எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.
அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள் பதிய செய்துவிடும். பியா தாமஸ் கதாபாத்திரங்களில் நடித்த கௌதம் மற்றும் துளசியின் உடல்மொழி மறக்க முடியாதது. ஏன் சினிமாவை இங்கு கொண்டு வந்து வைக்கிறேன் என்றால் நான் கடல் நாவலை வாசிக்கும் போது இவையெல்லாம் மொழி மூலம் விரியும் கற்பனையை கட்டுப்படுத்தின. அதில் தாமஸாக நடித்திருந்த சிறுவன் அற்புதமாக நடித்திருந்தாலும் நாவல் வாசிப்பில் என்னை அவன் இடையீடு செய்யவில்லை. இயக்குனர் மணிரத்தினத்தின் காட்சிகள் மனதிலும் வாசிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. இப்படி வாசிப்பது எனக்கு புதிது. ஏற்கனவே உள்ள இந்த அறிமுகங்களுடன் கடல் நாவலிற்குள் நுழைந்தேன்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தை தேய்க்கும் படை
என்ற குறளை நாவலில் உணரும் இடத்தில் நாவல் தன் முடிச்சுகளை போடத்துவங்குகிறது. அம்பை அஸ்தினபுரியின் அரண்மனை முற்றத்தில் நிற்கும் தருணத்திற்கு நிகரான தருணம். பாரதூரமான வித்தியாசங்கள் இருந்தாலும் தருணங்களும் கண்ணீரும் ஆற்றாது வரும் இடங்கள் தொடர்ந்து இலக்கியத்தின் விசையாக இருக்கிறது.
தங்கத்தொட்டிலில் சீராட்டப்பட்டு வளர்க்கப்படும் சிறுவன் சாமுவேலின் மனதில் அவன் காணும் அப்பாவின் சிறுமையும், அதில் உள்ள வன்முறையும், ஆணவமும் ,ஒரு சின்னஞ்சிறு உயிரின் துடிப்பும் ஆழமான காயமாக விழுகிறது. உள்ளம் உடலை பாதிக்கும் அளவிற்கான காயம். புத்தர் முதன்முதலாக உலகத்துயரங்களை பார்க்கும் தருணத்திற்கு இணையான தருணம்.
இந்த உணர்விலிருந்தே ஞானத்திற்கான தேடல் தொடங்குகிறது. அதை கருணை என்றும் அன்பென்றும் நாம் கூறுகிறோம். அதை அன்பு என்று சொல்லும் போது தண்மையாக உணர்கிறோம்.
ஆனால் compassion என்பது மிகவும் கொந்தளிப்பான வலி மிக்க துயரமாகவே மனதில் தோன்றுகிறது. அன்பு அதன் உச்ச நிலையில் கொந்தளிப்பானதாக ஆகிறது. பொங்கும் பால் மீது குளிர்ந்த நீரை தெளிப்பதைப்போல இந்த இரண்டிற்கும் சமனப்படுத்தும் இன்னொன்று தேவைப்படுகிறது. அதற்கான தேடலாக நான் கடல் நாவலை பார்க்கிறேன்.
அது என்னவாக இருக்கலாம் என்று நாவல் முழுவதும் வாசிக்கும் நாமும் தட்டுத்தடுமாறி தேடுகிறோம். மனித மனதின் வேகத்தை சொல்வதில் கடல் நாவல் அதற்கான உச்சத்தை தொடுவதை நாவல் வாசிப்பனுபவத்தின் மிகச்சிறந்த கூறாக சொல்லலாம். அதற்காகவே நாவலை வேறு தர்க்கங்களுக்குள் செல்லாமல் வாசிக்கலாம்.
அன்பு, கருணை, இருள், ஔி, கீழ்மை என்று எந்த உணர்வு என்றாலும் இந்த நாவலில் ஒரு பேரைலை போல ஒரு உச்சத்திற்கு சென்று தணிகிறது. உதாரணத்திற்கு துறவில் உள்ள கூர்த்தன்மையை நாவல் காட்டும் தருணம். ஃபாதர் சாமிடம் குற்றம் செய்த பெர்மான்ஸ் கெஞ்சும் இரவு.
