Skip to main content

உறவு

 [ஜனவரி தமிழ்வெளி இதழில் வெளியான சிறுகதை]


                              உறவு

தொழுவின் அனத்தல் வீட்டை அமிழ்த்திக் கொண்டிருந்தது. வீட்டில் யார்கண்ணிலும் உறக்கம் கூடவில்லை. ஒவ்வொருவராக ஆள் மாற்றி ஆள் தொழுவை எட்டிப்பார்ப்பதும், சற்று நேரம் நிற்பதும் பின் மனசாகாமல் வீட்டிற்குள் வந்து படுப்பதுமாக இருந்தார்கள். தொழுவின் வெளிக்கம்பியில் சீமெண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. 

இருளின் கருமைக்குள் அகன்ற  மஞ்சள் செவ்வந்தியாய் விளக்கின் வெளிச்சம்  மலர்ந்திருந்தது.

கிழவி ஆயாசத்தோடு மெல்ல எழுந்து நின்று சேலையின் பின்கொசுவத்தை நன்றாக சொருகிவிட்டுக் கொண்டாள். இருளில் கண்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை. தூக்குக்கம்பியில் ஒரு பொட்டு வெளிச்சமாக லாந்தர் விளக்கு மினுங்கிக்கொண்டிருந்தது.  தூணை ஆதரவாக பிடித்தபடி லாந்தர்விளக்கின் பக்கவாட்டில் இருந்த திருகாணியை திருகி திரியை தூண்டினாள். தீபம் விசுக்கென்று துள்ளி எழுந்து ஒளிர்ந்தது. தீபத்தின் ஔிப்பட்டு வழவழப்பான மரத்துண் மினுங்கி கண்களுக்கு துலங்கி வந்தது. பின் அவள் கண்களுக்கு மெல்ல மெல்ல முற்றம் விரிந்தது. கால்களை எடுத்து மெதுவாக முற்றத்தில் வைத்தாள். சிலீரென்று குளிர் கால்களில் பாய்ந்தேறியது.

“கருமாந்திர மானத்துக்கு கிறுக்குப்பிடிச்சு தொலைச்சிருக்கு. மூணு வயசுப் பய தலகாலு தெரியாம ஆடுறாப்பல குதியாட்டம் போடுது. இந்த மட்டம் பேஞ்சே கெடுத்துருச்சு..’என்று வானத்தைத் திட்டிக்கொண்டு தடியை ஊன்றியபடி வீட்டிற்கு  மேற்குபுறமிருந்த தொழுவை நோக்கி நடந்தாள். சீமெண்ணெய் விளக்கின் புகை அதன் நெளியும் சுடருக்கும் மேல் புகைந்து சென்று மூங்கில்  கூரையில் கறுப்பாக படிந்திருந்தது. விளக்கின் அடியில் குந்தி அமர்ந்திருந்த மணி அவளைக் கண்டதும் எழுந்து நின்று வாலை  ஆட்டிக்கொண்டு அவள் கைகளை மூக்கால் உரசியது. தடியை இடதுகையிலிருந்து வலதுகைக்கு மாற்றி சற்று குனிந்துநின்று மணியின் தலையை தடவியப்பின்  உள்ளே உற்றுப்பார்த்தாள்.

செவலை முன்னங்கால்களை மடக்கி தரையில் படுப்பதற்காக உடலை தாழ்த்தியது. கீழே சரியும் பொழுதே மீண்டும் உடலை உயர்த்தி எழுந்து நின்று கொண்டது.

“வாயில்லா சீவனுக்கு என்னான்று சொல்லத்தெரியும்,” என்ற கிழவியின் பின்னால் ரேவதி குரல் கேட்டது.

