வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.
மூள் தீ
ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள்.
கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன.
பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது.
ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள் வெடிக்கும் சத்தம் நெஞ்சை அதிர செய்தது.எதிர்வீட்டு கதவின் கம்பியில் கட்டப்பட்ட முதுகு தோல் வழன்ற வெண்மை கலந்த கபிலநிறகன்று தீனமான குரலில் ம்மா…ம்மா என்று அரற்றியது.
“எஞ்சாமி மேல தண்ணிய ஊத்துங்களேன்…சுடுமே… எரியுமே..அய்யோ..விட்டுட்டனே..”என்று வெள்ளையம்மா தலையில் அடித்துக் கொண்டாள்.அவளை இரண்டு ஆட்கள் பிடித்து வைத்திருந்தார்கள்.
பெரியசாமி தாத்தா தலையை ஆட்டிக்கொண்டு சிறிய வெளிமுற்றத்தில் கிடந்த கருங்கல்லில் அமர்ந்தார்.அவரின் தோள்பட்டை, முதுகுபக்கங்களில் தீப்பட்ட இடங்கள் கொப்பளித்துக்கிடந்தன.எரிச்சல் தாளாமல் அனத்தியபடியிருந்த அவரின் கண்களில் இருந்து நீர் வழிந்தது.
“ம்மா..ம்மா…”
தாத்தாவின் உடல் அதிர்ந்து அதிர்ந்து சுவரில் சாய்ந்தது.
உள்ளிருந்து அழைத்த பசுவின் குரல் சுரத்தை குறையத் தொடங்கியது.பக்கத்துவீட்டின் மச்சின் மீது சரவணனும் பரதனும் ஏறினார்கள். பக்கத்துவீட்டு மோட்டாரை போட்டு பைப்பால் தண்ணீரை விசிறினார்கள்.பெண்கள் கைக்கு கிடைத்த குடம்,வாளிகளில் தண்ணீரை கொண்டு வந்து விசிறியடித்தார்கள். தகரவீட்டிற்கும் கட்டுத்துறைக்கும் இடையிலிருந்த இடைவெளியில் இருளின் கோரப்புன்னகை என சீறி எழுந்தது ஜீவாலை.
மெதுவாக நடந்துவந்த வயசாளிகள் பாதைக்கு இப்புறமிருந்த எதிர்வீட்டு படிகளில் அமர்ந்தார்கள்.இவ்வழியே சென்ற பால்காரன் சொல்லியதை கேட்டு மேற்குத்தெரு அய்யாவுதாத்தா தடி ஊன்றியபடி வந்து சேர்ந்தார்.ஓரமாக கவிழ்த்திருந்த குந்தானியில் அமர்ந்தவரின் கைகளில் நடுக்கம் எஞ்சியிருந்தது.சற்றுநேரம் தீயை பார்த்துக்கொண்டிருந்தவர்,“எப்பிடி சின்னசாமி…”என்றார்.
போர்த்தியிருந்த மேல்துண்டால் வாயைத் துடைத்தபடி சின்னசாமி, “சாயங்காலமா தேவராசுபய வெள்ளையம்மா கிட்ட சுளுக்கு எடுக்க வந்திருக்கான். பொழுது போனது தெரியாம பேச்சு ஓடியிருக்கு.பெரியசாமி தாமசமா கொசுவுக்கு மூட்டம் போட்டுட்டு கங்குசட்டிய மாட்டு பக்கத்தில வச்சிட்டு உள்ளப்போய் படுத்திட்டான்.சட்டி சாஞ்சி கூலம், கடலைகொடின்னு எல்லா எழவும் சட்டுன்னு நெருப்பு பத்தீருச்சு..”என்றார்.
மீண்டும் தானாகவே,“கஞ்சப்பய.. பிள்ளை குட்டியா இருக்கு. இதுங்க ரெண்டு சீவனுக்கு இருக்கற காசு பத்தாதா?அந்த கட்டுத்தொறய மாத்திக் கட்டப்பிடாது.அவங்கப்பன் காலத்தில கட்டினது.பத்து வருஷமா கூரைகூட மாத்தாம அப்படியே கெடக்கு.கிழிசல தைக்கறாப்ல ஒட்டு வேல பாக்கறதோட சரி.என்னா ஒசரமான மாடு..ச்சை,”என்றபடி அமர்ந்திருந்த படியை கையால் ஓங்கித்தட்டினார்.
