14 நவம்பர் 2021 சொல்வனம் இதழில் வெளியான சிறுகதை.
தையல்
கல்தொட்டிக்கு மேல் முருங்கைமரத்தின் கிளை ஆடுவதை பார்த்தவாறு செவந்தன் வாசலில் அமர்ந்து வெங்காயம் உரித்துக்கொண்டிருந்தார். அவருடன் அவர் மட்டுமிருந்தார். அவர் மனமும் வாயும் அதனதன் காரியங்களை மாற்றிசெய்து கொண்டிருந்தன. மனம் முந்தி ஓடிக்கொண்டிருந்தது.
தினமும் இந்த முன்வாசலை கூட்டிப்பெருக்குவதற்குள் முதுகு நச்சிப்போகிறது. காலம் எத்தனை முற்றினாலும் தான் முற்றாத மரம். தன் மனசைதான் முருங்கையா படைச்சானா ஆண்டவன். இதை உப்புதண்ணி கேணியில வெட்டிப்போட்டா தண்ணியோட உப்புகுணம் மாறிப்போகுது. பஞ்சத்துக்கு ஒருமுருங்கை போதும். அம்மா சொல்லும்… உங்க அப்பனில்லாம பஞ்சகாலத்துல கம்மஞ்சோத்தையும் இந்தமுருங்கமரத்தையும் நம்பியிருந்தேன்னு.
“புளிச்சக்கீர…புளிச்சக்கீரை…எளம்கீர…ஒரு கொதியில வெந்துபோகும்…”என்ற குரல் கேட்டு புன்னகைத்தார். லோகாம்ப்பாள் தான். பேசிக்கொண்டே வியாபாரம் செய்துவிடுவாள்.
“இங்க வாய்யா…லோகு…”என்று வேகமாக அழைத்தார்.
“தா…வரேன் மாமா…நீ அங்கனக்குள்ளயே இரு…வரேன்…”என்று தன் மயில்குரலில் சொன்னாள்.
“கீர கடையறயா மாமா…”என்றபடி முன்னாலிருந்த பலகைக்கல்லில் தலையிலிருந்த கீரைக்கட்டுகளை இறக்கினாள். ஒருகட்டை எடுத்து இரண்டாகப்பிரித்து ஒருபகுதியுடன் அவரருகில் வந்தமர்ந்தாள்.
“எதுக்கு பிரிச்சு கட்டுற…அஞ்சுரூவா வியாபாரத்துக்கு இதுவேறயா…”
“நீ ரெண்டுரூவா குடு. நம்மளமாறி எத்தன ஒத்தாளு இருக்கு. அதுகக்கிட்ட குடுத்துக்கறேன்…முறத்த எடு..நானும் நாலு கழிய பறிச்சுபோட்டுட்டு போறேன்...சட்டிய அடுப்புல வச்சிட்டு வா…தண்ணி கொதிக்கறத்துள்ள பறிச்சிறலாம்,”என்றபடி ஒருகழி கீரையை எடுத்து பக்கத்திலிருந்த உரலில் இரண்டு தட்டுதட்டிவிட்டு பறிக்கத்தொடங்கினாள். அவரும் முறத்துடன் வந்தமர்ந்தார்.
“எனக்குதான் விதி…அவுங்க போய் சேந்துட்டாங்க. நீ கூப்ட்டீன்னா செல்லம்மா வரமாட்டாளா மாமா? காஞ்சுப்போன வெறகு கணக்கா ஒடம்பு வத்திப்போயிட்டியே…”
“பெத்த மவள விட்டுட்டு வரச்சொல்ல முடியுமா? அவசெஞ்ச தவத்துக்கு வரமா பெறந்தவளை விட்டுட்டு என்னிட்ட வருவாளான்னு ஒரு பயம் இருக்குய்யா…”
“என்ன ஆம்பள நீ…கட்டுன பொண்டாட்டிய… எங்குகூட வான்னு சொல்லத்தெரியாம…கறாரா வான்னு சொல்லுவியா…”
“சொல்லத் தெரியாம இல்ல லோகு…நம்ம செல்லம் முருங்கமரக்கிளையாட்டம். ஒருமுறியில் ஒடிச்சு நம்மப்பக்கம் வச்சிக்கலாம்…அப்பிடி செஞ்சுட்டு எங்குலசாமி முன்னாடி எப்பிடி போய் நிப்பேன்…”
“குலசாமி எது?”
“பெருமா மல அடிவாரத்து பிச்சாயி…”
“பச்சப்பிள்ளைய கையில வச்சுக்கிட்டு இருக்கறவளா…அதான் நீ இப்படி இருக்குற. எங்கமாறி மருதவீரனா இருக்கனும். குதிரையில தூக்கிப்போட்டுட்டு பறக்கற ஆளு…”என்று சிரித்தாள்.