“செவல என்ன பண்ணுது அம்மாச்சி,”

“படுக்கப்பாக்குது. ஒடம்பு சரியமாட்டிக்குது கண்ணு,”

“மடியே ரணமா கெடக்கே..எப்படி படுக்கும்,”

“பச்சப்பிள்ளைக்காரி மனசுக்கு இருக்க முடியாதுதான். அதுக்காவ சும்மா இங்கனையே வந்து ஈரத்துல நிக்காத…”

“தூங்கவும் முடியல. இது நெனப்பாவே இருக்கு,”

“அப்படிதான் மனசு அடிச்சுக்கும். நீ விடிஞ்சதும் அக்கம்மா வீட்ல போய் இரு..”

“வுட்டுட்டு போனா மனசு தரிக்காதும்மாச்சி,”

ரேவதி மேற்கிலிருந்த கட்டைசுவரில் புகைந்து கொண்டிருந்த மண்சட்டி இருக்கும் இடத்திற்கு சென்றாள். கங்குகளை ஒரு குச்சியால் கிண்டி ஊதாந்தட்டையால் ஊதிவிட்டாள். இரும்பு ஊதாந்தட்டைக்குள் காற்று புகுந்து சென்ற சத்தம் பலமாகக் கேட்டது. காற்று பட்டதும் சாம்பல்பூத்திருந்த கங்கு சிவக்கத் தொடங்கியது. காய்ந்த வேப்பிலைகளையும் நொச்சியிலைகளையும் அள்ளி இருகைகளாலும் நொறுக்கி கங்கின் மீது தூவினாள். காரலான புகை எழுந்தது.

பால்காரனின் சைக்கிள் மணிசத்தம் கேட்டதும் வீட்டின் விளக்குகள் அனைத்தும் ஔிர்ந்தன. மழை நின்றிருந்தது. மண் கொழகொழப்பு மாறாமல் குழைந்துகிடந்தது. சைக்கிளை நிறுத்திய மகாமுனி தலைப்பாகை  துண்டை அவிழ்த்து முகத்தை துடைத்துக்கொண்டார்.  எப்போதும் போல வாளியில் கைவைத்தார். பின் வாளியை எடுக்காமல் தொழுவின் பக்கமாக வந்தார்.



“கறவைக்கு நிக்காது.நேத்தே  புண்ணுல  கைவைக்க முடியல..என்ன பண்றது. களும்பு எண்ணெய்யெல்லாம் தடவுனீங்களா?” என்றபடி காது மடலில் சொருகி இருந்த காகிதபென்சிலை எடுத்து சரியாக சொருக்கிக்கொண்டார்.

“அந்தியிலருந்து கன்னுகுட்டியக்கூட விடல. அத ஓட்டிட்டு போய் வயல்ல கட்டியிருக்கு..கருப்பிக்கிட்ட ரெண்டு கன் னுக்குட்டியும் பால்குடிக்குது,’

“கன்னுக்குட்டியவே விடலேன்னா..நம்ம மட்டும் என்ன பண்ண முடியும்,’

“மடி கனத்துக்கிச்சு..வலியெடுத்து அல்லாடுது..ரணம் வேற…இதோட பாடு சகிக்கமுடியலய்யா.”

“நீ ஏம்மா இங்கியே  நிக்கிற..உள்ளப்போம்மா,” என்று பால்காரர்  ரேவதியை  அதட்டினார். அவள்  திரும்பி பார்த்தபடி வடக்கு பக்கமிருந்த ஓட்டுக்கூரை வீட்டிற்குள் நுழைந்தாள். அவள் காலடித்தடங்கள் மண்ணில் குழைந்து பதிந்தன. மணி குனிந்து அந்தத்தடங்களை முகர்ந்து கொண்டே பின்னால் சென்றது. ஒரு எலி குறுக்கே விழுந்தடித்து ஓடியது. விசுக்கென்று எலிமீது பாய்வதற்கு எத்தனித்த மணி பின்னால் பாய்ந்து வந்த பூனையை கண்டதும் பற்களை காட்டி உறுமியது.