“அந்தப்பய பால்கறந்துக்கிட்டே புலம்பினான்…ஈன்றதுக்கு முன்ன இந்தபசுவ லட்சத்துக்கு வெல பேசுனாங்களாமே..நெசமா..”
“நெசந்தான்.சொக்கநாதபுரத்துல இருந்து மாட்டுபண்ணை வச்சிருக்கறவன் எம்புட்டோ பேசினான்.குடுத்துடுடான்னு சொன்னேன்.இவன் கேக்கல..பிள்ளகணக்கா வளத்தேன்னு ஓரே புராணத்த பாடிட்டு திரிஞ்சான்.சும்மா சொல்லப்பிடாது நாட்டுமாடுன்னாலும் நல்ல கறவ.மடிய பாக்கனுமே…”என்று அமைதியானார்.
பழனி,“அளந்து செஞ்ச செப்பு கொடமாட்டம்.உருவிவிட்டாப்ல வாளிப்பான பசு.எம்பேரன் எங்கவூட்டு பசு மேல கையப்போட்டு தட்டிக்கிட்டே இருப்பான்.அது நல்லா பொதுக்கு பொதுக்குன்னு இருக்கும்.அத தட்றாப்ல ஒருநா இதுமேல கைய வச்சான்.வச்சவன் கரண்ட்டு கம்பிய தொட்டாப்ல விசுக்குன்னு எடுத்துக்கிட்டான். நூறாட்டுக்காரனுக்கு இந்த வயசானகாலத்து இந்த பாடு வந்திருக்கக்கூடாது,”என்று துண்டால் கண்களை துடைத்துக்கொண்டார்.
நல்லப்பன் பாட்டா,“தொட்டா தொட்ட எடம் மட்டும் சிலுக்கனும் பசுவுக்கு அதான் நாட்டுமாடு.நம்ம பிள்ளையாட்டம் நெனச்சாதான் கைதொட்டு வளக்கமுடியும்.இதெல்லாம் சொல்லி வாரதில்ல..பசுவ வாங்கி வளத்தா தானா அந்த உணர்ச்சி வந்திரும்.மத்த ஜீவனவிட பசுவுக்கு கூச்சமுண்டுல்ல.மடியில கைவச்சி கறக்கவன் கைமாறினா விடாதுல..”என்றார்.பேச்சு நீண்டுக்கொண்டே சென்றது.
“ இந்தப்பசுவ கண்டா கண்ணெடுக்க முடியல…பெரியசாமி வூட்டு குலசாமி வந்து ஒக்காந்திருக்குன்னு என்வூட்டுகாரி சொல்லும்..”
“கல்லுமேல ஏறி நின்னுதான் குளிப்பாட்டனும்.பெரியசாமி கத்தாழையும் மஞ்சளையும் அரச்சு குளிப்பாட்டையில பாக்கனும்.தண்ணியில ஊறப்போட்டு பதமான வைக்கோலால தேச்சுவிடுவான்.இதுகிட்ட பேசிக்கிட்டே குளிப்பாட்டுவான்.நல்ல தும்பப்பூ நெறம் இதுக்கு.குளிச்சதும் பார்த்தா மஞ்சள் இருக்கா இல்லயான்னு தெரியாம பாக்கறதுக்கு அப்பிடி இருக்கும் மாடு.செனையா இருக்கையில என்ன செல்வாக்குல இருந்துச்சுங்கற…”
“இந்த வம்ச பசுங்க கொறஞ்சு போச்சு.ஆல்,அரச மரங்க கணக்கா அங்கொன்னு இங்கொன்னாதான் இருக்கு..இனிமே கண்ணாற பாத்துகிடக்கூட நாட்டுமாடு இந்தத்தெருவுக்கு இல்ல…”
அய்யாவு,“எங்கண்ணால பாக்கலடே..இப்ப அஞ்சாறு வருஷமா நடமாட்டம் கொறஞ்சு போச்சு.பசுவுக்கு இது தலஈத்தா?”என்றார்.
“ஆமா எழவு..வயசுபசு..”