இந்த நாவலில் கடல் படிமமாகி நாவலின் உணர்வு தளத்தை நம்முள் எளிதாக கடத்திவிடுகிறது. வலுவான படிமத்தால் உண்டாகும் வாசிப்பனுபவத்தின் பரவசத்தை உணரமுடிகிறது.
நாவலின் சில இடங்களுக்குள் நம்மால் செல்ல முடியவில்லை என்றாலும் கூட ஒட்டு மொத்தமாக நாவலின் பேசு பொருள் சார்ந்து அதை உணர எந்த தடையும் இல்லை. உதாரணத்திற்கு பெர்க்மான்சும் தாமஸும் மற்ற ஆட்களும் செய்யும் கடல்கொள்ளைகள், கொலைகள் சார்ந்த பகுதிகளில் என்னால் தெளிவாக உள்ளே செல்லமுடியவில்லை. ஆனால் அதிகாரம், ஈவிரக்கமற்ற தன்மை, யார் மீதும் நம்பிக்கை இல்லாத மனிதர்களை உணரமுடிந்தது.
இந்த நாவலில் கிருஸ்துவ இறையியல் சார்ந்த விஷயங்களும் ,பைபிள் வசனங்களும், நாவலின் பின்புலமாகவும் நாவலின் கதாபாத்திரங்களின் உரையாடல்களாகவும் நாவல் முழுவதும் உள்ளன. நாவல் வாசிப்பு ஒரு வாழ்க்கை வாழ்ந்த அனுபவத்தை ஏற்படுத்துத்துவதில் நாவலின் களம் முக்கிய பங்குவகிக்கிறது. மேலும் சில குறியீடுகள் நாவல் வாசிப்பை ஆழமாக்குகின்றன. பெர்க்மான்ஸ் இருக்கும் அறையில் பாம்பு இருப்பது. ஃபாதர் சாம் அறையில் ஒரு காலகட்டம் வரை லூசிஃபரின் படம் இருப்பது. பியா வெள்ளை ஆடையில் புலர் காலை வெளிச்சம் போல வரும் போதே நமக்கு சட்டென்று மறையும் என்றும் தோன்றிவிடுகிறது. அந்த ஔி அன்றாடத்தில் கூடவே வருவதில்லை. உஷை விடியவைப்பவள் மட்டும் தானில்லையா. அந்த உதயகால இனிமை நினைவாக நாள்முழுவதும் நமக்குள்ளே இருந்து கொண்டே இருப்பது.
ஏழை குடிசையில் பியா மருத்துவம் பார்த்து பிறக்கும் அந்த மைந்தன், தாமஸ் கையில் பிறப்பது என்பது ஒரு வகையில் அவனுக்குள் அவர் பிறக்கும் தருணம். அதை தான் கிருஸ்துவம் அவர் பிறந்து வருவார் என்றோ ,அவர் மறுபடி மறுபடி பிறக்கிறார் என்றோ, உயிர்த்தழுகிறார் என்றோ சொல்கிறது.
நாவலில் கிருஸ்துவசனங்கள் வரும் இடங்களில் அவற்றை ஒரு இலக்கியாவாசகியாக நாவலின் களத்தில், கதை மாந்தரில், உணர்வுகளில் கவித்துவத்துடன் மனதில் விரித்துக்கொள்ள முடிகிறது. உண்மையில் பைபிள் வசனங்கள் அழகிய கவிதைகள். நாவலில் வருவதைப்போல சிலர் பைபிளை மட்டுமே வாழ்நாள் முழுவதும் படிப்பதற்கு இந்த கவித்துவம் காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் கீதை பைபிள் குரான் போன்ற நூல்கள் மதநூல்களாக சொல்லப்பட்டாலும் தத்துவமாகவும் கவிதையாகவும் வெவ்வேறு முகங்கள் கொண்டவை. உனக்கு எந்த முகம் வேண்டு்ம் என்று வாசிப்பவரை கேட்டு முகம் திருப்புபவை. இந்த நாவலில் கூட பைபிள் ஃபாதர் சாமிற்கும் ,பெர்க்மான்ஸிக்கும் வெறுவேறு முகங்களை காட்டுகிறது. நம்மிடமுள்ள ஆடி எதுவோ அதற்கேற்ற பிரதிபலிப்பு.
