Skip to main content

அகமும் புறமும் : 15

       16 பிப்ரவரி 2023 வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை


பொய்க்காத அருள்

ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம்

பலநாள் பயின்று பலரொடு செல்லினும்

தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ

அணிபூ ணணிந்த யானை யியறேர்

அதியமான் பரிசில் பெறூஉங் காலம்

நீட்டினு நீட்டா தாயினும் யானைதன்

கோட்டிடை வைத்த கவளம் போலக்

கையகத் ததுவது பொய்யாகாதே

அருந்தே மாந்த நெஞ்சம்

வருந்த வேண்டாம் வாழ்கவன் றாளே


புறநானூறு: 101

பாடியவர் : ஔவையார்

திணை: பாடாண் திணை

துறை :பரிசில் கடா நிலை


பரிசில் அளிக்க தாமதமான ஒரு சமயத்தில் அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்திறம் பற்றி ஔவையார் பாடிய பாடல் இது. 

‘யானை தன் கோட்டிடை வைத்த கவளம் போலக்

கையகத் ததுவது பொய்யாகாதே’



எவ்வளவு பெரிய நம்பிக்கை! கையகத் ததுவது பொய்யாகாதே…யானை தன்னுடைய கொம்புகளிடையே வைத்த உணவு அதன் வயிற்றுக்கு பொய்யாவதில்லை. அது போல அதியனின் பரிசில் பொய்யாவதில்லை என்று ஔவை பாடுகிறாள். கொடைத்தன்மை என்பதை அளவுக்கு அதிகமாக இருப்பதால் கொடுக்கப்படுவது  என்று நினைக்கிறோம். தானத்திற்கும் கொடைக்கும் வேறுபாடு உண்டு என்று நினைக்கிறேன். தானம் என்பது புண்ணியம் என்ற நிறைவை எதிர்பார்த்து அளிக்கப்படுவது. கொடை என்பது மனதில், கைகளில் தானே நிகழ்வது. எண்ணி அளிப்பது தானம். எடுத்தளிப்பது கொடை. இந்த வள்ளல் தன்மை செல்வத்தில் மட்டும் இல்லை. அறிவை கொடையாக அளிக்கும் வள்ளல்கள் உண்டு. தாங்கள் செய்யும் தொழிலை வள்ளல் தன்மையுடன் செய்பவர்கள் உண்டு. 

இந்தப்பாடலை வாசிக்கும் போது மருத்துவர் வெங்கட்ராமனை நினைத்துக் கொண்டேன். அவர் துறையூரை சேர்ந்தவர். இப்பொழுது அவருக்கு எழுபது வயதிற்கும் கூடுதலாக இருக்கும். 

புதுப்பிக்கப்பட்ட பெரிய வீடுதான்  தற்போது அவரது மருத்துவமனை. என்னுடைய பள்ளி வயதில் அவரை முதலில் பார்த்தேன். துறையூரில் உருவாகிக் கொண்டிருந்த பெரிய மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அவர். வெள்ளை நிற சஃபாரி அணிந்திருந்தார். சிறப்பு மருத்துவர்கள் உள்ள அந்த மருத்துவமனை துறையூரின் முக்கிய சாலையில் இருந்தது.

மீண்டும் நான் கல்லூரியில் படிக்கும் போது அவரின் மருத்துவமனைக்கு சென்றேன். புதுப்பிக்கப்பட்ட பழைய காலத்து பெரிய கட்டு வீடு அது. வெளியே பெஞ்சில் வரிசையாக கிராமத்து ஆட்கள்.

இடைப்பட்ட ஆண்டுகளில் அவரை வாழ்க்கை புரட்டிப்போட்டிருந்தது. மூளை புற்றுநோயால் கல்லூரியில் படிக்கும் மகனை இழந்திருந்தார். அந்த இழப்பு அவரை வேறொருவராக மாற்றியிருந்தது. 

