Skip to main content

Posts

Showing posts with the label அனுபவப்பதிவு

மலர்வு

 ஆறாம் வகுப்பு காலாண்டு விடுமுறையில் என்னுடைய அத்தை மகள் கமலவேணி எனக்கு முதன்முதலாக சைக்கிள் ஓட்டுவதற்கு பழக்கிக்கொடுத்தாள். நீச்சலும். நீச்சல் அடிக்க கடைசி வரை வரவே இல்லை. ஒரு முறை அவ்வா பிடித்து கிணற்றில் தள்ளிவிட்டும் முழுகிவிட்டேன். அத்தை சட்டென்று தூக்கிவிட்டார். அதற்கு பிறகு சுரை குடுக்கையை இடுப்பில் கட்டிக்கொண்டு ஜாலியாக கிணற்றில் மிதந்து கொண்டிருப்பேன். பத்து வயதிற்கு மேல் தான் கிணற்று தண்ணீருக்கு பழகினேன் . தம்பி தங்கை நீச்சல் பழகி என்னை கேலி செய்தாலும் கண்டு கொள்ளாமல் சுரைகுடுக்கையுடன் அந்த பெரிய கிணற்றுக்குள் மணிகணக்கில் சுற்றி வருவேன். சின்னய்யா என்னை முதுகில் அமர்த்திக் கொண்டு நீச்சல் அடிப்பார். 'இப்போ அப்படியே தண்ணிக்குள்ள தள்றேன் பாரு' என்றாலும் பயப்பட மாட்டேன். நான் விழக்கூடாது என்று அவர் அடிக்கடி ஒருகையால் முதுகில் அமர்ந்திருக்கும் என்னை சரியாக தள்ளி தள்ளி அமர வைப்பார்.  யாராலும் எனக்கு நீச்சல் கற்று தர முடியவில்லை. இறுதியாக அய்யா கழுத்து வரை தண்ணீர் நிற்கும் படியில் நின்று கொண்டு தண்ணீருக்குள் கைகளை நீட்டியிருப்பார். கைகளில் படுத்தபடி நீச்சல் பழக வேண்டும். கை...

அன்னை அமர்ந்திருந்த பீடம்

 மழையுடன் கார்த்திகை தொடங்கிவிட்டது. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கறேன் என்று கண்ணன் சொல்கிறான்.  எனக்கு கார்த்திகை மிகவும் பிடித்த மாதம். அடை மழையும் பின் வெயிலுமாக மாறி மாறி வானம் விளையாடும் மாதம்.  இந்த மாதம் ஊர் முழுவதும் நடைபறும் பயிர்பொங்கலால் ஊரே மகிழ்ச்சியாக இருக்கும். சிறு வயதிலிருந்தே இந்த மாதம் மழையுடன் பயிர் பொங்கலுடன் மனதில் பதிந்துவிட்டது.  இதை பற்றி நிறைய முறை எழுதியிருக்கிறேன். என் முதல் கதையே அந்தக் களம் சார்ந்தது தான்.  முதலில் ஊர் காவல் தெய்வமான மாரியம்மன் வழிபாடு. ஒவ்வொரு வீட்டிலும் தேவியை அழைப்பது. சூரியன் கொல்லிமலைக்குப்பின் மறைந்த பின் சாமி கும்பிடுவோம். பயிர் நடவு முடிந்து நடைபெறும் வழிபாடு. நன்றி சொல்லவும் நட்ட பயிரை காக்கவும் ஒரு சேர நிகழும் வழிபாடும் கொண்டாட்டமும்.  தானியத்தின் மீது அன்னையை அமரசெய்து வழிபடுவது இந்த வழிபாட்டின் அடிப்படை. காலையில் வழிபட்ட வேப்பம் குழைகளை வாசல் நிலையில் கட்டியப்பின் தேவி அமர்ந்திருந்த பீடத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். முனைவர் வேதாசலம் அவர்களின் நூல்களை மிக மெதுவாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். வரிக்...

