2022 ஜூலை 25 தமிழினி இணைய இதழில் வெளியான சிறுகதை.
பங்காளி
கொமாரசாமி கவுண்டர் கல்யாணம் முடித்ததும் இந்தஊருக்கு வந்து வயல் வாங்கி தன்பிழைப்பை தொடங்கிய போது பெருமாள் நாயக்கர்தான் இந்த மண்ணின் நுணுக்கங்களை சொல்லித்தந்தார். இது பச்சைமலையடிவார பூமி. இங்கே பெய்தலிற்கும் காய்தலிற்கும் இடையில் தடுமாறும் வானம்.
“வெளியூரு… வெளியாளுங்கன்னு நெச்சி மலைக்க வேணாம். சுத்தி வயக்காரங்க நாங்க இருக்கோம். விவாசயம் பண்றவங்க எல்லாம் பங்காளியாட்டம் இருந்தாதான் ஒருத்தருக்கொருத்தர் உபகாரம்…”என்ற சொல்லோடு நில்லாமல் ஒவ்வொரு விதைப்புப் பட்டத்திற்கும் இந்தமண்ணின் புஞ்சை விவசாயத்தை சொல்லிக்கொடுத்தார்.
“கவுண்டரே….வெங்காயக்காட்டு பாத்திகள ஏஞ்சும்மா போட்டு வச்சிருக்கீரு….நாலு கொண்டகடலைய, கொத்தமல்லிய தெளிச்சு விடுங்க...இல்லன்னா மொளகா நாத்து,கத்திரி நாத்து தாரேன்…ஊனி வச்சா பொம்பளையாளுக வூட்டு செலவுக்கு அலைய வேணாம் பாருங்க…”என்பார்.
தென்னந்தோப்பு உருவாக்கும் போது கூடவே இருந்தார்.
“மரம் வளந்து நெழல் கட்ற வரைக்கும் சும்மா விட்றாதீரு...கருணக்கிழங்கு, சேனை, மயிர்கிழங்கு ,வெத்தலவள்ளின்னு அங்கங்க ஊனுங்க. நல்ல வெலக் கிடைக்கும்…நம்ம திங்கவும் ஆகும்,” என்று சிரிப்பார்.
அவரின் சிரித்துக்கொண்டிருக்கும் முகம் மங்கும் வேளையில் பசுங்கன்று அடிவயிற்றிலிருந்து ம்மா…என்று எழுப்பிய ஓங்கார குரலால் அந்த களத்துவீட்டின் கருக்கல் கலைந்தது. கனவிலிருந்து கொமராசாமிக்கு விழிப்புத்தட்டியது. அவர் மனசின் நினைப்புகளால் இந்த இரண்டு நாட்களாக கனவும் நனவுமாக தொல்லைப்பட்டுக் கொண்டிருந்தார்.
கயிற்றுக்கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தார். பச்சை நிறத்தில் நீண்ட கால்ச்சட்டையில் ஆறுஅடிக்கு மேலான உயரம்.
பெருமாளிடம் பேசியதை எல்லாம் மீண்டும் மீண்டும் அசை போட்டுக் கொண்டிருந்தார். பிசைந்து பிசைந்து எடுத்ததால், ஒட்டிய ஈரம் காயாத நிலமாக மனம் புழுதியாகி பறக்கவும் முடியாமல் நீரோடு குழையவும் முடியாமல் உதிரியாகி நின்றது. உதிரியாகி பதமாக நிற்கும் தன்னை ஏற்கமுடியாத அவர் மனம் வேண்டுமென்றே காரணங்களை உண்டு பண்ணிக்கொண்டிருந்தது.
விற்பனை நிலையத்திற்கு பால் கொண்டு செல்லும் பாதையில் பெருமாளின் நிலம் இருந்தது. அதில் பாதியை கொமாரசாமிக்கு விற்க ஏற்பாடாகியிருந்தது. கொமாரசாமி அச்சாரமாக பத்தாயிரம் கொடுத்திருந்தார்.
