாத்துக்கலாம்..போன் போடுங்க என்று உறவுமுறைகள் அனைவரும் ஊர்போய் சேர்ந்த மறுநாள் விடியலில் ராஜா உயிரைவிட்டார்.பக்கத்திலிருந்திலிருந்த பெரியவீட்டுத்திண்ணைக்கு கீழே நீலகண்டன் மூன்று ஆட்களை துணைக்கு வைத்துக் கொண்டு சமைத்துக்கொண்டிருந்தார்.அவருக்கு மூன்றுநாட்களாக உறக்கம் கண்ணாமூச்சி காட்டி ஓடிக்கொண்டிருந்தது.கனத்துக்கிடந்த தலையை உலுக்கிக்கொண்டார்.கைகளை ஓங்கிக் குத்திக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

சோற்றைக்கிண்டிவிட பயல் திணறிக்கொண்டிருப்பதைப் பார்த்த நீலகண்டன் ஆளுயரக்கரண்டியை அவனிமிருந்து வாங்கிக் கிண்டினார்.அவரின் தோள்களைப் பார்த்தபடி அவன் நகர்ந்தான்.அவன் பார்வையை உணர்ந்தவாறு அவர் கரண்டியைக் கீழே வைத்தார்.கல்லடுப்பில் மூன்றுபுறமும் எரிந்த நெருப்பின் அனலை பார்த்துக் கொண்டு நின்றார்.கருத்த உடலை நனைத்துப் பெருகிக் கொண்டிருந்தது வியர்வை.

திருமணமான புதிதில் நீலகண்டனை, மாமனார் வீட்டிலிருந்து நகர்த்தி சென்று ஊரின் எல்லையில் ராஜா , “கலந்துக்கலாமா சகல,”என்றார்.

உடனே நீலகண்டன் நேருக்கு நேராக , “எங்கப்பார நெனச்சி இந்தக்கையில தள்ளிவச்சத தொடலாமாண்ணே?”என்று இடதுகையைக் காட்டினார்.

“இல்ல…வேணாம்..”என்று தோளில் தட்டிய ராஜா, “சட்டையக்கழட்டுப்பா,”என்றார்.

“என்னண்ணே..” என்று புன்னகைத்தார்.

“அட..வயல்ல சட்டையோடவா மம்புட்டி பிடிப்ப..”

“அதுக்கிலண்ணே...”என்று புன்னகைத்தபடி கழட்டினார்.

கண்களை விரித்த சேகர், “மாடு பிடிப்பாப்ல போலயே..”என்று சிரித்தார்.

“அப்பிடி போடு..”என்று ராஜா தோளில் கைப்போட்டுக்கொண்டார்.காத்து போல என்று நீலகண்டனுக்குத் தோன்றியது.

சேகர் அங்கிருந்த பொட்டலத்தைப் பிரித்து, “கறியத்தின்னுப்பா..”என்று நீலகண்டனிடம் நீட்டினார்.

“இதுக்கெல்லாம் எவ்வளவு செலவு ஆவும்..”

ஆளுக்கொரு கணக்கு சொல்ல நீலகண்டன், “வயலுக்கு மருந்து அடிச்சிரலாம்..”என்றார்.

சேகர் , “ராஜாவுக்கு சகலையப் பாத்தீங்களாப்பா,” என்று சிரித்தார்.

ராஜா போர்வண்டிக்கு சென்றுவந்து வீட்டிலிருந்த நாட்களில் அவரை இழுத்துப்பிடிக்க சமையல் வேலைகளுக்கு  நீலகண்டன் ஆள்பிடித்தார்.மூன்றுமைல் தொலைவில் இருவரின் வீடுகளும் இருந்ததால் விலகாமலிருந்தார்கள்.

ராஜா சொல்ல சொல்ல நீலகண்டன் சமைத்தார். கிடைக்கும் வருமானம் மாடுகளின் தீனிக்கு தாராளமாக இருக்கவும் அவருக்கும் அதில் பிடிப்பு உண்டானது.

வெள்ளாளப்பட்டியில் சமைத்துவிட்டு குறுக்கே காட்டுவழியில் நடந்து வருகையில் நீலகண்டனின் வயலையும்,வயலோரத்து ஓட்டுவீட்டையும் தூரத்திலிருந்து பார்த்த ராஜா,“உங்கிட்டவாவது ஒருஏக்கர் மண்ணு இருக்கவும் மரியாதையா பொழைக்கற..”என்றார்.

