ஜூலை 25, 2021 சொல்வனம் இதழில் வெளியான சிறுகதை
அமுதம்
அந்தியின் மஞ்சள் எரியும் நேரம். இன்று ஏனோ தெருவே மஞ்சளாய் கலங்கிக்கொண்டிருந்தது. “ஊர்மேல மாரியம்மன் சேலயை விரிச்சுவிட்டாப்ல…”என்ற பார்வதி வானத்திலிருந்து கண்ணெடுத்துக்கொண்டாள். வீட்டுவாசல்படிக்கு இருபுறமிருந்த மண்திண்ணைகளின் இடைவெளியில் சாணி மெழுகிய தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்து அரிசி களைந்து கொண்டிருந்தாள். ஈயக்கிண்ணத்தில் கண்ணாடிவளையல்கள் உராயும் ஒலி ஒருதாளம் போல சீராகக்கேட்டது.
“சித்திரமாச அனல் அவிஞ்சு வைகாசி பெறந்திருச்சுல்ல… மெதுவா காத்தும் மழயும் எந்திரிக்கும். ஆகாசம் இப்படி சாயங்காலமா செத்தநேரம் மஞ்சக்கட்டும்…கொத்தம்பட்டியில…” என்ற அவள் பேச்சை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தாள். வெள்ளையன் அசையாமல் வலதுத்திண்ணையில் படுத்திருந்தார். வட்டக்குங்குமம் பளிச்சென்று தெரியும் சிவந்த முகம் கோபத்தால் மேலும் சுருங்கியது.
இத்தனை பெரிய பொட்டு வைக்கும் பழக்கத்தை யாரிடமிருந்து பழகிக்கொண்டாளோ. அறுபது வயதிலும் வயல்வேலைக்கு செல்லும் இடிபிடி இருந்தாலும் இதற்கென்று கண்ணாடிமுன் நிற்க பொறுமை இருப்பது ஆச்சர்யம்தான்.
“நானா பேசிக்கிட்டுருக்கேன்…உம் கொட்டி கேட்டா என்ன?”
“கேக்குது பார்வதி. நீ சொல்லறத சொல்லு. மனசுக்கு என்னமோ திடுக்குன்னு இருக்கு… பதச்சு வருது…”என்றபடி திண்ணையில் தலைசாய்த்தார். கண்கள் மீது இடது கையை வைத்து மறைத்துக்கொண்டார். தூயவெள்ளையான தாடியை வலதுகை தடவிக்கொண்டிருந்தது.
“கொத்தம்பட்டியில சின்னப்பிள்ளையில நானும் அம்மாவும் ஆடு ஓட்டுவோம். இன்னேரமாத்தான் பட்டியில அடைக்கறது. கரடுபக்கம் நிக்கறப்ப மேலபாக்கற ஆகாசமும் ,நிக்கற நெலமும் இப்படித்தான் நெறம் பெசவும். வெளிச்சத்துக்கு அப்படி ஒருபிடாரித்தனம். மனசு விருக்குன்னு எந்திரிச்சு பதுங்கும். அம்மா சேலையில முடிஞ்சிருக்கற துன்னூற நெத்தியில வச்சுவிடும்…” என்று பேச்சை நிறுத்தினாள். அரிசிக்குண்டானை தள்ளி வைக்கும் ‘மத்’தென்ற சத்தம் கேட்டது.
“மேலசொல்லு…”
“சித்திரமாசம் பச்சப்பட்டினி விரதம் முடிச்ச சமயபுர மாரியாத்தா வைகாசியில பச்ச சேலைக்கு மாறுமாம். மத்த மாசத்துல மழயா மட்டும் இருக்கற மாரியாத்தா, இந்தமாசம் மண்ணாவும் மழயாவும் இருப்பாளாம்…”என்றபடி பார்வதி கழனித்தண்ணீர் குண்டானுடன் எழுந்து பின்பக்கசுவரில் சாய்த்திருந்த கழனிப்பானை பக்கம் சென்றாள்.
மெல்ல மஞ்சள் மறைந்து இருள் சூழும் நேரத்தில் தடதட வென்று அந்த சந்துப்பகுதியை அதிரவைத்தபடி ஊதாநிற பஜாஜ் பிளாட்டினா ஹன்றட் உறுமி நின்றது.
வெள்ளையன் மனம் தடதடத்தது. இது அவன் வண்டி போடற அரக்கச் சத்தம். இதை எதிர்பார்த்துதான் அவர் மனசுக்குள் இத்தனை படபடப்பு. இந்த வானமும் சேர்ந்துகிட்டு அவர் நெஞ்சுக்குலையை பதறவிட்டு வேடிக்கைக்காட்டிவிட்டது.
