வீடும் வீடு சார்ந்தும்

 நீலி: எழுத்தாளர் உமாமகேஸ்வரி சிறப்பிதழ். நவம்பர் 2023

எழுத்தாளர் உமாமகேஸ்வரி நாவல்கள் பற்றிய கட்டுரை:



எழுத்தாளர் உமாமகேஸ்வரியின் இரு நாவல்களை வாசித்து முடித்ததும் ஒரு புன்னகை உணர்வு நாள்முழுவதும் இருந்து கொண்டிருந்தது. 


எழுத்தாளர் நம் கைப்பிடித்து ஒரு பெரிய வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். அங்குள்ள மனிதர்களை, இருள் மூலைகளை, சன்னல் வெளிச்சங்களை,மூச்சுத்திணறல்களை,இனிமைகளை,வலிகளை நமக்கு காட்டுகிறார்.

வாசிக்கும் போது கண்கள் கலங்கியபடியே இருந்த மனநிலை முடித்தப்பின் இயல்பாக புன்னகையானது எப்படி? பெண்களையே சுற்றி சுற்றி வரும் இந்த இரு நாவல்களும் வாசிக்கும் போது ஒருவித உணர்ச்சிப்பெருக்கும், கண்ணீருமாக இருந்தது.  வாசித்தபின் இந்த மனநிலை  இல்லாமலாகிறது. இது வரை வாசித்த நல்ல படைப்புகளின் இறுதியில் எழும் வெறுமை இதில் ஏன் எழவில்லை? ஏனென்றால் இது முழுக்க முழுக்க பெண்மனநிலையால் பெண்களை எழுதிய நாவல். அது இப்படிதான் இருக்க முடியும். பரவசத்தையும், கண்ணீரையும், தனிமையையும், வெறுமையையும் கடந்து உயிர்படைப்பின் மூலகர்த்தா பெண். படைப்பு உலகின் உணர்வு நிலை பரவசம். எனில் பெண் என்பவள் பரவசம் என்ற உணர்வு நிலையின் ஸ்தூல வடிவமா? பெண்மை என்பது பரவசம் என்ற உணர்வு நிலையா என்று கேட்டால். ஆம். ஆதார நிலை அதுதான். மற்றவையெல்லாம் மேல் மட்டத்து அலைகளே என்று தோன்றுகிறது. பெண்ணிற்குள் எந்த துயரமும் நிலை ஊன்றி நிற்கமுடியாது.  அவளுக்கு ஆறாத காயம் என்று எதுவும் இல்லை. அது முன்னோக்கி பாயவல்ல ஒரு ஆற்றல் மட்டுமே. அதுவே இந்த இயற்கையின் இயல்பு. இந்த நிலத்தின் இயல்பு. நித்தம் தன்னை புதுப்பிக்கும் ஒன்று.

அப்படி என்றால் இந்த நாவல்கள் ஒரு பெண்ணிய நோக்குள்ள படைப்புகளா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. ஒரு பெரிய கூட்டுக்குடும்பம். பொன்னய்யா அன்னம்மா தம்பதிகளின் ஐந்து மகன்கள் மருமகள்கள் நிறைந்த வீடு. வரிசையாக குழந்தைகள் பிறந்து கொண்டிருக்கும் வீடு. மேலும் யாருமில்லாமல் தஞ்சம் புகும் உறவுப்பெண்ணான சுப்புவும்  இருக்கிறாள். 

கால்கள் வளர்ச்சியில்லாத சுப்புவின் பாத்திரம் முழுதாக உருவாகி நாவலில் நிறைந்துள்ளது. உடல் இயலாமை கொடுத்த ஏக்கம், தனிமை, இளமைக்குரிய அலைகழிப்புகள், உடல் ஊனத்தால் மற்றவர்களுடன் ஒன்றமுடியாத தன்மை, தன்னுடைய அலைகழிப்புகளை மறக்க நாளெல்லாம் வேலைசெய்து கொண்டிருக்கும் பழக்கம், இரவானால் குழந்தைகளுக்காக தன் கதைக்கம்பளத்தை விரிக்கும் கதைசொல்லி என்று சுப்பு அந்த வீட்டில் தவழ்வதை போன்றே நாவலில் தவழ்ந்து கொண்டிருக்கிறாள். சுப்பு குளிக்கையில் மஞ்சள் கிழங்கை உரசி பூசும் போது தன் உடலை கண்டு பெருமிதமும், கால்களை கண்டு மனசுருக்கமும் அடைகிறாள். 

இந்த இரு நாவல்களிலும் பெண்களுக்கு தன் உடல் பற்றிய நிமிர்வு இருக்கிறது. ஒவ்வொருவரும் கண்ணாடி பார்க்கும் விதமும் தனித்தனியாது. அவர்களுடைய ஆளுமையைப்போலவே. 

சமூகம் என்பது உருவான போது பெண்தன்மை தான் முதலில் குறிவைக்கப்பட்டது என்று நினைக்கிறேன். அவளுக்கு காலகாலமாய் கற்பிக்கப்பட்டவை இந்த நாவல்களில் உள்ளன. அவள் இயல்புக்கு மாறானவைகளையும் அவள் இயல்பு என்று அவள் மீது ஏற்றப்பட்டுள்ளது. இயல்பால் பெண் இழப்புகளில் இருந்து வெளிவந்து விடக்கூடியவள். ஆனால் அப்படியல்ல என்று சடங்குகள் சம்பிரதாயங்கள் மூலம் அவளுக்கே அவளை நீ இப்படி இரு என்று நினைவுபடுத்துகிறது. நீ விதவை என்று சில அடையாளங்கள். நீ வயது வந்த பிள்ளையின் தாய் என்று சில அடையாளங்கள். நீ ஒருவரின் மனைவி என்று எத்தனை அடையாளங்கள் மூலம் நினைவுபடுத்தப்படுகிறது.