“உனக்கு மட்டும் என்ன..கையில தொழில் இருக்கையில..பேருக்கேத்தாப்ல பொழைக்கறதுக்கென்ன..மனசும் ஒடம்பும் ஒன்னா நிக்கனும்..”

விசேசகாலங்களில் மாமனார் வீட்டுத்திண்ணையில் உறங்கிக்கொண்டிருக்கும் நீலகண்டனை, இரவில் ராஜா எழுப்பி கையிலிருக்கும் உணவுப்பொட்டலத்தைக் கொடுத்து தண்ணிர் எடுத்து வைப்பதை, வீடு உறக்கம் கலைந்த பாதிக்கண்களால் பார்த்து புன்னகைக்கும்.

நீலகண்டனை விட ராஜா உயரம்.இயல்பாக நீலகண்டனின் தோளில் கைப்போடுவார். முதலில் நீலகண்டனுக்கு விதிர்ப்பாகவும் ,பின் தான் தன் காளையின் மீது ஓங்கித்தட்டி அதன் மீது கைபோட்டபடி நடப்பதை நினைத்துக் கொள்வார்.


அன்று தம்மப்பட்டி ஜல்லிக்கட்டு முடிந்து நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.நிலவின் ஔி மெல்லிய படலமாக விரிந்து நிற்கும் இரவு அது.இடதுபுறம் பச்சைமலைக்குன்றுகள் நிழலாக எழுந்து நின்றிருந்தன.மெல்லிய தண்காற்று.மேட்டுநிலம் பையப் பைய சரியும் பாதை அது.காளை ஒரேதாளத்தில் நடந்துகொண்டிருக்க அதன் திமிலசைவு நடனம் போல இருந்தது.

ராஜா,“ஆட்டக்காரனாட்டம் துமில ஆட்டறவன்,”என்று திமிலை ஓங்கித்தட்டினார்.காளை சட்டென்று திரும்பிப்பார்த்தது.

“இதென்ன இப்படி பாக்குது..”

“வேத்தாளு தொட்டா தெரியாதா..” 

“அது எப்பிடிப்பா சீறிவர்ற காளைக்கு முன்னாடிப்போய் நிக்கிற..கொழ நடுங்கிறாது..”என்று சிரித்தார்.

“நெசத்துல உள்ளுக்குள்ள முதல்ல பதறும்..இந்தக்காளைய வளக்க வளக்கத்தான் அது கொறஞ்சிது.நீ நாளுநாள் இதுக்கூட இருந்தின்னா தெரியும்.என்ன இருந்தாலும் பயம் இருக்கத்தாண்ணே செய்யுது... கொம்பு குத்தின தடம் உடம்புல எத்தனையோ இருக்கு,”

“அது எதுக்குன்னுதான் கேக்கறனே..”

“எல்லாம் ஒரு கிக்குதான்..”

“ம்..என்ன கண்றாவியோ தெரியல..போய் முன்னாடி நிக்கவும் அது தொறத்துனா நீங்க கொழநடுங்க நாலுகால் பாய்ச்சல்ல ஓடறதும்..”என்றும் சிரித்தார்.அவரின் சிரிப்பு அந்த அரவமற்ற பாதையில் தனியே கேட்டது.

“அட மூக்கனாங்கவுத்த விடு சகல..செறங்கு போயும் சொறி போகாத கையாட்டம்.. கயித்தவிட்டின்னா செவனேன்னு தானே நடக்குது..”

“இது என்ன தொழுவத்து பசுவா இல்ல ஒழவுவண்டிமாடா..ம்..குட்டியா இருக்கும்போது பிடிச்ச கைப்பிடிபழக்கத்துக்கு அப்படியே இருக்கனும்.ஒருதரம் பிடி இல்லன்னு தெரிஞ்சுட்டா…திமிறி பாக்கத் தொவங்கிரும். விட்டுப்பிடிச்சு சோதிக்கக்கூடாதுண்ணே…”

“நீ சொன்னா சரியா இருக்கும்..நீ தெனவெடுத்தவன்டா. எனக்குத்தான் ராத்தூக்கமில்லாம ஒடம்பு ஊசத்துப்போவுது..”என்று தோளில் கைப்போட்டுக் கொண்டார்.

