மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.
ஆனந்தர் உணரும் தாயன்பு துறவின் தாமரை. அதுவரை பழிகேட்கும் துகாராமின் ஆழுள்ளத்தின் தன்னிச்சையான மன்னிப்பு அவனுள் மலரும் தாமரை. வைதரணியின் மலர்கள்.
துகாராமிற்கு பழிவாங்குதல் இந்த காலகட்டத்தின் நியாயம் என்று தோன்றுகிறது. இல்லை என்றால் பிழை செய்தவர்களுக்கு தங்கள் பிழை புரியவே புரியாது என்று நினைக்கிறான். கானபூதி சொல்லும் அத்தனை கதைகளுக்கு பின்னரும் தன்னுள் எரியும் நெருப்பையே உணர்கிறான். இறுதியில் ஆனந்தரின் கதையே துகாராமை அமைதிபடுத்துகிறது.
ஒரு தாய் தன் குழந்தையை அமைதி படுத்த கதை சொல்வதைப்போல கானபூதி அகத்தை மட்டும் திறந்து வைத்து முட்டி போதும் துகாராமிற்கு கதை சொல்கிறது. அன்னையின் பல ரூபங்களில் பிசாசும் உண்டு தானே.
பூட்டிக்கிடக்கும் பைதானின் மேற்கூரை இல்லாத மாளிகையும் அதனுள் செறிந்த காடும், துகாராமின் புறவடிவமும் அகமுமாக இருக்கிறது. ஒரு வகையில் அது நம் பண்பாட்டின் ஒரு நினைவு பகுதியும் கூட.
நம் பண்பாட்டின் வேராகவும் மரமாகவும் இருக்கும் ஒன்றின் இரு நிலைகள். மலரும் பூவும் கனியுமான பகுதியின் கசப்பும் துர்நாற்றமும் ,இருளில் உள்ள வேரின் சாரத்தையும் தொடும் நாவல். இந்த நாவலில் எல்லாமே ஔிக்கு இந்தபக்கம் இருக்கின்றன. இந்தபக்கம் இருப்பதாலேயே அது இயல்பாகவே அதன் முக்கியமான பகுதி ஔியை நோக்கிய எத்தனிப்புடன் இருக்கிறது. மறுக்கப்பட்டவற்றுக்கான விழைவின் பலனாக வால்மீகியின் மொழியும்,உக்ரசிரவஸ்ஸீன் கதைகளும்,குணாட்யரின் காவியமும் இருக்கிறது.
உதாரணமாக துகாராம் குணாட்யர் பகதி போன்ற கதாபாத்திரங்கள். குணாட்யர் எந்த அவையிலும் போய் நிற்கவில்லை. துகாராம் பழிவாங்கவில்லை. பகதியின் உள்ளத்தில் இருப்பது தூயகாதல் மட்டுமே.
சேறும் சகதியும் கீழ்மையும் இயல்பு எனில்,அதே போல காமமற்ற காதலும்,பழியுணர்ச்சியற்ற கருணையும்,எங்கும் இரந்து பெறாத பெரும் சான்றான்மையும் இயல்பான ஒன்றே என்று நாவலை முடிக்கும் போது தோன்றியது.
பெரும்மழைகாலங்களில் ஆறு ஏரி வாய்க்கால் எல்லாம் நிறைந்து வயலில் தண்ணீர் புகுந்து வெளியேறும் . அதை சேடை அடித்தல் என்பார்கள். வயலே அழிந்தாலும் விவசாயிகளுக்கு நல்லா சேடை அடிச்சிருக்கு என்ற நம்பிக்கை இருக்கும். அடுத்த சில வெள்ளாமைகள் நன்கு வளரும். அந்த சேடை அடித்த வயலில் துர்கந்தம் வீசும். வெள்ளம் கலக்கி கொண்டு வரும் மண்ணும் அழுகலும் சேர்ந்ததற்கு பெயர் வண்டல். அது வளத்திற்கான அடித்தளம்.
மண்ணில் சாரமானது வண்டல். அதற்கு மணலின் தூய்மை கிடையாது. வழவழப்பானது. உகக்காத மணம் கொண்டது. அதிலிருந்து காடும் விவாசயமும் தளைத்து உருவான பண்பாட்டில் மனிதர்களும் வண்டலாக ஆன வரலாற்றை கொண்ட கதை இது.
பைதானின் மளிகைகளும், சாதவாகனர் வெற்றித்தூணும் உருவகங்கள். அதன் அழிவும், சரிவும் ஒரு உருவகம். அதே போல நாவல் முழுவதும் வரும் நிழல்கள் என்பதும் ஆழ்மனவிசைகளின் உருவகம்.