இந்த மருத்துவமனையில் அவர் மருத்துவம் பார்க்க யாரிடமும் கட்டணம் பெறுவதில்லை. அதனால் தான் கும்பல் வருகிறது என்று சொல்ல முடியாது. தர்மவான் மருத்துவம் பார்த்தால் சரியாகும் என்ற கிராமத்துக்காரர்களின் நம்பிக்கை. அந்த இடம் துறையூரை சுற்றியுள்ள கிராமத்து மக்களால் நிரம்பியிருக்கும். சிறப்பு  மருத்துவரிடம் சென்றாலும் அனைத்து முடிவுகளையும் இவரிடம் ஒரு முறை காண்பிக்கும் வழக்கம் எனக்கும் உண்டு. அவர் சிரித்தபடி ‘ஒன்றுமில்லை சரியாகிவிடும்’ என்று சொன்னால் மனதில் தைரியம் உண்டாகும். அவரிடம் மருத்துவம் பார்க்க வருபவர்கள் பாதி. இது போல மற்ற மருத்துவரிடம் சென்ற முடிவுகளை காண்பித்து அவரிடம் செல்லலாமா? என்று கேட்க வருபவர்கள் மீதி. அவர் எத்தனை கும்பலிலும் ஒருவரையும் பார்க்காமல்  திருப்பி அனுப்புவதில்லை. கொரானா காலத்திலும் இதையே கடைபிடித்தார்.

அவரின் சொற்களும், சிரிப்பும்,உரிமையான பேச்சும், அவர் முன்னே உடலும் மனமும் குலைந்து அமர்ந்திருக்கும் நோயாளிகளுக்கு அவர் அளிக்கும் கொடைகள். அவர் முன்னால் விவசாயிகள் குழந்தைகள் போல அமர்ந்திருப்பதைக் காணலாம். கிராமத்து பெண்கள் தயக்கம் இன்றி தங்களின் மாதாந்திர சிக்கல்களை சொல்வதை கேட்க முடியும். மெனோபாஸ் பற்றி அவர்களுக்கு புரியவைத்து சத்தான ஆகாரங்களை பற்றி சொல்வதை கேட்டிருக்கிறேன். இளம் பிள்ளைகளின் சிக்கல்களை அவர்கள் அம்மாக்கள் கூறும் போது தயங்கி அமர்ந்திருக்கும் பிள்ளைகளிடம் , “ கொழந்த ஒன்னு தெரிஞ்சுக்கோ…நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிடனும்,” என்று மெல்லத் தொடங்குவார். நானுமே  அவரிடம் தான் முதன்முதலாக தயக்கம் இன்றி, “சைக்கிள் சரியா இருக்கே டாக்டர்..அப்பறம் ஏன் வலிப்பிரச்சனைகள் வருது,” என்று கல்லூரி வயதில் கேட்டேன். ‘அப்பிடி கேளுடிம்மா,” என்று  தோளில் வேகமாக தட்டினார். அங்கு தனியான அறைகள் இல்லை. மிகப்பெரிய கூடத்தை பச்சை திரைசீலைகளால் தடுப்பாக வைத்திருப்பார்கள். தடுப்புகளுக்கு மையமாக உள்ள இடத்தில் அனைவரும் பார்க்கும் படி அவருடைய மேசை நாற்காலி இருக்கும்.



பெரும்பாலும் அவருக்கு கிராமத்துக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை  தெரியும். அவர்கள்  தொடர்ந்து அவரிடம் வருபவர்கள். அவர் MD படித்த ஆங்கில மருத்துவர். ஆனால் சரளமான கிராமத்து தமிழில் பேசுவார். என்ன மருந்து என்று நோயாளியிடம் விரித்து சொல்வார். நோயாளிகளை தொட்டும், திட்டியும், கண்டித்தும், கொஞ்சியும்  பேசக்கூடியவர்.

இவ்வளவு பெரிய பொட்டு எதுக்கு என்று அவரின் ராமத்தை ஒரு குழந்தை கேட்டால், அதற்கு ஒரு குட்டிக்கதை சொல்லியபடி அதன் நோயை கண்டுகொள்ளக்கூடியவர். அவரின் எதிரே மகனின் பெரிய புகைப்படம் மாட்டப்பட்டிருக்கும். முன்னால் அமர்ந்திருப்பவர்களை அவர் அப்படித்தான் பார்க்கிறாரோ  என்னவோ! 