யாரும் யாருடனும் இல்லை,அஞ்சாங்கல் காலம் என்ற இந்த இருநாவல்களையும் இணைத்து வாசிக்கலாம். இரண்டும் தனித்த பிரதியாகவும் தன்னளவில் தனித்தனி நாவல்கள். ஆனால் இருநாவல்களையும் பற்றி எழுவதென்றால் ஒரே கதை என்பதால் இரண்டையும் ஒன்றாக்கியே எழுத முடிகிறது.

யாரும் யாருடனும் இல்லை நாவலில் ஒரு பெரிய வீடு மையமாக உள்ளது. அந்த வீட்டிற்கு வெளியே உள்ள ஊரும், மக்களும் ஜன்னல் வழியே அங்கங்கே தென்படும் காட்சிகள் போல வருகிறார்கள். நாவல் பெண்கள் சார்ந்தும் அவர்களின் பார்வையிலும் சொல்லப்படுவதால் நாவலில் வெளிஉலகம் மிகக்குறைவாகவே உள்ளது. ஒரு ஸ்பிங்கேட் மூடி திறக்கப்படும் ஓசை இந்த இருநாவல்கள் முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. வெளிஉலகத்திலிருந்து தடுக்கவும் பாதுகாக்கவுமான ஒன்று. அதுவே வெளிஉலகத்திற்கான ஒரே வாய்ப்புமாக உள்ளது.

குடும்பத்தலைவிகள் தங்கள் பெண்குழந்தைகளை வீட்டினுள் வைத்து அந்த கேட்டை பூட்டி விட்டு செல்கிறார்கள். அவர்களும் பெரும்பாலும் அங்கே அடைந்து கிடக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக சுற்றி சுற்றி செக்குமாட்டு வாழ்க்கை. ஆனால் நாவலில் ஆண்கள் போல பெண்களுக்கு தங்கள் வாழ்வில் அத்தனை சலிப்பில்லை. செக்கே சிவலிங்கமா என்று கேட்டால் ஆம் அப்படித்தான் இருந்திருக்கிறது. 

பதினைந்து பதினாறில் திருமணம். வரிசையாக குழந்தை பிறப்பு. சமையல் அறை. பாதார்த்தங்கள். நகைகள், புடவைகள், அழுகை, உடலில் உச்சமான வலிகள், மனஏக்கங்கள் ,சலிப்பு என்ற உணர்வுகளால் கைமாற்றி மாற்றி ஆடப்படும் அஞ்சாங்கல் விளையாட்டு போன்ற வாழ்க்கை.

ஏலக்காய் வியாபாரத்தில் பணக்காரராகும் பொன்னய்யா ஊரிலேயே பெரிய வீடு கட்டுகிறார். மேற்கு தொடர்ச்சி மலை அதற்கு பின்புலமாக நின்று கொண்டிருக்கிறது. கடைசி மகனான குணா மட்டும் திருமணமாகாமல் இருக்கிறான்.

இரண்டாம் மருமகளாக தனத்தின் உடல்நலக்குறைவில் இருந்து நாவல் துவங்குகிறது. முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததற்கே அவளிடம் பேசாமலிருக்கும் கணவன் செல்வம். முதல் மருமகளான ராஜேஸ்வரிக்கு மூன்று பெண்குழந்தைகள், இரு ஆண்குழந்தைகள். அடுத்தடுத்த மகன்களான நந்தகோபலுக்கும் நரேனிற்கும் புதிதாக திருமணம் நடக்கிறது. 

அந்த பெரியவீட்டின் அத்தனை அறைகளும் ஆட்களாலும் குழந்தைகளாலும் நிறைந்துள்ளது. ஆனால் அதையும் கடந்து அந்த வீட்டில் குளிர்ந்த இருளைப்போல தனிமை ஒவ்வொருவருடனும் விலகாத துணைபோல நிற்கிறது. 

முதலில் குடும்ப நாவல் போல தோன்றும் இந்த நாவல் கதைமாந்தர்களுக்குள் உள்ள மனப்போராட்டங்கள், தனிமை, கோபம், ஏக்கம் என்ற ஆழங்களுக்குள் செல்லச் செல்ல சிறகு விரிக்கிறது. இதில் நரேன் விஜயாவிற்கு பெரிய மனப்போராட்டங்கள் இல்லை. அவர்கள் சாதாரணத்தின் சாட்சியாக உள்ளனர். ராஜேஸ்வரி எப்போதும் பெண்குழந்தைகளை கண்டித்துக்கொண்டே இருக்கிறாள். அவருக்கு குழந்தைகள் சார்ந்த பதட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. தன் பிள்ளைகள் என்ற கவனம் மட்டுமே அதிகமாக உள்ள பாத்திரம். அதுவும் ஆண் பிள்ளைகளுக்காக அதிக கவனம் உள்ள பாத்திரம். பெண்குழந்தைகள் அதை எட்ட நின்று பார்க்கிறார்கள்.

