[ ஜூன் 2025 கவிதைகள் இதழில் வெளியான வாசிப்பனுபவம்]
ஊஞ்சலின் இருபக்கங்கள் போல கவிதையால் ஒரு விசும்பலில் இருட்டிற்கும் வெளிச்சத்திற்குமாய் தாவ முடிகிறது. ஆனால் ஊஞ்சல் கோர்க்கப்பட்ட அச்சு அங்கேயே இருக்கிறது. எழுத்தாளர் சுகந்தி சுப்ரமணியனின் கவிதைகளை வாசிக்கும் போது ஊஞ்சலின் அச்சு மெல்லிய ஔிக்கும், இருட்டுக்குள்ளும் தெளிந்தும் தெளியாமலும் இருப்பதை உணரமுடிகிறது. இவரது எழுத்துகளை வாசிக்கும் போது மொழி கைவிடாத இருளால் அருளப்பட்டவர் என்று தோன்றியது.
கவிஞர் சுகந்தி சுப்ரமணியன்
அடர்ந்த இருளில் ஒரு கைவிளக்கு போல மொழி இருக்கிறது. தத்தளிக்கும் மனம் ஒன்று எழுத்தாக தன்னை முன்வத்துவிட்டு சென்றிருக்கிறது. எங்கோ எப்போதோ எப்படியோ ஏற்பட்ட காயம் ஆறாத மனம் இவரின் கவிதைகளில் தளதளக்கிறது. அவை உரைநடைக்கு நெருக்கத்திலும் கவிதைக்கு முன்பும் நிற்கின்றன என்று சொல்லலாம். அது ஒரு தனி வெளி. சூனியமல்லாத சூனியம். பிரக்ஞை இல்லாத பிரக்ஞை. ஆழ்மனம் வெளியே வந்து நிற்பதால் ஏற்படும் பதற்றம் வாசிப்பவர்களை பற்றுகிறது. கடலுக்குள் எரிமலை வெடிப்பது போல என்று சொல்லலாம். புறஉலகிற்கு கேட்காத சப்தம் அது. ஒரு வகையான மௌனஓலம். மீண்டும் மொழி கைவிடாத அருள் என்ற எண்ணமே இந்த கவிதைகளை வாசிக்கும் போது தோன்றுகிறது. ரசங்கள், மெய்பாடுகள் என்று கவிதையில் வெளிப்படும் தொனி வெவ்வேறானது. சுகந்தியின் கவிதைகள் துயரக்கவிதைகள். வாழமுடியாது போகும் தன் வாழ்க்கையை கண்முன்னே மங்கலான பிரக்ஞை காணும் வெளி இந்தக்கவிதைகள். மங்கலிற்கும் வெளிச்சத்திற்குமாக அல்லாடும் பிரக்ஞை ஒன்று மொழியை கெட்டியாக பிடித்துக்கொள்கிறது. நழுவிப்போகும் ஒன்றை உணர்ந்து கொண்ட மனதின் வெளிப்பாடுகள். புதைசேற்றில் அகப்பட்ட உயிரின் கண்வழி தெரியும் காடு என்று சொல்லலாம். கால எல்லையை அழித்து அது நம்முள் ஈரத்தை படர்விக்கிறது.
எனது உயிர்
எண்ணப்படுகிற நிமிடங்களிலும்
என்னை மறுத்தபடி
என்னில் என்னை புதைத்தபடி
தினமும்…
வேகமான மூச்சுகளிடையே
வெந்து தவிக்கும் எண்ணங்கள்
என் செயலை முடமாக்கும்
நானோ
செய்வதறியாமல் திகைத்தபடி
நானும் இந்த சமூகமும்
எனக்கென என்ன வைத்திருக்கிறோம்?
எப்போதாவது விரியும் இதழில்
புன்னகைத் தோன்றி மறையுமுன்னே
சலனங்கள் என்னை பாதிக்கும்
எல்லாவற்றையும் மீறியபடி
எனக்குள் நான்
அசைவற்று பார்த்திருக்கிறேன்.
விட்டு விடுதலையாக
எனக்கமையாது போனது
என் வெளி.
