Skip to main content

Posts

Showing posts with the label கட்டுரை

டமருகத்தின் தாளமானவள்

 திரியை மட்டும் திரும்பத்திரும்ப மாற்றி..  ஒவ்வொரு முறையும் எரியும் சுடர் ஒன்றே தானா.. ?  வேறு.. வேறா..                             _  சம்யுக்தா மாயா நம் கவிதை மரபில் காதலுக்கும் பக்திக்கும் இடையில் ஈசலின் சிறகு போன்ற மெல்லிய தடுப்பே உள்ளது. அது இருபக்கமும் ஊடுருவும் சவ்வு. பக்தி அதிகமானால் காதல். காதல் அதிகமானால் பக்தி. இந்த மாற்றம் புதிரானது.  அதே போல நாயகன் நாயகி ஃபாவம். அரங்கனை நோக்கி பாடப்பட்ட பாடல்களில்  நாயகி ஃபாவம் மேலோங்கி உள்ளது. ஈசனுக்கு பித்தா..பிறைசூடா என்று சக்ய ஃபாவம் இயல்பாக வருகிறது.  ஈசனை காதலனாக ஃபாவிப்பது என்பது முன்னால் நின்று அவனை பாடுவது அல்ல. அவன் பாதியாகவே ஆவது. ருத்ரனின் பகுதி என்பது அத்தனை எளிதல்ல என்பதாலோ என்னவோ பெண்களில் திலகவதி மட்டுமே பாடியிருக்கிறார்.  காரைக்காலம்மையால் அவனை விளையாட்டு பிள்ளையாக்கி ஆட வைக்க முடிகிறது. ( பொதுவாகவே ஈசன் மீது பாடப்பட்ட பாடல்களில் நாயக நாயகி ஃபாவம் குறைவு)  பெண்கவிகளில் ருத்ரனுக்கு இணையான காளியை சம்யுக்தாவின...

இரு கரைகளின் கதைகள்

 [ எழுத்தாளர் அரிசங்கரின் பாரீஸ் மற்றும் மாகே கஃபே என்ற இரு நாவல்களையும் எழுத்தாளர் தேவி லிங்கத்தின் நெருப்பு ஓடு நாவலையும் முன்வைத்து…] இருகரைகளின் கதைகள்                  சமூகமாக ஓரிடத்தில் நிலைகொள்வதும் இடம்பெயர்வதும் சமூகமாக தன்னை திரட்டிக்கொள்ளும் மானுடத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. நிறைந்த கலம் வழிந்து வெளியறுவதைப்போல அல்லது ஓட்டை விழுந்த கலத்திலிருந்து வெளியேறும் நீரைப்போல ஓரிடத்தில் நிலைத்து இருக்கும் எத்தனிப்பும் மறுபக்கம் இடப்பெயர்வும் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கிறது. சங்ககாலத்திலிருந்தே பொருள்வயின் பிரிதல் உள்ளது. சிலப்பதிகாரத்தில் தன் பொருளை இழந்த கோவலன் கண்ணகியின் சிலம்பை ஆதாரமாகக்கொண்டு புதுநம்பிக்கையுடன் மதுரைக்கு பொருள் ஈட்ட செல்கிறான். அப்படி வாழ்க்கை பற்றிய கனவுடன் இடம்பெயர்பவர்களை இன்று வரை காண்கிறோம். பெரும்பாலும் பொருள்ஈட்டுதல் நிமித்தம் இடப்பெயர்வு நடக்கிறது. பின்பு போர்சூழல்,பஞ்சங்களில் மக்கள் கூட்டமாக இடம்பெயர்ந்தார்கள். அவமானங்கள் மற்றும் சூழல் வாழ்க்கைக்கு தடையாகும் பட்சத்தில் தனிமனிதன் ...

