இந்த ஆண்டின் ஆசி

 கமல தேவி சிறுகதைகளை எம். கோபால கிருஷ்ணன் தான் அறிமுகம் செய்தார்.

வெளியூரில் நீண்ட காலம் தங்க நேர்ந்துவிட்ட என்னிடம், வாசிப்பதற்குப் புதிய/ பழைய புத்தகங்கள் எதுவும் இல்லை.  ( இந்த முகவரியில் கிடைத்த  என்னுடைய புதிய கவிதைத் தொகுப்பான, ' மேலும் கீழும்  பறந்த படி' யை, நான் எத்தனை முறைதான் படிக்க முடியும்?!,)


[எழுத்தாளர் அம்பையும் எழுத்தாளர் வண்ணதாசனும்]

வாசகசாலை இணைய இதழ் 86 இல் என் சிறுகதை  ஒன்றும் வந்திருப்பதால், அந்த இதழில் வந்திருக்கும் மற்றச் சிறுகதைகளையும் வாசித்துக் கொண்டிருந்தேன் .  அதில் இருக்கும் கதைகளில் கமலதேவியின் ' பாட்டும் தாளமும்' ஒன்று.


வாசக சாலையில்  வெளிவந்திருக்கும் அவருடைய மேலும் சில கதைகளை வாசிக்கத் துவங்கினேன். தமிழினி இணைய இதழில் தேடினேன். அங்கே  ஏழு கதைகளை வாசிக்க முடிந்தது.


பாட்டும் தாளமும்,நாயகி,துறைமுகம் ,பாலாமணி பங்களா,இள நகை, இலையுதிர் காலத்து மழை, அந்தக் கிச்சிலி மரத்தடியில், அரும்பு, கீறல், பங்காளி, மீண்டுமொரு சந்திப்பு,  ஜீவா... இப்படி ஒன்றின் சாயலில் மற்றொன்றில்லாத, வேறு வேறு களங்களில்  எழுதப்பட்ட   இந்தப் பன்னிரெண்டு கதைகளின்  வாசிப்பு  அனுபவம்  நிறைவாக இருந்தது. இதுவரை வாசக சாலை அமைப்பே ஆறு தொகுப்புக்களை வெளியிட்டிருப்பதாக  அறிகிறேன். வாசிக்க வேண்டும்.

[இது எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் முகநூல் பதிவு]

[அவருக்கு நான் எழுதிய மின்னஞ்சல்]

அன்புள்ள வண்ணதாசன் அய்யாவிற்கு,


வணக்கம். நலம் விழைகிறேன்.
நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

நான் கமலதேவி. நீங்கள் என் கதைகளை வாசித்தது குறித்து முகநூலில் எழுதியிருந்ததை நண்பர்கள் பகிர்ந்தார்கள். நான் முகநூலில் இல்லைங்கய்யா. இங்கு ஊர்ப்பக்கம் அய்யா என்பது பொதுவாக மூத்தவர்களை ,இளையவர்களை, அப்பாக்களை அழைக்கும் இயல்பான சொல். 

கதை தலைப்புகளை குறிப்பிட்டு நீங்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஆண்டு வெளியான முதல் கதைக்கு உங்கள் வாசிப்பு கிடைத்ததை ஆசியாக உணர்கிறேன். 
எங்கேயோ ஒரு அறையில் தனியே அமர்ந்து எழுதுகிறோம். அதே போல வாசிப்பும் அந்தரங்கமானது. மொழியால் இன்னொரு மனதிற்குள் செல்ல முடிவதை பற்றிய வியப்பு எனக்கு தீர்வதில்லை. மொழி எவ்வளவு அழகிய மனித கண்டுபிடிப்பு என்று எப்போதும் எனக்கு வியப்பு உண்டு. யாரிடமும் இதை கூறினால் 'இதென்னா அதிசயமா' என்று கேட்கலாம். ஆனால் அது எவ்வளவு பெரிய விஷயம் என்று... என் கதைகளை வாசிக்கும் ஒவ்வொருவரும் கதைகளை குறித்துக் கூறும் போது இன்னும் ஆழமாக உணர்கிறேன்.

நீங்கள் என் கதைகளை வாசித்ததை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நான் உங்கள் கதைகளை முதன்முதலாக என் பள்ளிக்கூட வயதில் தமிழ் துணைப்பாடத்தில் வாசித்தேன். அந்த வயதில் எழுத்தாளர்கள் எனக்கு ஹீரோக்கள். இன்று எழுத வருபவர் வரை எனக்கு அந்த மனநிலை மாறவில்லை. 

ஒரு அழகிய, மென்மையான,என் மதிப்பிற்குரிய எழுத்தாளரிடம் இருந்து கிடைத்த சொற்களை மனநிறைவுடன் பரவசத்துடன் பிடித்துக்கொள்கிறேன். 
அந்த சொற்களுக்காக எப்போதும் அன்பு.

அன்புடன்,
கமலதேவி

Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்