“நீ குத்தவைக்கு புகையலக்காரர் வயல ஓட்டுறியா? ரெண்டு வெள்ளாமைக்கு கைக்காசு போட்டு ஓட்டிப்பாரு….தானா தெனவு வந்திரும்,”

“என்னமோ சொல்ற..”

“சின்னவயசுலருந்து வண்டிக்காரனுக்கு கைக்கட்டியே பொழச்சிட்ட..இனிமே முடியாது.உனக்கு முட்டுக்கொடுக்க நானிருக்கேன்”

“பிள்ளைக வளரட்டும்.. நீ மட்டும் என்னப்பண்ணுவ,” என்பதோடு பேச்சை நிறுத்தினார்கள்.

நீலகண்டனுக்கு அடிக்கடி தூக்கம் பிடிக்காமலிருக்கும் வழக்கமிருந்தது.ராஜா, “எதுக்கு பித்துப்பய கணக்கா தூக்கத்த தலமேல செமக்கற..எங்கூட வாப்பா,”என்று அழைப்பார்.இவர் சிரித்தபடி, “பாக்கியத்துக்கு தூக்கம் வராதன்னிக்கு பேசிக்கிட்டே ராவுல நெலாவெளிச்சத்துல களசெடிகள பிடுங்கிப்போடுவோம்..அது நல்லாருக்கும்,”என்பார்.

கூத்து பார்க்க காத்துக்கிடந்த அன்று கூத்தாட வந்தவர்களுக்கும் ,ஊர்க்காரர்களுக்கும்  பிட்டுக்கொண்டது.பேச்சு நடந்து கொண்டிருக்கையிலேயே இளம்பையன் ஒருவன் கூத்தர்களில் ஒருவரை நோக்கிப்பாய ,சட்டென்று நீலகண்டன் ஒருகையால் அவனைத் தன் கக்கத்தில் அசையாமல் பிடித்தார்.பின்னால் வந்த இன்னொருவன் இன்னொருக்கையில் மாட்டிக்கொண்டான்.

பிரச்சனை சரியாகி கூத்து இரவு முழுவதும் நடந்து ஔியெழும் நேரத்தில் முடிக்கப்பட்டது. கடைசியாக சாமிக்கும்,பூமிக்கும்,ராவுக்கும்,பாரத நாயகர்களுக்கும்,ஊருக்கும்,உதிக்கப் போகும் சூரியனுக்கும்  நன்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இரவில் பயல்களிடமிருந்து தப்பித்த கூத்தர், “பாரதக்கதை சொல்ற இடத்துல சூட்சுமமா கதையிலிருக்க யாராச்சும் வருவாங்கன்னு சொல்வாங்க.அந்த வகையில நேத்து ராவுல, நமக்கு இன்னிக்கு பொழுதுக்கு வருபடிக்கு வழிசெஞ்சதால, அவருக்கு  ஒரு மால…”என்று கழுத்திலிருந்த சாயம் போன மாலையை நீலகண்டன் மடியில் தூக்கி வீசினார்.ராஜா அந்தசம்பவத்தை எப்போதும் ஊரில் உறவில் என அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.

சேர்ந்தே திரியும் இவர்களை ஊர்வயசாளிகள் வம்படியாக, “என்ன மாமன் மச்சான்களா,” என்றால், “ ஆள் யாருன்னு தெரியலயா பெரிசு..அக்கா தங்கச்சிய கட்டினவிங்க,” என்பார்கள்.

“பங்காளிகளா..”என்று மீண்டும் கொக்கியைப் போடுவார்கள்.

“இல்லயே.. பங்காளிங்க என்னக்கி பக்கமா இருந்தத பாத்தீரு…நாங்க சகலைக..”என்று காலரை தூக்கிவிட்டு கொள்வார்கள்.ஊர் உறவில் அவர்களை அந்த சகலைபயல்களில் ஒருத்தன் என்றே அடையாளம் சொன்னார்கள்.

மாமனாரை காடுசேர்த்த அன்று கோடித்துணி எடுத்து வரும்போது நீலகண்டன் வகையராவை ராஜா அழைக்காமல் பெரும்போக்காக இருந்ததாக ஏற்பட்ட மனஸ்தாபத்தால் இருவரும் முகத்தைப் பார்க்காமல் இருந்தார்கள்.ராஜா பார்க்கும் போதெல்லாம் நீலகண்டன் குனிந்தபடி சட்டை கையை சுருட்டிவிட்டுக் கொண்டிருந்தார்.