உலராத கண்ணீர்

 [ 2025 ஜூலை கவிதைகள் இதழில் வெளியான வாசிப்பனுபவம்]                 [ கவிஞர் போகன் சங்கர்] கேட்பாரற்றுக் கிடக்கும் பழங் கோயிலின் இடிபாடுகளில் இள முலைகள் துள்ள தனித்துத் திரிந்த ஒரு சிறுபெண்ணை சந்தித்தேன் தனக்குப் பயமில்லை தான் தனித்தில்லை என்றாள் அவள் இங்கு பறவைகள் இருக்கின்றன என்றாள் நூற்றுக்கணக்கில் பிறகு  ஊழிவரும்வரை  உறங்க முடியாத தெய்வங்கள் ஆயிரக்கணக்கில் காலத்தில் உறைந்த விழிகளை மூட முடியாமல் பார்த்துக்கொண்டே இருக்கின்றன எப்போதும் எல்லாவற்றையும் என்று சிரித்தாள். அது வீசப்பட்டது போல பெருகி வெளியங்கும் நிறைந்தது அந்த சிரிப்பின் முடிவில் வைரம் போல் மின்னும் இரண்டு கூர்க் கொடும்பற்களை நான் ஒருகணம் பார்த்தேன் அஞ்சி ஓவென்று அலறினேன் அவள் வாய்மீது விரல் வைத்து அஞ்சாதே என்று புன்னகைத்த போழுது யாரோ எய்தது போல இளவெயில் நிறத்தில் ஒரு பட்டாம்பூச்சி இறங்கி அவள் உதடுகள் மேல் அமர்ந்தது. நான் அது சிறகுகள் அசைய அசைய மது உண்பதைப் பார்த்தேன். அப்போது ஒரு புத்தனின் கண்கள் அவளிடம் இருந்தது அல்லது முலை கொடுக்கும் தாயின் கண்கள் ஆனால் ஒரு ஓவியத்தின்...

மொழி கைவிடாத இருள்

  [ ஜூன் 2025 கவிதைகள் இதழில் வெளியான வாசிப்பனுபவம்] ஊஞ்சலின் இருபக்கங்கள்  போல கவிதையால்  ஒரு விசும்பலில்  இருட்டிற்கும் வெளிச்சத்திற்குமாய் தாவ முடிகிறது. ஆனால் ஊஞ்சல்  கோர்க்கப்பட்ட அச்சு அங்கேயே இருக்கிறது. எழுத்தாளர் சுகந்தி சுப்ரமணியனின் கவிதைகளை வாசிக்கும் போது ஊஞ்சலின் அச்சு மெல்லிய ஔிக்கும், இருட்டுக்குள்ளும் தெளிந்தும் தெளியாமலும் இருப்பதை உணரமுடிகிறது. இவரது எழுத்துகளை வாசிக்கும் போது மொழி கைவிடாத இருளால் அருளப்பட்டவர் என்று தோன்றியது.                  கவிஞர் சுகந்தி சுப்ரமணியன்  அடர்ந்த இருளில் ஒரு கைவிளக்கு போல மொழி இருக்கிறது. தத்தளிக்கும் மனம் ஒன்று எழுத்தாக தன்னை முன்வத்துவிட்டு சென்றிருக்கிறது. எங்கோ எப்போதோ எப்படியோ ஏற்பட்ட காயம் ஆறாத மனம்  இவரின் கவிதைகளில்  தளதளக்கிறது. அவை உரைநடைக்கு நெருக்கத்திலும் கவிதைக்கு முன்பும் நிற்கின்றன என்று சொல்லலாம். அது ஒரு தனி வெளி. சூனியமல்லாத சூனியம். பிரக்ஞை இல்லாத பிரக்ஞை. ஆழ்மனம் வெளியே வந்து நிற்பதால் ஏற்படும் பதற்றம் வாசிப்பவர்களை பற்றுகிறது. கட...