அன்னம்மாவின் குரல் அந்த வீட்டை முழுக்க அணைத்துக்கொண்டிருக்கும் கரம் போல உள்ளது. அதே போல அஞ்சாங்கல் காலத்திலும் தனமணியின் மகள் ஜகா குளிக்க செல்வாள். சமையல் அறையில் இருந்தே பேஸ்ட் வச்சியா, சிம்மீஸ் கழட்டினியா, தண்ணிய ஊத்து… உடம்பை பாக்கறது பாவம் என்று அவள் குரல் மகளை துரத்திக்கொண்டே இருக்கும். வீடு முழுவதும் அந்தக் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்தக்குரலின் தேவை என்ன என்பதை நாவலில் இரு இடங்களில் வலுவாக உணரலாம். ஒன்று குழந்தைகள் விளையாடும் ரகசிய விளையாட்டு வரும்  அத்தியாயம். அடுத்ததாக குணா தன் அண்ணன் மனைவியான வினோவின் அறையில் நுழையும் அத்தியாயம். அன்னம்மாவின் இறப்பிற்கு பின்பே இவையெல்லாம் நடக்கின்றன. குணாவிற்கும் வினோவிற்கும் மிக இளமையிலேயே ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இருக்கிறது. ஆண் பெண் என்ன பிரக்ஞைக்கு முன்பே உண்டான அன்பு. எதிர்பாராதவிதமாக அண்ணன் மனைவியாகிவிடுகிறாள். இருவருக்குள்ளும் உள்ள காதலை அவர்கள் உணர்வதே அண்ணனுக்கான திருமணத்தில் தான். ஒரு இனிய நினைவாகவே இருந்திருக்க வேண்டிய அந்த அன்பு உடல்சம்பந்தமாக, உறவு சிக்கலாக கூட்டுக்குடும்ப சூழலே மாற்றுகிறது. கூட்டுக்குடும்பம் ஒரு ஸ்தாபனம். அதன் தலைமையான அன்னம்மாவும் இறந்த பின் பொன்னய்யாவிற்கும் அது வந்து போகும் ஒரு இடமாக மாறுகிறது. அது தனிக்குடும்பமாகாமல் இருப்பதாலேயே உறவு சிக்கல்கள் ஏற்படுகின்றன.  கணவனை இழந்து முறையற்றவள் என்ற பெயர் சுமந்த வினோ நடுவீட்டில் அமர்ந்து வீட்டை பிரிங்க என்று கத்தி ஆர்பாட்டம் செய்வது அந்த ஆத்திரத்தில் தான். கூட்டுக்குடும்பம் கூட்டுக்குடும்பமாக இல்லை என்பதே யாரும் யாருடனும் இல்லை நாவலின் பேசுபொருள். 

தனித்தனி தீவுகள் போல மிதந்து கொண்டிருக்கும் அறைகளும், மனிதர்களும் இன்று வரை உள்ள குடும்பம், உறவுகள் என்ற அமைப்பை பற்றிய அழகிய கற்பனைகளை உடைக்கிறது. ஒழுக்கம் சார்ந்த தவறை செய்தாள் என்பதற்காக தன் தங்கை உடல்வலியில் துயரப்படும் போதும் ராஜி வினோவிடமிருந்து தன்னை விலக்கிக்கொள்கிறாள்.

ஆற்று கோவிலுக்கு செல்லும் பிள்ளைகள் கரையோரமாக சற்று தொலைவு தள்ளிச்சென்று விடுகிறார்கள். அதற்காக குச்சியை எடுத்து கண்மண் தெரியாமல் பிள்ளைகளின் கால்களில் அடிக்கும் ராஜேஸ்வரி நாவல் முழுவதும் அப்படியான அம்மாவாகவே இருக்கிறார். இரு நாவல்களுமே பெண்களுக்கான கால்சங்கிலிகளை வருடிப்பார்க்கும் நாவல்கள். அஞ்சாங்கல் காலத்தில் தனம் தன்  பெண்பிள்ளைகள் தூங்கும் போது கால்களை ரிப்பனால் கட்டிவிட்டே தூங்கவைப்பாள். அது புறம் சார்ந்த தளையாக இருந்தாலும் கூட நாவலின் குறியீடு போலவே உள்ளது.

அடுத்தடுத்து பெண்குழந்தைகளை பெற்று உடல் நலிந்து கணவனின் துளி அன்பைக்கூட பெறாத தனம் பலகீனத்தின் வடிவமாக இருக்கிறாள். அவள் பலகீனத்தின் நிழல் மூத்தமகள் அனுவின் மீது பயமாக, பதட்டமாக படிகிறது. உடல் நலிவான அந்த சிறுமியை அம்மாவின் பலகீனம் மேலும் நலிவுற்றவளாக்குகிறது. மற்ற குழந்தைகளால் கேலி செய்யப்படுபவளாக இருக்கிறாள். அந்த குழந்தை கற்பனையில் தனக்கான ஒரு உலகை புனைந்து கொள்கிறாள். 