புதைந்தாலும் விதைகள் செடியாக எழும்புவதை போல மகர்களில் இருந்து காலகாலமாக குணாட்யர், துகாராம், பகதி போன்றவர்கள் எழுந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். அது இயற்கையின் நியதி. அதையே நாம் கருணை என்கிறோம். அதே இயற்கையின் பிரதிநிதிகளில் ஒன்றான மனித மனதில் உள்ள அந்த கருணையை, கருணை பற்றிய கேள்விகளை எழுப்பி இந்த நாவல் நம் மனதை பல திசைகளில் இழுக்கிறது.
துகாராம் ராதிகாவின் காதல் இந்த நூற்றாண்டின் அன்றாடத்தில் நடக்கிறது. இறுதியில் துகாராம் அன்றாட காதலில் உள்ள காம குரோதத்தை விலக்கிய பின்னர், காதலிற்கும் அடுத்தபடி உயரத்தை தொடுகிறான். இல்லையென்றால் துகாராமால் ராம் சரணை மன்னிக்கமுடியாது. மன்னிக்க முடியாமல் போயிருந்தால் அவன் அமைதி அடைந்திருக்க முடிந்திருக்காது. ஏனெனில் மனம் தவிர அவனின் அணைந்து புலன்களும் அணைந்து விட்டன. மனதில் குரோதம் அணைவதற்காகவே கானபூதியால் இத்தனை கதைகள் சொல்லப்படுகின்றன. இலக்கியம் இதற்கும் தான் என்று நினைக்கும் போது மனம் சொல்ல முடியாத ஒரு உணர்வை அடைகிறது. புலன்களெல்லாம் அணைந்த பின் எரியும் மனதிற்கான தெய்வம்.
முதிய வயதில் ஆனந்தரில் கொதிப்பது தூய மனமே. தூயதை தூயதால் ஆற்றுபடுத்த முடியுமாக இருக்கலாம். ஒரு வகையில் காவியம் காதலின் நாவலும் கூட. காதலின் இத்தியாதிகளை படிப்படியாக விலக்கி தூயகாதலை பகதியில் உணரமுடிகிறது.
நாவலில் உள்ள அஸ்வத் தேஷ்பாண்டே அவர் அப்பா தாத்தா போன்றவர்களில் வெறும் இச்சையாக இந்த மனித உணர்வு இருளில் சேற்றில் நாற்றத்தில் கிடக்கிறது. மனித உணர்வுகளின் இருள் நிலமாக ஆழ்மனம் உள்ளது. ராம்சரண் நாயக்கில் அவமானம் , ருக்மிணி தேஷ் பாண்டேயில் இயலாமையாக,அவர் மருமகளில் அச்சமாக,ராம்சரண் நாயக்கில் அவமானமே வன்முறையாக என்று மனித மனம் ஒரு நொதித்த சதுப்பாக இருக்கிறது.
இதில் பெண்கள் சந்திக்கும் இருளும்,பண்பாட்டில் அவர்களின் உடலும் மனமும் என்னவாக இருக்கிறது என்று காட்டப்படுகிறது. இந்த பெண்கள் தனித்தனி பெண்கள் அல்லர். பிரதிநிதிகள் என்று சொல்லலாம். அப்படி பார்த்தால் இருபத்தோராம் நூற்றாண்டு கதையில் வரும் அனைவருமே பிரதிநிதிகள் என்று தோன்றுகிறது.பெண்களும் மகர்களை போலவே தான்.
ஒரு முனையில் பண்பாட்டில் அதன் வளர்ச்சியில் அழுத்தப்பட்ட மக்களும் இன்னொரு முனையில் குடும்பத்தின் அடையாளத்திற்காக அழுத்தப்பட்ட பெண்களும் நிற்க பண்பாட்டை எழுப்பிய மனிதர்களின் ஆழ்மனம் மையத்தில் ஊன்றியதடி போல நிற்கிறது. மகர்களில் விளையாடும் அச்சம் இன்னொரு திரி, வன்முறை இன்னொரு திரி. எல்லாம் சுற்றி சுழன்று கடையும் ஒரு நொதித்த வெளி இந்த நாவல் என்று வைத்தால் திரண்டு வருபவை கதைகள். பிருகத் கதா. பண்பாட்டின் கதைகள். மனிதர்களின் கதை. அகத்தின் கதை. உணர்வுகளின் கதை.
இந்த குழம்பலிற்கு அப்பால் மிக உயரத்தில் மலரும் ஔி நோக்கிய கருணையின் கனவு இந்த நாவல்.