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

விடமுண்ட கண்டம்

கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா எழுதிய வம்ச விருட்சம் [வம்சவிருட்சா. தமிழில் மொழிஆக்கம் கே. நல்ல தம்பி]என்ற நாவலையும், மலையாள எழுத்தாளர் ஹெப்சிபா ஜெசுதாசன் எழுதிய புத்தம் வீடு நாவலையும் சமீபத்தில் வாசித்தேன். வம்சவிருட்சம் நாவல் சீனிவாச பண்டிதர் தன் மகன் நஞ்சுண்ட பண்டிதரை கபிலை ஆற்று வெள்ளத்தில் இழப்பதிலிருந்து தொடங்குகிறது. நஞ்சுசுண்ட பண்டிதரின் மனைவி காத்தியாயினி கைக்குழந்தையுடன்  கணவனை இழந்து நிற்கிறாள். தன் பொறுப்புகளை மகனின் தோளுக்கு மாற்றிவிட நினைத்திருக்கும் சீனிவாச பண்டிதர் மறுபடியும் குடும்ப பொறுப்புகளை ஏற்க நேர்கிறது.  காத்தியாயினியின் அப்பாவும் மாமியாரும் கணவனை இழந்த காத்தியாயினியிக்கு முடி மழித்து மடியுடுத்தி விதவைக்கான நோன்புகளை ஏற்க வைக்க நினைக்கிறார்கள். ஆனால் சீனிவாச பண்டிதர் 'நோன்புகளை ஒருவர் மனம் உவந்து ஏற்க வேண்டும்...நாம் கட்டயப்படுத்தக்கூடாது' என்று மறுத்துவிடுகிறார்.  காத்தியாயனி கல்லூரிக்கு செல்ல விரும்பும் போது சீனிவாசபண்டிதர் அவளுக்கு ஆதரவு தந்து தன் மனைவி பாகிரதி அம்மாவை சம்மதிக்க வைக்கிறார். தினமும் ரயிலில் பத்து மைல் தொலைவி்ல் உள்ள மைசூர் கல்ல...

கனியானப்பின்னும் நுனியில் பூ

 மார்ச் 2025 கவிதைகள் இதழில் வெளியான வாசிப்பனுபவம்... ஔியிடமிருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை. எல்லாவற்றையும் ஔி இருளிடமிருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறது. ஒரு கவிஞரை,ஒரு படைப்பாளியை படைப்பில் தொடர்ந்து வரும் வாசகர் பதறி நிற்கும் இடங்கள் மிகமுக்கியமானவை. ஏனென்றால் படைப்பாளியும் வாசகரும் ஒரே இடத்தில் வெவ்வேறு தளங்களில் நிற்கிறார்கள். அந்த படைப்பாளரால் வாசகர் கண்டுகொள்ளும் அல்லது படைப்பால் வாசகர் உணர்ந்து கொள்ளும் ஒன்று தத்தி நிற்கும் இடம் அது. அங்கு வாசகர் உணர்வது எதுவென்றாலும் அது அசாதாரணமானது. எழுத்தாளர் வண்ணதாசனின் கனியானப் பின் நுனியில் பூ என்ற என்ற வரி [சிறுகதையின் தலைப்பு] அவருடைய எழுத்தின் வழி நாம் உணரும் உச்சத்தை கண் முன்னே காட்டும் காட்சி படிமம் எனலாம். கனிந்தப்பின் பூத்தல். கனிந்த பின் உதிர்தலோ முளைத்தலோ அல்ல அது. அழுகி இல்லாமலாகி வேறொன்றாகி முளைப்பது அல்ல. கனிந்த பின்னும் பூத்தல். கவிஞர் கல்யாண்ஜியின் அண்மையை தொகுப்பான ‘காற்றை கேட்கிறவன்’ என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளில் வெளிப்படும் கவிஞர் கல்யாண்ஜி அசாதாரணமானவர். அவர் தான் தொடங்கிய இடத்திற்கே இன்னொரு வழியில் வந்து நின்று...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...