திரியை மட்டும்
திரும்பத்திரும்ப மாற்றி..
ஒவ்வொரு முறையும்
எரியும் சுடர்
ஒன்றே தானா.. ?
வேறு.. வேறா..
_ சம்யுக்தா மாயா
நம் கவிதை மரபில் காதலுக்கும் பக்திக்கும் இடையில் ஈசலின் சிறகு போன்ற மெல்லிய தடுப்பே உள்ளது. அது இருபக்கமும் ஊடுருவும் சவ்வு. பக்தி அதிகமானால் காதல். காதல் அதிகமானால் பக்தி. இந்த மாற்றம் புதிரானது.
அதே போல நாயகன் நாயகி ஃபாவம். அரங்கனை நோக்கி பாடப்பட்ட பாடல்களில் நாயகி ஃபாவம் மேலோங்கி உள்ளது. ஈசனுக்கு பித்தா..பிறைசூடா என்று சக்ய ஃபாவம் இயல்பாக வருகிறது.
ஈசனை காதலனாக ஃபாவிப்பது என்பது முன்னால் நின்று அவனை பாடுவது அல்ல. அவன் பாதியாகவே ஆவது. ருத்ரனின் பகுதி என்பது அத்தனை எளிதல்ல என்பதாலோ என்னவோ பெண்களில் திலகவதி மட்டுமே பாடியிருக்கிறார். காரைக்காலம்மையால் அவனை விளையாட்டு பிள்ளையாக்கி ஆட வைக்க முடிகிறது. ( பொதுவாகவே ஈசன் மீது பாடப்பட்ட பாடல்களில் நாயக நாயகி ஃபாவம் குறைவு)
பெண்கவிகளில் ருத்ரனுக்கு இணையான காளியை சம்யுக்தாவின் கவிதைகளில் உணர்கிறேன். இவரின் ஆரம்ப கவிதைகளில் உள்ள காதலிற்கு மனிதன் போதாமலாகும் போது 'காசி கவிதைகளில்' ஈசன் வந்து அமர்கிறான். தன் முப்புரி வேலுடனும், தியானத்தில் மூடியகண்களுடனும்.உலகம்மையை விட அவள் அம்சமான காளி தான் எப்போதும் இலக்கியத்தின் பொருளாகிறாள். சம்யுக்தாவின் கவிதைகளில் அதை உணரமுடிகிறது. அது ஒரு ருத்ர நிலை.
அன்னை, அன்னை
ஆடுங்கூத்தை நாடச்செய்தாயென்னை.
காலத் தொடு நிர்மூலம் படுமூ வுலகும் ..
என்று பாரதி அந்த நிலையை ஊழிக் கூத்து என்ற கவிதையில் பாடுகிறார். யாதுமாகி நின்றாய்.. எங்கும் நிறைந்தாய் என்று அந்த நிலையை சொல்கிறார். அதே நிலையை சம்யுக்தா திரிசூல முனைகளில் நிற்கும் காசி என்று எழுதுகிறார். இவை எல்லாம் சேர்ந்த ஒரு சன்னத நிலையை பெரும்பாலான ஈசன் கவிதைகளில் உணரமுடியும். இமயத்தின் பனி முகடுகளையும், சுடர்ந்தெழும் அக்னியையும் ஈசனாக காண்பதும் அவ்வாறான அதீத நிலையே.
இந்த உச்ச நிலையாலும், அதன் தன்மையாலும் நம் கவிதைகளில் பகவதியும் காளியும் வந்து நிற்கிறார்கள்.
கருங்கல் தூணில் சாய்ந்து
பகவதியின் அம்பலத்து
தாழ்வாரத்தினின்று அமையும்
சரம் சரமான விளக்குகளை நோக்கியபடி
நீ ஏங்கி நிற்பது ஏனோ….?!
கொஞ்சம் கவனித்துப் பாரேன்.
என் மனதின் பிரகாரங்களை..
அதில்..
பொன்சுடர் அசைய எரியும் தீபங்களை..
அத்தனை தீபங்களின்
மொத்தமான
ஒரே
மகா வெளிச்சம்
நீதானே…!