“மவவூட்டு வயல்ல கீர வெதச்சிருக்காய்யா…”
“மருமவன் தெளிச்சு விட்டாப்ல…தீப்பத்தறது கணக்கா குபுகுபுன்னு மொளச்சிருச்சி…முடிஞ்சவரைக்கும் வித்து தருவோம். இல்லாட்டி அடுத்த வெள்ளாமைக்கு கீரையோட சேத்து வயகாட்ட உழுதுப்புடுவாங்க… வயலுக்கு சத்து தானேம்பாங்க…அவுங்க பழக்கம் அது. அறுப்பு முடிஞ்சு காடு சும்மா கெடந்தா கையில இருக்கறத தூவிவிட்டு மௌச்சதும் காட்ட உழுகறது…நமக்கு மனசு கேக்கல…”
உள்ளங்கைகள் போல அகன்று விரிந்து, விரல்களைப்போல கிளைத்திருந்த பசுங்கீரை இலைகள் மூங்கில் முறத்தில் குவிந்தன.
“இன்னொரு பக்கம் சோளம் தெளிச்சிருக்கு. பச்சக்கட்டி நிக்குது. நாத்து போடற வரைக்கும் ஆடுமாடு திங்கிற மிச்சம் மண்ணுக்குதான்,”என்றவாறு சீலையை தட்டிவிட்டுக்கொண்டு எழுந்தாள்.
“இன்னும் நாலு வெங்காயத்த உறிச்சுப்போடு மாமா…புளிச்சக்கீரையில கெடக்குற வெங்காயம் அமுதம்ல்ல…”
அவர் ஒரு கையால் கீரைக்கட்டுகளை தாங்கிப்பிடிக்க, அவள் தலையில் ஏற்றிக்கொண்டு கனமான உடலுடன் மூச்சுவாங்க நடந்தாள்.
குக்கர் விசில் அடித்ததும் அவர் ஊன்றுகோலை ஊன்றி நிறுத்துவதற்குள் இரண்டாம் விசில் வந்துவிட்டது. எழவு இன்னிக்கு பொங்கச்சோறுதான் என்று தள்ளாடியபடி கியாஸ்அடுப்பை நிறுத்தினார்.
கொதி நீரில் இட்ட புளிச்சைக்கீரை பொங்கி எழுந்து வாசம் வீட்டை நிறைத்தது. அதை வடித்து கடைவதற்காக மத்தை எடுத்துவைத்துவிட்டு வெளியே கல்தாட்டி நீரில் நீர் அருந்திக்கொண்டிருந்த சிட்டுகளை பார்த்தபடி கீரை சற்று சூடுகுறைவதற்காக காத்திருந்தார். சட்டியை இறுக்கிப்பிடித்து கடைவதற்கு சிரமமாக இருந்தது. கீரையின் புளிப்புமணமும், தாளித்த சிறியவெங்காயத்தின் மணமும் இணைந்து பசியை எழுப்பியது.
காலை சோற்றை முடித்துக்கொண்டு தூக்குபோகினியில் மதியத்திற்கு எடுத்துக்கொண்டார். ஊதா நிற கைவைத்த பனியனும், பச்சை நிற நீண்ட கால்சட்டையையும் உடுத்தினார். பெரியஊசி, மொத்தமானநூல் கண்டுகளை பையில்போட்டு பிடித்துக்கொண்டார். இடது கையில் ஊன்றுகோலின் வளையத்தை மாட்டிப்பிடித்து மெதுவாக நடந்தார். வெட்டுபட்டு மிஞ்சிய மேல்தொடை நடக்கநடக்க முன்னால் வந்து பின்சென்றது. வெட்டிவீசியதில் வைக்கோல் போரில் விழுந்து துடித்த கால் அடிக்கடி கனவில் வரும். வயது ஏறஏற எழுந்திரிக்க நடக்க மிகவும் கனக்கிறது.
ஊரின் தெற்குப்பக்க வயல்பாசனத்திற்கான ஏரிவாய்க்காலில், நீர் பாதியளவு நகர்ந்து கொண்டிருந்தது. அங்கு சற்று நின்றார். கரையில் புங்கைகள் கவிழ சற்றுத்தள்ளி மேலேறிய பாதையில் நடந்து முச்சாமி களத்தில் அமர்ந்தார். வானத்தைப்பார்த்து கும்பிட்டுவிட்டு வேலையைத் தொடங்கினார்.