தனபால் வண்டியை நிறுத்திய உடனே பின்னால் அமர்ந்திருந்தவன் வண்டியிலிருந்து பிச்சையம்மாளை தூக்கினான். ஒருமாதத்தில் குருவிகுஞ்சு போல ஆள் குறுகிவிட்டாள். சிவந்தமேனி சுருங்கி குரலின் கம்பீரம் கரகரப்பாகி ‘நம்ம பிச்சியா இவள்!’ என்று மலைக்கிறது அவர் மனசு.
“டேய்…கீழ போட்றாதடா…முன்னமே சப்பை நழுவிக்கெடக்குறவடா…” என்று வெள்ளையன் கத்தி முடிப்பதற்குள் வண்டியை நிறுத்திய தனபால் அவர் கன்னத்தில் அறைந்தான்.
அவன் கூட்டாளி தள்ளாடியபடி பிச்சையம்மாளை திண்ணையில் கிடத்தினான். திண்ணையிலிருந்து வலியுடன் திரும்பிய அவள் கண்கள் தனபாலை பார்த்து சீறியது. அதை தாளமுடியாது அவன் கத்தத்தொடங்கினான்.
“காலுஒடஞ்சதக் கொண்டாந்து எங்க வூட்டுப்பக்கமா போட்டுட்டு வந்துட்ட…எங்குடும்பம் நிம்மதியா இருக்கறது புடிக்கலயா…நீ மட்டும் இந்த வயசுல உம்பொண்டாட்டியும் நீயுமா இருப்பீங்க…நாங்க இதுக்கு சவரட்டன செஞ்சி சீப்படுடனுமா,”
அவர் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது. பிடிமானத்திற்காக தலைகுனிந்தபடி அருகிலிருந்த கம்பத்தை பற்றிக்கொண்டார்.
வீட்டின் பின்னால் முருங்கைக்காய் பறிக்கச் சென்ற பார்வதி அரவம் கேட்டு ஓடிவந்து,“டேய்…உன்னப்பெத்தவடா நானு. நாரத்தண்ணியகுடிச்சா பெத்தவக்கூட பொம்பளையா மட்டுந்தான் தெரிவாளா…அவதான் என்னிய வயல்ல கொண்டுபோய் போட்டுருங்கன்னா. அதுக்கு உங்கப்பன ஏண்டா அடிச்ச…அவரு எங்கூட இருக்காம உங்களுக்கே பண்ணையாளு வேல செஞ்சுக்கிட்டு வயல்லயே கிடக்கனுமா…” என்று அவன் சட்டையைப் பிடித்தாள்.
“இன்னொரு பேச்சு பேசுன உம்புருசனுக்கு விழுந்தது உனக்கும் விழும்,” என்று அவள் கையை தள்ளிவிட்டான்.
“இங்கபாரு… எப்ப நீ கையஓங்குனயோ…நாளயிலருந்து உங்கப்பன வயலுக்கு விடமாட்டேன். சொத்துபிரிக்கறப்ப சொந்த பந்தத்த வச்சி பேசினபடிக்கு, மூணுபேரும் நெல்லும் பணமும் பிள்ளைங்கக்கிட்ட குடுத்தனுப்புங்க. இந்தவாசப்படிக்கு இன்னொருவாட்டி நீ வந்துநின்னா காலவெட்டி அடுப்புல வச்சிருவன்…பெத்ததகப்பன கைஒங்கற நீ..இருடா. சாதிசனத்த கூப்புட்டு உன்ன என்ன பண்றேன் பாரு. அங்கவந்து பதில் சொல்லு…இந்த ஜீவனுக்கு உண்டான நெல்லும் சேத்து வந்திருக்கனும் …” என்று பிச்சையம்மாளை கைக்காட்டினாள். கூட்டம் கூடியதால் தனபால் கூட்டாளியுடன் வண்டியில் ஏறி மறைந்தான்.
அவர் தெருசனங்கள் முகத்தை பார்க்கமுடியாதவராக தலையை குனிந்தபடி திண்ணை ஓரத்தில் பிச்சையம்மாளின் கால்களுக்கு பக்கத்தில் அமர்ந்தார். அவர் கால்களும் தலையும் நடுங்கிக்கொண்டிருந்தன. கன்னத்தில் வீர் றென்று பரவிய வலி காதுகளையும் அடைத்தது.
“ஒரு கெட்டப்பழக்கமில்லாத மனுசருக்கு பிள்ளையப்பாரு…சீண்றம்…மனுசரு சம்பாதிச்ச நல்லப்பேர அழிக்கறதுக்குன்னே விதி வந்து பிள்ளையா பெறந்திருக்கு. கெழவி பசியோட கெடக்குதோ என்னமோ...பாத்து எதாச்சும் குடு,”என்ற அடுத்தவீட்டு பூஞ்சோலை வீட்டினுள் சென்றாள்.