“ஏய்..மணி இங்கன வா..ரெண்டுக்கும் இதே பொழப்பா போச்சு,”என்று பேச்சின் நடுவே கிழவி அழைத்தாள்.

 பூனை உடலை சிலிர்த்தும் அதன் வால் மூன்று மடங்கு பெரிதாக மாறியது. இரண்டும் நின்ற இடத்திலிருந்து நகராமல் உறுமிக்கொண்டன. 

மறுபடியும் கிழவி அழைக்கும் முன்பே மகாமுனி, “நெதமும் இதே தான். எதாச்சும் ஒன்னு மத்தொன்னு மேல பாயுமான்னு பாத்தா..ஒன்னும் நடக்க மாட்டிக்குது,” என்று திரும்பி நின்றார்.

பூனையின் உடலே வளைந்து சிலிர்த்து நிற்கும் போது மணி பின்வாங்கி திரும்பி உறுமிக்கொண்டு கிழவியிடமே வந்து நின்று திரும்பிப்பார்த்தது. அதற்குள் பூனை இருளுக்குள் மறைந்திருந்தது. கிழவி மீண்டும் பேச்சை தொடங்கினாள்.

“இந்த நோவு அப்பிடி..எத்தன மாடுகள தூக்கி புதைக்கறது..மனசு பதச்சு வருத்தும்மா. எல்லாம் வயசு பசுங்க. மொத ஈத்து பசுவா மாட்டுது பாரும்மா..என்ன கஸ்ட்டகாலமோ தெரியல,”

தொழுவினுள் சென்று பசுவின் முதுகில் தடவி கையிலிருந்த டார்ச்விளக்கால் பார்த்தார். 

“பால் கறக்கறதுக்கு இந்நேரம் பறக்கனும். பத்துநாளா கறவையே இல்லம்மா. நீ எத்தன பாத்திருப்ப.. என்ன சொல்றம்மா,”

“இதைவிட ரணமெல்லாம் பாத்திருக்கேண்டா. சிலது தப்பிச்சுக்கும்,”

“ அந்த டாக்டரு வந்தாராம்மா?”

“பாட்டில்ல மருந்து கொடுத்துட்டு போயிருக்காவ. பகல்ல வாரேன்னாவ,”

குத்துகாலிட்டு செவலையின் மடியின் கீழ் அமர்ந்தார்.

கையைநீட்டி குட்டையான மண்சுவற்றில் இருந்த சிறிய சுரைக்குடுக்கையை எடுத்தார். மயில் தூவியை குடுக்கைக்குள் இருந்த மருந்து எண்ணெயில் நனைத்து எடுத்தார்.  பசுவின் மேல்வயிற்றில் இடது கையை வைத்து தடவினார். பசு நகர்ந்து நின்றது. கம்புகளுக்கு மேலுள்ள ரணத்தில் எண்ணெய்யை பீலியால் தடவினார். பசு முன்னும் பின்னும் நகர்ந்து உறுமியது.

உடலை எதிர்பக்கமாக திருப்பிக் கொண்டது. தொழுவிற்கு வெளியே நின்ற மூத்தவர் வந்து முன்பக்கமாக மூக்கணாங்கயிற்றை இறுக்கி முகத்தையும் தன்னுடன் சேர்த்து பிடித்துக்கொண்டார். மகாமுனி கைகளில் விளக்கெண்ணெய்யை தடவினார்.

“தரையிலயே கறந்துவிட்டா..வாடை அடிக்குமே,”

“வாளியக் கண்டாவே கோவப்படுது..கறந்துவிடுண்ணே,” என்ற மூத்தவர் மூக்கணாங்கயிற்றின் பிடியை இறுக்கினார்.