சமூகத்தில் பெண் ஏன்  இரண்டாம் பிரஜையானாள் என்ற கேள்விக்கான பதில் அனுவின் கதாப்பாத்திரத்தில் உள்ளது. ஒவ்வொரு உயிரின் இயல்பிலும் மரபிற்கும், சூழலிற்கும் சரிபாதி பங்கு உண்டு. காலகாலமாக சூழல் பெண்ணை பலகீனமாக்குகிறது. இந்த இரு நாவல்களுமே 1970,80 காலகட்டத்தின் குடும்ப அமைப்பை,பெண்களின் இயல்பை,மனஓட்டத்தை தன் னுள் கொண்டுள்ளன. இதற்கு அடுத்த காலகட்டத்தில் பெண் உலகை நோக்கிய வாசலில் அடியெடுத்து வைக்கிறாள். வெளி உலகிற்கு வந்தாலும் கூட அவள் அறிவுசார்ந்தும்,மனவிரிவு சார்ந்தும்,உளவியல் ரீதியாகவும் வீட்டிற்குள் தான் இருக்கிறாள். அவள் ஏன் இப்படி இருக்கிறாள்? உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்க இவ்வளவு குறுகியவளாக, இவ்வளவு அசமஞ்சமாக, இவ்வளவு விரிவற்றவளாக, இவ்வளவு பலகீனமாக ஏன் இருக்கிறாள் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் நாவல்கள் இவை. காலகாலமாக இந்த முல்லைச்செடி சின்ன சதுரத்தில் வளர்ந்தது. ஆனால் அதற்கென்று அன்னாந்து பார்க்க வானமும் இருந்தது என்றே நாவல் சொல்கிறது. அடுத்தத் தலைமுறையில் பொன்னி மனவலுவுடன் எழுந்து வருகிறாள். பலகீனமானவளாக இருந்தாலும் ஜகிக்கு நிறைய கனவுகள் இருக்கின்றன என்பதை நாவல் தொட்டுக்காட்டுகிறது. குழந்தை வன்முறைக்கு ஆட்பட்டு மனப்பதட்டத்தில் இருக்கும் ஜகியை பூசாரியிடம் அழைத்து செல்கிறார்கள். அதனால் அவள் பயம் அதிகரிக்கிறது. ஆனால் அக்காவுடன் பேசும் போது சட்டென்று அந்தப்பதட்டத்திலிருந்து வெளிவருவது நாவலில் முக்கியமான இடம். அவள் தன் அக்காவிடம் பேசும் போது அந்தத் தெளிவை தருவது குழந்தை பிறப்பு பற்றிய அறிதல் தான். ஜகி எப்போதும் சிந்திப்பவளாக இருக்கிறாள். நாவலில் அவளின் மனஉலகம் ஒரு தனி பாதையாக விரிகிறது. யாரும் யாருடனும் இல்லை நாவலில் சுப்புஅக்கா இதற்கு ஈடான கற்பனை உலகை கொண்டவள். ஒரு வேளை ஜகியின் மனஉலகம், ஜகியின் இளம்வயதில் சுப்பாக்கா கதைகள் மூலம் அளித்த உலகமாக இருக்கலாம். 

அனுவிற்கும் [ஜகியும் அனுவும் ஒன்றுதான்] குணா சித்தப்பாவிற்குமான உலகம் ஒரு அழகிய கனவு போன்றது. தந்தை அன்பிற்காக ஏங்கும் அவளை குணா தன் கையில் எடுத்துக்கொள்கிறான். கடவுளுக்கு கடிதம் எழுதி அனுப்ப ஒரு தபால் பெட்டி தருகிறான். அவள் அங்கிருந்தே சுயமாக எழுதுகிறாள். தனக்கு கடவுள் எழுதும் பதில்களை சிந்திக்கிறாள்.

கோபால் குடியிலேயே மூழ்கி தன்னை மறந்து கிடக்கும் கதாபாத்திரம். அதைத் தவிர நாவலில் அவனுக்கு இடமில்லை. ஆனால் அவன் மனைவியாக வரும் பேரழகியான வினோ பதினாறு வயது துடிப்பான பெண். வீடு தன் போக்கில் சலிப்பும், கோபமுமாக வாழ்ந்து, உறங்கிக்கொண்டிருக்க கணவன் திரும்பாத தன் அறையின் இருளில் வினோ உறங்காத விழிகளுடன், வீட்டின் அமைதியை உணர்ந்தபடி தினமும் விழித்திருக்கிறாள். அந்த வீடு தன் போக்கில் தன்னை கைவிடுவதாக உணர்கிறாள். தன் அழகை கண்டு  கண் விரித்த பெண்களின் முன் தன் வாழ்க்கை ஒரு கேலி பொருளாக, அனுதாபமானதாக மாறுவதை சகிக்கமுடியாமல் மெல்ல மெல்ல ஒரு விட்டேத்தியான குணம் அவளில் வெளிப்படுகிறது. தினங்கள் வாரங்களாக மாதங்களாக அதே வாழ்க்கை. மற்றவர்கள் அன்றாடத்தில் சலிப்பில் இருந்தாலும் மீண்டும் மீண்டும் கணவன் பிள்ளைகள் என்று ஓடுகையில் வெறும் சாட்சியாக நிற்கிறாள் வினோ.

வீட்டில் பெண்களுடன் குழந்தைகளுடன் இயல்பாக பழகும் குணா அனைவருக்கும் பிடித்த சித்தப்பா. பயந்த பெண்ணான அனு ‘நீ என்ன ஆகப்போற’ என்ற கேள்விக்கு ‘நான் குணா சித்தப்பா ஆகப்போறேன்’ என்று சொல்வாள். வீட்டின் உயிர்ப்பாக இருக்கக்கூடியவனும் அவனே. தங்களுடைய குழந்தைகளே என்றாலும் பெண்குழந்தைகள் என்பதால் ஒரு வார்த்தை கூட கனிந்து பேசாத ஆண்கள் உள்ள வீடு அது. ஆனால் குணா  பெண்குழந்தைகளுடன் பெண்களுடன் அன்பானவனாக இருக்கிறான். ஒருகட்டத்தில் அதுவே அவனை வீழ்த்தவும் செய்கிறது. குணா ஒரு அடர்ந்த கதாப்பாத்திரம். நேர்மறையான பாத்திரம். குழந்தைகள் மீது மிகுந்த ப்ரியம் உள்ளவன். வீட்டின் மற்ற ஆண்கள் குழந்தைகளை,பெண்களை கவனிப்பதே இல்லை. அவர்களை ஒரு பொருளாக நடத்தும் போது இவனே அவர்களை புரிந்து கொள்கிறான். வினோவுடனான உறவே அவனை பிம்பத்தை சமூகத்தின் முன் கலைத்து வீசுகிறது. அதனால் தன்னளவிலுமே குற்றவுணர்வு கொண்டவனாகிறான்.

