Skip to main content

புத்தக அறிமுகம்

 [அகழ் இதழில் வெளியான புத்தக அறிமுகம்]

மனதின் இசை

சுத்தமான இசை என்ற அளவுகோலில் பார்த்தால்,அவர் முதல் வரிசை மேதைகளில் இடம் பெறமாட்டார். …….அவர் பாணியில் தனித்துவமானதாக ஒன்று உண்டு என்றால் அது ஆலத்தூர் சகோதரர்கள், செம்மங்குடிகள், ராமனாதன்கள் தம் அறிவால் அறிவிற்காக பாடிய போது அவர் தனது மனதால் மனதுக்கு பாடினார்.

        எம். எஸ் சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு             

ஆங்கிலத்தில்: டி.ஜே.எஸ்.ஜார்ஜ்

தமிழில்: சுப்பாராவ்

ஒரு காலகட்டத்தில் மட்டுமல்ல அடுத்தடுத்த தலைமுறைகளின் மனதில் நிற்கும் மிக பிரபலமான ஆளுமையின் உண்மையான வாழ்க்கை வரலாற்றை எழுதுவது என்பது அந்தரத்தில் கயிற்றில் நடக்கும் சிறுமியின் தீவிரமான மனகவனமும், வெகுளித்தனமும், கடின பயிற்சியும் [இங்கு விடாத தேடல் என்று கொள்ளலாம்], தன்னை சுற்றி உள்ள கூட்டத்தை கவனத்தில் கொள்ளாத தன்மை அவசியம்.

இன்றுவரை கர்நாடக சங்கீதத்தின் மிகமுக்கியமான பாடகி, அன்றைய சினிமாவின் பிரபலமான நட்சத்திரமான எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற ஒருவரை எழுதுவதற்கு டி.ஜே.எஸ்.ஜார்ஜ் போன்ற ஒரு பத்திரிகையாளருக்கு மேற்சொன்ன இத்தனை விதமான தகுதிகளும் தேவைப்பட்டிருக்கும். 

ஒரு வாழ்க்கை வரலாறு எதற்காக எழுதப்படுகிறது? ஒரு வாழ்க்கை வரலாறு  எழுதுவதற்கு மிக அடிப்படையானது என்ன? ஒரு வாழ்க்கை வரலாறு புத்தகம் தன்னளவில் கொள்ள வேண்டிய நியாயம் என்ன?

ஒரு ஆளுமையின் மேல் சமூகமோ,எழுதுபவரோ கொண்ட பற்றுதலினால் எழுதப்படுகிறது. அந்த ஆளுமை எழுதுபவரை எந்த வகையிலோ தீவிரமாக தன்வயப்படுத்தியிருக்க வேண்டும். அடிப்படையில் அந்த வயப்படுத்துதலே ஆளுமை பற்றி எழுத, அதற்கான தகவல்களுக்கான தீராத தேடலின் தீயை அணையவிடாமல் காக்கிறது. இரண்டாவதாக ஒரு வாழ்க்கை வரலாற்று நூலின் மிக அடிப்படையானது ‘உண்மை’. மிகவும் நேர்மையாக எழுதப்பட வேண்டியது. தன்னை ஆகர்ஷித்த ஒருவரை குறித்து சமரசமின்றி எழுதவேண்டும். மூன்றாவது மற்ற இரண்டையும் விட மிக முக்கியமானது. வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறேன் என்ற பெயரில் அந்த ஆளுமையின் பிம்பத்தை சிதைத்துவிடலாகாது.

இந்த வகையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றை எழுதிய பத்திரிக்கையாளர் டி.ஜே.எஸ். ஜார்ஜ் இந்த மூன்று அடிப்படைகளுக்கும் நியாயம் செய்யும் படி இந்த நூலை எழுதியுள்ளார். 

பாடகி சுப்புலட்சுமி என்ற  ஆளுமையை சுற்றி கட்டப்பட்டுள்ள கோட்டையை ஒரு காற்றின் லாகவத்துடன் கடந்து திரை விலக்கும் அனுபவம் இந்த வாழ்க்கை வரலாற்றை வாசித்து முடித்ததும் நமக்கு ஏற்படுகிறது. விலக்கிய திரை வழியே காணும் உண்மையின் தரிசனம் இந்த புத்தகத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குகிறது. அங்கு நம் முன்னே நிற்கும் ரத்தமும் சதையும், ஏக்கமும், புன்னகையும், விடாப்பிடியான பொறுமையும்,இசை ஞானமும் கொண்ட சுப்புலட்சுமி, ஜார்ஜை எந்த அளவுக்கு பாதித்தாரோ அதே அளவுக்கு வாசிப்பவரையும் பாதிக்கிறார். 

எம்.எஸ் பிறந்த குடும்பத்தையும், சமூக சூழலையும், இந்திய தென்னிந்திய தமிழக சமூக பின்ணனியில் இருந்து ஜார்ஜ் துவங்குகிறார். இசை சார்ந்து, அதன் ஆன்மா நிலைகொண்டிருந்த இசை வேளாள வகுப்பு பெண்களின் சமூக சூழலை நம்முள் ஆழப்பதியவிட்டப் பின்னே  ஜார்ஜ் தன் நாயகியின் வாழ்கையை சொல்லத் தொடங்குகிறார். ஆனாலும் ஜார்ஜ்க்குள் இருக்கக்கூடிய பத்திரிக்கையாளர் அவ்வளவு உணர்ச்சிவப்படுபவர் அல்ல. மிகக்கறாரானவர். இந்த இரண்டு ஜார்ஜ்களும் சேர்ந்தெழுதிய இந்த நூல் எம்.எஸை உண்மைக்கு பாதகமில்லாத வகையில் வாசிப்பவருக்குள் கடத்துகிறது. 

