Skip to main content

அலைபேசி இல்லாத நாட்கள்

 கிட்டதட்ட இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு என்னுடைய அலைபேசி கீழே விழுந்து செயலிழந்து விட்டது. அதை சரி செய்வது விரயம். அதை ஆறு ஆண்டுகளாக பயன்படுத்துகிறேன். அதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. இந்த அலைபேசியில் தான் நான்கு புத்தகங்கள் எழுதி, தொகுத்து, பிழைபார்த்து வெளியாகியிருக்கின்றன.



 நினைவகம் அதிகம் உள்ள அலைபேசி வாங்க வேண்டும் என்ற எச்சரிக்கை எனக்கு.  Word document ல் நிறைய கோப்புகள் காணாமல் போய்விட்டன. முக்கியமான புகைப்படங்கள் அழிந்துவிட்டன. பட்ஜெட்டிற்குள் அலைபேசி,கிராமத்திற்கு கொரியர் சிக்கல், அதனால் திருப்பிவிடுதல் விடுதல்,என்னுடைய சின்ன கவனக்குறைவு,கொரியர் பாயின் சிறு ஈகோ என்று தாமதமாகி ஒருவழியாக நேற்று வந்து சேர்ந்தது.

இந்த இருபத்தைந்து நாட்களில் கடைசி பத்து நாட்கள் அம்மாவின் அலைபேசியை பயன்படுத்தினேன். திருவிழா வாரத்தில் காலையில் கொஞ்ச நேரம் வைத்திருந்தப்பின் அலைபேசி அம்மாவிடம் சென்றுவிடும். தாயும் பிள்ளையும் என்றாலும் அலைபேசியும் வாட்ஸ்ஆப்பும் வேறுவேறு ...

நான் அலைபேசியில் எழுதி பழகி வழக்கமாகிவிட்டதால் காகிதமும் பேனாவும் மனமும் இணைந்து வரவில்லை. தினமும்  எதையாவது எழுதுவது வழக்கம். பிரசுரமாவதற்காக அல்ல. எழுதத் தோன்றுவதை எழுதிப் பார்ப்பேன். எழுது அதுவே எழுத்தின் ரகசியம் என்ற சு.ராவின் வார்த்தைகளை மனம் கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்டது. அந்த வார்த்தை விதையின் மீது விழுந்த முதல் துளி தண்ணீர். 

அம்மாவின் அலைபேசியில் காவியம் நாவலை தொடர்ந்து வாசித்தேன். வம்சவிருட்சம் ,புத்தம்வீடு,பதேர் பாஞ்சாலி நாலல்களை வாசித்துக்கொண்டிருந்தேன்.

திருவிழா நாட்களில் காவியமும் ,ஸ்டேட்டஸ் போடுவதும் முடிந்ததும் அலைபேசி அடுத்த நாள் காலை தான் கைகளுக்குக் கிடைக்கும்.

திருவிழா நாட்களின் சுவாரசியமாக கமல்ஹாசனின் Thug life இருந்தது. கோவிலிற்கு சென்ற போது தம்பி ஒருவன் முத்தமழை பாடல் வைரல் ஆவதை பற்றி சொன்னான். 

என்னா பாட்டுக்கா? என்றான். அவனை நம்பி அலைபேசி கடன் வாங்கி பாட்டை கேட்டேன். அவ்வப்போது பின்வீட்டிலிருந்து தெருவிலிருந்து அந்தப்பாடல் காற்றில் மிதந்து வந்தது.

மறுநாள் பாட்டு எப்டி என்றான். 

இந்த பாட்டு பசங்களுக்கு பிடிக்குமாயிருக்கும் என்றேன்.

இல்லக்கா செம வைரல் என்றான்.

பசங்களுக்குள்ள வைரலாகும் என்றேன்.

இல்லக்கா பொதுவாவே வைரல் தான் என்றான்.

இல்லல்ல...பசங்க வைரலாக்கறது பொண்ணுங்களுக்கு பிடிக்கனுமா என்ன? என்று கேட்டேன்.

அவனுக்கு புரியவில்லை. நல்ல வேளை பூமர் என்று சொல்லவில்லை. வீட்டிற்குள் நுழையும் போதே அந்தப்பாடல் சத்தமாகவைத்து கேட்கப்பட்டுக் கொண்டிருந்தது. பெருமூச்சு விட்டபடி மாடியேறினேன். திரைப்படத்தில் அந்தப்பாடல் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கலாம். 