வெயிலேறும் பொழுதில் செல்லம்மாள் கையில் தூக்கு போகினியுடன், தலையில் சீலைத்தலைப்பை போட்டபடி நடந்து வந்து களத்தின் எல்லையில் நின்றாள். பெரிய புளியமரங்கள் இரண்டு நிழல் விரிக்க நின்ற களத்து நிழலில் அமர்ந்திருந்த அவர், உரசாக்குகளை விரித்துப்போட்டு படுதா தைத்துக்கொண்டிருந்தார்.
இடதுகால் படுதாவின் மேல் கிடக்க, தொடைவரை இருந்த வலதுகால் துடிப்பதைப்போல அசைந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஊன்றுகோல் கிடந்தது. பைசலை வேடிக்கை பார்க்க நின்றவரின் கால்களை எவன் வெட்டினான் என்றே இதுவரை தெரியவில்லை. அவள் அவரைநோக்கி நடந்தாள். அவருக்கு பின்னாலிருந்த வயல்பாதையிலிருந்து சக்தி நடந்து வந்தான்.
“யப்பா…எத்தனநாளாகும்,”என்றபடி தலையில் இருந்து உரச்சாக்கு சுருளை கீழே போட்டான்.
“இதுல எத்தன சாக்கு இருக்குய்யா,”
“எழுவதுப்பா…”
“கையில தானே தைக்கிறேன். எந்திரமா வச்சிருக்கேன்…முன்னமே கொடுத்தா என்ன? நெல்லறுப்புக்கு நெருக்கட்டத்துலதான் எல்லாரும் வரீங்க…”
“உன்னோட கைத்தையலுக்காவதான் காத்திருந்து வாங்கறது. மெஷினெல்லாம் எப்பவோ வந்தாச்சு. நீ தைக்கற வரைக்கும் உங்கிட்டதாம்பா…”
“சரிய்யா…தச்சுவைக்கிறேன். நாளைக்கு பொழுது எறங்க வா…”என்று வெற்றிலை மென்ற வாயுடன் சிரித்தார்.
அவன் சென்றப்பின் கண்களைத் திருப்பாமல், “என்ன இன்னைக்கு இந்தப்பக்கம் காத்து வீசுது…”என்றார். செல்லம்மாள் ஒன்றும் பேசாமல் அவர் அருகில் அமர்ந்தாள். கூசியகண்களை கசக்கிவிட்டுக் கொண்டாள்.
அவர் சாக்குகளை இணைத்து பெரிய பக்கத்தையலாக போட்டுக்கொண்டிருந்தார். அவள் தைக்கப்பட்டுக் கொண்டிருந்த படுதாவை நேராக இழுத்துப் பிடித்துக்கொண்டாள். அவர் இடது காலை ஆசுவாசமாக மாற்றி தூக்கி வைத்தபடி,“நேத்து உம்மவ உன்னைய கண்டபடிக்கு பேசினாளாமே…”என்றார்.
“ஊர்கத பேசுற ஆளுக அதுக்குள்ள வந்து சொல்லிருச்சுங்களா…”
“சும்மா…பழுத்த பலாப்பழத்தை இல்லைங்காத. நீ ரசம் ஊத்தி சோறு திங்கறதுகாவ அத்தன பேச்சு பேசுனாளாமே…”
“வரவர சரியா சீரணிக்க மாட்டுது. அதான் உச்சிக்கும், ராவுக்குமா ரசத்திலயே தின்னேன்…அந்த பெரியப்பய ரசம் இல்லைன்னு கொழம்பத்தூக்கி மாட்டுக்கு ஊத்திபிட்டான்…”
“அதுசரி…பேரப்பிள்ளைன்னு தோளுலயே போட்டு வளத்ததுக்கு ரசத்துக்குக்கூட பெறுமானமில்லாம போயிட்டியா. நம்மவூட்டுக்கு வந்திரு பிள்ள…”
“இல்லல்ல…பாசக்காரந்தான். சட்டுன்னு ஒரு கோவம்…வேலைக்குப்போற எடத்துல என்னம்மோ யாரு கண்டா…”
“இன்னமும் புத்தி வரமாட்டிக்குதே…இப்ப எதுக்கு இங்க வந்த…”
“சும்மாதான்…உன்னைய பாத்து நாலு நாளாச்சு. வூட்டுலயே கெடக்கறேன். வெளிய காய்கசவு வாங்க வாரதுதான். உன்ன பாத்துட்டு போலான்னு வந்தேன்,”
“வூட்டு வேலையிலயே கெடக்கறன்னு சொல்லு. ரெண்டு பேரன், பேரன்பொண்டாட்டி ஒருத்தி, மவன்னு எல்லாத்துக்கும் வடிச்சு போடனுமில்ல,”
அவள் அமைதியாக குனிந்தபடி சாக்குகளை தைப்பதற்கு தோதாக வைத்தாள்.