அனைத்தையும் தானாவே மாற்றும் நிலம். அழுக்கை விஷத்தை அமுதமாக மாற்றும் நிலத்தில், நாம் உருவாக்கியவை வெறும் மாளிகைகள். அவற்றை அழியவிட்டுவிடலாம். புதிதாக கட்டலாம். அவையும் அழியும். மீண்டும் அடுத்து ..அப்படி உருவாகி வந்ததே உலகின் அனைத்து பண்பாடுகளும். ஆனால் அதில் செறியும் காடான நம் அகமும், உணர்வுகளும், ஆழ்மனமும் அப்படியா?
அந்த ஆழ்மனதை நாம் இன்று ஒரு சமூகமாக எப்படி கையாள்கிறோம். அந்த சகதி வேறாக இன்று இருக்கிறதா? என்றைக்கும் அது வெவ்வேறு வடிவத்தில் இருந்து கொண்டே இருக்குமா?
ஆழ்மனதை சகதியாக்குவது வளர்ச்சியை உருவாக்கும் அதே விசை தான். எனில் பண்பாடு என்பது வளர்ச்சி என்பதை போலவே வீழ்ச்சியும் இணைந்தது. வேரும் மரமும் போல.
இந்த வேரும் மரமும் இணைந்தே மானுடமாக பூப்பதே இயல்பு. அந்த வேருக்கு நீராக இருப்பதன் காலடியில் நாம் நமக்கான வைதரணிகளை கடக்கலாம் என்றே நாவலை முடிக்கும் போது தோன்றியது.
மலம் அள்ளும் மகர்கள் என்ற வரியே மிகப்பெரிய படிமம். மலம் என்பது இந்த நாவலில் விதவிதமாக பொருள்படுகிறது. உதாரணத்திற்கு சாதவாகன அரசின் வெற்றித்தூண் நிறுவப்படுகிறது..அது ஒரு பக்கமாக சரிகிறது. அதை சரிப்படுத்த என்ன செய்யலாம் என்று அரசர் அவையில் கேட்கிறார். அதற்கு பலி கொடுத்து நிறுத்தலாம் என்று யோசனை சொல்லப்டுகிறது. அதற்கு யாரை பலிகொடுப்பது என்று அமைச்சருடன் நடக்கும் விவாதம் இந்த நாவலின் முக்கியமான பகுதி. மனித எண்ணத்தின் நினைப்பின் காரியத்தின் மலங்கள் அவை. நம்மை அறியாமலேயே நம்முள் இருப்பவை. வெளியேற வேண்டியவை. அதுவும் நம் இயல்பே. நம்மிலிருந்து வெளியேறாத அவை ஏற்படுத்தும் சிக்கல்களும் நாற்றங்களும் புரையோடும் நோய்களை பற்றிய கதைகளை கொண்டது இந்த நாவல்.
வைதரணி என்பது நதி என்று நமக்கு சொல்லப்படுகிறது. இந்த நாவலை வாசித்ததும் வைதரணி பிறவிப்பெருங்கடலின் வட்ட வடிவமான முதலும் முடிவுமில்லாத தேக்கம் என்று தோன்றியது. தேங்கியதில் தானே பூத்தலும் பிறத்தலும் நடக்க முடியும். எனக்கு தனிப்பட்ட முறையில் சிறுவயதிலிருந்தே வைதரணி நதி என்ற Image ம், அதன் மீது உள்ள கதைகளும் கனவை விரிப்பவை. வயதுக்கு ஏற்ற மாதிரி வேறுவேறாக அது மாறுகிறது.
நாவலை வாசித்து முடிக்கும் போது வைதரணி பூக்கும் சித்திரம் ஒன்று மனதில் தோன்றியிருக்கிறது.
சிறுமியாக இருக்கும் போது அடம்பிடிக்கும் என்னை பயமுறுத்துவதற்காக வைதரணியின் கதைகளை பாலுப்பிள்ளை தாத்தா சொல்வார். நான் ஐந்தாம் வகுப்பு வரை அவரிடம் ட்யூஷன் படித்தேன். ஆனால் எனக்கு கதைமருந்து எதிர்விளைவை ஏற்படுத்திவிட்டது. பாலுப்பிள்ளை தாத்தா வைதரணி நதி பற்றி சொல்லிய கதைகளை முடிக்கும் போது நான் உற்சாகமாக 'நாந்தான் நல்ல பிள்ளைல்ல தாத்தா' என்று சொல்வேன். என் அறியாமையை நினைத்து அவர் சிரித்திருப்பார்.
ஆனால் அந்த வைதரணி image ஜ இன்னும் தீவிரமான கதைகளுடன் காவியம் எனக்கு கையளித்திருக்கறது. ஒருவகையில் நாம் அனைவருமே வைதரிணி கரையில் நிற்பவர்கள் தானே. இந்த நாவலில் கோதை வைதரணியாக என் மனதிற்கு தட்டுபடுகிறது. காசியின் கங்கையும் கூட வைதரணி தான் என்று ரம் சரண் நாயக்கின் மரணத்தில் தோன்றியது.
