அனல் பறக்கும் வெளி என்றாலும்
என் கேள்விகளுடன்
மீண்டும் மீண்டும்
அங்கேயே செல்கிறேன்.
மனிதகுமாரன் சிலுவையில்
காயங்களுடன் புன்னகைத்தார்.
இவர் எப்போதும்
காயங்களுக்கே சாதகமானவர்.
இலக்கை தைத்து
வெளியேற முடியாத
அம்பின் விசையே காயம்
என்று சொன்னேன்.
இன்னும் என்னருகில் வா என்றார்.
குருதி பிசுபிசுக்கும்
நிணவாடை வீசும்
அவர் அருகில் சென்றேன்.
தன் காயங்களை
தன் கண்களால் தழுவியபடி...
விசையுடன் வந்த
அம்பின் தவிப்பே காயம்
என்றும் சொல்லலாமில்லையா?
என்றார்.
வெப்பம் தாளாது
ஓரடி பின்வாங்கினேன்.
அவர் புன்னகைத்தபடி
ஒரே ஒரு கேள்வி மகளே...
உனக்கு சிலுவை என்பது என்ன?
சகித்தல் என்றேன்.
அவர் பறத்தல் என்றார்.
அனல் தாங்காமல் இன்னும் ஓரடி
பின்னே நகர்ந்தேன்.
அம்பும் இலக்கும் வேறுவேறு அல்ல மகளே...
நான் இதுவரை
அம்பும் வில்லும் ஒன்று என்றிருந்தேன்.
கல்வாரி மலை எங்கும்
அவரின் நிழல் இருந்ததை
அப்போதுதான் பார்த்தேன்.
பின் அவர் நிழல் எங்கும்
மணம் சூழத்தொடங்கியது.
அங்கிருந்து வெளியறுகையில்
மீண்டும் அங்கேயே வருவேன்
என்பது தெரிந்தே வெளியேறுகிறேன்.
Comments
Post a Comment