ஔியை மறந்து விட்ட பயிர்

 காலையில் சூரியனை பார்ப்பதற்காக மாடிக்கு சென்றேன். உதிக்க நேரமிருந்தது. கீழே வந்து தி.ஜாவின் 'சிலிர்ப்பு' சிறுகதை வாசித்தேன். தி.ஜா வை தேடுவது என்பது ஒரு கன்றின் தவிப்பு போல.  ஒரு மாதத்திற்கு முன்பு துளசி செடியை வாடிவிட்டது. ஆழஊன்றிய வேரால் பிடுங்கும் போது மண் புரண்டு குலைந்தது. அடிமண் மேலே வந்தது. நல்லது தான்.  புரண்ட மண் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் பக்குவமாகியிருந்தது. தம்பி கொடுத்த குட்டி துளசி செடிகளை நடுவதற்காக மீண்டும் மாடிக்கு சென்றேன். வேர் பிடித்த சின்னஞ்சிறு செடிகள். குட்டி காக்கை இறகு ஒன்று, செடிகளுடன் காற்றில் சிலிப்பிக்கொண்டு கூடவே வந்தது. நேற்று தோழி ஒருத்தியுடன் பேசும்போது அவள் Invitro fertilization சரிவராமல் உடலும் மனமும் சோர்வுற்றிருப்பது தெரிந்தது. பதினொன்றாம் வகுப்பில் pure science group எடுத்து படிக்கத் தொடங்கும் போதே உடல் ஒரு பேசுபொருளாக இயல்பாக ஆகிவிட்டது. உடல் சார்ந்த பேச்சு வீட்டில் வந்த போது நான் அவசரக்குடுக்கை தனமாக பேச முயன்றபோது அய்யா நாசுக்காக தடுத்தார்.  பின்னர் 'இதை பத்தியெல்லாம் நீ படிக்கற இடத்துல பேசினா போதும்...' என்றார்....

பிள்ளையார்

ஒரு சமூகமாக நம் குழந்தைகளை நாம் என்னவாக மாற்றிக்கொண்டிருக்கிறோம் என்று அதிகாலையில் இருந்து யோசனையாக இருந்தது. அதிகாலை 3.50 திலிருந்து உறக்கம் வரவில்லை. நான் கல்வியியல் கல்லூரி முடித்து வந்ததிலிருந்து சிறுவர்களை கவனித்து வருகிறேன்.  அவர்கள் ஏன் சிறுவர்களாக இல்லை? என்பது என்னை அடிக்கடி தொந்தரவு செய்கிறது. சூட்டிகை,குறும்பு,விஷமத்தனங்களுடன் இருக்கும் சிறுவர்கள் மனதிற்கு நெருக்கமானவர்கள். ஆனால் இன்று சிறுவர்கள் பதின்வயதுடையவர்கள் போலவோ,இளைஞர்கள் போலவோ நடந்து கொள்வதை பார்ப்பது கோபத்தை ஏற்படுத்துகிறது. [பூமர் என்பது சொல்லப்படும் காரணப்பொருளால் நல்ல சொல்] . ஊடகங்களை நாம் காரணம் சொல்கிறோம். அது ஒரு காரணம் தான். தனக்கு எதிரே கண்முன்னே காண்பவற்றை தான் அவர்கள்  பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் கண்முன்னால் பார்க்கும் சகமனிதர்கள் பற்றிய எந்த பிரக்ஞையும் அற்ற இளைஞர்களும் மூத்தவர்களும் அவர்களுக்கு முன் மாதிரிகளாக இருக்கிறார்கள். இன்று அதிகாலை மூன்றே முக்காலுக்கு விசில் சத்தமும், பாட்டு கருவியில் பாட்டு சத்தமும் கேட்டு சட்டென்று கண்விழித்தேன். எதிர் வீட்டில் வீடுகட்டுகிறார்கள். கட்டுமான பொருட்கள்...