மணி மெல்ல நடந்து வந்து செவலையின் அருகே நின்றது. விரல்பட்டதும் தீப்பட்டதைப்போல துடித்து நகர்ந்து மூக்கணாங்கயிற்றை இழுத்தது. மணி தள்ளிச்சென்றது. மூத்தவர், “அம்மா..”என்றபடி நகர்ந்து கொண்டார். அவரின் காலில் ரத்தம் கசிந்தது. 

“மிதிச்சுப்பிட்டாளா? காலை தள்ளிவச்சு நிக்கனும்,”

கால்களை உதறிவிட்டு மீண்டும்  மூக்கணாங்கயிற்றை இறுக்கிப்பிடித்தார். செவலை உடலை தாழ்த்தி தரையில் படுக்கப்பார்த்தது.  

“ஒன்னும் செய்யறதுக்கில்லீங்க..கன்னுக்குட்டிய கொண்டாந்து கட்டுங்க. பொழுது ஏறட்டும். நான் கறவைய முடிச்சுட்டு வரேன்..அப்ப இன்னும் கனத்துக்கும்..விடுதான்னு பாப்பம்,” என்றபடி கூரை இரவானத்தில் சொருகியிருந்த மூங்கில் கொட்டனை எடுத்து முன்னும் பின்னும் திருப்பி உள்ளே எதாவது இருக்கிறதா என்று பார்த்தார். முற்றிய மூங்கிலின் ஒருகணுவிற்கு கீழே வெட்டி மேல் கணுவை கூராக சீவி செய்த கொட்டான் அது. மூத்தவர் வீட்டினுள் இருந்து மருந்து பாட்டிலை எடுத்துவந்தார். ரேவதி வாழைப்பழங்களை கைகளில் வைத்துக்கொண்டு நின்றாள். கொட்டானில் மருந்தையும் அரைசெம்பு தண்ணீரையும் ஊற்றினார்கள். 

மகாமுனி மூக்கணாங்கயிற்றை வலது கையில் பிடித்து இடது கையால் செவலையின் முகத்தை உயர்த்தினார். மூத்தவர் அன்னாந்திருந்திருந்த செவலையின் வாயை கட்டாயப்படுத்தி கொட்டான்  முனையால் நெம்பி திறந்தார். மருந்தை ஊற்றி கொட்டானை கடைவாய்பல்லிலேயே நிறுத்திப்பிடித்தார்.

“பச்சப்பிள்ளைக்கு சங்குல ஊத்தறாப்ல தான்,” என்று கிழவி அலுத்துக்கொண்டாள். செவலை மருந்தை குடித்ததும் கொட்டனை எடுத்தார். தாடையின் கீழ் சதையை ஆட்டிவிட்டு ஆசுவாசப்படுத்திவிட்டு நகர்ந்தார். ரேவதி வாழைப்பழங்களை செவலைக்கு கொடுத்தாள். மகாமுனி முற்றத்தில் கிடந்த கல்தொட்டியில் நீரள்ளி கைகளை கழுவிக்கொண்டு சைக்கிளை நகர்த்தினார்.

மூத்தவர் பசுவை சுற்றி சுற்றி இரண்டுமுறை வந்தார். அது விலகி நின்றது. அவர் தொட்டதும் சிறுநீர் கழித்தது.

“மொத பஸ்ஸில போய் நாராயணன எம்புட்டு சீக்கரம் முடியுமோ கையோட கூட்டிக்கிட்டு வாய்யா,” என்ற கிழவி தொழுவிலிருந்து நடந்து திண்ணையில் அமர்ந்தது.

“முந்தா நாளுதான் பரிட்ச்சைன்னு காலேஜ்க்கு போனான்ல்ல,”

“ஸ்டடி லீவ் தானே,” என்றபடி வந்த ரேவதி செவலையின் உடலை தடவினாள். அவள் அதுவரை உள்ளுக்கும் வெளியேயும் நடந்துகொண்டிருந்தாள்.  நாராயணனை அழைத்து வருவதைப்பற்றிய பேச்சு தொழுவிற்கு வெளியே  நடந்தது. அவள் தொடும் இடமெல்லாம் அதன் உடல் சிலிர்த்துக்கொண்டே இருந்தது. மிக மெல்ல தன் காலுக்கடியில் தொட்டச்சிணுங்கி இலை சுருங்குவதை போன்ற உணர்வுடன் தன்உடல் சிலிர்த்ததும் ரேவதி கண்களை சேலைத்தலைப்பால் துடைத்துக் கொண்டாள்.