“அது ஒன்னுதான் கொறச்சல்,”என்றபடி பார்வதி கீழே விழுந்த முருங்கைக்காய்கள் எடுத்துக்கொண்டு அடுத்தத் திண்ணையில் மூச்சுவாங்க அமர்ந்தாள்.
பக்கத்துவீட்டுப்பிள்ளை கூட்டத்திலிருந்து பிரிந்து தன்வீட்டிற்கு ஓடினாள். தாவணிபாவாடையை ஏற்றி செறுகியபடி செம்பில் மோர் எடுத்துவந்தாள்.
“இந்த மோரக் குடித் தாத்தா…”என்றபடி திண்ணை ஓரத்தில் அமர்ந்தாள். அதற்குள் வெள்ளையம்மா எழுந்து சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். இருவருக்கும் மோர்க்குடிக்கவும் கண்கள் தெளிந்து எழுந்தன. பார்வதி உள்ளே சென்றாள்.
தெருவிளக்குகள் எரியத்தொடங்கி இருள்கவிந்தது. தெருவில் ஆள்நடமாட்டம் குறைந்தது. பிச்சையம்மாள் எதுவும் பேசாமல் வெகுநேரம் வலியுடன் படுத்துக்கிடந்தாள். அவர் உள்ளே சென்று வடித்தக்கஞ்சியில் உப்பு போட்டு எடுத்துவந்தார்.
மறுதலிக்கும் பிச்சையம்மாளை தட்டிக்கொடுத்து நடுங்கும் கைகளால் நிமிர்த்தி அமர்த்தினார். வீட்டின் பக்கவாட்டு சுவரில் சாய்க்கப்படிருந்த தென்னம்படலை எடுத்து வந்து அவள் கால்களுக்கு மறைவாக வைத்தார்.
அவள் கஞ்சிகுடித்து முடிக்கும்வரை தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
“ரொம்ப வலியா பிச்சி…”
“எடக்கு மொடக்கா தூக்கி வண்டியில ஏத்துனதுல மறுபடியும் காலு வலியெடுத்துருச்சு…இப்ப முணுக்கு முணுக்குன்னு இருக்கு...”
“காத்தாலருந்து வயித்துக்கு எதாச்சும் குடுத்தானுங்களா…”
பிச்சையம்மாள் தலைகுனிந்து கொண்டாள்.
“மவனுங்க பாத்துக்குவானுங்க. என்னிய கொண்டு கொட்டாயில போட்ருன்னயே…”
“இங்கருந்து ஏரிக்கரைக்கு காரத்தட்டை மணலோட நீ தூக்கிட்டு போறத பாக்க சயிக்கல…வயப்பக்கமா போயிட்டா யாருக்கும் நரகல அள்ற கஷ்ட்டமில்லன்னு நெனச்சேன் …”
“அதுகளுக்கு கல்யாணம், பிள்ளப்பேறு…வயசுக்குவந்ததுன்னு எத்தன பாத்திருப்ப…”
“ஆயிஅப்பன மீறி வயசுப் பிள்ளைக என்னப்பண்ணும்…அதுகளுக்கு என்னத்தெரியும்…”
நிலா வெளிச்சத்தில் தெருவில் பிள்ளைகள் நொண்டி விளையாடிக் கொண்டிருந்தன.
“பேச ஆரமிச்சா என்னத்ததான் பேசுவாய்களோ…கட்டுன காலத்துலருந்து பாக்கறேன். இன்னும் பேச்சு முடியல…”என்றபடி பார்வதி சருவத்துடன் தெருமுடக்கு குழாய் பக்கமாக நடந்தாள்.
இருவரும் பேச்சில்லாமல் வெறுமே ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு தெருப்பக்கமாக திரும்பினார்கள்.
இவர்கள் இருவரும் சேர்ந்து மண்குழைத்து கட்டிய இதே திண்ணையில் அமர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கு முன் இவர் இவளிடம்,“எனக்கு இன்னொரு தாரத்துல இஷ்ட்டமில்ல பிச்சி…என்னிய நிம்மதியில்லாம ஆக்காத…” என்றார்.
“அப்பிடி சொல்லாத மாமா…இனிமே எனக்கு பிள்ள உண்டாகுன்னு தோணல. உனக்கு ஒரு பிள்ளை பெறந்தா எனக்கும் பிள்ள இல்லைங்கற குறை மாறிப்போவும்…”
“உன்ன மாறி வருமா…”
“கட்றவரைக்குந்தான் மனசுக்கு சஞ்சலம்…என்னையாட்டமே பாக்கறனே…ஒத்துக்க…”
“என்னன்னாலும் நீ என்னியவிட்டுட்டு போவமாட்டியே…”
அவர் கையைப்பிடித்து உறுதிகொடுத்த கையோடு தூரத்து உறவுப்பிள்ளையான பார்வதியை கட்டிவைத்தாள். நல்ல அழகி. அவள் ஒன்றே ஒன்றுதான் கேட்டாள். “கல்யாணம்ன்னு ஆயிட்டா நான் ஒருத்திதாக்கா அவருக்கு பொண்டாட்டியா வாழனும். உன்னைய பிரிச்சுவிடல. ஆனா நான் இப்படிதான்,” என்றாள். பிச்சையம்மாள் தலையாட்டினாள்.
