Skip to main content

அகமும் புறமும் : 7

      அக்டோபர் 16 வாசகசாலை இணைய  இதழில் வெளியான கட்டுரை.


  பசித்திருத்தல் 


யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!

பாணர் காண்க,இவன் கடும்பினது இடும்பை;

யாணர்ப் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன

ஊண் ஒலி அரவம்தானும் கேட்கும்;

பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி,

முட்டை கொண்டு வன் புலம் சேரும்

சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்பச்,

சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும்

இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்;கண்டும்,

மற்றும் மற்றும் வினவுதும்,தெற்றெனப்;

பசிப்பிணி மருத்துவன் இல்லம்

அணித்தோ? செய்த்தோ? கூறுமின்,எமக்கே.

சிறுகுடிகிழான்  பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது. 

புறநானூறு: 173

திணை: பாடாண் திணை

துறை: இயன் மொழிக்காஞ்சி

பாடலுக்குரிய தலைவனின் இயல்புகளை பாடுதல் என்பது இயன்மொழிக்காஞ்சித்துறையின் பொதுவான இலக்கணமாகும். இது பாடாண்திணைக்குமானது.



ஒரு வள்ளலை வேந்தன் பாடியது என்பது இப்பாடலின் சிறப்பு. கிள்ளிவளவன் என்ற அரசன் தன்னை ஒரு பாணனான உருவகித்துக்கொண்டு பண்ணனை தலைவனாக ஏற்று பாடிய பாடல்.

இந்த வரிகளை வாசிக்கும் போது மீண்டும்  மீண்டும் ‘சோறுடை கையறாய் வீறு வீறு இயங்கும் இருங்கிளை சிறார்களை’ காண்கிறேன். 

ஒரு வேளை அது  மழைபொய்த்த பஞ்சகாலமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சிறுகுடி என்பது குறிஞ்சி நிலத்து ஊர். குன்றுகள் காய்ந்து போன கோடையாகவும் இருக்கக்கூடும். எறும்புகள் போல வரிசை வரிசையாக உணவுடன் மக்கள் செல்லும் காட்சி கண்முன் விரிகிறது.

‘பசிப்பிணி மருத்துவன் இல்லம்’ என்ற வரியையும் இங்கு இணைத்துக் காணலாம். இங்கு பசியை ஏன் பிணியாகக்கூற வேண்டும். பசி என்பது தீர்க்கக்கூடிய நோய் என்றும் இன்னொரு வகையில் வாழும்வரை தீராத நோய் என்றும் கொள்ளலாம். இந்தப்பாடல் எழுதப்பட்ட போது பசி ஒரு நோயைப்போல மக்களை வாட்டியது என்றும் பசி ஒரு நோயைப்போல மக்களிடம் பரவியிருந்த காலம் என்றும் கொள்ளலாம்.

இங்கு பசி என்று சொல்லப்படுவது நாம் அன்றாடம் காலையில் உண்டப்பின் சரியாக மதிய உணவு வேளையில் உண்டாகும் பசியை அல்ல என்று தோன்றுகிறது. வறுமையான அன்றாடத்தின் தீராத பசி என்று கொள்ள முடியும். 

‘இருந்தும் இல்லாத கொடுமை’ என்ற வரி  ஒன்று உண்டு. நிறைவாக உணர முடியாத ஒன்றைத்தான் இப்படிக் கூறுவார்கள். வறுமை அளிக்கும் உணவும் அப்படித்தானே.

என்னை விட தேவி சிலநாட்கள் இளையவள். எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி. அவர்கள் வீட்டில் இரண்டாவதாக பெண் பிறந்த சலிப்பு இருந்தது. அவளுக்கு பெயர் வைக்கும் நாளன்று கூட பெயரை தேர்வு செய்யதிருக்கவில்லை. என்ன பெயர்? என்று புரோகிதர் கேட்டதும் ‘ஒருமிக்க பிறந்திருக்கு ரெண்டு பிள்ளைக. அதுக்கு கமலதேவின்னா இதுக்கு தேவின்னு இருக்கட்டும்’ என்று சித்தப்பா சட்டென்று சொல்லிவிட்டார். அவளின் தந்தையின் குடிப்பழக்கத்தால் வீழ்ந்த குடும்பம் அது. 

பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமிருந்தும் கற்றுக்கொள்வதை விட பிள்ளைகள் தங்கள் சகாக்களிடமிருந்து அதிகம் கற்று கொள்கிறார்கள். கல்வி உளவியலில் இதை ‘ஒப்பார்குழுவின் ஆதிக்கம்’ என்பார்கள். 

நானும் தேவியும் ஒன்றின் இருமை. அவளுக்கு கோயில் சிலைகள் போல அழகிய கருமை நிறம். நான் ஒரு அவசரக்குடுக்கை[சிறுவயதில்]. அவளை காக்கா என்று அழைப்பவர்களிடம் நான் சண்டைக்கு செல்வேன். ஆனால் அவள் அதையெல்லாம் சிறு வயதிலேயே கண்டு கொள்ள மாட்டாள். இப்போது நினைத்தால் அவளிடம் இருந்த உறுதி பசியால், வறுமையால் வந்தது என்று தோன்றுகிறது.

மிக இளமையில் பசியை கையாள்வது மிகக்கடினம். எங்களுக்கு ஒரு ஐந்து வயதிருக்கலாம். நாங்கள் இருவரும் கோவிலில் நின்றிருந்தோம். என் கையில் வாழை இலையில் சர்க்கரைப் பொங்கல் இருந்தது.

அருகில் வந்த அய்யா எங்கள் இருவரின் தோள்களிலும் கையை வைத்து,“பாப்பாவுக்கு குடுத்துட்டுதான் எதாயிருந்தாலும் சாப்பிடனும், “என்று என்னிடம் கூறினார். இலையை அவள் கையில் தருகிறேன். அவள் சிரித்தபடி ஒருவாய் எடுத்து அவசரமாக தின்றுவிட்டு இரண்டாவது கவளத்தை என் வாயில் வைக்கிறாள். 

மூன்று பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் நடுவில் பிறந்தவள். அவள் விளையாட வரும் போது தனக்கு அடுத்து பிறந்த தங்கையை எப்போதும் இடுப்பில் வைத்துக் கொண்டுதான் வருவாள். அவள் அம்மா நாளெல்லாம் வயல் வேலைக்கு சென்று விடுவார். குடியும், வறுமையும் தாண்டவமாடும் இடத்தில் அன்பிற்கு எங்கே போவது. அவளின் அம்மா எப்போதும் பிள்ளைகள் மற்றவரிடம் கைநீட்டி விடக்கூடாது என்று கண்டிப்புடன்  இருப்பார். அவள் தன் இருபது வயதில் முன்பின் யோசிக்காமல் காதலை ஏற்றது அதனால்தான்.

அம்மா ஒன்றை புரிந்து கொள்ளவில்லை என்று இப்போது நினைக்கிறேன். தேவி போன்ற அமைதியான பெண்கள் கண்டிப்பிற்கும் அதட்டலிற்கும் பணிவதில்லை. அவள் இறந்த பின்னான   இந்த சில ஆண்டுகளில் அவள் பசியாக தான் எனக்கு நினைவில் இருக்கிறாள். 

அவள் ஒவ்வொரு நாளும் என் தட்டின் உணவை பகிர்ந்து கொண்டவள். தினமும்  ஒருவேளையாவது என்னுடன் உண்பாள். உடல் நலக்குறைபாட்டால் சில ஆண்டுகள்  என்னால் சரியாக உணவுண்ண முடியாது. எங்கள் வீட்டில் தட்டில் இட்ட உணவை முடிக்காமல் கீழே கொட்டுவதற்கு  அனுமதியில்லை. நான் சாப்பிடத் தொ டங்கும் முன்பே இது தேவி பங்கு, இது கமல் பங்கு என்று பிரித்து வைத்துவிடுவேன். அவள் தட்டில் உள்ளதை முடித்தப்பின் எடுத்துக்கொள்வாள். என் அம்மா அவளின் பசிக்கும் சேர்த்து என்தட்டில் வைத்தார்களா? என்று இப்போது ஐயம் எழுகிறது. எங்கள் வீட்டிலும் நபர்கள் அதிகம். முதலில் பிள்ளைகள்,பின் ஆண்கள்,அதற்குப்பின் பெண்கள் என்று உணவுண்ணும் பழக்கம் நான் உயர்நிலை பள்ளி படிப்பு படிக்கும் வரை இருந்தது.