கவிமனம் ஆரம்ப கவிதைகளின் உணர்வெழுச்சியிலிருந்து மேலே சென்று இந்தக்கவிதையில் எரியும் சுடர் ஒன்றே தானா என்று காலாதிதமான ஒன்றை சட்டென்று ஒரு முறை தொடுகிறது. ஆனாலும் அது கனவு போல காலமயக்கமான கண்டடைதல்.
மலைச்சிகர உச்சியில்
உயர்ந்த மரக்கிளைகளை
ஊடுருவும் வாடைக் காற்றில்…
மென்சோகத்துடன் பூத்திருக்கும்
ஜெகரண்டா மலர்களின் தனிமை…
புகை போன்ற கால்களால்
மேகங்களுக்கிடையில் நடக்கிறது.
கரடுமுரடான மர வேர்களில்
தும்பிக்கையை ஊன்றி…
துயர் தாங்கி ஒற்றையாய் நிற்கிறது…
காட்டுத்தீயில் களிற்றைப் பறிகொடுத்த
தேற்றுவாரற்ற பெண் யானை.
அரவமற்ற இரவில்…
கரிய முதுகின் மீது
மௌனமாய் உதிர்கின்றன
ஊதா நிற மலர்கள்.
இந்தக்கவிதையில் உள்ள பிரிவுணர்வே அவ்வபோது நிலத்திலிருந்து கவி மனதை பிரித்து விண்ணை நோக்கி வீசுகிறது.
ஒன்றும் அறிகிலேன் யான்.
நானோ….
சிவனின் வலிய கை – இறுகப் பற்றியிருக்கும்
பேரானந்தத்தில்
எதையும் உணராது மயங்கியிருக்கும்
இடை குறுகிய சிறு உடுக்கை அன்றோ....!!
என்று இவ்வுலகை இயக்கும் ஆதாரமான விசையை உணர்கிறது. அது ஈசல் சிறகின் இருபுறமும் மாறி மாறி மயங்கும் ஒன்று. ஒருபக்கம் உன்னதமும், மறுபக்கம் சன்னதம் போல எழும் மானுட உணர்வும் இணைந்த கவிதைகள் இவை.
அது சம்யுக்தா சொல்வது போல பிடாரனின் கை நழுவிய கட்டுவிரியன். அந்த கட்டுவிரியனை கண்டுகொண்டவள் யட்சி.
இங்கு கவிதானுபவத்தையும் நாவல் வாசிப்பையும் இணைக்கலாமா என்ற ஐயம் வருகிறது.
ஆனாலும் லா. ச. ரா வின் அபிதா நாவலில் கரடிமலையின் உச்சியில் கருவேலங்காட்டில் திருவேலநாதராக அன்னைக்காக காத்திருக்கும் தாதையின் தாபத்தை உணர்ந்ததை போல ,அன்னையின் தாபத்தை தொட்டு செல்லும் சில தருணங்களை சம்யுக்தாவின் கவிதைகளில் உணரமுடிகிறது.
இலந்தை மரம் எத்தனை எத்தனை முட்களை உடையது. அதன் வழி செல்லும் காற்றாக உள்ள காதல் எத்தகையது என்ற வியப்பை சம்யுக்தாவின் கவிதைகளில் உணரமுடிகிறது.
மலையுச்சி இலந்தை மரத்தினூடே
நுழைந்து செல்லும் மென்காற்று உன் ஸ்பரிசம்
பாரதி சொல்லும் தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா என்ற வரிக்கு நிகரான வரி இது.
காலாகாலமாக தமிழ் கவிதை காதலுக்கும் பக்திக்கும் இடையே தன் ஈசல் இறகினால் ,தாபத்தின் முட்களை இந்த ஊடாட்டம் மூலமே கடக்க முயல்கிறது. அந்த ஊடாட்டத்தின் வெம்மை உள்ள கவிதைகள் இவை.
கவிஞர் குமரகுருபரன் நினைவு விருது பெறும் கவிஞர் சம்யுக்தா மாயாவிற்கு வாழ்த்துகளும் அன்பும்.
(https://kamaladeviwrites.blogspot.com/2024/06/blog-post_22.html_ சம்யுக்தா மாயா கவிதைகள் பற்றி முன்பு எழுதிய வாசிப்பனுபவம்)

Comments
Post a Comment