அவர்களுக்கு கல்யாணமான அன்று இரவே பிச்சி தட்டுக்கூடையில் சோறு குழம்பு சட்டிகளுடன் வயலிற்கு நடையைக் கட்டினாள். ஆடுமாடுகள் கட்டும் நீண்ட கொட்டாயின் கிழக்குபார்த்த ஓரத்தில் தென்னம்மட்டைகளை மறைப்பாக வைத்து பின்னினாள். கூப்பிடும் தொலைவில் இருந்த பக்கத்து வயல் வள்ளியம்மை அவள் வயலில்கிடந்த பின்னியமட்டைகளை கொண்டுவந்து போட்டுவிட்டு கூடமாட வேலைசெய்தாள். ராத்திரி சோறு கொண்டுவந்து வைத்துவிட்டு போனாள். மகராசி அன்றிலிருந்து கட்டையில் வேகும்வரை ஒருவார்த்தை என்னாச்சுக்கா என்று கேட்டதில்லை. பிச்சியாக எதாச்சும் சொன்னால் தலையாட்டிக்கொள்வாள்.
“மாமனுக்குன்னு பிள்ளக்குட்டி உண்டாயி, இந்த ஊரோட நின்னு பொழக்கனும், ஒரு ஆளா எந்திரிச்சு நிக்கனும் வள்ளியம்ம. என்னால அது பொழப்பு நின்னுப்போச்சுன்னா நானு இருந்துதான் என்ன பிரயோசனம் சொல்லு …வீடு வெறிச்சோன்னு கெடக்கு. பிள்ளக்குட்டியோட சத்தம் கேக்கட்டும். இந்த வயல்லக்கெடந்து என்னால ஆனமட்டும் அது செமக்குற செமைக்கு முட்டுக்கொடுக்கறேன்…”
“பெரியமாமன அம்புட்டுக்கு புடிக்குமாக்கா…உங்க கொழுந்தன்லாம் அப்படியில்லக்கா. எப்பப்பாரு அந்த கள்ளுக்கட முடக்கு, சாராயம்காச்சுற எடத்துலயே கெடக்கு,”
“பொம்பள சென்மமா பெறந்திட்டமேன்னு எங்கம்மா பொழம்பித்தீக்கும். எனக்கு அப்பிடியில்லடீ…அதுக்குதான் ஆண்டவன் ஒரு பிள்ளய எம்மடியில போடாம வேடிக்கப்பாத்துட்டான். நீ என்னடா என்னிய சோதிக்கறதுன்னு தான் அதுக்கு ரெண்டாம் கல்யாணத்தை பண்ணிவச்சிட்டேன். அவனுக்கு எதிர நின்னுட்டனில்ல…பெரியசாமி வேற. அதான் நீ எப்படி தாங்கறன்னு தலையில அடிச்சிருக்கான்…”
“மனுசருக்கு எத்தன செமை…தூக்க முடியுதோ முடியலயோ…இந்த ஆண்டவன் தூக்கிவச்சுட்டு அவன் வேலய முடிச்சுடுறான்…”
அன்றிலிருந்து வள்ளியம்மா கூடப்பிறந்தவளாக இருந்தாள். வயல்பாதையில் வெள்ளையனை கண்டுவிட்டால்,“எம்மாமன் வருதுக்கா…” என்று தூரத்திலிருந்தே குரல் கொடுப்பாள்.
பிச்சி வீட்டிலிருந்து வெளியேறி வயலுக்கு வந்த அன்று விடிந்தும் விடியாததுமாக வயலிற்கு வந்த வெள்ளையன் கொட்டாய்க்கு வெளியே குத்துகாலிட்டு அமர்ந்திருந்தார்.
“என்ன வேல செஞ்ச நீ…இப்பிடின்னா எனக்கெதுக்கு இந்தக்கல்யாணம்…கழுத்தறுத்துட்டியே பிச்சி…”
“அதனால என்ன மாமா. பார்வதி நல்லப்பிள்ள…உன்னிய முழுசா அத்துவிடுன்னு கேக்கலியே…எல்லா பிள்ளைகளுக்கும் உள்ளது தானே…”என்று அந்தப்பேச்சை அதோடு அறுத்துவிட்டாள்.