ஒருபக்கமாக தீ அணைந்து புகைந்தது.உள்பக்கம் எழுந்த தீ அதே வேகத்துடன் எரிந்தது.கூலமும்,கடலை கொடிகளும் வைத்திருக்கும் இடம். பரணில் தீ பிடித்திருக்க வேண்டும்.அந்த காலத்தில் கல்பாவி, பரண்வைத்து கட்டப்பட்ட தொழுவம்.தண்ணீரை இரண்டுபுறங்களில் இருந்தும் விசிறிக்கொண்டேயிருந்ததில் தீ மெதுவாக சீற்றத்தைக் குறைத்தது.
வயசாளிகள் அமர்ந்திருந்த நீண்டப்படியில் வந்து அமர்ந்த அக்கம்மாகிழவி பெருமூச்சுவிட்டாள்.காலையில், சாயுங்காலம் பசுவை மேய்ச்சலுக்காக வயலிற்கு ஓட்டிச்செல்கையில் யார்வீட்டு வாசலில் சாணம்இடுகிறதோ அவர்களை பெரியசாமி கூப்பிடுவார்.அவர்கள் சாணத்தை எடுத்து வாசல் தெளிப்பதற்காக ஓரமாக வைப்பார்கள்.லட்சுமி வருவா பாத்துக்க என்றபடி நடப்பார்.
அத்தனை பெரிய பசு ஊரில் யாரிடமும் இல்லை என்பது பெரியசாமி தாத்தாவின் நிமிர்வு.அதை ஓட்டிச்செல்கையில் திமிர்ந்து நடப்பார்.அது குழந்தை என அவரின் கைகளை நக்கியபடி மெல்ல நடக்கும்.குளம்படி சத்தம் டரக் டரக் என்று புதிதாய் போடப்பட்ட தார் சாலையின் கடைசிவரை கேட்கும்.
வைரிசெட்டிப்பாளையத்தின் மாட்டுச்சந்தையில் சொன்னவிலையை குறைத்துக் கேட்காமல் வாங்கி வந்த கன்று அது.
கன்றை ஓட்டிக்கொண்டு நடக்கையில் சின்னசாமி, “பொசுக்குன்னு ஒரே விலைக்கு காச நீட்டிப்புட்ட..அவன் தடுமாறி போயிட்டான்..”என்றார்.
“நாம என்ன காசுகுடுத்தாலும் எழப்பு அவனுக்கு தான்டா…”
“எடதுபின்னங்கால் சூழி நல்லத்தில்லன்னு தெரியாதவனா நீ.அதான் பேசாம வந்துட்டேன் ..”
“நீ நெனக்கிறத சொல்லு..”
“நல்ல கெடேரி கன்னுக்குட்டிய விக்கறதுக்கு சந்தைக்கு வாரவன் அப்படி ஒன்னும் நாலு எடத்துல விசாரிக்காம..சாதகம் பாக்காம வராதில்ல.இந்த கெடேரிகுட்டிய விக்கறதுக்கு மனசு வரனுமே.இதவச்சு பட்டிப்பெருக்கனுன்னு ஆசையிருக்காதா ஒருமாட்டுக்காரனுக்கு?நடுமுதுகுல கோட்டுசுழி பட்டி பெருக்கம்..அடிவயித்து சுழி குடும்பத்துக்கு ஆவாது..வலதுதொட சுழி பால் பெருக்கம்..”
“எதுக்கு தெரிஞ்ச பஞ்சாங்கத்தயே பாடம்படிக்கற.எடதுகால் சுழி உள்ள பசு பட்டிக்குகேடுன்னு சொல்லாம சொல்ற.நல்லவேள எனக்கு முன்னால மாட்டுலட்சணம் பாக்கறவன் எவனும் வரல.எடதுகால் சுழின்னாலும் நெத்தியில ரெட்ட சுழி ராசவம்சம்டா…”
“நானும் ராசசுழியப் பாத்தனாக்கும்..இது நமக்கெதுக்கு பங்காளி. பணம்பெருத்தவன் பூசப்பண்ணறதுக்கு,வூடு குடிபோறதுக்குன்னு வச்சிக்குவான்.அவனுக்குன்னு ஆயிரம் சடங்குண்டு.இப்ப சொல்லு வாங்கினதுக்கும் கூடுதலாவே கொடுத்துப்புடலாம், ”என்று புலம்பிக்கொண்டு மனசாகாமல் கன்றை ஆசையுடன் பார்த்தபடி நடந்தார்.
“அந்தகாலத்துல இந்தசடங்கெல்லாம் இல்லயே..”