ஒரு செய்தி
எல்லோரும் நிம்மதியாய்
குறட்டை விட்டுத் தூங்குகின்றனர்
கைகால் ஓய்ந்து
உடல் பூராவும் வியர்வை வழிய
சாக்கடை ஓரம்
திண்ணையில்
பிள்ளையார் அருகில்
பஞ்சு மெத்தையில்
இன்னும்
எல்லா ஊரிலும்
மிக நேர்த்தியாக நடைபெறுகிறது
தூக்கம் மட்டும்
சிலர் மாத்திரையில்
இன்னும் சிலர் சாராயத்தில்
பெண்கள் அடுப்படியின்
வெப்பத்தோடு
எல்லோரும் உறங்க
நடுநிசியில் நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்
உறக்கத்தை
இருபதாம் நூற்றாண்டின் இறுதி பகுதியிலும் இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் தமிழ் பெண் எழுத்து குறிப்பாக கவிதை தன் உடலை மையமாகக்கொண்டு பேச வந்தது. அதை அப்பட்டமான உடல் சார்ந்த விடுதலை சார்ந்தது என்றும்,பெண் உடலை பேசுதல் என்று மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது. அது உடல் மூலம் மனதை பேசிய கவிதைகள் என்று தோன்றுகிறது. உடல் மூலம் மனதை பேசுவது ஆமையின் ஓடு போன்றது.
ஆமை ஓட்டை திருப்பிப் போட்டது போல மனதை பேசுகிறது சுகந்தியின் கவிதைகள். இதை மனநலம் சார்ந்த பொருளில் எடுத்துக்கொள்வதை விட ஓடால் பாதுகாக்கப்பட்ட எழுத்து பரவலாக இருந்த காலத்தில், அதை தலைகீழாக்கும் ஆழ்மனதை பேசிய கவிதைகள் என்று சொல்லலாம். அது ‘ஒருமனம்’ கூட இல்லை. கூட்டு நனவிலி. ஏனெனில் பிரக்ஞையின் பங்கு மங்கலாகும் போது ஆழ்மனம் தன் ஓடு நீக்கி வந்து மொழியில் நிற்கிறது. திரும்ப திரும்ப தன் அன்பிற்காக வந்து நிற்கும் கணவருக்கான சுகந்தியின் கவிதைகள் முக்கியமானவை. இந்த சில கவிதைகளால் இந்தக்கவிதைகள் தன்னை, தன்உணர்வுகளை, தன் வாதைகளை மட்டும் முன்வைக்கிறது என்று சொல்வதற்கு தயக்கம் வருகிறது. இது ஒருவகையான காலம்பட்ட சமூகஅழுத்தத்தால் சூழலால் உருவாகிய வடு அளிக்கும் வாதையின் மொழி. வெர்ஜீனியா வூல்ஃப் தன்னுடன் தான் இருக்க முடியாத வாதையை பலவாறு சொல்லியிருப்பார். கத்தி கத்தியாக இருக்கிறது காஃபி காஃபியாக இருக்கிறது. இந்த மேசை முன்பு நான் நானாக என்னுடன் இருந்தால் போதும் என்று வெர்ஜீனியாவின் கவிதை ஒன்றுண்டு. பெண் மன ஆழத்தின் மென்பரப்பில் ஏதோ ஒன்று கத்தியை போல குத்தி நிற்கிறது. அது உடலாக வெளிப்பட்ட காலகட்டத்தில் சுகந்தியில் மனமாக வெளிப்படுகிறது.
நான் போகின்ற பாதையெல்லாம்
பெண்ணென்று பயமுறுத்தும் எல்லாரும்
என் குழந்தை தவிர
ரேஷன் கடையில்
சர்க்கரை எடை
குறைந்தகாரணம் கேட்டதும்
பாமலின் டின்னுக்கு எழுதியவன்
அதை அடித்து ஸ்டாக் இல்லையென்றான்.
‘பெண்ணுக்கென்ன கேள்வி’ என்றான்.
க்யூவில் நின்ற ஆண்களும் பெண்களும்.
வானம்,வீதி,வாகனம் பார்த்தனர்.
இடுப்பிலிருந்த என் குழந்தை
முகம் பார்த்துச் சிரித்தது.
_ சுகந்தி சுப்ரமணியன்
அந்த காலகட்டத்தில் பெண் கவிதைகள் ஏன் அவ்வாறு தன்னை வெளிப்படுத்தின என்பதற்கான உளவியல் இந்தக்கவிதைகளில் உள்ளது. அகப்புலம்பல்கள்,தாங்க இயலாத ஒரு வாதை என்று வெளிப்படத்துடிக்கும் அகத்தின் துடிப்பு இந்த கவிதைகளில் உள்ளது. சுகந்தி எழுதிய காலகட்டத்தின் பெண்எழுத்தை ஒரு மரமாக உருவகம் செய்து கொண்டால் அதன் வேரின் சிறுகிளையாக சுகந்தியின் கவிதைகளை சொல்லலாம்.
கவிஞர் சுகந்தி சுப்ரமணியத்தின் தமிழ் விக்கி பக்கம் :
Comments
Post a Comment