அவரும் மறுபடி எடுத்த வெற்றிலையை மென்றபடி வேலையைப்பார்த்தார். அவர்களுக்கு மேலே வெயில் காய்ந்து கொண்டிருந்தது. வயல்சூழ்ந்த அந்த இடத்தின் அந்தகாரத்தில் மயிலின் அகவலும், காக்கைகளின் முரட்டுக்கத்தலும் கேட்டுக்கொண்டேயிருந்தன. வாய்க்கால் தண்ணீரின் சலசலப்பு தூரத்தில் கேட்டது.
செல்லம்மாவுக்கு கல்யாணம் முடிந்து மூன்றாண்டுகளாகியும் பிள்ளையில்லை என்று மாரியம்மனுக்கு நேர்ந்து கொண்டாள். அதிகாலையில் ஊரின் மேற்கு எல்லையில் மாரியம்மன் குடியிருந்த கீற்றுகொட்டகையை கூட்டிப்பெருக்கி சாணித்தெளித்து விளங்க வைத்தாள். அவளுக்கு கோலம் போடத்தெரியாததால் பூசாரி சொல்லியபடி சாணியில் செம்பருத்தி, பூசணி, பரங்கி என்று எதாவது ஒரு பூவை செருகி வைத்துவிட்டு வருவாள்.
ராக்கு பிறந்த பின்னும் மாரியம்மனை காலையில் காணும் பரவசத்தை விடமுடியாமல் வருஷக்கணக்காக நிதமும் சென்றுகொண்டிருந்தாள். செல்லம்மாளின் பதினேழு வயதில் ராக்கு பிறந்தாள். ராக்குவிற்கு அம்மா ஒரு தலையாட்டி பொம்மை. ஊரே இப்படி ஒரு பித்தியை பார்த்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு செல்லம்மாள் ராக்குமீது பையித்தியமாக இருக்கிறாள்.
செவந்தனுக்கு பிடிக்காமல் ராக்கு தன் பதினாறு வயதில், முப்பது வயது பெரியசாமியை யாருமறியாமல் கல்யாணம் செய்துகொண்டு வந்து நின்றபோதும், பெரியசாமி அவளைவிட்டு ஓடிப்போன பின்னும் ஒருவார்த்தை கேட்காதவளாக இருந்தாள். இது எப்படியாப்பட்ட பாசம்? முட்டுசந்து பாதையாட்டம்! என்று சுற்றி இருப்பவர்கள் வியப்பாக பேசுவார்கள். ஆனால் செல்லம்மாவுக்கும்,ராக்குவுக்கும் அது ஒருவிஷயமாகவே இருந்ததில்லை.
“இந்தா செல்லம்…என்னிட்ட பேசனுன்னு வந்தியா? படுதாவையே பாத்துக்கிட்டு ஒக்காந்திருக்க. உச்சிக்கு சோறாக்குற வேல எதுவும் இல்லையா?”
“இன்னிக்கு காலையிலயே முடிஞ்சிருச்சு. வயல்ல இருக்குற புத்துக்கு சேவக்காவு நேர்த்தி இருந்துச்சு. இன்னிக்கு காலங்காத்தால பயலுங்க போய் அறுத்துட்டு வந்தானுங்க…”
“நீ போவலியா…”
“நமக்கென்ன இன்னமே வேண்டுதலு. அதுங்க வரத்துக்குள்ள கொழம்பு வேலையப் பாத்தம்ன்னா அவனுங்க பொழுதுக்கு வேலைக்கு போவனுங்க. உனக்கும் கொஞ்சம் எடுத்தாந்தேன்…ஆசையா திம்பியேன்னு…”
“இங்கபாரு அங்கருந்து ஒன்னு வரப்பிடாது…”
“பெத்தமவளோட என்ன ரோசம் ஒனக்கு?”