இந்த நூலில் ஜார்ஜின் சமர்ப்பணமே நூலின் ஆன்மாவை சொல்லிவிடுகிறது. அதை நோக்கியே எம்.எஸ் தன் முழு வாழ்க்கையை செலுத்தியிருக்கிறார். ‘சுரண்டப்பட்ட சமூகத்தின் கண்ணியத்திற்கான ஏக்கம்..’ என்று அந்த சமர்ப்பணம் தொடங்குகிறது. 

ஒரு பெண்ணின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு என்று ஒரு நுண்ணுணர்வு தேவைப்படுகிறது. அதுவும் அவர் ஒரு பாரம்பரிய இசைக்கலைஞர்.[ பொதுவாக எதிர்பாலரை எனவும் கொள்ளலாம்]. அவரே சொல்வதைப்போல ஜார்ஜ் ஒரு ‘வெளிஆள்’. எம்.எஸ் என்ற தனிநபரின் வரலாற்றின் வழி கர்னாடக இசை வரலாறு,தமிழ் சமூகத்தில் இசை,அன்றைய அரசியல் என்று விரியும் ஒரு வரலாறு இந்த நாவலின் சிறப்பம்சம். மேலும் அறியப்படாத வரலாறு, சிதறல்களாக  இந்நூலில் அங்கங்கே பரவலாக இருக்கிறது. உதாரணத்திற்கு பிரபல இதழான கல்கி தொடங்கி நடத்தப்பட்ட சித்திரம் உள்ளது. இசை ஆளுமைகள்,  அரசியல் ஆளுமைகள் என்று வரலாற்றின் நாயகர்கள்  அங்கங்கே வந்து போவதால் எம்.எஸ் வாழ்வுடன்,அவர் வாழ்ந்த காலகட்டத்தின்  முழுசித்திரத்தை வாசித்த அனுபவம் கிடைக்கிறது. தமிழ் இந்திய இசைக்கலைஞர்கள் ,தமிழக இந்திய அரசியல்,சமூக மனநிலை,நாடகக்கலை,சினிமா,காந்தி நேரு ராஜாஜி,பாலசரஸ்வதி, எம்.எல் வசந்த குமாரி, படே குலாம் அலிக்கான், அலாதீன் கான் போன்ற இசை மேதைகள் என்று பரந்த தளத்தில் நூல் விரிகிறது. நூலை வாசித்து முடிக்கும் போது எம்.எஸ்.ஸின் வாழ்க்கை வரலாற்றுடன்,இந்திய தமிழக வயலாற்றின் ஒரு சென்சிடிவ்வான பக்கத்தை வாசித்த உணர்வும் நமக்கு ஏற்படுகிறது. 

நூலை வாசித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு உறுத்திய ஒரே விஷயம்… எஸ்.எஸின் கணவரான சதாசிவத்தை பற்றி ஐார்ஜ் உருவாக்கும் பிம்பம். எவ்வகையில் உண்மைக்கு நெருக்கமாக எழுதப்பட்டாலும் வாழ்க்கை வரலாற்றில் சிறிய புனைவம்சத்தை தவிர்க்க முடியாது. எம்.எஸின் சித்திரத்திலும் அது இருக்கக்கூடும். ஆனால் ஜார்ஜ் சதாசிவத்தை பற்றி சொல்லும் போதெல்லாம் அவரை திறன் மிகுந்த வியாபாரியாக, திட்டமிட்டு அனைத்தையும் வெற்றி கொள்பவராக,மதியூகியாக கிட்டத்த ஒரு ப்ளாஸ்டிக் தன்மை கொண்டவராக சொல்வதாக தோன்றியது. எம்.எஸ் ஸின் ஆழத்தை தொட முடிந்த ஜார்ஜால், சதாசிவத்தின் ஏதோ ஒரு நுண்ணிய பகுதியை சரியாக எட்டமுடியவில்லை. அந்த காலக்கட்டத்தில் [1930 களில்] ஒரு ஸ்மார்த்தர், வேளாள இசைக்கலைஞரை தன் சொந்த சமூகத்தின் முன், தன் சொந்த குடும்பத்தின் முன் முறைப்படி மனைவியாக்கிக் கொள்ளுதலில்,மனைவியை அவரின் கலையில் ஆகச்சிறந்த இடம் வரை செல்ல துணையிருந்து அங்கே நின்று, ‘ இதுதான் நான் நீண்டகாலமாக கனவு கண்டு வந்தது.  அவளை உலக மேடையில் நிறுத்துவது. என் பெரிய லட்சியம் நிறைவேறியது’ என்று நிறைவடையும் ‘தான்’ இல்லாத  அன்பின் கிறுக்குத்தனம் இவ்வளவு ப்ளாஸ்டிக் தன்மையுடன் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் நூலில் உள்ள உண்மை தன்மையினால் வாசிப்பவரால் அதை தொட்டுவிட முடிகிறது. அதன் குறையை அதுவே ஈடு செய்யும் ஒன்று நூலில் உள்ளது.


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...