“யாரு சொன்னா? எங்கவூட்டு பட்டியில இப்படி ஒன்னு தப்பி பெறந்துச்சு..கோயில்ல கொண்டு சாமிமாடா விட்டாச்சு.அதுவும் அதுநெறசுழி.இதுக்கு கொறசுழிடா..”
“இங்கபாரு சின்னசாமி…மனுசனுக்கு… நல்லலட்சணம், சீதேவி எல்லாத்தையும் பாத்து ஒருபயம்.அழகுபுள்ள பெறந்தா பயம்.ஓங்குன விரிஞ்ச மரத்த பாத்தா பயம்.சாமியா கும்புட்டு அந்தபயத்த மாத்திக்கறோம்ன்னு எங்கய்யா சொல்லும்.பாம்பும் அப்பிடித்தானே…இந்தக்கன்றுக்குட்டியோட கால்ல கெடந்து வளக்கறேன்..”
“ம்..”
“ஊருக்கு போனதும் கட்டசெட்டி கடையில வெள்ளசங்கும்,கருப்புகயிறும் வாங்கி கன்னுக்குட்டி கழுத்துல கட்டிப்புடனும்..”
பழைய நினைவிலிருந்த சின்னசாமி கொசுக்கடியால் உடலை உலுக்கிக்கொண்டார்.
“பாக்கற கண்ணு எல்லாத்தையும் திரும்ப வைக்கிற லட்சணம் இருக்கற மனுசனோ..மாடோ எதுக்கும் சொகமான சாக்காடு இல்லய்யா..”
“ச்சை வாயமூடும்மா..”
“என்ன சின்னப்பிள்ளயா நீ..இத்தனை சூட்டுக்கு அது மேலு தாங்குமா?”
சின்னசாமி பின்னால் சாய்ந்தபடி, “ அப்பா…அப்பா,” என்று முனகிக்கொண்டு கால்களை நீட்டினார்.
வெள்ளயம்மா,“இந்த ஆள ரெண்டாந்தாரமா கட்டி என்னத்த பாத்தேன்..இந்த ஆடுமாடுகளத்தான்.கடைசியா தொறையில நின்ன ஒத்த பசுவுக்கும் கேடு வந்திருச்சே..”என்றபடி நெஞ்சில் அடித்துக்கொண்டாள்.
“வூட்டுத்தொறையில பசுவுக்குகேடு வரக்கூடாதுப்பா.காலங்காலமா பெருகின கட்டுத்தொரை…இவங்க வூட்டுக்கு பேரே இத வச்சித்தான்.அந்த காலத்துல, வெளியூர் காரவங்க வந்தா இந்தக்கட்டுதுறைய எட்டிப்பாக்காம போகமாட்டாங்க.இங்க குட்டி வாங்கி கட்டினா பட்டிப்பெருகுன்னு வெத்தலபாக்கு வச்சி பணங்குடுத்து வாங்கிட்டு போவாங்கன்னு எங்கப்பன் சொல்லும்..”
“இல்லாதவங்களுக்கு வெறும் வெத்தலப்பாக்குக்கு பெரியசாமி அம்மா குட்டியதூக்கி குடுக்குமாம்….”
பெரியசாமி தாத்தா தீயின் எரிச்சல் தாளாது நடுங்கத்தொடங்கவும் இரண்டு ஆட்கள் அவரை வண்டியில் ஏற்றினார்கள்.வெள்ளையம்மாளையும் விடாப் பிடியாக இன்னொரு வண்டியில் ஏற்றிக் கொண்டு வண்டியை கிளப்பிய நேரத்தில் திரும்பிய பெரியசாமி “எந்தங்கமே..ராசாத்தி..”என்று தளர்ந்தகுரலில் முனகினார்.
அவரை பார்த்த அக்காம்மாவின் கண்கள் நிறைந்தன.
பழனி அவளின் மடியில் கைவைத்து, “ என்னம்மா…. நீ பாக்காத நல்லது கெட்டதா,”என்றார்.கண்களை துடைத்துக்கொண்டு கல்லடுக்கிக்கட்டிய செம்மண்வீட்டை வெறித்துப்பார்த்தாள்.இளமையில் இந்தவீட்டின் முன் தான் கதறிய நினைவு எழ தலையை ஆட்டிக்கொண்டாள்.