முதல் ஒரு வாரம் எழுதாமல் இயல்பாக இருந்தேன். ஊரில் திருவிழா ஆயத்தங்கள் கலகலப்புகள் இருந்தன. பின்பு அன்றாடத்தில் ஒரு தத்தளிப்பு. அப்படி ஒன்றும் முக்கியமாக நாவலோ சிறுகதையோ எழுதி இடையில் நிற்கவில்லை. ஆனாலும் எழுது என்று எதுவுவோ உந்துகிறது.

இனி அன்றாடம் இயல்பாகும்...







Comments

Popular posts from this blog

டமருகத்தின் தாளமானவள்

 திரியை மட்டும் திரும்பத்திரும்ப மாற்றி..  ஒவ்வொரு முறையும் எரியும் சுடர் ஒன்றே தானா.. ?  வேறு.. வேறா..                             _  சம்யுக்தா மாயா நம் கவிதை மரபில் காதலுக்கும் பக்திக்கும் இடையில் ஈசலின் சிறகு போன்ற மெல்லிய தடுப்பே உள்ளது. அது இருபக்கமும் ஊடுருவும் சவ்வு. பக்தி அதிகமானால் காதல். காதல் அதிகமானால் பக்தி. இந்த மாற்றம் புதிரானது.  அதே போல நாயகன் நாயகி ஃபாவம். அரங்கனை நோக்கி பாடப்பட்ட பாடல்களில்  நாயகி ஃபாவம் மேலோங்கி உள்ளது. ஈசனுக்கு பித்தா..பிறைசூடா என்று சக்ய ஃபாவம் இயல்பாக வருகிறது.  ஈசனை காதலனாக ஃபாவிப்பது என்பது முன்னால் நின்று அவனை பாடுவது அல்ல. அவன் பாதியாகவே ஆவது. ருத்ரனின் பகுதி என்பது அத்தனை எளிதல்ல என்பதாலோ என்னவோ பெண்களில் திலகவதி மட்டுமே பாடியிருக்கிறார்.  காரைக்காலம்மையால் அவனை விளையாட்டு பிள்ளையாக்கி ஆட வைக்க முடிகிறது. ( பொதுவாகவே ஈசன் மீது பாடப்பட்ட பாடல்களில் நாயக நாயகி ஃபாவம் குறைவு)  பெண்கவிகளில் ருத்ரனுக்கு இணையான காளியை சம்யுக்தாவின...

லில்லி மலர் பூக்கும் நிலம்

  ( முனைவர் யோ . ஞான சந்திர ஜாண்சன் அவர்களின் கிறித்தவக்காப்பியங்கள் நூலை   முன் வைத்து … ) காப்பியம் என்பதும் காவியம் என்பதும் ஒரே பொருள்படுபவை . வடமொழியில் காவியம் . தமிழில் காப்பியம் . தமிழில்   1. ஐம்பெருங்காப்பியங்கள் 2. ஐஞ்சிறுகாப்பியங்கள் 3 . சமயகாப்பியங்கள் என்ற வகைமைகள் உள்ளன . சமய காப்பியங்களுள் கிருத்துவ காப்பியங்கள் வருகின்றன . சைவ வைணவ காப்பியங்கள் பக்தி காலகட்டத்தை சேர்ந்தவை . இதன் காலம் தோராயமாக பத்தாம் நூற்றாண்டிலிருந்து பனிரெண்டாம் நூற்றாண்டு வரை.  கிருத்தவக்காப்பியங்களின் காலம் கிருத்தவர்கள் நம் நாட்டிற்குள் வந்த காலகட்டத்தில் துவங்குகிறது . இந்தியாவில் முதன்முதலாக அச்சான மொழி தமிழ் . இயேசு சபை துறவியான ஆன்ட்ரிக் அடிகளார் கோவாவில் தமிழில் உலோக அச்சுகள் உருவாக்கி பயன்படுத்தி தமிழ் அச்சு வரலாற்றை தொடங்கி வைக்கிறார் . 1570 களில் இந்த தொடக்கம் நிகழ்ந்து விட்டது . கொல்லத்தில் முதல் நூலான தம்பிரான் வணக்கம் அச்சடிக்கப்படுகிறது . தமிழில் அச்சு நூலாக வந்த முதல் நூல் ஒரு மொழி ...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...