அலைபேசி இல்லாத நாட்கள்

 கிட்டதட்ட இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு என்னுடைய அலைபேசி கீழே விழுந்து செயலிழந்து விட்டது. அதை சரி செய்வது விரயம். அதை ஆறு ஆண்டுகளாக பயன்படுத்துகிறேன். அதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. இந்த அலைபேசியில் தான் நான்கு புத்தகங்கள் எழுதி, தொகுத்து, பிழைபார்த்து வெளியாகியிருக்கின்றன.  நினைவகம் அதிகம் உள்ள அலைபேசி வாங்க வேண்டும் என்ற எச்சரிக்கை எனக்கு.  Word document ல் நிறைய கோப்புகள் காணாமல் போய்விட்டன. முக்கியமான புகைப்படங்கள் அழிந்துவிட்டன. பட்ஜெட்டிற்குள் அலைபேசி,கிராமத்திற்கு கொரியர் சிக்கல், அதனால் திருப்பிவிடுதல் விடுதல்,என்னுடைய சின்ன கவனக்குறைவு,கொரியர் பாயின் சிறு ஈகோ என்று தாமதமாகி ஒருவழியாக நேற்று வந்து சேர்ந்தது. இந்த இருபத்தைந்து நாட்களில் கடைசி பத்து நாட்கள் அம்மாவின் அலைபேசியை பயன்படுத்தினேன். திருவிழா வாரத்தில் காலையில் கொஞ்ச நேரம் வைத்திருந்தப்பின் அலைபேசி அம்மாவிடம் சென்றுவிடும். தாயும் பிள்ளையும் என்றாலும் அலைபேசியும் வாட்ஸ்ஆப்பும் வேறுவேறு ... நான் அலைபேசியில் எழுதி பழகி வழக்கமாகிவிட்டதால் காகிதமும் பேனாவும் மனமும் இணைந்து வரவில்லை. தினமும்  எதையாவது ...

அகம் என்னும் காடு

 எனக்கு தமிழ் புத்தாண்டு மனதிற்கு நெருக்கமானது. நிலத்தின் வசந்தம்.  அதிகாலையில் தினமும் வாசலில் கோலமிடும் போது கிருஷ்ணர் பாதங்களை படிகளுக்கு கீழே மனிதகால்கள்படாத இடத்தில் வரையும் போது கிருஷ்ணா ரா என்று மனதிற்குள் சொல்வது வழக்கம். பதிமூன்று வயதிலிருந்து சடங்கிற்காக சொல்லத்தொடங்கி, வழக்கமாகி, கவனமில்லாமல் அனிச்சை செயலாகி, இப்போது அனிச்சையான கவனமாகி உள்ளது. கிருஷ்ணா ரா என்று எதை அழைக்கிறேன்? சிறுவயதில் அப்படி அழைக்கும் போது அது வெறும் வார்த்தை. பின்னால் தவழும் கண்ணனின் சிலை மனதில் இருந்தது.  பின் வளர்ந்து உரலை இழுக்கும் தாமோதரன். கதைகளுக்குள் பித்தாக இருந்த நாட்களில் உலகுண்ட பெருவாயன். அதன் பின்னால் தொலைகாட்சிகளில் பார்த்த ராதாகிருஷ்ணர்கள். கல்லூரி நாட்களில் முதன்முதலாக திருப்பாவை படித்த நாட்களில் ஆண்டாளின் மோகனன். பின் வெண்முரசின் கிருஷ்ணன்..குறிப்பாக  நீலம் நாவலின் கிருஷ்ணன்.  நீலம் வாசிக்கும் போது ஓவியர் சண்முகவேலின் கிருஷ்ணர்கள். தினமும் ஒரு கிருஷ்ணன். அழகான அதிகாலைகள் அவை. சற்று பெரிய மென்நீல பூவின் மீது பூக்கள் உதிர சிவந்த குட்டிப்பாதங்கள். நான் அன்றாடம் வாசல...

