Posts

Showing posts from January, 2024

குரல்

Image
 பாடகி பவதாரிணி குரலை என்னுடைய நடுநிலைப்பள்ளி இறுதி வயதில் கேட்டேன். நன்றாக நினைவில் உள்ளதற்கு காரணம் காதலுக்கு மரியாதை என்ற பிரபலமான திரைப்படத்தில் 'இது சங்கீதத்திருநாளோ..' என்ற பாடல் அது. எப்போதும் போல எங்கேயோ கேட்கும் ஒலிப்பெருக்கியில் கேட்டேன். 'ராகம் ரெக்கார்டிங்ஸ் ' ஒலிபெருக்கியில் ஆனந்தன் என்ற அண்ணாவின் திருமணப்பந்தலில் பெண்அழைப்பு நிகழ்விற்காக ஒலித்துக் கொண்டிருந்தது.  டீயூசன் செல்வதற்காக வீ்ட்டிலிருந்து கிளம்பி இடையில் ஆனந்தன் அண்ணா வீட்டு முடக்கில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன். அங்கிருந்த ஒரு அம்மாள் , "பச்சபிள்ள ஒன்னு வாசல்ல நிக்கிது," என்று என் கையை பிடித்து இழுத்து வாசல் திண்ணையில் கிடந்த பாயில் அமர வைத்து சோறும் குழம்பும் அப்பளமும் வைத்தார். உள்ளூர்க்காரர் இல்லை. வீட்டிற்கு வந்த விருந்தாளியாக இருப்பார். பெரியர்வர்களை மறுக்கும் பழக்கம் இல்லாததால் சாவகாசமாக சாப்பிட்டுவிட்டு அப்பளத்தை கையில் எடுத்து கடித்துக்கொண்டே டீயூசனுக்கு சென்று நின்ற பின் தான் நேரமாகிவிட்டது என்ற பயம் வந்தது. [அதற்குள் அப்பளம் தீர்ந்திருந்தது]. அய்யா [சொந்த அப்பாக்கிட்ட ட்டீ

பாட்டும் தாளமும்

Image
 [ 2024 ஜனவரி 5 வாசகசாலை இணைய இதழில் வெளியான சிறுகதை] மேற்கு சன்னல் வழி அந்தி வெளிச்சம் தம்பூராவின் தண்டுகளாகத் தரையில் வீழத்தொடங்கியது. வெளியே தோட்டத்தில் கணேஷ் செடிகளுக்கு தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தான். பறிக்காமல் விடப்பட்டிருந்த மிச்ச மலர்களும் உதிர்ந்தன. வெயில் குறைந்து மழை நாட்கள் தொடங்கும் காலம். வானம் வெளிச்சமும் மங்கலுமாக கண்ணாமூச்சி ஆடியது. வெளிச்சம் மங்கும் போது கண்கள் தன்னிச்சையாக மூடிக்கொண்டன. சுமதி தோட்டத்திலிருந்து வரிசையாக படுக்கையறைகள் வரை மின்விளக்குகளை ஔிரச் செய்து கொண்டே நடந்தாள். அவள் கொலுசின் ஒலி கலைந்தும், நின்றும், தயங்கியும், சடசடவென்றும் கேட்டுக்கொண்டிருந்தது.  அவள் நடக்கும் போதெல்லாம் மஞ்சள் வாசம் வந்து வந்து போனது.   “லட்சுமிஅக்கா,” என்று அழைத்தபடி நிலைப்படிகளில் மெதுவாக ஏறி தெய்வானை உள்ளே வந்தாள். மஞ்சள் நிற சுங்குடிச் சேலை. விளக்கு வெளிச்சத்தில் அவள் முகமும் மஞ்சளாகியது.  “என்ன…கொஞ்சநாளா இங்க எட்டிப்பாக்கலை,”  “கடைக்குட்டி பேத்திக்கு தலைச்சம்பிள்ளை…கை வேலை எதுவும் முடியாட்டாலும் கூடவே இருந்தேன்… சொல்லியனுப்பினேனே?”  “…”  “மறந்திருப்பேள்..விடுங்கோ,”  “….”