என் சோர்வான நாட்களில்  ஒருநாள் அவரின் மருத்துவமனையின் காத்திருப்பு திண்ணையின்  பெஞ்சில் அமர்ந்திருந்தேன். மனதில் அத்தனை சஞ்சலங்களுடன் அந்த பெரிய கடைவீதியை பார்த்துக் கொண்டிருந்தேன். மருத்துவமனை முன்பு தன்  காரை நிறுத்திவிட்டு ஊதாநிற ட்ராக் பாண்டும், அதே மென்நிற டீசர்ட்டும் அணிந்து சிரிப்புடன் ஒட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கினார். காரை காண்டு சென்று பின்னால்  நிறுத்துவதற்காக ஒரு இளைஞன் பக்கத்துக்கடையில் இருந்து ஓடி வருகிறார். அவர் சிரித்தபடி இளைஞன் முதுகில் தட்டிவிட்டு படியேறி வருகிறார். பெஞ்சுகளில் அமர்ந்திருக்கும் பலர் எழுந்து கொள்கிறார்கள். அவரின் அத்தனை ஸ்டைலான  வருகையைப் பார்த்து புன்னகைத்தபடி அமர்ந்திருந்தேன். போகிற போக்கில் என் முதுகில் தட்டி “நிமிர்ந்து ஒக்காந்து பழகனும் இடியட்,” என்று கடந்து சென்றார். 

பல வேலைகளால் அன்று இரவு மிகவும் பிந்திவிட்டது. எங்கள் ஊருக்கு கடைசி பேருந்திற்காக அம்மாவும் நானும் காத்திருந்தோம். 

முப்பது வயது இருக்கக்கூடிய இரண்டு கிராமத்து  இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“டெஸ்ட் ரிசல்ட் வந்திருச்சு.. அந்த டாக்டர்க்கிட்ட அப்பாயிண்மெண்ட் வாங்கிட்டு நாளைக்கு வான்னு அனுப்பிட்டாங்க,”

“நாளைக்கா,”

“நம்ம ஊர்லருந்து மறுபடி வரனுமே. ..வயல்ல நடவு வேற இருக்கு. அதான் வெங்கட்ராமன் சாரை பாக்கலான்னு போனேன். வெளிக்கதவை சாத்திக்கிட்டு இருந்தாங்க. கையில ரிப்போர்ட்டை பாத்தவரு என்ன இந்த நேரத்துலன்னு கேட்டு கதவை திறக்க சொன்னாரு. வராண்டா லைட்டை போட்டு ரிப்பார்ட்டை பாத்தாரு. படிச்ச பையன் தானே..இதெல்லாம் தெரியாதா..லிக்கர்  கம்மியா எடுக்கனும்..எந்த ஊருன்னு கேட்டுக்கிட்டே உள்ள கூட்டிட்டுப்போய் இருவது நிமிசத்துக்கு மேல பேசினாரு. டேப்லெட்ஸ் முடிஞ்சதும்  கண்டிப்பா வரனுன்னார்.  என்னோட மொபைல் நம்பரை டேபிள்ல  இருந்த நோட்டில் எழுத சொன்னாரு ,” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

இதே போல நிறைய சந்தர்ப்பங்களை நிறைய ஆட்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவர் வாசலில் சென்று நின்ற எவருக்கும் மருத்துவம் பார்க்காமால் திருப்பி அனுப்பியதில்லை. பொய்க்காத வாயில் அவருடையது. இதை கொடை  என்று சொல்லலாம் இல்லையா? அறம் என்ற எல்லையை தொடக்கூடிய கொடை. காலத்திற்கு ஏற்ப கொடைகள் மாறுகின்றன. வள்ளல்கள் அதே குணத்துடன் மாறாமல் இருக்கிறார்கள். அவர்களை உலகம் வணங்கிக்கொண்டே தான் இருக்கிறது.


ஒருநாள் அல்ல 

இருநாட்கள் அல்ல

பலநாட்கள் 

பலரோடு சென்றாலும்

முதல்நாள் 

சென்றதைப் போன்ற 

அன்பாளன் அவன்.

பூண் அணிந்த யானையின் 

தந்தத்தில் 

வைத்த உணவைப்போல,

காலம் தாழ்த்தினாலும் 

அவன் பரிசில்

தவறுவதில்லை நெஞ்சே 

நீ வருந்தாதே..

அவன் அடி வாழ்க.



Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...