பிச்சையம்மா மண்ணோடும், பசுவோடும், ஆட்டுமந்தையோடும், வெயிலோடும், மழையோடும் கிடந்தாள். அடுத்தடுத்த பெற்றதும், இறந்ததும், இருந்ததுமாக நான்கைந்து பிள்ளைப்பேறில் களைத்திருந்த பார்வதியிடமிருந்து பிள்ளைகள் இவளின் மடிக்குத்தாவின. பயல்கள் வளர்ந்ததும் கொட்டாய் பற்றாமலாகி பக்கத்தில் வீடுகட்டிக்கொண்டார்கள். அவள் கொட்டாயை திருத்தினாளே தவிர மாற்றிக்கட்டவில்லை. வயலில் புஞ்சை வெள்ளாமையில் கிடந்தும்,கூலி வேலைக்கு சென்றும் வெள்ளையன் ஒருபக்கம் வீட்டுசெலவை நடத்தினார்.
காசு பணம் வரவு செலவுகள் குடும்பநிர்வாகம் அனைத்தையும் பிச்சி அத்துபடியாக்கிக்கொண்டாள். ஆடு மாடு கோழிகளை பெருக்கினாள். ஆடுகளும் பசுக்களும்தான் அவள் சக்கரங்களின் அச்சாணிகள். குட்டிகளாக வாங்கி வளர்ப்பது. அதுபோடும் குட்டிகளை வைத்துக்கொண்டு ஆடுகளை விற்பது என்று ஆடு மாடுகளை வளர்த்து வளர்த்து அதுகளின் ஒருசத்ததிற்கே பசியா, தாகமா, பயமா, ஈனப்போகிறதா என்று புரிந்து கொள்வாள்.
ஒருமுறை முளைக்குச்சியை பிடுங்கிக்கொண்டு துள்ளிய ஓடிய கன்றின் பின்னால் ஓடிய பசு தவறி கிணற்றில் விழுந்துவிட்டது. மைவரியிட்ட குண்டுமணிகள் விரிந்து பதற அடிக்குரலில், “ம்மா…ம்மாமா….”என்று அழைத்துக்கொண்டே கிணற்றினுள் பசு முன்னும் பின்னும் அலைமோதியது. கிணற்றுமேட்டில் கட்டப்பட்டிருந்த கன்று ஏதோ தவறு நடந்ததை உணர்ந்து ஒரேகூச்சலும்,தாவலுமாக கயிற்றை பிய்த்துக்கொண்டு பறக்கப்போவதைப் போன்று கட்டியிருந்த முளைகுச்சியுடனும் கயிற்றுடனும் போராடிக்கொண்டிருந்தது.
பிச்சி கிணற்றுமேட்டில் மண்டியிட்டு அமர்ந்து குனிந்து நெஞ்சில் கைவைத்து, “ஏய் ராமாயி… ஆத்தா இங்கருக்கேண்டீ…ஒன்னுமில்ல. என்னிய பாரு…எங்கம்மால்லடீ நீ…பதறாத…உம்பிள்ள அங்கதாண்டி இருக்கான்,”என்று பேசபேச பசு அமைதியாகி கிணற்று நீரில் சுற்றி வந்தது. நெற்றியில் நீண்ட வெள்ளை கோடும்,நான்கு குளம்புகளுக்கு மேல் கால்முட்டிவரை வெள்ளை நிறமும், மற்ற பாகமெல்லாம் கருத்த நிறமுமான பசு அது. இங்கே கன்றும் மெல்ல நின்று பின் கால்களை மடக்கி முகத்தை நிமிர்த்தி வைத்து படுத்துக்கொண்டது. அதன் செவிகள் மட்டும் வாழைப்பூவின் இதழ்களைப்போல செங்குத்தாக நின்றன. ஏதுமாறியா இருஜீவன்களும் அன்று தங்களின் ஐந்து உயிரையும் அவளின் குரலில் வைத்திருந்தன. பசுவை தூக்கும் ஆட்கள் கிணற்றில் இறங்கும்வரை பதறாமல் பசு கிணற்றுக்குள் சுற்றி வரவர, இவள் கிணற்றின் மேட்டில் சுற்றிவந்தாள்.
வாங்கிய கடனுக்கு வட்டி கொடுப்பது பற்றி எண்ணி எண்ணி மடியில் படுத்திருக்கும் ஆட்டுக்குட்டிகளிடம் சொல்வாள். அவளின் வரவு செலவு கணக்கை ஆடுகளுக்கு வாயிருந்தால் சொல்லிவிடும். வயல்நிலங்களை சிறுக சிறுக வாங்கிச்சேர்த்தாள். அத்தனை முறை சலித்து சலித்து வடிகட்டி பிள்ளைகளுக்கு தன்உழைப்பை சமமாக பாகம் வைப்பாள். ஒருதட்டு தாழ்ந்தாலும் எதையாவது வைத்து ஈடுகட்டுவாளே தவிர, முன்தட்டில் வைத்ததை எடுக்க மனமில்லாமல் புலம்புவாள்.
