அந்தச்சிட்டுக்குருவி
மண்ணிலிருந்து
சிறகை உதறிக்கொண்டு
வானத்தில் எழுகிறது...
அந்த கம்பத்தில்,
கிணற்றின் சுற்றுசுவரில்,
செம்பருத்தி செடியின் கிளையில்,
வீட்டுத்திண்ணையில்,
ஒவ்வொருமுறை எழும்போதும்
சிறகை உதறிக்கொள்கிறது.
எத்தனை இயல்பாய்
சிறகுகளை விரித்து
சிறுஉடலை ஆட்டி
தலையை உயர்த்தி
விரிந்த ஒரு பூவைப்போல
தன்னை உலுக்கிக்கொள்கிறது.
அதன் சிறகில்
சிறு பூவிதழோ,
சிறு மகரந்தத்துகளோ ,
சிறு புழுதியோ
இருக்கலாம்.
இல்லை
எதுவுமே இல்லாமலும் இருக்கலாம்.
என்றாலும் உதறிக்கொள்கிறது.
ஒவ்வொரு முறையும்
உதறி எழுவது...
அமர எத்தனிக்கும்
தன்னையே தானோ...
இல்லை
பறக்க எத்தனிப்பதை
சிலிர்த்துக்கொள்கிறதா?
இல்லை
பறத்தல் என்பதே
ஒவ்வொருமுறையும்
சின்னஞ்சிறிய சிறகிற்கு
அத்தனை பெரிய பேரின்பமா?
Comments
Post a Comment