அரிதாரம்

 ஊரில் ஒரு மாதமாக பொன்னர் சங்கர் கூத்து நடக்கிறது. சாயுங்காலமானால் ஒலிப்பெருக்கியின் ஆதிக்கம் துவங்கிவிடும். இன்னொரு பக்கம் பள்ளிகளில் ஆண்டுவிழாக்கள். நான் எங்கள் ஊர் பள்ளியில் தற்காலிக ஆசியராக பணி செய்த போது பணியில் சேர்ந்த ஆண்டின் ஆண்டுவிழாவி்ன் போது விழித்துக்கொண்டு நின்றேன். அது வரையான தன்னம்பிக்கை மிக்க ஆசிரியர் தலைகுனியும் நேரம். நடனமாட தெரியாது..ஒப்பனை செய்யதெரியாது . 'புது டீச்சருக்கு லிப்ஸ்டிக் கூட போட்டுவிட தெரியல," என்று வாயில் கை வைத்து பிள்ளைகள் என்று சிரித்தன. உண்மையிலேயே பெண்ணாய் கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது. " ஏம்மா...இந்த புடவைங்களையாவது பிள்ளைகளுக்கு கட்டி விடேன்..." என்று சகஆசிரியைகள் சலித்துக்கொண்டார்கள். கல்வியியல் கல்லூரி படிக்கும் போது இருபத்துநான்கு வயதில் முதன்முதலாக சேலை கட்டிப்பழகினேன். இன்று வரை எனக்கு புடவை வசதியான உடை இல்லை. நான் தவிர்க்கும் உடையாகவே இருக்கிறது. 'புடவை ஒரு கன்வீனியன்ட்டான டிரஸ் இல்லை' என்பது என் கருத்து. கவுன், மிடி, பாண்ட் டீசர்ட் ,தாவணி,சுடிதார் என்று கடந்து வந்ததில் இன்றுள்ள அனார்கலிகுர்தா தான் எனக்கு மிகவு...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...

கிருபா விருது

இது எனக்கான முதல் விருது. எப்போதும் போல எதையும் ஏற்கும் முதல் தயக்கம் இதற்கும் இருந்தது. தமிழினி என்ற பெயர் தந்த நம்பிக்கையில் சரி என்று சொன்னேன். சென்னைக்கு இரண்டாவது முறையாக செல்கிறேன். என்னுடைய முதல் தொகுப்பான சக்யை வெளியீட்டு விழாவிற்கு முதல் முறை சென்றேன். அதே இக்சா மையம். இதுவரையான என்னுடைய ஐந்துபுத்தகங்களும் இங்கு தான் வெளியிடப்பட்டன. அந்த மையத்தின் வெளியில் கத்தரிக்கப்பட்டு நிற்கும் ஆலமரம் என் மனதிற்கு இனிய நினைவு. எங்கு நின்றாலும் அது பெருவிருட்சம். கன்னிமாரா நூலகமும் இந்த ஆலமரமும் ஏதோ ஒரு வகையில் தன் கீழ் அமர்ந்தவர்களை மேல் எழ செய்திருப்பவை. நானும் தங்கையும் தங்கையின் கணவர் குமார் மற்றும் சென்னையில் இருக்கும் உறவுக்காரத்தம்பி மோகனபாபுவும் சென்றோம். எழுத்தாளர் பெருமாள் முருகன் குமாரின் கல்லூரி பேராசிரியர். இருவருக்கும் இனிய ஒரு சந்திப்பு. மனம் ஆழத்தில் இருந்ததால் கண்ணாடியில் இறுக்கமான என் முகம் எனக்கே அன்னியமாக இருந்தது. ப்ரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் எனக்குள்ளே காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தன. சென்னை மேலும் அந்தக்காட்களை தீவிரப்படுத்தியது. நான் அதை தள்ளிக்கொண்டு புறத்துடன் இணைய ...