செவலை நாராயணன் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது பிறந்த கன்று. விடுமுறையில் அதை குளிப்பாட்டுவது, வயலுக்கு ஓட்டிச் செல்வது, அதனுடன் விளையாடுவது என்று அதனுடனே இருப்பான். அதற்கு புல் அறுத்துப்போடுவதற்காக வயல் வரப்பெல்லாம் அரிவாளுடன் அலைவான். தானிக்காடு வரை அலைந்து இளம்புல்லாக தேடி அறுத்து கட்டி எடுத்து தலைசுமையாகவே கொண்டுவருவான், தொட்டியின் அருகில் கிடக்கும் கல்லில் அமர்ந்தபடி செவலையுடன் பேசிக்கொண்டு தவிடு கரைப்பான். பால் கறக்கும் பசுவிற்கு ஊறப்போட்டிருக்கும் புண்ணாக்கை யாருக்கும் தெரியாமல் எடுத்து செவலை குடிக்கும் தவிட்டு கழனியில் கரைத்து விடுவான். 

ஒருமுறை வயலில் தும்பை அறுத்துக்கொண்டு துள்ளி ஓடி குதியாளம் போட்ட செவலையை யாராலும் பிடிக்க முடியவில்லை. ரேவதியும் மூத்தவரும் இவனும் ஓடித்துரத்தினார்கள். அது பக்கத்திலிருக்கும் கிணற்றின் ஆபத்தை அறியாது மேலும் குதூகலமாக துள்ளி ஓடியது. கண்மண் தெரியாத ஓட்டம். கிணற்றில் விழத்தான் போவுது என்று ரேவதி கத்திக்கொண்டே ஓடினாள். 

அவள் சத்தம் கேட்டு பக்கத்து வயல் அண்ணாவி, “கன்னுக்குட்டிய தொரத்தி பிடிக்க முடியுமாடா மடப்பயலுகளா,” என்றபடி ஓடி வந்தார்.

அவர் கிணற்றி்ன் பக்கத்தில் நின்று கொண்டு ரேவதியை கிழக்குபக்கமும், மூத்தவரை வடகிழக்கிலும் நகர்த்திக் கொண்டு, வடமேற்கில் நாராயணனை மையப்படுத்தி கன்றை விரட்டினார்கள். அது கொஞ்சநேரம் போக்குகாட்டி குதித்து ஓடியது. பின் ஆழிலை போன்ற வெள்ளை வட்டம் உள்ள அதன் சிறு தலையை குனிந்தபடி துள்ளி ஓடி வந்தது. நாராயணன் தோளில் முன்னங்கால்களை வைக்க எம்பியதும் அவன் சிரித்தபடி முன்னங்கால்களை பிடித்து தூக்கினான். மூத்தவர் உற்சாகமாக ஓடிவந்து, “அடக்கார கழுத. இப்படியே ஆடு..ஒரு நாளு கால ஒடச்சுக்கிட்டு பட்டியிலயே கிடக்கப்போற பாரு,” என்றபடி பின்கால்களை பிடித்து தூக்கினார். அவர்களின் தலைக்கு மேல் செவலை உடலை வளைத்து நாராயணன் தலைமுடியை பற்களால் இழுத்தது. அதன் முரட்டு விளையாட்டுகளுக்கு ஈடுகொடுத்து விளையாடும் தன்மை இவனுக்கு மட்டுமே உண்டு. மற்றவர்கள் இழுத்துக் கட்டிப்போடுவதிலேயே குறியாக இருப்பார்கள்.