வீடும் வீடு சார்ந்தும்

Image
 நீலி: எழுத்தாளர் உமாமகேஸ்வரி சிறப்பிதழ். நவம்பர் 2023 எழுத்தாளர் உமாமகேஸ்வரி நாவல்கள் பற்றிய கட்டுரை: எழுத்தாளர் உமாமகேஸ்வரியின் இரு நாவல்களை வாசித்து முடித்ததும் ஒரு புன்னகை உணர்வு நாள்முழுவதும் இருந்து கொண்டிருந்தது.  எழுத்தாளர் நம் கைப்பிடித்து ஒரு பெரிய வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். அங்குள்ள மனிதர்களை, இருள் மூலைகளை, சன்னல் வெளிச்சங்களை,மூச்சுத்திணறல்களை,இனிமைகளை,வலிகளை நமக்கு காட்டுகிறார். வாசிக்கும் போது கண்கள் கலங்கியபடியே இருந்த மனநிலை முடித்தப்பின் இயல்பாக புன்னகையானது எப்படி? பெண்களையே சுற்றி சுற்றி வரும் இந்த இரு நாவல்களும் வாசிக்கும் போது ஒருவித உணர்ச்சிப்பெருக்கும், கண்ணீருமாக இருந்தது.  வாசித்தபின் இந்த மனநிலை  இல்லாமலாகிறது. இது வரை வாசித்த நல்ல படைப்புகளின் இறுதியில் எழும் வெறுமை இதில் ஏன் எழவில்லை? ஏனென்றால் இது முழுக்க முழுக்க பெண்மனநிலையால் பெண்களை எழுதிய நாவல். அது இப்படிதான் இருக்க முடியும். பரவசத்தையும், கண்ணீரையும், தனிமையையும், வெறுமையையும் கடந்து உயிர்படைப்பின் மூலகர்த்தா பெண். படைப்பு உலகின் உணர்வு நிலை பரவசம். எனில் பெண் என்பவள் பரவசம் என்ற உணர்வு நிலையின

புத்தக அறிமுகம்

Image
 [அகழ் இதழில் வெளியான புத்தக அறிமுகம்] மனதின் இசை சுத்தமான இசை என்ற அளவுகோலில் பார்த்தால்,அவர் முதல் வரிசை மேதைகளில் இடம் பெறமாட்டார். …….அவர் பாணியில் தனித்துவமானதாக ஒன்று உண்டு என்றால் அது ஆலத்தூர் சகோதரர்கள், செம்மங்குடிகள், ராமனாதன்கள் தம் அறிவால் அறிவிற்காக பாடிய போது அவர் தனது மனதால் மனதுக்கு பாடினார்.         எம். எஸ் சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு              ஆங்கிலத்தில்: டி.ஜே.எஸ்.ஜார்ஜ் தமிழில்: சுப்பாராவ் ஒரு காலகட்டத்தில் மட்டுமல்ல அடுத்தடுத்த தலைமுறைகளின் மனதில் நிற்கும் மிக பிரபலமான ஆளுமையின் உண்மையான வாழ்க்கை வரலாற்றை எழுதுவது என்பது அந்தரத்தில் கயிற்றில் நடக்கும் சிறுமியின் தீவிரமான மனகவனமும், வெகுளித்தனமும், கடின பயிற்சியும் [இங்கு விடாத தேடல் என்று கொள்ளலாம்], தன்னை சுற்றி உள்ள கூட்டத்தை கவனத்தில் கொள்ளாத தன்மை அவசியம். இன்றுவரை கர்நாடக சங்கீதத்தின் மிகமுக்கியமான பாடகி, அன்றைய சினிமாவின் பிரபலமான நட்சத்திரமான எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற ஒருவரை எழுதுவதற்கு டி.ஜே.எஸ்.ஜார்ஜ் போன்ற ஒரு பத்திரிகையாளருக்கு மேற்சொன்ன இத்தனை விதமான தகுதிகளும் தேவைப்பட்டிருக்கும்.  ஒரு வாழ்க்