எப்போதும் பார்க்கும் அந்த நிலம் அன்றிலிருந்து புதியதாக கொமாரசாமியின் கண்களுக்குத் தெரிந்தது. தினமும் கிணற்று மேட்டில் நின்று பார்த்தார். கண்ணெதிரே முருகபெருமான் நிற்பதைப் போன்று பச்சைமலையின் மம்மலைக் குன்று. பதையோரத்துக்காடு. வெட்டி வெட்டி ஆழமான, அகலமான படிகள் வைத்த கிணறு. காரை சுவரால் ஆன மோட்டார் அறை என்று வயலை சுற்றிப் பார்க்கும் போதே அப்பனை பாட்டனை மூப்பாட்டனை பார்ப்பதைப்போல இருக்கும்.
“நெதானிச்சு சொல்லுங்க நாயக்கரே. தலைமுறை சொத்து…” என்று வயல் விற்பது பற்றிய பேச்சின் தொடக்கத்திலேயே கொமரசாமி கேட்டார். கொரானாவால் பத்திரப்பதிவு தள்ளிப்போனது தான் பெருமாளின் மனமாற்றத்திற்கு காரணம். நிலத்தை விற்கும் அளவிற்கு பணமுடை இல்லை என்றால் சட்டென்று விற்க வேண்டும். நினைத்துப்பார்க்க நேரம் கொடுத்தால் நிலம் விடாது.
“எம்மவன் நெலத்துல வந்து பாடுபடப்போறதில்ல..பாதியாச்சு வித்து குடுங்க. வீட்டுக்கு வாடகை குடுக்கமுடியல. டவுனுலயே வீடு வாங்கலாங்கறான்,”என்று உறுதி சொன்ன பிறகுதான் கொமாரசாமி அந்த நிலத்தை மனசுக்குள் கிண்டிப் பார்க்கத் தொடங்கினார். எந்த வரப்பை மாற்றினால் வயல் சீராகும். எங்கு தென்னைகளை நடலாம். எங்கு குறுக்கு வரப்புப்போட்டால் குச்சிவள்ளிக்கிழங்கு பாத்தி போடுவதற்கு இன்னும் வாசதியாக இருக்கும் என்று அந்த நிலத்தை தன் வயலாக மனசுக்குள் மாற்றத் தொடங்கியிருந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் பொன்னுசாமி பெரியய்யன் வந்தார். பெருமாள் வயலை கொடுக்க மாட்டான்னு பேச்சு அடிபடுது. எதுன்னாலும் சொந்தபந்தம் இருக்கோம். ஒருநாள் நிதானிச்சு போய் பேசி நிலத்தை எழுதிருவோம் என்றார்.
“மந்தையா மலையோட மேய்ஞ்சாலும் மாட்டுக்காரனோடதுதான் மாட்டோட பேரும்…கூட்டத்துல நின்னா யாரு மாடுன்னு சொல்லுவாங்க. இன்னாருதுன்னு தானே? அது கணக்கா நீ நம்மப்பய. நாளைக்கு வயவேல முடிச்சுட்டு நம்ம பயகள இங்க வரச்சொல்றேன். சாயங்காலமா போலாம்,” என்று நேற்று மதியம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
கூட்டத்தை கூட்டிச்சென்று பெருமாளிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமா? மரியாதையாக நின்று பழகின ஆள். ஒன்றும் பேசாமல் சரி என்று சொல்லிவிடுவார். மனசில் கிடந்து சிரிக்கும் பேரப்பிள்ளை போல நிலத்தின் மீதான ஆவலாதி வேறு மனசை கவ்விப்பிடிக்கிறது. நானும் எழுதி வாங்கின பிறகு நிலத்தை நிமிர்ந்து பார்த்திருக்கலாம் என்று அவர் மனம் சமநிலத்து நீராக முன்னும் பின்னும் அசைந்து கொண்டிருந்தது.