கண்ணாடி இல்லாத நாளின் நினைவுகள்

 'இமைகணத்தில்' ஒரு சம்பவத்தை கிட்டி [கிருஷ்ணவிகா] நடத்திவிட்டாள். அவளுடைய மூத்தகூட்டாளியான தனுஷ் ஆவணியாவட்டத்திற்காக பள்ளிக்கூடத்தை 'கட் ' அடித்துவிட்டு ஜாலியாக தங்கை பப்லுவுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிட்டி நான்கு நாட்களுக்கு ஊருக்கு சென்று திரும்பியிருந்தாள். அவளைக் கண்டதும் ,"கிட்டு.."என்று அவன் ஓடி வரவும், இவள் அவனைக் அவனைக் கண்ட குஷியில் தாறுமாறாக என் முகத்தில் அடித்துக் குதித்தாள். நான்கு நாட்கள் பிரிவிற்கு இத்தனை வலிமை இருக்கும் என்று நினைக்கவில்லை. என் கண் கண்ணாடியின் சட்டம் உடைந்து கீழே விழுந்ததை கண்டுகொள்ளாமல் இரண்டும் குதித்து விளையாடத் தொடங்கியது. என் கண்கள் புகைமூட்டமாகி பார்வை கலங்க திகைத்து அமர்ந்திருந்தேன். சிறிது நேரம் கூட கண்ணாடியில்லாது  ஜீவிக்க முடியாத ஜீவன். மணி காலை பதினொன்று. இனி துறையூர் வரை செல்வது சாத்தியமில்லை. குழந்தைகளும் மூத்தவர்களுமாக குடும்பம் அப்படி. முதல் நாளே 'திட்டம்' போட வேண்டும்.  புதிதாக நடைபயின்ற குழந்தையும் ஊர்சுற்றும் பப்பியும் ஒன்று என்று பழமொழி உண்டு. [நாய் என்று சொல்ல மனம் துணியவில்லை]. நாள் முழுதும் நடந...

மரணமும் ஆசிரியர்களும்

மனதிற்கு ஆசிரியரின் துணை எவ்வகையிலேனும் அவசியம். அதுவும் இழப்பின் காலத்தில் ஆசிரியருடன் எவ்வகையிலேனும் அருகில் இருக்க வேண்டும். அதை நான் மீண்டும் மீண்டும் நடைமுறையில் உணர்கிறேன்.  ஜூன் மாதம் சின்னய்யாவிற்கு [சித்தப்பா] உடல் நிலை மோசமானது. ஜூலை துவக்கத்தில் இறந்தார். மிக மெதுவாக படிப்படியான புற்றுநோய் மரணம்.  மாடியில் அவரை பார்த்துவிட்டு கீழிறங்கும் ஒவ்வொரு முறையும் வாழ்க்கை பற்றிய விசாரணையை தொடங்கி மனம் தொந்தரவு செய்துகொண்டிருந்தது. நீலி கட்டுரைக்காக அம்பையின் 'காட்டில் ஒரு மான்' தொகுப்பை வாசித்து முடித்துவிட்டு மாடியேறுவது தான் கடைசியாக உயிருடன் சின்னய்யாவை பார்ப்பது என்று நினைக்கவில்லை. அன்று இரவு அவர் இறந்தார். ஏற்கனவே நீலிக்காக எழுதிய கட்டுரைகளை அவரிடம் சொல்லும் போது புன்னகைப்பார். வலி இருந்தாலும் நான் சொல்லும் கதைகளையும், கட்டுரைகளையும் கேட்டு தலையாட்டிக்கொள்வார்.  அவருக்கு எழுத்தாளர்கள் ஜெயகாந்தன்,கல்கி,வாசந்தி,சுஜாதாவை பிடிக்கும்.  அம்பை சொல்கிற அளவுக்கா நாங்கள் இருக்கிறோம் என்று ஒரு முறை கேட்டார். அப்போது அவருக்கு புற்றுநோய் வயிற்றில் பரவத்தொடங்கி நுரையீரலில்...