நாராயணனை அழைத்துவர மூத்தவர் கிளம்பினார். மழையோடு மழையாக புத்தனாம்பட்டியிலிருந்து காலை சாப்பாட்டு நேரத்தில் வந்து சேர்ந்தார்கள்.

“பேண்ட்டை மாத்திகிட்டு வா..” என்ற மூத்தவர் தன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டார். மழை தூரலாக பறந்தது.

அவன் கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு பனியனுடன் தொழுவிற்குள் நுழைந்தான். நாராயணனை பார்த்ததும் செவலை கம்மிய குரலில் அனத்தியது. அவன் அதன் முகத்தருகே சென்று நின்றான். நாவால் ஒரு முறை அவன் கைகளை நக்கியது. அதன் ஈரக்கண்களை பார்த்தபடி நின்றான். சற்றுத்தள்ளி நின்ற கன்றும் “ம்மா..” என்றது.

“யய்யா..இப்பவே பாலு கறந்துவிட்டுட்டா பரவாயில்ல.நேத்துலருந்து கறவைக்கு நிக்க மாட்டுது” என்று கிழவி திண்ணையில் அமர்ந்தபடி சொன்னது. நாராயணன் தலையை ஆட்டிக்கொண்டான்.

மிதமாக பகல் வெளிச்சம் தொழுவுக்குள் பரவியிருந்தது. தூரல் நின்று சலசலவென்று இளமழை பெய்யத்தொடங்கியது. நாராயணன் பசுவின் பின்புறம் வந்து நின்று குனிந்தான்.

“நான் காலேஜ் கௌம்பறன்னிக்கி லேசா சிவப்பா தானே இருந்துச்சு,”

“ஒரு பொழுதுக்குள்ள இப்பிடி ஆயிருச்சுடா,”

“என்னாலல்லாம்  கைவைக்க முடியாது,” என்று கைகளை பிசைந்து கொண்டான். வெளியே திரும்பியவனை மூத்தவர் தடுத்து உள்ளே தள்ளினார்.

“இம்புட்டு புண்ணா இருக்கே..எப்படிண்ணே கறக்கறது..”

“குட்டியா இருக்கப்பவே இருந்து கூடவே இருக்கறவுங்கள பசு பொறுத்துக்கும்பாங்க,”

“என்னால முடியாது,”

“வைத்தியம் பாக்கறதா நெனச்சிக்க,”

“மொத்தல்ல கைவைக்க விடுதான்னு பாருங்க தம்பி..எங்களை கைவைக்கவே விடல,” என்றபடி ரேவதி வந்தாள்.

மூத்தவர் மயிலிறகையும் சுரைகுடுக்கையையும் அவன் கைகளில் தந்தார். அவன் மயிலிறகை எடுத்து தடவியதும் செவலையின் உடல் பதறியது. இடது கையால் அடிவயிற்றில் தடவினான். வலது கையால் கண்களை துடைத்துக் கொண்டான்.

“இவனுக்கு தைரியம் பத்தாது அப்பாயி..இவன எதுக்கு கூட்டியாற சொன்ன,” என்ற மூத்தவரை பார்த்து விட்டு, “யய்யா..கறந்து விட்ருய்யா..புண்ணியமா போவும்,” என்ற கிழவி கையை இடுப்பில் ஊன்றிக்கொண்டு நின்றது.

நாராயணன் விளக்கெண்ணையை கைகளில் தடவியபடி கால்மடித்து அமர்ந்தான். இடது கை செவலையின் வயிற்றை தடவிக் கொண்டிருந்தது. செவலை முன்னும் பின்னும் நகர்ந்தது. உடலை திருப்பியது. கைகளை பிசைந்தபடி சற்று நரம் குனிந்திருந்தான்.