நாவலை வாசித்து முடிக்கும் போது தவிர்க்கவே முடியாமல் ஃபாதர் சாம் தன் மென்மையான புன்னகையுடன் மனதிற்குள் நிறைந்து அலையடிக்கிறார். அந்த அலைகளுக்கு நம்முடைய சின்னஞ்சிறு வாழ்க்கையில் முடிவில்லை என்றே தோன்றுகிறது.
இது கிருஸ்து இறையியலை தன்னுள் கொண்ட நாவல் என்பதால் அதன் இயல்பால் 'தந்தை' அல்லது 'தந்தைமை' யின் சாரத்தினை நம்முள் கடத்த எத்தனிக்கிறது. மனிதனுக்கான விடுதலை எது? பெண்ணிற்கு தாய்மை விடுதலை என்று சொல்லப்படுவதை போல ஆணிற்கு தந்தைமையே விடுதலையாக இருக்கக்கூடும் என்று இந்த நாவலை வாசித்தப்பின் தோன்றுகிறது.
இங்கு உயிரியல் ரீதியான தந்தையை மட்டும் கூறவில்லை. நாவலில் ஃபாதர் சாமிற்கு அவருடைய வாழ்வின் ஆதார கேள்விக்கு, அலைகழிப்புகளுக்கு, தேடலிற்கு தந்தைமை சார்ந்த தவிப்பே விடையாகி விடுதலை அளிக்கிறது. அவர் தன்னுடையது வாழ்நாள் தேடலின் தோல்வியை கூட தாமஸிற்காக ஏற்கிறார்.
நாவலில் 'ஃபாதர்' சாம் என்று குறிப்பிடப்படும் சில உச்ச தருணங்களில் அவர் பெயர் என் மனதிலும் உடலிலும் அதிர்வை ஏற்படுத்தியது. என்னால் சொற்களின் வழியே மிக அருகில் அவரை உணரமுடிந்தது.
அதே போல பெர்மான்ஸ் எங்கேயோ தன் தந்தைமையை இழக்கிறார். அல்லது படிப்படியாக தந்தைமையை இழக்கிறார். இறுதியில் அவருக்கும் தந்தைமையே விடுதலையாகிறது. பயலாஜிகல் ஃபாதராக பெர்க்மான்ஸ் தன் மகளின் மன்னிப்பு மூலம் விடுதலை அடைகிறார். ஃபாதர் சாம் தன் உணர்வின் மூலம் அந்த நிலையை அடைகிறார். கிருஸ்தவ இறையியலின் அடிப்படையான பிதாவை இருவரும் வெவ்வேறு வகையில் உணர்கிறார்கள்.
தாமஸிற்கும் ஃபாதர் சாமிற்கும் இடையில் உள்ள சிலுவையை அன்பாக உணர்ந்தேன்.பியாவால் அவள் தந்தைக்கு அளிக்கப்பட்டதும் தாமஸிற்கு அளிக்கப்பட்டதுமான அன்பு.
சாமுவேலின் தந்தையிடமிருந்த 'பற்று' ஃபாதர் சாமில் அன்பாகிறது. பற்று என்னவும் செய்யும். அது காட்டிக்கொடுக்கும், கொலைசெய்யும், மறுதலிக்கும்,சிலுவையில் ஏற்றும்,சுடு தரையில் உயிரை துடிக்கவிடும்.