வாய்க்கால் ஓரத்தில் படுதாவை குச்சியில் நிறுத்திய கூடாரத்தில் அமர்ந்து அக்கம்மா கடலைக்கொடிகளை ஆய்ந்து கடலைகளை குப்பலாக குவித்துக்கொண்டிருந்தாள்.அவள் முன்னால் மூச்சிறைக்க வந்து நின்றாள் செல்லம்மா.
கால்மடித்து அமர்ந்து,“க்கா…வயத்தில பிள்ள வந்திருச்சுன்னு இருக்கு..”என்று வயிற்றில் கைவைத்தபடி மெல்லியகுரலில் கிசுகிசுப்பாக அக்கம்மாவின் காதில் சொன்னாள்.அக்கம்மா சேலையில் கை மண்ணை துடைத்தாள்.
“கூறுகெட்டவளே..அதுக்கா கண்ணுமண்ணு தெரியாம வரப்பில ஓடியாற..மெல்ல பதுக்க வரனுண்டி..”என்றபடி கையைப்பிடித்துப்பார்த்து முகம் மலர்ந்தாள்.
“நூறாட்டுகார மாமன எனக்கு பிடிக்கல.கட்டிக்கமாட்டேன்னு சொன்னவ நீதானடி..”என்று கன்னத்தைக் கிள்ளினாள்.பெரியவளாகி இரண்டு ஆண்டுகளே கழிந்த சின்னப்பிள்ளை என்ற எண்ணம்வந்ததும் தலையைத் தடவினாள்.
அக்கம்மா, “அம்மா வூட்டுக்கு போய் இருந்துட்டு வாயேன்.இங்க கட்டுதொறையிலயே கெடக்கனும்.ஒடம்பு தாங்காதுடீ..காத்தடிச்சா சாயற சோளத்தட்டையாட்டம் இருக்க.உம்மாமன கண்டா மட்டும் ஏண்டி பயந்துநடுங்கற.பொம்பள கட்டினவனுக்கு பயந்தா பொழப்புக்கு ஆவாதுடி…”என்று சிரித்தாள்.
“அப்பன்வூட்டுக்கு வுட மாட்டாப்ல..ஆடு மாடு இருக்குன்னு சொல்லும்..”
“ம்..நாளகழிச்சு தேனெடுத்துக்கிட்டு மலையாளத்தான் வருவான்.உங்கப்பனுக்கு சொல்லி வுடறேன்..அவுங்க வரட்டும்,”
செல்லம்மாள் தலையை குனிந்துகொண்டு சிரித்தாள்.நீள்வாக்கான முகம்.மூன்றுகல் சிவப்பு மூக்குத்தி மினுங்கும் கருத்த முகம்.நீண்ட முடியை எண்ணெய் வைத்து படிய வாரியிருந்தாள்.பச்சை புடவையை கொசுவம் வைத்து கட்டியிருந்தாள்.
இந்தப்பருவத்தில் பிள்ளைகளைப் பார்ப்பதற்கு கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று நினைத்த அக்காம்மா கையைசொடுக்கி நெட்டி முறித்தாள்.செல்லம்மா வரப்பில் நடந்து செல்வது வரை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அன்று காலையில் செல்லம்மாள் முதல்நாள் பெரிய பானையில் ஊறப்போட்டிருந்த கடலை பிண்ணாக்கை தென்னம்மட்டையால் கிண்டி எடுக்கையில் பானை தவறி சாய்ந்து உடைந்தது. என்ன ஏதென்று கேட்காமல் ஒருக்கையில் மூக்கணாங்கயிற்றுடன் நிமிர்ந்த பெரியசாமி ஓங்கி அறைந்தான். செல்லம்மாள் கட்டுத்துறையின் கல்தளத்தில் விழுந்தாள்.
“கட்டின சிறுக்கிக்கு கூறு இல்லன்னா பொழப்பு புகையாட்டம் காத்தோட காத்தா போயிரும்..சின்ன சிறுக்கிய கட்டி வச்சு கழுத்தறுத்துப்புட்டானுங்க..புண்ணாக்கை வழிச்சு கழனிதொட்டியிலபோடு.மெதுவா செய்யி..அவசரம் இல்ல,”என்றபடி வெளியே வந்தான்.
அந்தவழியே வந்த அக்கம்மா,“தம்பி…செல்லம் உள்ளருக்காளா…”என்று நின்றாள்.