“டேய்…என்னடா’” என்ற மூத்தவரின் குரல் விரட்டியது.

சட்டென்று காம்பில் பட்ட விரல்களால் செவலையின் உடலே பதறி நடுங்கியது. சேவலையின் அடிக்குரலை கேட்ட கன்று ம்மா..ம்மா என்று அழைக்கத் தொடங்கியது.

கிழவியின் குரல் காதுகளை தொட்டதும் நாராயணன் என்ன நினைத்தானோ உடலை நிமர்த்தி காம்புகளை பற்றினான். பசுவின் உடல் ஒரு துள்ளு துள்ளியது. நான்கு கால்களும் தளர்ந்து நடுங்கியது. மூத்தவரும் ரேவதியும் ஆளுக்கொரு பக்கமாக செவலையை தாங்கிப்பிடித்தார்கள். மூத்தவர்  செவலையின் முகத்தை உயர்த்தி தன் தோள் மீது வைத்து பிடித்தார். ஒருகாலை மண்டியிட்டு தரையில் ஊன்றி செவலையின் முன்உடல் எடை முழுவதையும் தோளில் தாங்கிக்கொண்டார். ரேவதி வயிற்றுப்பக்கம் ஆதரவாகப் பிடித்துக்கொண்டாள். ஒவ்வொரு பீய்ச்சுதலுக்கும் செவலையின் உடல் விதிர்த்து விதிர்த்து நடுங்கியது. கன்று முரட்டுத்தனமாக தும்பு கயிற்றை  இழுத்துக்கொண்டிருந்தது.

ரேவதி செவலையை அணைத்துக்கொண்டு அதனுடன் பேசிக்கொண்டிருந்தாள். மூத்தவர் முன்புற எடைதாங்காமல் மூச்சைப்பிடித்துக் கொண்டு அசையாமல் நின்றார். தன் உடலோடு செவலையை இறுகப்பிடித்திருந்தார். நேரம் ஆக ஆக கால்களை ஊன்றமுடியாமல் குனிந்து இடது கையை தரையில் பலமாக ஊன்றிக்கொண்டார்

மெல்ல மெல்ல செவலையின் உடல் தளர்ந்தது. இனிமேல் திமிறாது என்ற நிலை வந்ததும் மூத்தவர் செவலையிலிருந்து பிடியை தளர்த்தினார். எழுந்து நின்று சுவரில் சாய்ந்து இடுப்பில் கைவைத்து குனிந்தபடி நின்றார். அவர் மூச்சை இழுத்துவிட சிரப்படும் ஒசை தொழுவின் மூச்சு திணறல் போல இருந்தது.  அண்ணி விலகி கன்றின் பக்கமாக சென்று நின்றாள். அது நிற்க தரிக்காமல் தும்புக்கயிற்றுடன் போராடிக்கொண்டிருந்தது. அதை பிணைத்திருந்த வேம்பமரக் கட்டை ஆடியது.

நாராயணன் நடுங்கும் கைகளை கோர்த்துப் பிடித்துக்கொண்டான். குத்துகாலிட்டவாரே குனிந்து அமர்ந்திருந்தான். தரையில் பாலும் சேறும் குருதியும் சிறுநீரும் கலந்து செம்மண் நிறத்தில் பால் தடம் வழிந்து சென்று கொண்டிருந்தது.

சுருள் முடிகள் மண்டிய அவன் தலை பசுவின் வயிற்றில் இடித்ததும் அவன் உடல் குலுங்கியது. அவன் தலையை நகர்த்தாமல் அமர்ந்திருந்தான். செவலை முகத்தை திருப்பி அவன் காதுகளை நக்கியது. அவன் தோள்களை குறுக்கிக்கொண்டான். தன்னிச்சையாக பால் காம்பிலிருந்து பெருகி தரையில் ஓடத்தொடங்கியது. ரேவதி சட்டென்று திரும்பிக்கொண்டாள்.

 

 


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...