அன்று ஆட்டை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு நுணா மரத்தடியில் அவருடன் அமர்ந்து பிள்ளைகளின் கல்யாணம், சீர்வரிசை, பேத்திக்கல்யாணம் என்று கணக்கு வழக்கு பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஏம்புள்ள…நெசமாவே இத்தனைக்கு வெள்ளையா உன்னால இருக்கமுடியுதா?”
“என்னத்த கேக்கற…”
“வெறுப்பா…சலிப்பா..எரிச்சலா…ஆத்தாமையா வரலியா...”
அவள் சிரித்தாள். அந்தப் பின்காலையில் அவர்கள் முன்னால் விரிந்திருந்த மேட்டாங்காட்டில் பசுக்களும்,கன்றுகளும்,ஆடுகளும்,குட்டிகளும்,ஒதுக்குபுறமாக கோழிகளும் மேய்ச்சலில் இருந்தன.
“சொல்றதுக்கு சங்கடம்ன்னா விடு பிச்சி…”
“நீ கேட்டு சொல்லாமையா…எப்பிடி சொல்றதுன்னுதான். ஒனக்கு வெளங்குமான்னு….”
“……”
“உன்னவிட்டு, ஊர விட்டு இந்த கரட்டுமேட்டுக்கு வந்தனே எதுக்குன்னு நெனக்கிற. பார்வதியாலயா... அவளால இல்ல. என்னோட விதியோட மல்லுக்கு நிக்க வந்தனாக்கும்…பெரியண்ணசாமி எங்கணக்க சரியா எழுதல. அது முன்னால சரியா இருந்து காட்டனுன்னு ஒரு ஆவேசம்…அதான்,”
வெள்ளையன் சூரியவெளிச்சத்தில் ஔிரும் அவளின் ஈரவிழிகளையே பார்த்துக்கொண்டிருந்தார்.
அவள் கொட்டாய்க்கு வந்த நாட்களில் அழுது கொண்டேயிருந்தாள். இங்கு அழுவதை மறைக்கக்கூட தேவையில்லை. அழுகை வற்றிய நாட்களில் ஊரின் பேச்சுக்கள் கேட்காத தொலைவில் அவள் மனசின் ஆற்றாமையும் அலைச்சலும் ஓய்ந்தன. மெல்ல மெல்ல காத்திருத்தலின் அள்ள அள்ள குறையாத ருசியை அவள் மனம் பிடித்துக்கொண்டது.
பிள்ளைகள் கல்யாணம் காட்சிகளுக்கு அவள்சேமித்த பணம், அவர்பணமா மாறி அவர் நிமிர்ந்து நின்றார். பிள்ளைகளின் கல்யாண விசேசங்களுக்கும் அவள் வரவில்லை.
முதல்பிள்ளை கல்யாணத்திற்கு முதல்நாள் காலையில்,“நீ எங்கியுமே போறதில்லயே. கல்யாணத்துக்காச்சும் வா…வயலுக்கு ஒரு ஆள வச்சிட்டு போவோம்…”என்றார்
“இல்ல மாமா…பார்வதி இருக்கால்ல…நா இங்கனைய இருந்துக்குறேனே…நீ மனசுகுறையில்லாம செஞ்சுட்டு வா…சாயங்காலமா நீ புதுச்சட்ட வேட்டியோட இங்கன ஒருதரம் எட்டிப்பாத்தா போதும்…”
அவர் எப்போதோ அவளை மீறவே முடியாதவராகியிருந்தார். அது அவருக்கே எரிச்சலாக இருக்கும். அதுதாங்கமுடியாத சமயங்களில் அவர் கூட்டாளி சின்னய்யனிடம் புலம்புவார்.
“பார்வதி ஒருப்பக்கம் வம்பும், சண்டையும், அழுவையும் ஆத்தாமையுமா, கொஞ்சலும் கெஞ்சலுமா அய்ப்பசி அடமழய்யா... இந்த இவ இருக்கால்லா…பிச்சி. அவ எங்கியோ இருந்து தொட்டுப்பாக்கற சாயுங்கால வெளிச்சம். மனசை பிடிச்சு குலையறுக்குறாடா பிடாரி. பிடாரி கண்ணுல விழுந்தவன ரத்தம் பார்க்காம விடாதும்பாங்க. அது சரியாதாய்யா இருக்கு. ஒரு சொல்லு மீற முடியல. தொலைக்கவும் முடியல. மறஞ்சு நிக்கற நிலத்தடி ஊத்து கணக்கா கூடவே இருக்கா. அந்த சலசலப்பும் ஈரமும் உள்ளுக்குள்ள இருந்துக்கிட்ட இருக்கிற தொந்தரவுய்யா…”
“எதுக்கு மாப்ள இத்தன வெசனம்…நல்ல பொண்டாட்டிக ஒனக்கு …”
“நீ வேறய்யா…எந்தப்பிறவியில பிள்ளசெத்த பசுவுக்கு கூலத்த காட்டி பால்பீய்ச்சுன பாவத்த செஞ்சனோ… இந்தப்பிறவியில இவள கண்ணுமுன்ன நிறுத்தி விதி வேடிக்க பாக்குது. பேசாம பார்வதியோட வீட்டோட இருந்துட்டா ஒன்னுமில்ல. இவ ஏன் வயப்பக்கம் வரலன்னும் கேக்க மாட்டா…வானத்தயும் பூமியவும் பாத்துக்கிட்டு இருந்துருவா…நம்ம காலுதான் நம்மபேச்சக்கேக்க மாட்டுது…சனியன்…”
சின்னையன் எதுவும் சொல்லாமல் சிரித்துக்கொள்வார். பின் மெதுவாக, “வயலுக்கு போயி எத்தன நாளாச்சு மாப்ள…”என்றார்.