இன்றுவரையிலும் தட்டிலிருந்து எடுக்கும் முதல் கவளத்தை தட்டின் ஓரமாக வைத்துவிடுவேன். எப்போதாவது அம்மா விரக்தியான சிரிப்புடன் ‘அவளுக்கு தினமும் பிண்டம் வைக்கிறியா?’என்பார். அனைத்திற்கும் மறுபக்கம் இருப்பதை போல தானே காதலிற்கும். அவளை காதல் பலி கொண்டது அல்லது காதலன் பலி கொண்டான்.

உடல் நலம் சரியான பின்னும் நான் அவளுக்காக உணவை எடுத்து வைப்பதை மாற்றிக்கொள்ளவில்லை. எங்கள் அன்பின் அட்டூழியங்களால் மரபான சடங்குகளை ஒரு பந்தை போல விளையாடி உடைத்திருத்திருக்கிறாம். பூப்பெய்திய பெண்ணின் உணவை யாரும் உண்ணக்கூடாது என்பது ஒரு விதி[Rule]. பத்து நாட்களுக்கு சொந்தபந்தங்களால் பலமான விருந்து உணவு கிடைக்கும். நான் பிடிவாதமாக அவளுக்காக காத்திருப்பேன். அவள் சீருடையில் பையுடன் ஓடி வந்து தென்னம் குடிசையின் உலக்கைக்கு இப்புறம் அமர்ந்து கொள்வாள். நான் உள்ளே அப்புறம். இருவருக்கும் இலை போடப்படும். அனைவரும் திட்டித்தீர்ப்பார்கள். ‘பொட்டப்பிள்ளைகள இந்தவீட்ல இம்புட்டு தூரம் விட்டு வைக்கக்கூடாது’ என்பார்கள். 

அப்பாயி, “ ஆண்டவன் தப்பு பண்ணிட்டான். ரெண்டையும் ஒன்னா ஒக்கார வச்சிருக்கனும்..அதது வீட்ல அடங்கி ஒக்காந்திருக்கும்,”என்பார். ஆனால் அடுத்த இருபதாவது நாளில் அவர்கள் வீட்டில் இதே அட்டூழியத்தை நான் செய்தேன். மீண்டும் அதே போல திட்டித்தீர்த்தார்கள். அய்யா எங்களை பார்த்து சிரித்தவாறு, “ஒருத்தருக்கொருத்தரா இருந்து ரெண்டு பேரும் நல்லா சாப்பிடனும்,”என்பார். அவள் நிறைந்து உண்ட நாட்கள் அவை.

அவளிடமிருந்து தான் என்னை அறியாது சகிப்புத்தன்மையை கற்றேன். சிறு  வயதிலேயே அவளுக்கு அத்தனை பொறுமை இருந்தது. இருவரும் காடு ,மேடு, புதர் என்று அலைந்து திரிவோம். இலந்தைப்பழம்,நாவல் பழம்,கொடுக்காப்புளி மரம்,ஈச்சம் பழம்,நுணாப்பழம் என்று அனைத்து காட்டுப்பழங்களும் எங்கு இருக்கும் என்று எங்களுக்கு அத்துபடி. நாங்கள் யார் வயலிலும் மாம்பழம் கொய்யாப்பழம் போன்றவற்றை பறித்ததில்லை. அப்படி எதுவும் செய்யக் கூடாது என்பது அவளின் அம்மாவின்  கட்டளை.

நான் ஒரு அவசரக்குடுக்கை என்பதால் எங்கு சென்றாலும் அவளின் கை என் கையை பற்றியிருக்கும். ஒருமுறை ஈச்சம்புதரில் குட்டிபாம்பு இருந்திருக்கிறது. அதை பார்த்தவள் சத்தம் செய்யாமல் மெதுவாக என்னை அழைத்து வந்துவிட்டு பின்பு சொன்னாள். எங்கள் இருக்குமான நட்பில் என் அன்பின் அட்டூழியங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அந்த வயதிலேயே அவளுக்கு இருந்தது. நான் கோவித்துக் கொண்டு பேசவில்லை என்றால் அவள்தான் முதலில் ‘ஏய்ய்..பழம் விடலாமா’ என்று விரல்களை மடக்கி நீட்டுவாள். எங்கள் வீட்டிலும் அவள் வீட்டிலும் தான் மாறி மாறி ஒன்றாகவே இருப்போம். வேறெங்கும் சென்று நிற்கக்கூடாது என்பது அவள் அம்மாவின் ஆணை.