அந்தப்பசுங்கன்று மீண்டும் மீண்டும் யாரையோ அந்தஇருளில் அழைத்து அங்கு உறைந்திருந்த அமைதியை சலனப்படுத்தியது. கோழிகளுடன் குஞ்சுகளும், ஆடுகளுடன் குட்டிகளும் அதிகாலை அரைமயக்கத்திலிருந்து சட்டென்று விழித்து சலசலக்கத் தொடங்கின. விடியலில் சற்றேனும் கண்அசற நினைத்திருந்த வேட்டையன் சடாறென்று துள்ளி எழுந்து மாட்டுப்பட்டிப் பக்கம் ஓடி குரைத்தது. ஒன்றிரண்டு குரைப்புகளுக்குப் பிறகு அமைதியாகத் திரும்பி பின்னங்கால்களுக்கு இடையில் வாலை வைத்து குந்தி அமர்ந்து தீனமாக குரலை இழுத்தது.
“என்னான்னு போய் பாக்கறேன்,”என்றவாறு அவர் களத்தின் நடுவில் போடப்பட்டிருந்த கட்டிலில் இருந்து எழுந்தார்.
ஓரமாக களத்து வீட்டோரத்துக் கட்டிலில் படுத்திருந்த மருதாயி,“மடவா திருப்பிட்டு வந்து இப்ப தானே படுத்தீங்க..நாம் போறேன். அது சாது..நீங்க மிரட்டி சத்தம் போடுவீங்க,” என்றபடி எழுந்து முடியை கொண்டையாக கட்டிக்கொண்டாள். எழுந்து கோழி கொடாப்பைத் திறந்து மேய்ச்சலுக்கு விட்டப்பின் பட்டிப்பக்கமாக சென்றாள். செவலையும் கருப்புமான குண்டு கோழி பூவால் ஆன பம்பரம் போல சென்றது. சுறுசுறுவென ஏழெட்டு குஞ்சுகளும் குட்டிக்குட்டி பஞ்சுஉருண்டைகளாக பின்னால் சிதறி ஓடின.
கடலைக் காட்டிற்கு தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. வாய்க்காலில் மெதுவாக தண்ணீர் ஓடும் சத்தம் சலசலவென்று இருளில் மெல்லிய மணிஓசை போல கூடவே வந்தது. வாய்க்காலில் வாய்க்கொப்பளித்து முகம் கழுவும் போது மறுபடியும் ராமாயி ஓங்காரமாக கத்தியது.
“கைப்பிள்ளைகள வச்சிருக்கிறவளாட்டம் தான் எம்பொழப்பு. எழுந்திருச்சதும் மூச்சி கைகால் கழுவ விடுதுகளா..” என்றபடி ராமாயியைப் பார்த்து, “ நீயும், உங்காத்தாவும், உங்க வம்சத்துல இன்னும் நாலு உருப்படியுமா சேந்துக்கிட்டு நாளுக்கு ஒருத்தி கத்தி எழுப்பிவிடுறீக,”என்று சலித்தபடி பட்டியின் பக்கமிருந்த இன்னொரு மின்விளக்கையும் எரியச்செய்து விட்டு ராமாயியின் பக்கம் சென்றாள்.
“மாடு கன்னுகளக் கூட மெரட்டாம கொஞ்சியே பேசனுன்னா… மனசு பாறந்தாங்காம காட்டுக்கு போய்சேர வேண்டியதுதான்,” என்றபடி கொமாரசாமி திரும்பிப்படுத்து வேட்டையனை பார்த்தார். அது புருவத்தை வளைத்து தூக்கி நெற்றியை சுருக்கி கண்ணாடிக் கண்களால் பார்த்தது. எலியை பிடிக்கும் வேட்டையில் முடியாமல் திரும்பி வந்திருக்கிறான் என புன்னகைத்தார். சட்டென நினைப்பு மாறி மனம் பதற, “ஏ..மருதாயி..அவப் பக்கத்துல போவாத,” என்று எழுந்து பட்டிப்பக்கமாக ஓடினார்.
அதற்குள் , “என்னடி இத்தன சத்தம்,” என்று குனிந்த மருதாயியின் வயிற்று அல்லையில் கொம்பு கிழித்தது.
“அம்மா..” என்ற மருதாயியின் குரலால் உந்தப்பட்டு விசுக்கென்று வேட்டையன் பாய்ந்தான்.