“நாலுநாளு இருக்கும்ய்யா…உங்கூடவேதாய்யா வரப்புவெட்டு,வாய்க்கா சீவறதுக்குன்னு அலையறேன்…”
“சரி…வேலை முடிஞ்சதும் மலைக்காம சைக்கிள தெக்குபக்கமா மிதி. வயலுக்கு போயி ஆட்ட மாட்ட அப்படியே மனுசரையும் பாத்துட்டு வந்துறலாம்…நானும் பிச்சிய பாத்து மாசக்கணக்காவுது,” என்று தோளில் தட்டி கிளப்புவார்.
வாங்கிய கடனை தீர்க்க அல்லது புதிதாக கடன்வாங்குவற்காக தான் அவள் ஊருக்குள் வருவாள். அவரைவிட அவளை நம்பி பணம் கொடுக்க ஆட்களிருந்தார்கள். பழைய ஆட்களை மட்டும் தான் அவளுக்குத் தெரியும். மகன் வயதில் உள்ளவர்கள், பேரப்பிள்ளைகள் வயதுஒத்தவர்களை அவளுக்குத் தெரியாது. அவள் அந்த வயல்வரப்பில், பாறைநிழலில், ஆடுமாடு கோழிகளுடன் இருந்தாள். மூன்றுபயல்களுக்கும் கல்யாணம் முடிந்ததும் ,நான்கு ஆடுகளையும்,ஒருபசுவையும் அவளுக்காக வைத்துக்கொண்டு நிலபுலன்களை பிள்ளைகளுக்கு கைமாற்றிவிட்டாள்.
பங்குனி அமாவாசை அன்று ஆட்டை இழுத்துக்கொண்டு வரப்பை தாண்டும் போது விழுந்தவளின் சப்பை நழுவி விட்டது. ஆடுகளின் கத்தலில் பதறி ஓடிவந்த பெரியவன் அவளைத் தூக்கி கொட்டாயில் போட்டான். விழுந்தவள் எழுந்திருக்க மாட்டாள் என்று இந்த ஒருமாத வைத்தியத்தில் தெரிந்ததும் எத்தனை சங்கடங்கள். இவளை அப்படியே விட்டுவைக்கவா விதி நிற்கும்.
ஊர் ஒய்ந்து உறங்கத்தொடங்கியது. பார்வதி ஆக்கிய சோற்றை தின்றுவிட்டு அடுத்தத்திண்ணையில் பாயை விரித்தாள். நாற்று பறிக்க சென்ற களைப்பில் படுக்கையில் விழுந்ததும் உறங்கிவிட்டாள். அவருக்கும் பகலெல்லாம் வயலிற்கு சேடை அடிக்க நின்றதால் கால்கள் விண்விண் என்று தெறித்தன.
என்றாலும் பிச்சியுடன் உட்கார்ந்து வானம் பார்த்தார். வைகாசி முழுநிலா வெளிச்சம் பளீரென்று இருந்தது. வீட்டுக்கூறைகளின் நிழல் தெருவில் வரிசைக்கட்டி விழுந்திருந்தன.
“ஒன்னு தெரிஞ்சுக்கிட்டேன் …”
இவள் குரல் எத்தனை உள்ளுக்குள் கேட்கிறது.
“பிள்ளைன்னா தான் பெத்தாதான்னு தெரிஞ்சிருச்சா..”
“அதில்ல…”
“இன்னுமா தெரியல…பிச்சி ங்கறது சரிதாம்,”
அவள் சிரித்தாள்.