ரேணுகாவின் இரண்டாம் கணவரான கிருஷ்ணசாமி ரேணுகாவை ஆராதிக்கும் இடமும், அவரே அவளை சாதாரண மனுஷியாக்கி அடிக்கும் இடத்திலும் உள்ள உளவியல் ரீதியான அலைவுறுத்தல்கள் கிருஷ்ணசாமியுடையது மட்டுமல்ல. அது ஒரு சமூக மனநிலை என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.

நந்தகோபாலின் இறப்பிற்கு பின் குணா ஊரை விட்டு வெளியேறுகிறான். வீடு பிரிக்கப்படுகிறது. தரையில் சின்ன சதுரத்தில் முளைத்து வளர்ந்து இரண்டு மாடிகளைத்தாண்டி நிழல் விரித்து பூத்துக்குலுங்கும் முல்லைச் செடி வெட்டப்படுவதுடன் யாரும் யாருடனும் இல்லை நாவல் முடிகிறது.

அஞ்சாங்கல் காலத்தில் சில பெயர்கள் மாற்றப்பட்டிருந்தாலும் முந்தின நாவலின் முடிவில் இருந்து இந்த நாவல் தொடங்குகிறது. இருபது வயதில் கணவனை இழந்த ரேணுகாவிலிருந்து நாவல் தொடங்குகிறது. கணவனின் இறப்பிற்கு துளிகண்ணீர் சிந்தாதவளாக அவள்  அறிமுகமாகிறாள். பாவனைகள் அற்றவள் என்ற பிம்பமே ரேணுகாவிற்கு மிகுந்த வலு சேர்க்கிறது. மற்றவர்களில் இருந்து அவளை தனித்து நிற்க வைக்கிறது. இரண்டாம் தாரமாக மறுதிருமணம் செய்து வைக்கப்படும் போதும் உடனே ஏற்றுக்கொள்கிறாள். இவளை  வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று உறவுகளும் தாயும் அவளின் மறுமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார்கள். திருமணம் முடிந்ததும் அனைவரும் காரில் ஏறி சென்று விட தனித்து நிற்கும் தனியளான வினோவே நாவல் முழுவதும் பிரகாசிக்கிறாள். அவள் எப்போதும் துணைக்காக, தொடுகைக்காக தன்னை சுருட்டி அளிப்பவளாக இருக்கிறாள். வீட்டு வேலை செய்யும் பரமுவிடமும் ஒரு குழந்தையாகவே நடந்து கொள்கிறாள். அக்கா பிள்ளைகளுடன் விளையாடும் போது தான் தோற்று அவர்களை வெற்றி பெற வைப்பவளாக இருக்கிறாள். முதல் நாவலில் இச்சையின் ரூபமாக வரும் இவள் அடுத்த நாவலில் கொள்ளும் மாற்றங்களே நாவலின் உச்ச தருணங்கள். குணாவின் பிரிவு அவளை அமைதிபடுத்துகிறது. ஒரு கருசிதைவு அவளை மாற்றிப்போடுகிறது. நாவலில் மேலோட்டமாக பார்த்தால் ரேணுகா வீழ்ச்சி அடைவதாக தோன்றும். ஆனால் அவள் உடல் வழியே கடந்து சென்று உடலில்லா ஒரு இடத்தில் மீண்டும் குணாவை அடையும் இடம் தனித்துவமானது.

பொதுவாகவே இந்த நாவலின் தொடக்கத்தில் இருந்த பெண்பாத்திரங்கள் இறுதியில் மனதளவில் சென்று சேரும் இடங்கள் முக்கியமானது. 

மீண்டும் இந்த நாவலிலும் அதே சுழற்சி. ராஜேஸ்வரியின் மகளுக்கான பிள்ளைபேறுகள்,தனமணிக்கு தன் பதின் வயது பிள்ளைகள் மீதான கண்டிப்புகள்  என்று ஒரு குடும்ப நாவலாக நகரும் நாவலின் உணர்வு நிலைகளும்,கதைமாந்தர்கள் மனதளவில் கொள்ளும் அலைவுறுத்தல்களும்,அறிதல்களும் நாவலை இலக்கிய பிரதியாக்குகிறது என்று நினைக்கிறேன். 

இருநாவல்களும் பெண்களின் உலகமான பட்டுப்புடவைகள், சமையல், மருதாணி என்று நகர்பவை என்றாலும் பெண்களின் உணர்வுநிலைகள் நாவல் முழுவதும் நாவலின் ஜீவனாய் உயிர்ப்பிக்கின்றன. 

சுமியின் மாமியாரின் மனநிலை. தன் மகனை உடமையாக்குவதற்காக தன் பேரக்குழந்தையை கருவிலேயே அழிப்பது வரை செல்கிறார். இதுவும் தனித்த பெண்ணாக மகனை வளர்த்த அவரின் இயல்பென்றே கொள்ள வேண்டிருக்கிறது.

அன்னம்மா, பாவை இருவரும் தாங்கள் மிகவும் நேசிக்கும் கணவர்களை மற்ற பெண்ணிற்கு விட்டுத்தருவதில் அதிக மனஉளச்சல்கள் அடைவதில்லை. தவமணி தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் செல்லும் போது கோபப்படுவதுக்கூட பழிவாங்கலே தவிர கணவனுடனான நேசம் அடிபட்டதால் வந்ததல்ல. மிக அன்பான தம்பதிகளில் இரண்டாம் துணை என்ற விஷயத்தை பெண்கள் தள்ளி நின்று பார்க்கிறார்கள். ஒரு பெருமூச்சுடன், அழுகையுடன் ஒதுங்கிக்கொள்வது வியப்புதான். ஆண்கள் அப்படியல்ல. மனைவியை ஏமாற்றி இரண்டாம் மணம் செய்து கொள்ளும் கிருஷ்ணசாமி கூட இரண்டாம் மனைவி மீது சந்தேகம் கொண்டு அவளை அழிக்கிறார்.