இடையில் பாய்ந்த வேட்டையனை “எலேய்..”என்று தாவி கழுத்தப்பிடித்து பின்னால் தள்ளினார். அதற்குள் மீண்டும் முட்டுவதற்காக அவளின் கீழ்புறத்தை குறி வைத்த ராமாயியின் மூக்கணாங்கயிற்றை மருதாயியே இடது கயால் இறுகப்பற்றி அதன் முகத்தை தூக்கினாள். வலது கை ரத்தம் வழியும் அல்லையை பிடித்திருந்தது. அன்னாந்தபடி விரிந்தகண் உருள ராமாயி நின்றது. கண்ணீரின் காய்ந்த கோட்டுத்தடம் ராமாயியின் முகத்திலிருந்தது.
“பிடிய விட்றாத..”என்றவாறே அருகில் சென்று மூக்கணாங்கயிற்றை ஒற்றைக்கயால் பிடித்துக்காண்டார். இரவானத்திலிருந்த தாம்பு கயிறை உருவி சேர்ந்துக்கட்டி முளையில் இறுக்கியதும் ராமாயி எங்கும் அசையமுடியாமல் மண்டியிட்டு படுத்தது.
“என்னாச்சு பிள்ள..”என்ற மருதாயி அதன் முதுகை தடவிக்கொடுத்தாள்.
“நீ வா..காயத்தைப் பாப்போம்,” என்று களத்தில் நடந்தார்.
“ஈத்தெடுத்து சினைக்கு நிக்கிற மாட்டுக்கிட்ட என்னான்னு கேட்டா…நேத்தே சொன்னனில்ல..அசால்ட்டா பக்கத்துல போவாதேன்னு. வேட்டையன் சுதாரிச்சுக்கிட்டான் பாரு,”
“கன்னுக்குட்டின்னே பாத்து பழகிருச்சு…நெனப்புல எதையும் வரவிடுதுங்களா…ம்மா.ம்மா..இப்படி கத்தினா என்னான்னு ஓடித்தானே ஆகனும்,”
மருதாயி குனிந்து மெதுவாக நடந்து வந்தாள்.
வேட்டையன் மருதாயி பின்னால் வந்து அவள் கட்டிலின் அருகே நின்று ஈரமான மூக்கை தூக்கி வாலை ஆட்டியது. முன்னும் பின்னுமாக நகர்ந்து பின் கட்டிலுக்கு அடியில் படுத்துக்கொண்டது.
கொம்பால் வயிற்றுப்பகுதியின் வலதுபுற அல்லையின் மேல் தோலை கிழித்துவிட்டிருந்தது. ஈரத்துணியை வைத்தபடி கட்டிலில் அமர்ந்தாள். அவர் அலைபேசியில் உள்ளூர் மருத்துவரிடம் பேசிவிட்டு வைத்தார்.
“இங்கதான் மலையடிவாரத்துல வண்டிய நிறுத்திட்டு நடக்கறதுக்கு வந்திருக்காரு..ஒடனே வந்துறேன்னாரு..வலிக்குதா,”
“ம்….”என்றபடி குனிந்து அமர்ந்தாள். டார்ச்விளக்கை எடுத்துவந்து காயத்தைப் பார்த்துவிட்டு நிமிர்ந்து கிழக்கே பார்த்தார். விடியக்காத்திருந்த வானத்தில் ஒருவிண்மீன் குன்றுக்கு மேலே பளிச்சென்று மின்னியது.
“இந்த வேட்டையன் வேற கன்னுக்குட்டி மேல பாஞ்சுருவானோன்னு பதறிப்போச்சு...”என்று நெஞ்சில் கைவைத்தார்.
“காலையிலேயே வெறும் வயிறு பாருங்க…வலி தாங்கல,”
அவர் வீட்டிற்குள் ஓடிச்சென்று நீராகரத்தை கரைத்து சொம்பில் ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தார்.