“மனுசருக்கு மனுச பாசம் வைக்கறது எத்தன நெசமோ, அத்தன நெசமானது ரோசமும். பாம்போட ரோசம் தான் வெஷம் தெரியுமா? அதனாலதான் சிவனே கழுத்துல போட்டருக்காப்பிடி,”
“ உஞ்சாமி கணக்கு என்னன்னு நீ சொல்லுற. எஞ்சாமி எதையும் பொறுத்துக்கற மாரியாத்தா. அவளுக்கு தீட்டு இல்ல.. தொடப்பில்ல இன்னதுதான்னு இல்ல. எதுன்னாலும் சரி. அதான் ஒவ்வொரு ஊரு எல்லையிலையும் நிக்கறா. மழையா எல்லா நெலத்துலயும் பெய்யறா…”
“எஞ்சாமியுந்தான் ஒவ்வொரு சுடுகாட்டுலயும் நிக்கறாப்பிடி…”
செல்லம் சிரித்தாள். அவர் பார்த்துக்கொண்டிருந்தார். இவளை கோவித்துக்கொண்டு பேசாமலிருந்து, பார்க்காமலிருந்து, என்னயவே நான் வதைச்சுக்க முடியாது. உனக்கு வைராக்யம் இருந்தா கட்டினவ தானா வருவா என்று டீக்கடையில் கூட்டாளிகள் சொல்கிறார்கள். இவக்கிட்ட என்ன வைராக்கியம்…
“நீ என்ன சோறாக்குன…”
“புளிச்சக்கீரை கடைஞ்சேன்…”
“நான் வந்து செஞ்சு வச்சுட்டு வரேன்னாலும் ஒப்புக்க மாட்டிக்கிற. மவ வூட்ல வேல செய்யறதா இருந்தா அங்கனையே இருந்துக்கன்னு சொல்லிட்ட…”
“அவ என்ன பேச்சு பேசுறா. அவ பஞ்சு மில்லுல வேல செய்யற காசுல நம்ம ஒக்காந்து தின்னு அழிக்கறமாமே…அதுக்குமேல அங்க என்ன வேல…ரேசன் அரிசி இருக்கு. நம்ம ரெண்டு உசுருக்கும், மேக்கொண்ட செலவுக்கும் என்னால சம்பாதிக்க முடியாதா. படுதா தைக்கற காசெல்லாம் கணக்கு பாக்காம குடுத்துக்கிட்டு தானே இருந்தேன்,”
“நம்ம பிள்ளதானே…அவளுக்கும் வயசு அம்பது…நம்மளாட்டமா அவளுக்கு…மூணு வருஷத்துல அந்தப்பய ஓடிப்போயிட்டான்…மனுஷ மேல தீக்கமுடியாத கோவம் அவளுக்கு…இத்தன வருசத்துல யாருக்கிட்டயாச்சும் அவ வாந்தவமா பேசி பாத்திருக்க? நீயே சொல்லு,”
பெருமூச்சு எழ செல்லம் எழுந்து இடுப்பில் கைவத்தபடி சென்று களத்தை அடுத்திருந்த வரப்பு வாழையில் ஒரு இலையை கூரான கல்லால் கிழித்து எடுத்து வந்தாள்.
“வேணாம் பிள்ள…”
“நானு இன்னும் சோறுதிங்கல…”என்றபடி செல்லம் இலையில் சோற்றை அள்ளி வைத்து குழம்பை ஊற்றினாள். அவர் தூக்குபோகினியின் மூடியில் சோற்றை வை த்து அதன்மீது புளிச்சக்கீரையை வைத்தார்.
“மொளகா வத்தல லேசா தீய விட்டுட்ட…”என்று சோற்றை அவசர அவசரமாக தின்றாள். அவர் தண்ணீர் பாட்டிலை திறந்து அவள் முன்னால் வைத்தார். தன் இலையில் கிடந்த கறித்துண்டுகளை எடுத்து அவள் மூடியில் வைத்துவிட்டு சோற்றை கைகளில் எடுத்தார்.
“பரவாயில்லயே….ருசியா கடஞ்சிருக்கியே…உப்பு காரமெல்லாம் பக்குவமா இருக்கு. வெங்காயத்த இத்தன பதமா வதக்கி எடுத்திருக்க. எம்புட்டு நாளாச்சு. எனக்கெல்லாம் இப்ப ருசி தவறிபோச்சு…”
அவர் சோற்றை நிதானமாக சுவைத்து முடித்து,“இது உன்னோட ருசிதான்…உம் பக்குவந்தான்…ருசியெல்லாம் தவறிப்போகல…நாந்தான் நீ கொண்டாந்த சோத்தை திங்கறேனில்ல. இன்னும் என்ன செய்யனும் நானு…”என்றார்
அவள் நிமிர்ந்து அவரை பார்த்தாள். அவர்களுக்கு மேல் புளியமரத்தின் சின்னஞ்சிறு இலைகள் அசைந்து சலசலத்து காற்றுக்கும் வெயிலுக்கும் வழிவிட்டன. செல்லம் தலைகுனித்தபடி சோற்றை பிசைந்தாள்.
Comments
Post a Comment