Posts

Showing posts from April, 2024

அம்பறாத்தூணி [கவிஞர் இசை கவிதைகள்]

Image
 [மார்ச் 2024 கவிதைகள் இணைய இதழில் வெளியான வாசிப்பனுபவக் கட்டுரை] இலக்கியத்தில் வேறெந்த வடிவங்களையும் விட கவிதை சட்டென்று மூளையை தைக்க வல்லது. அம்புகளின் நுனிகளை வைத்து அம்பு அரமுகம்,கத்திமுனை,பிறை முகம்,ஊசிமுனை,ஈட்டிநுனி அம்பு என்று செய்தொழிலிற்கு ஏற்றவாறு இன்னும் பலவகையாக உள்ளது. தோலை மட்டும் கிழிப்பது. தலை மட்டும் எடுப்பது. கவசத்தை பிளப்பது,மார்பை துளைப்பது,எதிரில் உள்ள வில்லின் நாணை மட்டும் அறுப்பது என்று எய்பவன் நினைப்பதை செய்யும் குணங்கள் அவற்றிற்கு உண்டு.  அதே போல சொற்களை கவிஞன் ஏவும் கணைகள் என்று சொல்வேன். சில சமயங்கள் இரண்டு மூன்றுஅம்புகளை சேர்ந்து தொடுப்பதை நம் புராணங்களில் இருந்து சினிமாக்கள் வரை பார்க்கலாம். கவிஞன் பயன்படுத்தும் சொல்இணைவுகளை அவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்.            கவிஞர் இசையின் கவிதைகளில் சொற்கள் செய்ய வேண்டிய தொழிலை ‘சொல்லின்பொருள்’ செய்கிறது. அதை பகடி என்றோ விளையாட்டு என்றோ சொல்லலாம். ஆனால் அது    தன்னியல்பில் கவிதைக்கு ஏற்ப அம்பின் கூரை கொண்டுள்ளது. வில் பழகுதல் என்பது விளையாட்டாக இருக்கும்போதே நம் அர்ஜூனர்கள் பறவையின் கண்ணைத் தான் குறி வைக்கிறார்கள்.  அ

வெளிச்சம்

Image
 [ஏப்ரல் 1 2024 வாசகசாலை இணையஇதழில் வெளியான சிறுகதை] வெளிச்சம் வரைந்த ஓவியத்தை நகர்த்தி வைத்துவிட்டு தரையில் இருந்து எழுந்து ஜன்னல்பக்கம் சென்று நின்றேன். இன்னும் இருட்டவில்லை. சாயுங்கால வெளிச்சத்தில் நாகலிங்க மரம் பெரிய சிவந்த பூக்களை தன்னைச் சுற்றி உதிர்த்திருந்தது. மரத்திற்கு அப்பால் செல்லும் ப்ரிட்டிஷ்  அரசுக்குடியிருப்பின் ஸ்பர்டாங்க் சாலை நீண்டது. பெரும்பாலும் அமைதியாகவே இருக்கும். ஒவ்வொரு குடியிருப்பின் முன்னால் வளர்க்கப்பட்டிருந்த  மரங்களின் நிழல்படிந்த வழியில் ஒரு ஃபோக்ஸ் வேகன் பீட்டில் கார் நிதானமாக சென்றுகொண்டிருந்தது. எதிரே சுதேசி ஒருவர் நடந்து வந்துகொண்டிருந்தார். இங்கு யாரைத்தேடி வருகிறாரோ.  ருக்மிணியின் கல்யாணம் முடிந்தப்பின் உறவுகள் கிளம்பி சென்றுவிட்டார்கள்.  பெரிய அக்காவும் , “பக்கத்துல தானே.. எதுன்னாலும் உடனே ஓடி வந்திடறேன்,” என்று நேற்று சாயங்காலமாக கிளம்பி கீழ்ப்பாக்கத்தில் உள்ள தன்வீட்டிற்கு சென்று விட்டாள். அக்காக்கள் கல்யாணமாகி சென்ற போது தங்கை  ருக்மிணி இருந்ததால் மனதிற்கு இத்தனை மசமசப்பாக இல்லை . அப்பா வழக்கம் போல பரபரப்பாகவே இருக்கிறார். ஒரு கல்யாணகாரியம் சரி

சூடாமணி கதைகள்_ கடிதம்

Image
  வணக்கம், நலமாக இருக்கிறீர்களா? வாசகசாலை தளத்தில் வெளியான வெளிச்சம் படித்தேன். மெல்லிய அகில் புகை போல வாழ்ந்து மறைந்த சூடாமணி அவர்களின் சித்தரிப்பு சற்றும் மிகையின்றி வந்துள்ளது. என்னுடைய பிரியத்துக்கு உரிய எழுத்து அவருடையது. சாந்தமான நடையால் சலனங்களை ஏற்படுத்தும் தன்மையுடையது. உங்கள் சிறுகதை என்னை ஒரு மீள்வாசிப்புக்குத்  தூண்டுகிறது.  நன்றி சூரியன் MR  அன்புள்ள சூரியன், நலம். நலம் விழைகிறேன். எழுத்தாளர் சூடாமணியின் கதைகள் பற்றி நீங்கள் எழுதியிருப்பது குறித்தும், மறுபடியும் அவர் கதைகளை வாசிப்பதற்கு என் கதை தூண்டுகோலாக நீங்கள் உணர்ந்தது குறித்தும் மகிழ்ச்சி. வாசிங்க. அன்புடன், கமலதேவி வெளிச்சம் கதைக்கான இணைப்பு :  https://vasagasalai.com/velicham-sirukathai-kamaladevi-vasagasalai-92/