“நீங்க மாட்டுடாக்டருக்கு பேசுங்க. இத்தன கோவப்படுற சீவனில்ல..செனஊசிக்குன்னு சொன்னாலும் வரமாட்டுறாங்களே,”என்று சொல்லிவிட்டு நீராகாரத்தை குடித்தாள்.
“நீ கொஞ்சநேரம் பேசாம அசங்கமா படுத்திரு,” என்று சொம்பை வாங்கி கீழே வைத்தார்.
அதற்குள் ஹோமியாபதி மருத்துவர் பாண்டியனின் ஸ்கூட்டி களத்தில் மடங்கி நின்றது. அவர் மருதாயியை கட்டிலில் படுக்க வைத்து காயத்தை மெதுவாக அழுத்திப் பார்த்தார். ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. தண்ணீர் விட்டு காயத்தை கழுவுவதற்காக மோட்டார் பக்கம் அவளை அழைத்து சென்றார்கள்.
“அது கோவமா இருக்கறப்ப போய் வாட்டமா நின்னியோ..”
“எதையோ நெனச்சுக்கிட்டு மறதியா போயிட்டேண்ணே,”
“எல்லா உசுருங்கக்கூடவும் ஒன்னுமண்ணா இருக்கீங்க…அதுகளோட கோவம் என்னன்னு தெரிஞ்சும் கவனமா இல்லாம,”என்றபடி காயத்தை கழுவியப்பின் கட்டிலுக்கு அழைத்துச்சென்று படுக்க வைத்தார்.
ஹீரோ ஹோண்டாவில் கால்நடை மருத்துவர் செல்லய்யா வந்து நின்றார்.
“என்னய்யா நீரு..பசுமாட்ட இப்படி கோவப்படுத்தி வுட்டீரே. மாடு மனுசனுங்க இடுப்புக்கு கீழ தானே குறி வச்சு கொம்பு நீட்டும். இன்னிக்கி தப்பிச்சதே பெரிசு,” என்ற பாண்டியனின் அருகில் செல்லய்யா வந்து நின்றார்.
“ஒருநாள் தவறிபோச்சு சார்..”
“அதத்தான் சொல்றேன்…அதுக்குள்ள மாடு வயித்தகிழிச்சு போட்ருச்சுல்ல,”
“அது கன்னுக்குட்டிங்க,”
“கன்னுக்குட்டியா!” என்று நிமிர்ந்து ராமாயியை பார்த்தார்.
“பின்ன..மகள கட்டிக்குடுத்த ஏக்கத்துல கவுண்டரும் சம்சாரமும் போட்டிப்போட்டு வளத்திருக்காக,”
“அதான்..முட்டி போட்டுருச்சு,” என்று சிரித்தபடி காயத்தை திறந்து பார்த்தார். செல்லய்யா குனிந்து பார்த்துவிட்டு,“பதறிப் போய் வந்தேன். நல்ல வேள..குத்தி போட்ருந்தா சோலி முடிஞ்சுருக்கும்,” என்றபடி பட்டியை நோக்கி நடந்தார்.
மூக்கணாங்கயிற்றோடு கிடுக்குப்பிடி போட்டு முளைக்கட்டையில் சேர்த்துக்கட்டியிருந்ததால் கன்று முகத்தை அன்னாந்து வானத்தப் பார்த்து வைத்திருந்தது.
“வளந்த கன்னுக்குட்டிய பார்க்கறது அத்தனை அம்சம்..சாமிய பாக்கறாப்ல,” என்றார்.
“நீரு தெனமும் பாக்கறதுதானே. இதென்ன அதிசயமா..” என்றபடி பாண்டியன் நிமிர்ந்து பார்த்தார்.
“அதான்யா சொல்றேன்..வளந்த கன்னுக்குட்டி அழகுல தெய்வம்ய்யா.. இது செவலையும் வெள்ளையுமா அம்சமான கன்னுக்குட்டி,”
சூரியஔி எழுந்திருந்தது. கன்றின் அன்னாந்த முகத்தின் விரிந்த கருவரம்பு கண்கள் முட்டை விழிகளாக திறந்திருக்க, பெரிய கரிய விழி மணி விரிந்து அசைந்தது. சூரிய ஔியில் கன்றின் கண்கள் பளபளத்து செல்லய்யாவின் கண்களை கூசச்செய்தது.