இந்த ஆண்டின் ஆசி

Image
 கமல தேவி சிறுகதைகளை எம். கோபால கிருஷ்ணன் தான் அறிமுகம் செய்தார். வெளியூரில் நீண்ட காலம் தங்க நேர்ந்துவிட்ட என்னிடம், வாசிப்பதற்குப் புதிய/ பழைய புத்தகங்கள் எதுவும் இல்லை.  ( இந்த முகவரியில் கிடைத்த  என்னுடைய புதிய கவிதைத் தொகுப்பான, ' மேலும் கீழும்  பறந்த படி' யை, நான் எத்தனை முறைதான் படிக்க முடியும்?!,) [எழுத்தாளர் அம்பையும் எழுத்தாளர் வண்ணதாசனும்] வாசகசாலை இணைய இதழ் 86 இல் என் சிறுகதை  ஒன்றும் வந்திருப்பதால், அந்த இதழில் வந்திருக்கும் மற்றச் சிறுகதைகளையும் வாசித்துக் கொண்டிருந்தேன் .  அதில் இருக்கும் கதைகளில் கமலதேவியின் ' பாட்டும் தாளமும்' ஒன்று. வாசக சாலையில்  வெளிவந்திருக்கும் அவருடைய மேலும் சில கதைகளை வாசிக்கத் துவங்கினேன். தமிழினி இணைய இதழில் தேடினேன். அங்கே  ஏழு கதைகளை வாசிக்க முடிந்தது. பாட்டும் தாளமும்,நாயகி,துறைமுகம் ,பாலாமணி பங்களா,இள நகை, இலையுதிர் காலத்து மழை, அந்தக் கிச்சிலி மரத்தடியில், அரும்பு, கீறல், பங்காளி, மீண்டுமொரு சந்திப்பு,  ஜீவா... இப்படி ஒன்றின் சாயலில் மற்றொன்றில்லாத, வேறு வேறு களங்களில்  எழுதப்பட்ட   இந்தப் பன்னிரெண்டு கதைகளின்  வாசிப்பு  அ

துறைமுகம் என்னுரை

Image
 நாளை என்னுடைய ஆறாவது சிறுகதைத் தொகுப்பான துறைமுகம் வெளியாகிறது. வழக்கம் போல சென்னை இக்சா மையத்தில்... சமர்ப்பணம் அம்மாவுக்கு…. நன்றி சொல்வனம் தமிழினி ஆவநாழி ஓலைச்சுவடி வாசகசாலை மற்றும் இந்தத்தொகுப்பிற்கு பிழை நோக்கியவர்களுக்கும்,அட்டைப்பட வடிவமைப்பாளருக்கும் அன்பும் நன்றியும். வாசகசாலை நண்பர்களுக்கு எப்போதும் என் அன்பு. பெருங்கடலில் அவரவருக்கான கரைகள் இந்தத்தொகுப்பில் இரண்டு கதைகளைத் தவிர மற்ற கதைகள் இந்த ஆண்டில் எழுதப்பட்டவை. எழுத்தில் ஒரு சிறிய  திசை திரும்பல் உள்ளதை கதைகளைத் தொகுக்கும் போது உணரமுடிகிறது. புத்தகங்கள் வாசிக்கும் போது வரலாற்றில் உள்ள மனிதர்களின் வாழ்வின் சில தருணங்கள் மனதிற்குள் கிடந்து தொந்தரவு செய்ததால் பாலாமணி பங்களா,அந்த கிச்சிலி மரத்தடியில், சுவடிகள்,துறைமுகம்,இலையுதிர் காலத்து மழை போன்ற கதைகளை எழுதினேன்.  ஒரு நாவலுக்கான முன்னுரை சிறுகதை எழுதுவதற்கான தூண்டுதலாக இருக்கும் என்பது வியப்பு தான். போரும் அமைதியும் நாவலில் ஹீயூ வால்போல் எழுதியிருக்கும் முன்னுரை என்னை மிகவும் கவர்ந்தது. போரும் அமைதியும் நாவல் எப்படி அவரின் பதின்வயதில் அவரை ஆட்கொள்கிறது பின்னர் வாழ்நாளின்