இந்த நாவல்களின் இயல்பே பெண்தன்மை என்று சொல்வேன். எதிலும் பொதிந்து கொள்ள விழையும் நாட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. நாவல் இரண்டிலும் நெடுக பதட்டம் இருந்து கொண்டே இருக்கிறது.  உதாரணமாக கருவுற்று தாய்வீட்டில் இருக்கும் சுமியை பார்க்க மாதக்கணக்கில் கணவன் வருவதில்லை. அதை எண்ணியபடி தன் தோளில் தன்னை தானே புதைத்துகொள்ளும் சுமி. அதே போல இரண்டாம் கணவனின் தோட்டத்து பெரிய வீட்டில் இருக்கும் ரேணுகா குழப்பமான ஒரு மனநிலையில் சோபாவின் மென்மைக்குள் தன்னை பொதித்துக்கொள்வாள்.

நாவலை வாசிப்பவர்கள் வினோவை, ரேணுகாவை இச்சையின் வடிவமாக காணக்கூடும். ஒருபக்கம் அது உண்மை. அவளின் இச்சை பதின்வயது அக்கா மகள் வரை பாய்கிறது. ஆனால் அந்த இச்சை அடைக்கலத்திற்கான ஒரு வாசலாகவும் இருக்கிறது. அந்த வாசல் வழி அவள் சரியானவனை அடைந்திருந்தால் அவள் பீடத்திலிருக்கும் தேவியாக இருந்திருப்பாள். அழகே உருவான அவள் கணவனால் துச்சமாக வீசப்படுகிறாள். சமூக அமைப்பின் விதிமுறைகளால் குணா விட்டுச்செல்கிறான். கடமைக்காக இரண்டாம் தாரமாக கிருஷ்ணசாமியின் தோட்டத்து வீட்டிற்கு செல்கிறாள். இரண்டாம் திருமணத்தன்று எந்த சலனமும் இல்லாமல் புடவை மாற்றும் ரேணுகா நம் மனதை தொந்தரவு செய்பவள். துறுதுறுப்பான ஒரு அழகிய பதின் வயது பெண் இருபதை எட்டுவதற்குள் விட்டேத்தியான மனநிலைக்கு வந்து நிற்கிறாள். 

அவள் அழகிடமும், இயல்பிடமும்  முழுமையாக சரணடையவும் முடியாமல், அவள் இல்லாமல் இருக்கவும் முடியாத கிருஷ்ணசாமியின் அலைகழிப்பு நாவலின் தீவிரமான பகுதி. ஒரு எல்லையில் முதல் கணவனுடைய தம்பியுடன் இவள் கொண்டிருந்த உறவு தெரிய வந்ததும் கிருஷ்ணசாமியின் அலைகழிப்பு வன்மமாக மாறுகிறது. அவர் ஏதோ ஒரு காரணத்திற்காக காத்திருந்தவர் போல அதை பிடித்துக்கொள்கிறார். 

மென்மையான ஒன்றை நம்மால் அதிக நேரம் கைகளில் வைத்திருக்க முடியாது. மனதிலும் வைத்திருக்க முடியாது. அதை கசக்கிப் பார்ப்பதையே மனம் நாடும். அவர் அவளை மனதிலும், உடலிலும் மென்குளிராகவே உணர்கிறார். அதை வெளியே எடுத்துப் போட்டுவிட முடியாத அலைகழிப்பு அவரை ஆட்டிப்படைக்கிறது. அதுவே அவரை அவளை அழிக்கச் செய்கிறது. என்றும் இச்சை என்பது இச்சை மட்டுமே. அன்பின் சாயம் பூசிக்கொண்டாலும் கூட அன்பாகாத ஒன்று வாழ்வும் ஆகாது இல்லையா?

என்றுமே அவளை காற்றென, மலரென ஏந்திக்கொள்ளும் பீடமாக இருப்பவன் மகா என்கிற குணா. அவளை இயல்பாக உணரும் பீடம் ஒன்று நழுவிப்போன வாழ்க்கையில், தன்னை அலைவுறுத்தும் உடல் தந்த அலைகளில் இருந்து மீள்பவள் மனதளவிலும் அமைதியாகிறாள். ரேணுகாவிற்கு நாவலில்  இருபத்தைந்திற்குள்ளான வயது.

இது நாவலின் தனித்தன்மையான விஷயம் . சமூகம் அஞ்சுவது இதைத்தான்.  பெண் கடந்து செல்பவள். 

என்றாலும் தன் ஆழத்தில் ஒன்றில் நிலைப்பவள். அந்த ஒன்றையே வெவ்வேறு வடிவில் காண்பவள். அவள் உடலே தான், அவள் மனமும் என்று நினைக்கிறேன். சின்னஞ்சிறு அணுவை கருவாய் உயிராக்கும் உடல் போன்றதே அவளின் மனமும். அது சமூகம் சார்ந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாதது. அந்த வகையில் ரேணுகாவை மையப்படுத்தியிருப்பதால் இந்த நாவல் தனித்து நிற்கிறது.