“சிவ சிவா….” என்று நெஞ்சில் கைவைத்தார். பின், “காளி..” என்று உடலை ஒருமுறை உலுக்கிக்கொண்டார்.
“என்ன ஒரேடியா ரசிச்சுக்கிட்டிருக்கீரு…வந்த வேலையப்பாரும். உம்மையும் செருகி தூக்கி வீசிறப்போவுது,” என்ற பாண்டியன் தன் மருந்துப்பெட்டியை திறந்தார்.
“ம்மா… நீ பசு. மிஞ்சின கோவங்கறது உன்குணமில்ல,” என்ற செல்லய்யாவையும் கன்றையும் பார்த்து மூவரும் சிரித்தார்கள். கொமாரசாமி செல்லய்யா அருகில் சென்று நின்றார்.
“நீ சிரிக்காத ரத்தம் கசியும்,” என்ற பாண்டியன்,“அதுக்கிட்ட என்ன பேசிக்கிட்டே இருக்கீரு. காட்டுல திரியறத வீட்டுல பிணச்சு கட்டிபோட்டுட்டு… அதுக்கு உண்டான சேவகத்த செய்யாம விட்டா இப்பிடி குத்தித் தூக்காம என்ன பண்ணுவா கவுண்டரே,” என்றார்.
இவள்,“வலிக்குதுண்ணே,”என்றாள்.
“தையல் போடனும். மருப்பூசி போடலாமான்னு பாக்கறேன்,”
“அதெல்லாம் வேணாம்…சும்மா குத்தி தச்சு விடுங்க…”
“இரும்மா..”
“அதெல்லாம் அசங்கமாட்டேன். நெதமும் கல்லும் மண்ணும் மரமும் மட்டையும் ஒடம்ப சேதப்படுத்தாமையா இருக்கு..”
“மனுசர தொட்டு நாடிப்பிடிச்சு பாக்கறத்துக்கே உமக்கு இத்தன குழப்பமா இருக்கே…நானு தினமும் மிருகத்தத்தொட்டு பழகி வைத்தியம் பண்றேன்..உமக்கு இருக்கிற மரியாத எனக்கில்ல பாரும்,”
“நீங்க வேற…மனுசனும் மிருகந்தான்..” என்று நிறுத்திவிட்டு கொமாரசாமியை பார்த்து,“என்ன சிலசமயம் கட்டுக்குள்ள நிக்கத்தெரியும். என்ன கவுண்டரே.. நாஞ்சொல்றது சரிதானே,”
அவர் அமைதியாக நின்றார்.
“உம்ம பங்காளிகளோட பெருமாள் நாயக்கர் வயலுக்கு போறீராமே..கேள்விப்பட்டேன். அவரப் பிடிக்காத எவனோ ஒருத்தன் உம்ம மீறி அவர அசிங்கபடுத்திட்டா என்ன பண்ணுவீரு,”
“ஆமா...அங்கேயும் அவிங்க ஆளுக நின்னா நீரு என்ன பண்ணுவீரு. அண்ணன் தம்பிக்குள்ள சொத்து பிரிக்கறப்ப நமக்கு பிடிச்ச வயலோ, வீடோ இன்னொருத்தருதுன்னு ஆயிடறதில்லையா..பெறந்ததுலருந்து நம்மளுதா இருந்ததே மாறிப்போகுதுல்ல,” என்ற பாண்டியன் காயத்திற்கு கட்டுபோட்டு முடித்தார்.
“இந்த கன்னுக்குட்டிக்கு கொம்பு சீவிவிட்றாதீங்க கவுண்டரே..இப்பவே முட்டி பாத்திருச்சுல்ல,” என்ற செல்லைய்யா தன் பையை சரி செய்து மூடி கொமாரசாமி கையில் கொடுத்தார்.