கல்லூரி வயதில் அவளுடைய சித்தி அவளை தன்னுடன் வைத்துக் கொண்டார். ஊட்டி அரசு கல்லூரியில் இளங்கலை படித்தாள். ஊட்டியிலிருந்து இரண்டு ஆண்டுகள் கழித்து விடுமுறைக்கு வந்த போது அவளை தெருவே பார்த்தது என்று சொல்வது மிகைஇல்லை. நல்ல உணவு தந்த அழகு. காதலாகவும் இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

நீண்டுஅடர்ந்த கூந்தல். நல்ல உயரம்.  பளபளக்கும் கருமையான நிறத்துடன் சிரித்தபடி ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்து கொண்டாள். அதற்குப்பிறகு நான் அவளை இறுதிவரை பார்க்கவில்லை.

இருபத்தோரு வயதில் காதல் மணம் புரிந்து கொண்டாள். மூன்று ஆண்டுகள் கழித்து அவள் இறந்து ஒருவாரம் கழித்து அவளின் இறப்பு ஒரு செய்தியாக எனக்குக்  கிடைத்தது. அவள் இறந்த அன்று நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று இன்று வரை நினைவில் கொண்டு வர முடியவில்லை. பதினாறாம் வயதிலிருந்து தினமும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டிருந்த எனக்கு, ஒருவாரத்தின்  அன்றாட நிகழ்வுகளைக்கூட சேர்த்து எழுதும் பயிற்சி இருந்தது. அந்த பத்து நாட்கள் கல்வியியல் படிப்பிற்கான அலைச்சலில் இருந்ததால் என்னால்  நாட்குறிப்பும் எழுதமுடியவில்லை.

 அவளை போலவே அவளின் இரட்டை குழந்தைகளை பசியில் விட்டிருக்கிறாள் என்ற கோபம் எனக்கு தீராதது. தாயில்லாத பிள்ளைகளின் பசியை,அன்பை யார் உணர்ந்து கொள்ள முடியும்? அவர்கள் யாரிடம் முழுமையாக சொல்லவும்,பெறவும் முடியும். 

அந்த சமயத்தில் குழந்தையிலிருந்து எங்களுக்கு மருத்துவம் பார்த்து அன்பாயிருந்த மருத்துவர் ஜலீன்கான் உடல்நலக்குறைவால் படுக்கையாக இருந்தார். அவருடன் கொஞ்சம் நேரம் செலவிட, பேசிக்கொண்டிருக்க செல்வேன். அவரிடம்  ‘ஒரு நாள் எப்படி எனக்கு முழுசா மறந்து போச்சு மாமா‘என்று கேட்டேன். ‘அந்த மறதி சரியாக ஒருநாளாக இருக்காது. உன்னுடைய மனம் தன்னை காப்பாற்றி கொள்வதற்காக இந்த மாதிரி செய்யலாம். ஒருவேளை தேவி இறந்து போன அன்னைக்கு நீ ரொம்ப மகிழ்ச்சியா ஐாலியா கூட இருந்திருப்ப. அதனாலக்கூட மறந்திருக்கும். பெறந்ததிலிருந்து அத்தனை நாளும் நினைவில இருக்கா? என்று கேட்டார். இது ஒரு எஸ்கேபிசம் அல்லது தற்காப்பு நடத்தை என்று உளவியல் சொல்கிறது. அவளின் தற்கொலை பற்றி நான் யோசிக்கவோ, நினைக்கவோ, பேசவோ கூடாது என்று இறுதிவரை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவளை நினைவுபடுத்தும் பசி என்ற சொல்லும் ,உணர்வும் எங்கு இல்லை?

இந்த பாடலும் பள்ளி வயதில் படித்த பாடல் தான். எனக்கு இந்தப்பாடல் தேவியின் பாடல்.