2022 _ மீண்டும் மீண்டும்;1

                    மீண்டும் மீண்டும் எப்போதும் ஒரு ஆண்டின் இறுதியில் என்ன செய்தோம் என்று நினைத்துப்பார்க்கும் போது புத்தகம் வாசித்தது தான் அந்த ஆண்டின் பொருள் உள்ள செயலாகத் தோன்றும். இந்த ஆண்டு என்ன வாசித்திருக்கறேன் என்பதும் , என்ன எழுதியிருக்கிறேன் என்பது முக்கியமானது. முன்பெல்லாம் டைரியின் பின்புறம் எழுதி வைப்பேன். இப்பொழுது அந்த நல்லப்பழக்கத்தை விட்டுவிட்டேன். மீண்டும் தொடங்க வேண்டும். எப்பொழுதும் போல வாசிக்காத ஒரு நாள் இல்லை என்பது நிறைவளிக்கிறது. எழுத்தாளர் அஜிதனின் முதல் நாவலான மைத்ரியை என் பிறந்தநாளன்று வாசித்தேன் என்பது சட்டென்று நினைவிற்கு வருகிறது. அன்றே நாவல் பற்றி பேரெழிலின் சங்கமங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். அது புரவி இதழில் வெளியாகியது. ஒரு இளம் எழுத்தாளரின் முதல் நாவல் வெளியான உடனே வாசிப்பது இது தான் முதல் முறை. அதுவே மனதிற்கு பரவசமாக இருந்தது. அதுவுமில்லாமல் அஜிதனை விஷ்ணுபுரம் விழாவில் சந்தித்து நாவல் பற்றி பேசியதும் நிறைவளிக்கிறது. புத்தம் புதிதாக எழுதுபவர்களை பார்ப்பதே உற்சாகமளிக்கும் என்று அன்று உணர்ந...

என் வயலையும் காத்துக்கொள்க

 ஊரில் கார்த்திகை மாதம் மிக உற்சாகமான மாதம். ஐப்பசியில் நடவு வேலைகள் முடித்து பயிர் தலைதூக்கும் காலம். ஊரை சுற்றி கொல்லிமலை அடிவாரத்தை எங்கெங்கு காணினும் சீரகசம்பா நெல் குத்துகள். பறிந்து நட்ட பயிர்கள் தண்ணீர் தேங்கிய வயல்களில் வேர்பிடிக்க தொடங்கும் காலம். நிலமே குழந்தையாகி நிற்பதைப்போல இருக்கும். நுண்ணுணர்வுள்ள விவசாயி கண்கலங்குவார். உற்சாகமான விவசாயி தொடை தட்டி சிரித்துக் கொள்ளலாம்.  கார்த்திகை முதல் ஞாயிறு ஒவ்வொரு வீட்டிலும் மாரியம்மன் வழிபாட்டுடன் கார்த்திகையின் பயிர்பொங்கல் தொடங்கும். இந்த மாதம் முழுக்க ஊரே மணக்கும். வயல்களை சுற்றி எத்தனை எத்தனை சிறு தெய்வங்கள்.  அத்தனைக்கும் பொங்கலும் சேவல்களும் கிடாய்களும் பலிகொடுக்கப்படும். பலிகொடுக்காதவர்களின்  சர்க்கரைப்பொங்கலுக்காக தெய்வங்கள் புன்னகைக்கும் காலம்.  அதுவும் இல்லை என்றால் ஒரு சூடம் ,பத்தி. பயிரை காக்கவும், பாம்பு போன்ற விஷ உயர்களிடமிருந்து தங்கள் உயிரை காக்கவும் வைக்கப்படும் பொங்கல் வழிபாடு.  தீபாவளி வெடிகளால் என்னை பதட்டப்படுத்தி மிரட்டி சிரிக்கும் விழா. கார்த்திகை தீபம் எனக்கு மிகப் பிடித்தவிழா....