தாமஸ் பியாவின் மீது பொசசிவ்நெஸ்ஸை உணரும் இடமும் அதிலிருந்து வெளியேறும் இடமும் முக்கியமானது. அவள் அதற்கெல்லாம் அப்பால் நிற்கிறாள். இவன் பெண் நோக்கி வீசப்படும் வழக்கமான ஒரு வசையை அவளை நோக்கி எறியும் நேரத்தில் அவள் ஒரு உயிரின் இறுதி கணத்திற்கு அருகில் துணையாக நிற்கிறாள். இயேசுவின் பாதத்தின் கீழ் அவரின் இறுதி கணத்தில் அமர்ந்த மேக்தலீன் என்ற தேவதை போல. நாம் அதை விசாரிக்கலாம். அந்த உறவிற்கு ஆயிரம் பெயர் வைக்கலாம். அவர் உணர்வினை எங்கேயோ எதிலோ நம் வழக்கமான சொல்லில் நிறுத்தப்பார்க்கலாம். ஆனால் அது நாம் சொல்லும் இடத்திற்கும் பொருளிற்கும் மேல் நிற்பது. அதை இந்த நாவலில் ஃபாதர் சாமும் உணர்கிறார். அவரே கூட அதை சரியாக உணராமல் எங்கெங்கோ சுற்றி அலைகழிந்து தான் கண்டுகொள்கிறார்.
ஆனால் தொடக்கத்தில் அவர் உணரும் அன்பே உண்மையானது என்று எனக்கு தோன்றியது. பரமபத ஏணியில் சறுக்கி ஏறுவது போலவே சாம் செலினாவின் மீதான அன்பில் இறுதி வரை இருக்கிறார். ஆனால் நாவலில் உள்ள பெண்கள்... செலீனா முதல் தாமஸின் அன்னை சகாய மேரி வரை அன்பை சரியாக வந்தடைகிறார்கள். பெர்னபாஸின் மகன் இழப்பின் போது சகாயமேரி காட்டும் அன்பை உதாரணமாக சொல்லலாம். பியா அதன் முழு வடிவம். இதை தர்க்கமாக சொல்லவில்லை. இது நாவல் வாசிப்பின் மூலம் நான் சென்ற இடம்.
ஃபாதர் சாம் தன்னையறியாமல் செலீனா மீது உணரும் ப்ரியத்தை காதல் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அது அந்த நிலத்தின் எங்கோ நெக்குவிடாமலிருந்த ஒரு பகுதி மென்மையாகி நெகிழ்த்த தருணம். அது துறவியின் பேரன்பின் முழுமையாகவும் இருக்கக்கூடும். காவியம் நாவலில் புத்தரின் சீடர் ஆனந்தர் தன் இறுதிநாளில் உணரும் ஒன்றும் இதுவும் ஒன்றே. அந்த உணர்வை சாம் அதிர்வாக காயமாக உணர்கிறார்.
தாமஸின் மனதிற்குள் இளம்வயதில் இருள்தட்டி போன மனதிற்குள் உதயஔி பாயும் அகநிகழ்வே தாமஸ்க்கும் பியாவிற்குமான இறுதி நாள் நிகழ்வுகள். பியாட்ரிஸ் வெளிச்சம் போல ஊடுருவாக்கூடியவள் என்பதன் காட்சி வடிவம் அந்த அத்தியாயம்.
சாம் பிறக்கும் அதே தங்கத்தொட்டிலில் தான் இந்த உலகில் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கிறது. தம்மை ஏந்தும் தந்தை தாயின் மடி ஒவ்வொரு குழந்தைக்கும் தங்கத்தொட்டில் தான். அத்தனை குழந்தைகளுக்குமே ஏசுவின் சாயல் தான். அது சிலுவையில் அறையப்பட்ட பின்பு என்னவாகிறது என்பதே கேள்வி. ஒவ்வொருவருக்கும் சிறியதோ பெரியதோ அவரவருக்குரிய சிலுவை உண்டு. சாம் எப்படி உயிர்த்தெழுகிறார்..பெர்க்மான்ஸ எப்படி உயிர்த்தெழுகிறார்..தாமஸ் எப்படி உயிர்தெழுகிறான். யாரால் உயிர்த்தெழமுடிகிறது? எதனால் உயிர்தெழ முடிகிறது? எது சிலுவை ? என்ற கேள்விகளை உள்ளடக்கிய நாவல் கடல்.
அதனால்தான் பியா புலர் தேவதையாக காட்டப்படுகிறாள். புலரிக்கு தான் பொன்வளிச்சம். பின்பு அந்திக்கு மணிவெளிச்சம். இதற்கிடையில் உள்ள பொழுதின் பாடுகளும், நிறங்களும், உக்கிரமும் ,தனிமையும் கொண்ட நாவல் இது. நெய்தல் நிலம் சார்ந்த பரதவரின் நாவல். இது பிரிவும் பிரிவின் நிமித்தமுமான நாவல். பிரிவால் எய்தப்படும் வெளிச்சத்தை காட்டுவதாக தோன்றுகிறது.
