Posts

Showing posts from March, 2023

அகமும் புறமும் 16

Image
         2023 மார்ச் 1 வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை. காலத்தால் சிதையாதது கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து, வேனில் ஆயின் மணி நிறங்கொள்ளும் யாறு அணிந்தன்று நின் ஊரே, பசப்பு அணிந்தனவால் மகிழ்ந,என் கண்ணே ஐங்குறுநூறு: 45 பாடியவர்: ஓரம்போகியார் திணை : மருதம் தோழி கூற்று பாடல். [தலைவி கூற்றை தோழி கூறுவது. பரத்தை இல்லம் சென்று நீண்ட காலம் கழித்து திரும்பும் தலைவனுக்கு தோழி உரைத்தது] காதலில் எப்போதும் ஒருவித பித்து நிலை உண்டு. உற்றவரைத் தவிர அது பலநேரங்களில் மற்றவருக்கு  புரிவதில்லை. எங்கள் வீட்டிற்கு மூன்றாவது வீட்டில் உள்ள அம்மாவின் பெயர் பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. தங்கவேலு பெண்டாட்டி என்றே அழைப்பார்கள். அவரின் மகன் வயதில் உள்ள நாங்கள் விஜயகுமார்அம்மா என்று சொல்வோம்.  விவரம் தெரிந்ததில் இருந்தே நான் தங்கவேலுவை பார்த்ததில்லை. அவர் பக்கத்து ஊரில் எங்கோ வேறொரு அம்மாவுடன் வாழ்ந்தார். விஜயகுமார்அம்மா தன்  கணவரின் பரம்பரை சொத்தான ஒரு ஏக்கர்நிலத்தின் விவசாய  வேலைகள் முழுவதையும் தனி ஒருவராகவே செய்வார். மற்றநாட்களில் கூலி வேலைக்கு செல்வார்.  யாரிடமும் காரணம் இல்லாமல் நின்று பேசுபவரில்லை. இள

அகமும் புறமும் : 13

Image
                        பெருந்துணை குய் குரல் மலிந்த கொழுந்துவை அடிசில் இரவலர்த் தடுத்த வாயில் புரவலர் கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர் கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி அல்லி உணவின்  மனைவியொடு இனிய புல்லென்றனையால்_வளம்  கெழு திருநகர் வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும் முனித்தலைப் புதல்வர் தந்தை தனித் தலைப் பெருங்காடு முன்னியபின்னே புறநானூறு : 250 திணை : பொதுவியல் துறை :கையறு நிலை பாடியவர்: தாயங்கண்ணியார் குடும்பம்,ஊர்,நாடு என்ற எந்த அமைப்பும் தலைவனை மையமாகக் கொண்டது. மரபுப்படி உலகின் தலைவன் இறைவன். இறை என்ற சொல்  தந்தையையும், தலைவர்களையும் குறிக்கிறது. இதில் ஆண் பெண் கடந்து யார் தலைமை கொள்கிறார்களோ அவர்களையும் வைக்கலாம். அவர்களின் இழப்பு அந்த அமைப்பை நிலைகுலைய வைக்கிறது. நாம் சமூகமாக வாழத்தொடங்கியதிலிருந்தே தலைவன் என்பது முக்கியமான கருதுகோல். அதேப்போல காட்டிலும் அனைத்து மிருகங்களும் தங்களுக்கான தலைமையின் பின்தான் இயங்குகின்றன. இறைவனையும், தலைவையும் தந்தை என்றும் சொல்கிறோம்.  இந்தப்பாடலில் ஒரு வள்ளலின் இழப்பு கையறுநிலையில் பாடப்பட்டுள்ளது. இது பொதுவியல் திணையில் கீழ் வரும் பாடல். அனைத்