“ம்ம்ம்…புண்ணாக்க கவுத்திட்டா..பொழப்ப கவுக்க வந்திருக்காளோ என்னமோ? இன்னும் பிள்ளையும் பெறந்திட்டா சோறுகூட நாந்தான் பொங்கனும்.கைய ஓங்கக்கூடாதுன்னு நெனக்கறேன்..கேடுகெட்ட புத்தி விடமாட்டிக்குது..”
“அய்யோ…”என்றபடி உள்ளே ஓடினாள்.
கட்டுத்துறையில் விழுந்த செல்லம் எழவேயில்லை.அக்கம்மாவின் கதறலில் ஊர்கூடியதும், மாட்டு சாணியில வழுக்கி விழுந்திருக்கா என்று படபடப்பாக சொன்னான்.
பெண்ணை சுடுகாட்டில் பொசுக்கியப்பின் செல்லம்மாளின் அப்பா ஐயாற்றில் முழுகி ஈரவேட்டிய மடித்துக்கட்டிக்கொண்டு தோளில் ஈரத்துண்டுடன் வயல்திரும்பும் பாதையில் நின்றார்.
அவரைக்கடந்து ஊருக்குள் திரும்பிய பெரியசாமியிடம்,“ஒனக்கு புள்ளபாசத்துலதான்டா கேடும் சாவும்,”என்று சொல்லிவிட்டு நடுங்கும் உடலுடன் குனிந்து நடந்தார்.
“வெளக்குத்திரி வெளிச்சமாட்டம் அந்தக்கண்ண பாத்துமா இந்தபயலுக்கு மொரட்டுத்தனம் கொறயல.உள்ளுக்குள்ள எரியுதே..எந்தத்தண்ணியில முழுகி எந்திருச்சா கொறயுன்னு தெரியலயே,”என்ற அவரின் குரல் தனியே வயல்காடெங்கும் கடந்து சென்றது.
பின்னால் வந்த செல்லத்தின் அம்மா, “அந்த ஆம்பள சொல்லு பழிச்சிருன்னு கனவு காணாத..ஒனக்கு இந்த சென்மத்துல பிள்ள இல்லய்யா.…”என்றபடி பதறி நடந்தாள்.பெரியசாமியின் கைகள் பதறி நடுங்கிக் கொண்டிருந்தன.
கட்டுதுறையில் செல்லம் விழுந்தஇடத்திலேயே பெரியசாமி படுத்துக்கிடப்பதை பலநாட்கள் அக்கம்மா பார்த்தபடி சென்றிருக்கிறாள்.ராசாத்தி.. ராசாத்தி.. என்று முனகிக்கொண்டிருப்பான்.
மொத்தமாக தீ அணைந்ததும் எரிந்தவைகளை அள்ளி வெளியே குவித்தார்கள்.எரியில் தப்பித்து அங்கங்கு நின்ற குட்டிசுவர்களை இடித்து பசுகிடந்த இடம் வரை சமதரையாக்கினார்கள்.
பொக்ளின் வண்டி வரும் சத்தம் கேட்டு அக்கம்மா கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள்.கழுத்தும் தலையும் நடுங்கிக்கொண்டிருந்தது.கருகல் நெடியும், புகைமணமும் சூழ பொழுது மெல்ல எழுந்தது.
பரதன், “யாராச்சும் ரெண்டுபேரு கன்னுக்குட்டி..ஆடுகள வயலுக்கு ஓட்டுங்கய்யா…”என்றான்.
பொக்ளினும் ஆட்களுமாக சேர்ந்து பசுவை தூக்கி மணல் அள்ளும் டிராக்டரில் ஏற்றினார்கள்.முற்றத்தில் பால் சிந்தியபடி சென்றது.உள்ளே கிடத்தியப்பின் டிராக்டரின் பக்கவாட்டில் வழிந்து சொட்டியது.
அக்கம்மாகிழவி தளர்ந்தகுரலில், “பாலுக்கு உம்பிள்ள வயக்காட்டுல நிக்குதுடி..”என்று நெஞ்சில் கைவைத்தாள்.அங்கிருந்தவர்களின் கைகால்கள் தளர்ந்து சுவரில் சாய்ந்து நின்றார்கள்.வண்டி மெல்ல நகர்ந்தது.
Comments
Post a Comment