ஏசுவும் கூட ஜோசப்பின் நேரடி மகன் இல்லை என்றே சொல்லப்படுகிறது இல்லையா...
இந்த நாவல் biological என்பதை கடந்து நின்று biological ஜ பேசுகிறது என்பேன்.
தனிப்பட்ட முறையில் நாவல் வாசிக்கும் போது தீவிரமான ஒரு அனுபவம் ஏற்பட்டது. நாவலை மெதுவாகவே வாசித்தேன். சில நாவல்கள் அப்படியாகும். கடல் நாவலை மிக மெதுவாகவே வசிக்க முடிந்தது. நாவலில் பியா வரும் அத்தியாயத்தை முடித்த அன்று எனக்கு சிறிய விபத்தில் தீ காயம் ஏற்பட்டது. சிறிய செண்ட் டிகிரி தீக்காயம். நல்லூழால் பெரியஆபத்திலிருந்து தப்பினேன்.
அந்த திடுக்கிடலில் மருந்து மாத்திரைகள் எடுத்தும் இரண்டு நாட்கள் சரிவர தூங்கவில்லை. நாவலை எடுத்து வாசிக்கத்தொடங்கினேன். நான்காம் நாள் நானே காயங்களை தூய்மை செய்யும் போது முதலில் அச்சம், பின்பு ஒவ்வாமை, அதன் பின் மிகக்கூரிய கவனம் ,பொறுமை பின்பு ப்ரியம். அது போல இந்த நாவலில் ஆன்மாவின் வெவ்வேறு பட்டைகள் தெரிகின்றது. நம்மை நாமே பார்க்கும் அனுபவம் நாவல் வாசிப்பில் ஏற்படுகிறது. மனிதஆன்மா என்ற ஒன்றின் இருள், வெளிச்சம், வாதை, வெறுப்பு, தீமை, ஆணவம், துயரம், மகிழ்ச்சி ,சஞ்சலம்,சினம், அலைகழிப்பு, பொசசிவ்நெஸ், விழைவு ,பற் று, ப்ரியம், அன்பு என்று மானுடபண்பிற்குள் ஊடுருவி ஞானத்தின் துளியை தேடும் நாவல் என்று சொல்லலாம். அலைகடலை துலாவும் கட்டுமரம் இந்த நாவல். அன்பினால் ஆனது இவ்வய்யகம். அந்த அன்பின் திரிபும் வெளிச்சமுமே மற்ற உணர்வுகள் அனைத்தும். மன்னிப்பின் வழியே அன்பை தொடும் நாவல். பல நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அதே கதையின் இன்னொரு வடிவம் தென்கரையின் பரதவ வாழ்வில் நிகழ்கிறது.
பதின்வயதில் சிலுவையில் உள்ள தாதையின் பாதங்களுக்கு கீழே அமர்ந்து எனக்குள் எழுந்த உணர்வுகளை கேள்விகளை நோட்டு புத்தகங்களில் சொற்களாக்கி எழுதி பழகினேன். அனைத்து மனிதர்களும் அந்த வயதில் தான் அலைகடலாக புரட்டப்படுகிறார்கள். மிச்சமுள்ள வாழ்க்கையை தீர்மானிக்கும் காலகட்டம். அந்த வயதில் தாமஸ்க்கு ஃபாதர் சாம். சாமிற்கு பைபிள். சிலருக்கு இலக்கியம். சிலருக்கு கலை. சிலருக்கு ஓவியம். சிலருக்கு துறவு. சிலருக்கு செயல்பாடுகள்.பலருக்கு இயல்பான வாழ்க்கை. பெரும் கப்பலில் இருந்து ஒரு சிறு மரத்துண்டு வரை ஏதோவொரு பற்று கோடு இந்த பிறவிப்பெருங்கடலிற்கு.



Comments
Post a Comment