“எனக்கு ரெண்டாம் கல்யாணம் பண்ணிவச்சு கஷ்ட்டத்துல விட்டுட்டீன்னா…”
“இதுங்கெல்லாம் இல்லாம இந்த கெம்பியம்பட்டியில நீயும் ஒரு மனுசன்னு நிக்க முடியுமா…”
“பின்ன என்ன…”
“நாம கசந்து போயிறல பாத்தியா…”
“இப்பெல்லாம் உஞ்சொல்லுக்கு எனக்கு பிடிகெடைக்க மாட்டுது பிச்சி…”
“எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்ல்லருந்து உம்முகம் பாக்கறேன்…நாம கசந்து போயிறல,”
இவர் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தார். பின் இருவருமே பேசவில்லை. அவள் கண்அயர்ந்தாள்.
வீட்டில் தினமும் ஓயாமல் இவளால் தான் இந்த கதி என்று சொல்லாத, நினைக்காத, திட்டாத நாள் இல்லை. இவை எதுவும் தெரியாதவளாகவே இருந்துவிட்டாள்.
மெல்ல நிலா நகர்ந்து ஔி கூட்டியது. உறங்குபவளின் நெற்றியில் பொட்டில்லை. காதுகளில் தோடில்லை. ரப்பர் கைவளைக்குக்கூட கைகளுக்கு பாக்கியமில்லை. புறங்கையில் பச்சை குத்தியிருக்கிறாள். பழைய சிவப்புப்புடவை. ஒரு கம்பி வளைமெட்டிக்கும் நினைப்பில்லாமல் போய்விட்டாள். காடு மேடு வயல் வரப்புகளில் நடந்து இறுகிய கால்கள். நகத்தில் மண்ணின் நிறம் ஏறி காவியடித்துக்கிடக்கிறது. மீண்டும் கைகளை உற்றுப்பார்த்தார். தோல் சுருங்கச்சுருக்க சிவந்த நிறம் மாறியிருக்கிறது. பச்சை குத்தியிருக்கும் உருவம் துலங்கவில்லை. அதை உற் றுப்பார்த்தார். நினைவில் தட்டுப்பட்டது பார்வைக்கு மெல்ல துலங்கி வந்தது. முடிக்கப்பெறாத முருகனின் உருவம் அது.
கால்களை அசைத்தாள். வலியிருக்குமோ. நாளைக்கு கால்நீவும் பெரியக்காளை வரச்சொல்ல வேண்டும். கட்டுப்போடும் வைத்தியனை பார்க்க வேண்டும் என்று நினைத்தவராக பாதங்களைப் பார்த்தார். நடந்து நடந்து முரடாகிய பாதங்கள் வெடித்து காய்த்திருந்தன. வெடிப்புகள் மண்புகுந்து கறுத்திருந்தன.
தினப்படி கொட்டாயில் சாயங்காலமோ, காலையிலோ சோறுவடித்ததும் ஒருஆள் சோற்றை தனியே எடுத்து வைத்துவிடுவாள். நேரமானால் தண்ணீரில் அவருக்காக ஊறிக்கொண்டிருக்கும். ஒருநாளும் , “நீ வருவேன்னு நெனச்சேன்…”என்று சொன்னதில்லை. பின் எதற்கு பாதையை பார்த்த நுணாமரத்தடி பாறையே கதியென்று கிடப்பாள் என்று அவளிடம் கேட்கமுடியாது.
அவள் விழித்துக்கொண்டாள்.
“ஒறங்கலயா?”
“கண்ணுகூடல…”
“வயசான கோளாறு…”
நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது. இருவரும் மாற்றி மாற்றி கொட்டாவி விட்டபடி இருந்தார்கள்.
அவள் திண்ணையின் முடிவில் அமர்ந்திருந்த அவரை பார்த்து திரும்பி பேசத்தொடங்கினாள்.
“சாவாம இருக்க பாயாசம் குடிச்ச சாமிங்களுக்கு இப்பிடித்தான் ஒறக்கம் கூடிவராதாம். சின்னபிள்ளையில தொரசாமிஅய்யா எத்தன கதைங்க சொல்லும். அந்த பாயசக்கலயத்த வாங்க நடத்துன கூத்துலதான் ஐயப்பசாமி பெறந்துச்சுன்னு சொல்லுவாரு. மாத்தாந்தாய்க்கு தலநோவுங்கவும் புலிய புடிச்சுட்டு வந்தப் பயல சாமின்னு சொல்லாம என்னன்னு சொல்றது… அம்மாக்காரி ராணியாம்….”என்று கதையை நீட்டிக்கொண்டிருந்தாள். அவள் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. திண்ணையை ஒட்டி வாசலில்கிடந்த கட்டிலில் படுத்தார்.
உறக்கத்தின் ஆழத்தில் , “ஒறங்குய்யா,” என்று அம்மாவின் குரல் கேட்டது. திரும்பி கட்டிலின் ஓரமாக குறுகிப்படுத்துக்கொண்டார். ஆகாயத்தில் நிலா நகர்ந்து கொண்டிருந்தது. நிலமெங்கும் அது ஔியாக பரவியது.
Comments
Post a Comment