நமக்கு எப்போதும் வைதரணி கதைகள் தேவைப்படுகிறது. மனித குலத்தை ஒரு சமூகமாக நிலைபடுத்தி ஓரிடத்தில் வாழ வைப்பதற்காக வைதரணி கதைகள் வெவ்வேறு வடிவத்தில் மனித குலம் உள்ள வரை அவசியப்படுகிறது. விடைகள் இல்லாவிட்டாலும் கூட...முடிவுகள் இல்லாவிட்டாலும் கூட...பல சாளரங்களை திறந்து வைத்த மேற்கூரையில்லாத கட்டிடம் போல அந்தக் கதைகள் காலகாலமாக செறிந்து கொண்டிருக்க வேண்டும் என்று மானுட ஆழம் நினைப்பது தான் இதிகாசங்கள், காவியங்கள் எழுதப்படுவதற்கான காரணமாக இருக்கலாம். கதைகள் சொல்லப்பட்டதே அதற்கு தானோ என்னவோ.
மனித பண்பாடுகள் உருவாகிய பாதையில் மனிதன் மனிதனுக்கு தந்த வலிகள் மனிதனாலேயே தீரக்கூடும். இந்த பிரபஞ்சகாலத்தில் மானுடம் ஒரு சிறு கைக்குழந்தை. மனிதபண்பாட்டு பாதையில் உள்ள கண்ணீர் தடங்கள் காய்ந்த கன்னங்களில் ஒருநாள் மானுடமே முத்தமாகலாம். மருந்தாகலாம்.
நாம் நதிகளின் கரையில் தங்கி வாழ்ந்து சமூகமாக உருவானவர்கள். நம்முள் அனைவருக்குள்ளும் ஒரு நதி உண்டு. அது தனித்தனி என தன்னை காட்டும் ஒரே நதியாக இருக்கலாம். பண்பாட்டின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதில் முழுகி எழுந்து பண்பாட்டின் கரையில் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். நம்முள் நாம் கடக்க வேண்டிய வைதரிணியையும் அதற்கு அப்பால் உள்ள ஒரு மானுட கனவையும் தன் ஆழத்தில் புதைத்திருக்கும் நாவல் என்று எழுத்தாளர் ஜெயமோகனின் காவியத்தை சொல்லலாம்.
[முதல் முறை வாசித்தப்பின் தோன்றியதை எழுதியிருக்கிறேன். இன்னொரு முறை வாசிக்க வேண்டும். இது வாசிப்பனுபவம் மட்டுமே]
♦♦♦♦
[அதிகாலை நாலறைக்கு எழுந்து தேநீருக்குப்பிறகு காவியத்தின் கடைசி அத்தியாயத்தை வாசித்தப்பின் கொஞ்சம் தூங்கிவிட்டேன். பக்கத்து காலிமனையின் குயில் விடாமல் கூவி எழுப்பிவிட்டது. சில வருடங்களுக்கு முன் லா.ச.ரா வின் அபிதா வாசித்து முடித்தவுடன் அதிகாலையில் தூங்கினேன். சில சமயங்களில் எதிர் கொள்ளமுடியாத உணர்வுகள் முன்னால் தூங்கிவிடுவது வழக்கம். விதை போல. பின் மெல்ல முளைக்கும். இந்த கட்டுரை அப்படி மெல்ல எழுதியது. இந்த நாவலில் இருந்து மனதை மாற்றுவதற்கு சோமதேவரின் கதா சரித சாகரம் என்ற புத்தகத்தை வாசிக்கப்போகிறேன். குணாட்யர் ஒரு Hero போல மனதை ஆட்கொண்டுவிட்டார். நாவல் முடிந்து இரண்டு மூன்று நாட்களாக வீட்டில் சமைக்கும் போது,வேலைகள் செய்யும் போது,துறையூருக்கு செல்லும் போதெல்லாம் குணாட்யர் கோதாவரியில் முழுகி மீண்டு வருவதும்,தன் காவியத்தை தீயில் போட்டு அந்த தீயில் தானே விழுவதும் மறுபடி மறுபடி மனதில் வந்து கொண்டே இருந்தது. கதா சரித சாகரம் குணாட்யரின் காவியமான பெருங்கதையில் உள்ள கதைகளின் தொகுப்பு எனப்படுகிறது. ஆட்கொள்ளப்படும் எழுத்தாளரின் படைப்புகளை தேடி வாசிப்பது எப்போதும் இனிப்பான விஷயம்.]
Comments
Post a Comment