அகமும் புறமும் 12

Image
          மணிஒலி தயங்குக படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் நெடுநீர் அவல பகுவாய்த் தேரை சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, வெஞ் சின அரவின் பை அணந்தன்ன  தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ, திரி மருப்பு இரலை தௌ அறல் பருகிக் காமர் துணையொடு ஏமுற வதிய, காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித் தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப ஊர்மதி வலவ தேரே சீர் மிகுபு நம் வயிற் புரிந்த கொள்கை அம் மா அரிவையைத் துன்னுகம் விரைந்தே அகநானூறு 154 பாடியவர்: பொதும்பில் புல்லாளங்கண்ணியார் திணை :முல்லைத்திணை வினைமுடித்து திரும்பும் தலைவன் தேர்ப்பாகனிடம் சொல்லியது. இது தலைவன் கூற்று பாடல். மிகச்சிறிய விஷயங்களில் தலைவன் உணரும் மெல்லுணர்வுகளே தலைவன் கூற்றுப்பாடல்களை அழகாக்குகின்றன. சங்கக்கவிதைகளில் தலைவி கூற்று பாடல்கள் பேசப்பட்ட அளவு தலைவன் கூற்றுப்பாடல்கள் பேசப்படவில்லை என்று நினைக்கிறேன். தலைவி தன் காதலை ஆழமானது அகலமானது பெரிது என்று எப்படியோ சொல்லிவிடுகிறாள். அவளைவிட அவள் தோழி இன்னும் அழகாக எடுத்துரைக்கிறாள். ஆனால் தல

அகமும் புறமும் 11

Image
          2022   டிசம்பர்   16     வாசகசாலை இணைய இதழில் வெளியான சிறுகதை.                       போர்க்களத்தின் பூ மணி துணர்ந்தன்ன மாக் குரல் நொச்சி போது விரி பல் மரனுள்ளும் சிறந்த காதல் நல் மரம் நீ; நிழற்றிசினே கடியுடை வியல் நகர்க் காண்வரப் பொலிந்த தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி; காப்புடைப் புரிசை புக்கு மாறு அழித்தலின், ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை பீடு கெழு சென்னிக் கிழமையும் நினதே. புறநானூறு: 272 பாடியவர்: மோசி சாத்தனார் திணை: நொச்சி துறை : செருவிடை வீழ்தல் மலர் பூத்த மரத்திற்கான பாடல் இது. நொச்சி போருக்கான மலர். போரில் வென்றவர்களோ தோற்றவர்களோ சூடிய மலர் அல்ல. போருக்கு செல்லும் போது போர்வீரர்களால் சூடப்பட்ட மலர். எனில் அது எத்தனைக்கு ப்ரியமான மலராக இருந்திருக்கக் கூடும்.  அதனால்தான் மோசிக்கிரனார் ‘காதல் நன்மரம் நீ..’ என்கிறார். இன்று தெய்வங்களும் பெண்களும்  மலர்களை சூடிக்கொள்கிறார்கள். அன்று மலரானது ஆண்களுக்குமானதாக  இருந்திருக்கிறது. போருக்கு செல்லக்கூடிய போர்வீரர்கள் ஒரு மலரை சூடுவார்கள்  என்றால் மலர் என்பது அங்கு ஒரு அடையாளம். வென்றெழும் வேட்கையின் ,ஆற்றலின் மலர் நொச்சி எனக்கொள்ள

அகமும் புறமும் 10

Image
      2022 டிசம்பர்  1 வாசகசாலை இணையஇதழில்  வெளியான கட்டுரை   அரிதினும் அரிதே நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே குறுந்தொகை: 3 எழுதியவர்: தேவகுலத்தார்  [ஆசிரியர் அறியப்பட முடியாத பாடல்களுக்கு இப்படியான குறிப்பு இருக்கலாம்]  திணை: குறிஞ்சித்திணை தலைவி தோழிக்கு சொல்லியது . தலைவியின் நேரடிக்கூற்றாக வரும் குறுந்தொகைப்பாடல்கள் மிகவும் உணர்வுபூர்வமானவை என்ற கருத்து எனக்குண்டு. எளிமையான சொற்களில் அறிந்த உவமையில் சட்டென்று தலையில் அடித்ததைப்போல நம்மை பொறி கலங்கச்செய்யும் உணர்வுகளை சொல்லிவிடும் தன்மை இப்பாடல்களுக்கு உண்டு. அந்த வகைப்பாடல்களில் மிக முக்கியமான பாடல் இது. இதுக்கும் மேல் என்னத்தை சொல்லிவிட முடியும் எனும்படி எதுவும் எஞ்சிநிற்காத முழுமை இப்பாடலில் உண்டு. சிறு ஐயமோ,தயக்கமோ அற்ற உறுதி நிலையில் இருப்பவை. மேலும் தலைவி கூற்று என்றாலுமே பாடியவர் பெயர் இல்லாதது இன்னொரு வசதி. பாடியவர் பெண்தான் என்றும்  நினைத்துக்கொள்ளலாம். இந்த உணர்வுடன் வாழும் யாரோ ஒருவரை காணும் போது ஆணாகவும் இருக்கலாம் என்று ம