அதே போல ஜகி கதாப்பாத்திரம். பயந்த சுபாவம் உள்ள அவளின் இயல்பு நாவலின் படபடப்பை அதிகப்படுத்துகிறது. அவளின் சிந்தனை ஓட்டங்கள், கேள்விகள் நாவலை தரையிலிருந்து பெயர்த்து சிறகு கொள்ள வைக்கிறது. நாவலில் சிறகு என்ற உவமை  எங்கெல்லாம் சொல்லப்படுகிறது என்பதே ஒரு அழகான விஷயம். சிறகிற்கான ஏக்கமும் நாவலின் அடியில் உள்ளது.  மேற்கு தொடர்ச்சி மலை புரண்டு படுத்திருக்கும் கர்ப்பிணி என்பது போன்று நாவல் முழுவதும் வரும் உவமைகள் வாசிப்பவருக்கு வாசிப்பு இன்பத்தை அளிக்கின்றன. ஆறு, மலை, சாலை, வானம் என்று எதை எடுத்தாலும் உமாமகேஸ்வரியால் வெவ்வேறு உவமைகளை, உணர்வு நிலைகளை அதற்கு அளிக்க முடிக்கிறது. இந்த சொல்லல் முறை நாவலை கலை பிரதியாக்குகிறது. கதைக்களம் மிகவும் எல்லைக்கு உட்பட்டது. விதிவிலக்குகளை தவிர கதை மாந்தரின் இயல்புகளுமே எளிமையானது. தரையில் நடக்கும் மயில் தோகை விரிப்பதை போன்று சொல்லல் முறையும், உவமைகளும் நிறம் காட்டுகின்றன. பெரும்பாலும் அனைத்து அத்தியாயங்களிலும் மொழியின், காட்சியின், உவமையின் சிலிர்ப்பு இருக்கிறது. இந்த தன்மை ஒட்டுமொத்த பிரதியையும் எளிய கதை என்ற எண்ணத்தை தள்ளி வைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது. ஒரு சிலை செதுக்க செதுக்க நுட்பம் கொள்வதைப்போல சொல்லல் முறை கதையின் தன்மையை, கதையின் ஆழத்தை, மாந்தரின் இயல்புகளை ஆழம் கொள்ள வைக்கிறது.

பெண்மை ஒரு நெகிழ்த்தன்மை. அது ஒரு renewal form. அதன் மீது சமூகம் அச்சடிக்கும் கற்பு ,சோகம் போன்றவற்றை ரேணுகா கதாப்பாத்திரம் இயல்பாக கடந்து செல்கிறது. அவள் உணர்வதெல்லாம் தனிமை. 

பெண் பாவனை என்று சொல்லப்படுபவற்றை… பெண்குணாதிசியங்கள் என்றும் பெண்இயல்பென்றும் நாவல் உணர்த்துகிறது. நாவலில் பெண்கள் ஒரே உணர்வு நிலைகளில் தொடர்ந்து இருப்பதில்லை. உதாரணத்திற்கு சுமி ஒரு குழந்தை பிறப்பிற்குப்பின் தன்னுள் உணர்ந்த காதலின் அலைகழிப்புகளை விட்டு முற்றிலுமாக விலகி செல்கிறாள். அது பாவனை அல்ல விலக்கம். அதே போல ரேணுகா ‘ஒரு குழந்தையின் விரல் போதும் இத்தனையிலும் இருந்து நான் விடுபட’ என்று நினைப்பாள். 

அந்த வீட்டில் முல்லை கொடி படர்ந்து மாடிகளை தொட்டு நிழல் விரிக்கும். அது வெட்டப்படும். மறுபடி பற்றிப்படறி மாடி ஏறி வளரும்.  நான்கு பக்கமும் அடைக்கப்பட்ட இடத்திலும் விண்ணை நோக்கிய ஒரு எத்தனிப்பு இருக்கவே செய்கிறது. அது வலுத்த அடிமரம் கொண்ட மரம் அல்ல. மெல்லிய கொடி. என்றாலும் அது கைநீட்டி தொடுவதும் வெளி.

இந்த நாவிலில் பொன்னய்யா அன்னம்மாள் இறப்புப் பகுதி முக்கியமானது. அன்னம்மாள் தன் பேரப்பிள்ளைகளை, மகன்களை தொட்டுத்தொட்டு சாவின் வாயிலில் கனிகிறார். ஆனால் பொன்னய்யா ஊர் உலகம் சுற்றியும், இன்னொரு பெண்ணை நாடியும் ,பொருள் ஈட்டியும் கூட சலிப்பில் இறக்கிறார். குறைந்தபட்சம் உடல்அளவிலான நிறைவை கூட எட்ட முடியாத துரதிஸ்ட்டவசமான வாழ்வு. இந்த தம்பதிகளின் வாழ்வில் பொன்னய்யாவைவிட அன்னம்மாள் தொடும் உயரம் அதிகம் என்று நினைக்கிறேன். அன்னம்மாவின் ஆளுமையும் அப்படிதான். பொன்னய்யா வெளியில் செல்லும் போது தன் வீட்டின் விஸ்தாரத்தை, காரை பெருமிதமாக கொள்கிறார். அன்னம்மா சந்தைக்கு நடந்து செல்கிறார். திரும்பும் வழியெங்கும் மனிதர்களை கவனிக்கிறார். ஒரு வார்த்தையேனும் பேசாமல் அவரால் விலக முடிவதில்லை. அந்தத்தெருவில் இருந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்ததா என்று கேட்டு பார்க்க செல்கிறார். இருவரின் இயல்புகளுக்குள்ளும் எத்தனை வித்தியாசம்.