ஐந்து சலங்கை கொழுசின் ஒலி களத்தில் தயங்கி நிற்கும் ஓசைக்கேட்டு கொமாரசாமி சட்டென்று நிமிர்ந்தார். சரஸ்வதி கையில் கூடையுடன் களத்து முகப்பில் நின்றாள்
“என்ன கண்ணு…புதுசா அங்கயே நிக்கற..வா,”என்ற கொமாரசாமி வேகமாக வந்து அவள் கையிலிருந்த சோற்றுக்கூடையை வாங்கி திண்ணையில் வைத்தார். கனத்த உடலுடன் நடந்து மருதாயி கட்டிலின் அருகே நின்றாள்.
“இன்னிக்கு வயவேலைக்கு ஆளு வருது மாமா. அதான் வெள்ளனவே சோறாக்கிட்டேன். குழம்பு வைக்கறப்ப தான் மேட்டுக்காட்டு ராமசாமி முருகாயிய கன்னுக்குட்டி லேசா குத்திருச்சு வைத்தியாரு வந்துக்காருன்னு சொன்னாரு. என்ன சொன்னாலும் பரவாயில்லன்னு சோத்த போட்டுக்கிட்டு அவுங்கக்கிட்டகூட சொல்லாம வந்துட்டேன்,”
“இங்க வரதுக்கு உன்ன யாரு என்ன சொல்லுவா,” என்ற மருதாயியிடம்,“மெதுவா…ஆங்கரப்படாத..ரத்தம் கசிஞ்சா நல்லதில்ல,” என்ற பண்டியன் புன்னகைத்தபடி நகர்ந்தார்.
கொமாரசாமி அமைதியாக குனிந்துகொண்டார்.
“மாமா….அவரு மேல தப்பில்ல. நான் தான் தலமுற தலமுறயா வச்சிருந்த நெலம். நம்ம ரெண்டுபேரும் கையெடுத்து குடுத்தோன்னு ஆக வேணாண்னு சொல்லி அவரு மனச கலச்சிட்டேன்…”
சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். குருவி காக்கை மைனா என்று பறவைகளின் குரல்கள் தனித்தனியாக வயல் வெளியெங்கும் கேட்டன.
“அச்சார காசு வாங்குன பிறவுதான் மனசு பதைச்சு உதைக்குது..என்ன செய்ய சொல்றீங்க. மாமாக்கிட்ட தானே கேட்டுபாக்கலான்னு சொன்னேன்.அதுக்குள்ள யாரோ பேச்சுவாக்குல உங்கக்கிட்ட கொண்டாந்துட்டாங்க…உங்களுக்கு வேணுன்னா வச்சுக்குங்க மாமா,”என்ற சரஸ்வதியின் கண்கள் கலங்க சட்டென்று முந்தானையால் துடைத்துக்கொண்டாள்.
“அழுவாத கண்ணு,” என்றவர் கிழக்குபக்கமாக திரும்பிக்கொண்டார்.
“கோமதிக்கு போன் பண்ணியா..மாப்பிள்ள நல்லாயிருக்கரா,”என்று மருதாயி கோமதியிடம் பேச்சைத் தொடங்கினாள்.
“இதுக்குதான் பேசறவங்க வந்து பேசனும். நம்மெல்லாம் சும்மா சார்…”
என்று பேசியபடி மருத்துவர்கள் இருவரும் மோட்டார் நீரில் கைக்கால்களை கழுவிக் கொண்டிருந்தார்கள்.
வேட்டயன் மெல்ல எழுந்து ராமாயியின் எல்லையில் அமர்ந்து கண்களை இடுக்கிப்பார்த்து மெல்ல குரல் எழுப்பினான். ராமாயி நிமிர்ந்து பார்த்தது. பச்சை மலையின் குன்றுகளுக்கு பின்னிருந்து சூரியன் சட்டென்று வழக்கம் போல மேலெழுந்தது. நெற்றி மேல் கைவைத்து சூரியனை பார்த்தபடி, “கெணறு வெட்றப்ப ஊத்து திறக்கறாப்பல தான். அசந்த நேரத்துல குபுக்குன்னு வருவான் பயபுள்ள,”என்று சிரித்தார்.
Comments
Post a Comment