மாமனார் காடு சேர்ந்து ஒருஆண்டு முடிந்த பொங்கலில் பிள்ளைக்குட்டிகளோடு மாமனார் வீட்டிலிருந்தார்கள்.அன்றிரவு ராஜா, நீலகண்டன் பக்கத்தில் வந்தமர்ந்தார்.குனிந்தபடி எழுந்து உட்கார்ந்த நீலகண்டனின் தோளில் கைவைத்து, “கைப்பிடிய சோதிச்சுப்பாக்கக் கூடாது..பாத்தாச்சு.ஒரு வட்டத்துக்குமேல நீட்டினா பாதமாறிப்போவும் .அன்னிக்கு மேள,பட்டாசு சத்தத்துல நான்கூப்டது கேக்கலயாட்டுக்கு..உங்க வகையறா கோவிச்சுக்கிட்டாங்க..”என்றார்.

தலைநிமிர்ந்த நீலகண்டன், “எருமசாணி..இத அன்னிக்கே சொல்றதுக்கு என்ன?”என்றார்.

“நீதான் ஜல்லிகட்டு சாணியாச்சே …கேக்றதுக்கு என்ன..”என்றதும் ,ராஜா, “வயசுவந்தப்பிள்ளையாட்டம் குனிஞ்சிக்கிட்டேயிருந்தா..என்னத்த பேச?”என்று சிரித்தார்.

வாசலில் பாய்விரித்து படுத்திருந்த ராசம்மா, “ஏம் பாக்கியம்..சாணியா குமியுதே ..உருட்டிப் போட்டா வயலுக்காச்சும் ஆவும்?”என்று சிரித்தாள்.பிள்ளைகள் எழுந்து திண்ணையிலிருந்த அவர்களிடம் ஓடிவந்தார்கள்.

சமையல் வேலையை முடித்துவிட்டு நீலகண்டன் பந்தலில் நின்றார்.சடங்குகள் முடிந்ததும் பெரியாள் ஒருவர்,“ஒருத்தருக்கொருத்தர் அனுசரனையா பாடையத் தூக்குங்கப்பா..”என்றதும் நான்குபுறமும் தூக்கினார்கள்.முன்னால் வலதுபுறத்தில் நின்ற நீலகண்டனின் இடதுதோளில் மூங்கில் அழுந்தியது.அந்த எடை ஏதோ ஒருவகையில் ஆசுவாசமாக இருப்பதை உணர்ந்து நீலகண்டன், “அப்பாடா..அப்பாடா,”என்று தனக்குள் முனகியபடி நடந்தார்.காட்டிலிருந்து வெயிலில் காய்ந்து ,குளித்த ஈரம் மாறி வீட்டிற்கு வந்து திருநீரு இட்டப்பின் உணவிற்காக அமர்ந்தார்கள்.

“ராஜாண்ணன் வைக்கிற குழம்பு கணக்கா இருக்கு,”என்று ஒருவர் சட்டென்று சொன்னார்.

“ஆமா..அதே ருசி..”

நீலகண்டன் குனிந்து சோற்றை எடுத்து வாயில் வைத்தார்.வெயில்சாய பந்தலில் அமர்ந்திருந்த நீலகண்டனிடம், “புலம்பிக்கிட்டே தூங்காம கெடந்தியே இன்னிக்கு மட்டுமாச்சும் தெக்குபக்கமா போலாமா?” என்றார்கள்.

“இன்னிக்கு சகலைய நெனச்சு தள்ளி வைக்கறேன்,”என்று குனிந்தமர்ந்தார். பின் நிமிர்ந்து, “பிள்ளைகளா…பால்தெளிக்க வேணுங்கற சாமானங்களை இப்பவே எடுத்துவச்சிறலாம்.. ..காலையில பறக்கமுடியாது..”என்று எழுந்தார்.தாழ்வாரத்து மூங்கிலைப் பிடித்தபடி நின்ற பாக்கியம் கண்ணீரோடு, “அப்பா கூப்பிடுதுல்ல..எங்க போனீங்க பிள்ளையளா,”என்று சத்தம் வைத்தாள்.





 



                                                  






Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...