உறவு

Image
 [ஜனவரி தமிழ்வெளி இதழில் வெளியான சிறுகதை]                               உறவு தொழுவின் அனத்தல் வீட்டை அமிழ்த்திக் கொண்டிருந்தது. வீட்டில் யார்கண்ணிலும் உறக்கம் கூடவில்லை. ஒவ்வொருவராக ஆள் மாற்றி ஆள் தொழுவை எட்டிப்பார்ப்பதும், சற்று நேரம் நிற்பதும் பின் மனசாகாமல் வீட்டிற்குள் வந்து படுப்பதுமாக இருந்தார்கள். தொழுவின் வெளிக்கம்பியில் சீமெண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  இருளின் கருமைக்குள் அகன்ற  மஞ்சள் செவ்வந்தியாய் விளக்கின் வெளிச்சம்  மலர்ந்திருந்தது. கிழவி ஆயாசத்தோடு மெல்ல எழுந்து நின்று சேலையின் பின்கொசுவத்தை நன்றாக சொருகிவிட்டுக் கொண்டாள். இருளில் கண்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை. தூக்குக்கம்பியில் ஒரு பொட்டு வெளிச்சமாக லாந்தர் விளக்கு மினுங்கிக்கொண்டிருந்தது.  தூணை ஆதரவாக பிடித்தபடி லாந்தர்விளக்கின் பக்கவாட்டில் இருந்த திருகாணியை திருகி திரியை தூண்டினாள். தீபம் விசுக்கென்று துள்ளி எழுந்து ஒளிர்ந்தது. தீபத்தின் ஔிப்பட்டு வழவழப்பான மரத்துண் மினுங்கி கண்களுக்கு துலங்கி வந்தது. பின் அவள் கண்களுக்கு மெல்ல மெல்ல முற்றம் விரிந்தது. கால்களை எடுத்து மெதுவாக முற்றத்தில் வைத்தாள். சிலீரென

அகமும் புறமும் : 15

Image
       16 பிப்ரவரி 2023 வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை பொய்க்காத அருள் ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம் பலநாள் பயின்று பலரொடு செல்லினும் தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ அணிபூ ணணிந்த யானை யியறேர் அதியமான் பரிசில் பெறூஉங் காலம் நீட்டினு நீட்டா தாயினும் யானைதன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் ததுவது பொய்யாகாதே அருந்தே மாந்த நெஞ்சம் வருந்த வேண்டாம் வாழ்கவன் றாளே புறநானூறு: 101 பாடியவர் : ஔவையார் திணை: பாடாண் திணை துறை :பரிசில் கடா நிலை பரிசில் அளிக்க தாமதமான ஒரு சமயத்தில் அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்திறம் பற்றி ஔவையார் பாடிய பாடல் இது.  ‘யானை தன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் ததுவது பொய்யாகாதே’ எவ்வளவு பெரிய நம்பிக்கை! கையகத் ததுவது பொய்யாகாதே…யானை தன்னுடைய கொம்புகளிடையே வைத்த உணவு அதன் வயிற்றுக்கு பொய்யாவதில்லை. அது போல அதியனின் பரிசில் பொய்யாவதில்லை என்று ஔவை பாடுகிறாள். கொடைத்தன்மை என்பதை அளவுக்கு அதிகமாக இருப்பதால் கொடுக்கப்படுவது  என்று நினைக்கிறோம். தானத்திற்கும் கொடைக்கும் வேறுபாடு உண்டு என்று நினைக்கிறேன். தானம் என்பது புண்ணியம் என்ற நிறைவை எதிர்பார்த்து அளிக்கப்பட