இவர்களை அடுத்த நாவலில் உள்ள கிருஷ்ணசாமி, பாவை, ரேணுகா உறவில் வைத்துப் பார்க்கலாம். கிருஷ்ணசாமியின் கள்ளம் அவரை அலைகழிக்கிறது. அவர் பாவைக்கும் நேர்மையாக இல்லை. ரேணுகாவிற்கும் நேர்மையாக இல்லை. முறைப்படி இருவரையும் திருமணம் புரிந்தவர் என்றாலும் கூட. பாவை கணவர் மறுமணம் செய்து கொள்ளும் போது உணர்வுகளால் திணறினாலும் எதோ ஒரு புள்ளியில் முழுமையாக ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் கிருஷ்ணசாமியால் ரேணுகாவை முழுமையாக ஏற்கமுடிவதில்லை.

 உடைமையாகாத ஒன்றை உடைமையாக்கும் முயற்சியில் சமூகம் என்ற அமைப்பின் உருவாக்கத்தின் வேர் இருக்கிறது. அவள் கடந்து செல்பவள் என்பதலேயே இத்தனை காப்புகளா? சரி, தவறுகளை தாண்டி அவள் இயல்பென்ன? ரேணுகா கதாப்பாத்திரத்தின் மூலம் நாவலில் இந்த கேள்விகள் கூர் கொள்கின்றன. 

முதலில் அழகானவளாக, ஆவேசமானவளாக, அன்பானவளாக இருக்கும் அவள், வாழ்க்கையின் போக்கில் நடப்பதை ஏற்றுக்கொள்கிறாள். பயந்தவள் என்றாலும் கூட வாழ்க்கையை எதிர்கொள்ள தயங்காதவளாக இருக்கிறாள். உதாரணத்திற்கு மகாவுடனான உறவை பற்றி கிருஷ்ணசாமி கேட்கும் போது ஆமாம் என்று சொல்லிவிட்டு ஓடிவிடுகிறாள். 

அஞ்சாங்கல் விளையாட்டில் முதலில் கற்களை தரையில் கலைத்துவீச வேண்டும். ஒரு கல்லை எடுத்து தூக்கிப்போட்டு கிழே இருக்கும் ஒரு கல்லை எடுக்க வேண்டும். நான்கு கற்களை எடுத்தப்பின் அடுத்ததாக இரண்டு கற்கள்,மூன்று கற்கள்,நான்கு கற்கள். அந்த ஒரு கல் மேலே சென்று கைக்கு திரும்பிக்கொண்ட இருக்கும். இறுதியாக அனைத்து கற்களையும் அந்தரத்தில் தூக்கிப்போட்டு புறங்கையில் விழும் கற்களை தட்டிவிட்டு ஒரு கல்லை வீசிப்பிடிக்க வேண்டும். ஆட்டம் முடிந்தது. இதற்கிடையில் மேலே சென்ற அந்த ஒற்றை கல்லோ, கீழே எடுத்த கற்களோ தவறினால் அடுத்தக்கைக்கு ஆட்டம் சென்றுவிடும். 

இந்த நாவல்களில் நடப்பதும் கிட்ட தட்ட இதே போன்ற விளையாட்டு தான். தன்னை வீசி, தன்னை பிடித்து, தன்னை தவறவிட்டு, தன்னை தானே ஆடி முடித்து தன்னுடைய ஒன்றை தனக்குள் மிச்சம் வைத்துக்கொள்ள துடிக்கும் ஆட்டம்.

ரேணுகா எப்போதுமே எதையாவது, யாரையாவது தஞ்சம் அடைவதற்கு நினைக்கிறாள். அந்த முல்லை கொடி போல. கிடைக்கும் கொம்பை பற்றிக்கொள்கிறாள். அந்த கொம்பே அவளை வீழ்த்தினாலும் அவளுக்கு அது தேவையாக இருக்கிறது. கொடியின் இயல்பு அது.

பெண் இயல்பை, பெண்மையின் ஆதார குணத்தை மையமாகக் கொண்டு பல பெண்களின் வழியே அதை சிதறடித்து காட்டுகிறது நாவல். ஆங்காரம், வன்மம், இச்சை, கருணை, சுயநலம், காதல் என்று அத்தனை குணங்களும் வெளிப்படும் பெண்கள் நிறைந்த நாவல்கள் இவை. குடும்பத்தை, பெண்களை, சமையல் அறையை மையமாக கொண்ட இந்த இரு நாவல்களிலும் பெண்கள் பற்றிய விதந்தோதல்கள் இல்லை. அவர்களின் உடல் சார்ந்த சிரமங்களும், உளம் சார்ந்த எதிர்பார்ப்புகளும், அன்றாடத்தில் உழலும் அவர்களின் வாழ்க்கையுமே நாவலாகியிருக்கிறது.

இத்தனை போற்றிகளுக்கும், பழித்தல்களுக்குப் பிறகு பெண்மை என்பது எத்தகையது?

உண்மையிலேயே பெண்ணிற்கென்று மர்மம் உண்டா…

அலைநதியின் மேல் மலர்ந்து இதழ்விரிக்கும் அவள் ஊன்றியிருக்கும் வெளி எது?

இயற்கை தன்னுடைய எதை பெண் என்று ஆக்கியிருக்கிறது?

பெண் என்பவள் கருப்பையா, உடலா,  விழைவா? போன்ற கேள்விகள் உள்ள வீடும் வீடு சார்ந்த ஒரு திணையாக இந்தநாவலை சொல்லலாம்.  நாவல் நிகழும் காலகட்டத்தில் தமிழ்நிலத்தில், உயர்நடுத்தர பொருளாதாரம் கொண்ட வாழ்வில், பெண்களுக்கான நிலம் வீடு மட்டுமே. அந்த வீட்டை மிகநுட்பமாக அகம் புறம் சார்ந்து விரித்துக் காட்டும் நாவல் என்ற வகையில் இந்த இருநாவல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

எழுத்தாளர் உமாமகேஸ்வரிக்கு என் அன்பும் வணக்கங்களும்.








Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

முதல் கனி