எவ்வளவு பசியிலும் அவளின் பொறுமையை எண்ணி இன்று வியப்படைகிறேன். நிதானமாக சாப்பிடுவாள். நன்றாக சம்மணம் இட்டு அமர்ந்து, குனிந்து அவள் உணவு உண்ணும் சித்திரத்தை மனதில் இருந்து எடுத்துப்பார்க்கிறேன். உணவை கீழே சிந்தவே மாட்டாள். நான் தான் தட்டை  சுற்றிலும் சிந்தி வைப்பேன். அவள் சரித்தபடி ,அய்யே…என்று என் தட்டில் எடுத்துப் போடுவாள். தட்டை வாங்கி கழுவித்தருவாள். எனக்கு உடல் நலம் குன்றிய ஆண்டுகளில் என் வயதேயான அவள் என்னை தங்கையைப் போல நடத்தினாள்.

இந்தக்கட்டுரை முழுக்க இயல்பாகவே உணவும் அன்பும் மாறி மாறி வந்திருக்கிறது. இரண்டும் பசி என்று தான் அறியப்படுகிறது. உடலிற்கானது ஒன்று. மற்றையது உள்ளத்திற்கானது. உணவும் அன்பும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரித்தறிய முடியாதவை. உணவளித்தல் என்பது அன்பை காட்டும் ஆகச்சிறந்த வழி. உணவளித்தல் என்பது பத்து வகையான பதார்த்தங்கள் பற்றியது  அல்ல. பசி நேரம் தெரிந்து உணவிடுதல். ஒருவரின் பசியை முடிந்தவரை கணிப்பது.



பசியை உணர்ந்தவர்கள் பரிசுத்தமான எதையோ பெற்றவர்கள். அவர்கள் சுற்றியுள்ளவர்களுக்கும் அந்த பரிசுத்தத்தை பகிர்ந்து அளிக்கிறார்கள். தாங்கள் இந்த மண்ணில் இருந்து மறைந்த பின்னும் இன்னொருவரில் வாழ்கிறார்கள்.

இந்தப்பாடலில் ‘யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய’ என்று ஒரு அரசனே சொல்கிறான். பகிர்ந்துண்ணல் என்பதே நம் உணர்வில் தலையாயது. பகிர்ந்துண்ணல்  என்பது இயல்பாகவே பரிவு என்ற மனஉணர்வால் இயக்கப்படுவது. உணவளித்தல் என்ற சொல் சரியா? என்று தெரியவில்லை. மற்ற பாருட்களை போன்று ‘தானம்’ அளிப்பதல்ல உணவு. அது பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியது. அன்பும் கூட இப்படித்தானே. மிக இயல்பாக  ஒருவருடன் பகிரப்படுவது. பகிர்ந்து கொள்பவர் மனிதராக தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பசி உயிர்கள் அனைத்திற்கும் ஒன்றே. பசி ஒரு அக்னி. அந்த அக்னியே நம்மை உயிர்த்திருக்க செய்கிறது. அந்த உயிரையே உணவாக ஆக்கிக்கொள்கிறது. இன்னொரு உயிரை படைக்கிறது. ஓயாத சுழற்சி. 

ஒரு மக்கள் கூட்டத்துடன் தன் உணவை பகிர்ந்து கொள்பவன் எத்தகையவன்! அவன் கைகளில் இருப்பதற்கு பெயர்தான் ‘திரு’. 


என் வாழ்நாளும் கொண்டு

பண்ணன் வாழ்க.

கனிந்துகொண்டிருக்கும் மரத்தில்

பறவைகளின் ஒலி எப்போதும் கேட்டுக்கொண்டிருப்பதைபோல

அவன் இல்லத்தில்

உணவின் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது.

பொய்க்காது பெய்யும் மேகங்களை

அறிந்த எறும்புகள் காலமறிந்து

தங்கள் முட்டைகளை மேட்டு நிலம் நோக்கி

வரிசையாக எடுத்து செல்வதைப்போல

அவன் இல்லத்திலிருந்து சிறார்கள் கைகளில் சோறுடன் வெளியேறி

வேக வேகமாக தங்கள் உறவினர்கள்

இருக்கும் இடம் நோக்கி செல்கிறார்கள்.

பசிநோயை நீக்கும் அந்த மருத்துவனின்

வீடு அருகிலா? தொலைவிலா?

கூறுங்கள் பாணர்களே.



Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...