கர்ணனின் கவசகுண்டலங்கள்




இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது.

மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம்.

பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம்.


மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது.

அதே போல மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதா பதினேழாம் தேதி காலை வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். எப்படி தொடங்குவது என்ற தயக்கம் இருந்தது. அடுத்த நாள் அதிகாலையில் ரம்யா நடக்கச்சென்றிருந்த நேரத்தில் என் நூடுல்ஸ் தலைமுடியுடன் போராடிக்கொண்டிருந்தேன். அப்போது ப்ரியம்வதாவுடன் அறம் கதைகள் தொடங்கி வெள்ளையானை வரை பேச்சு நகர்ந்தது. மேஜர் எய்டன் யேசுவை உணரும் இடத்தை நான் சொன்ன போது ப்ரியம்வதா இன்னும் நிறைய உணர்வுபூர்வமான இடங்கள் உண்டு என்றார். நாவலில் வரும் பஞ்சவர்ணனைகள் பற்றி பேசி விட்டு அறம் தொகுதியின் பெருவலி கதைக்கு நகர்ந்தோம். அன்று இரவு ப்ரியம்வதாவை பேசவிட்டு நானும் ரம்யாவும் கேட்டுக்கொண்டிருந்தோம். [ உணர்வு ரீதியாக இவர்கள் இருவரும்  நம்மளை மாதிரி தான் என்று மனதிற்குள் தோன்றியது].

நான் கொற்றவை பற்றி என் அனுபவத்தை ப்ரியம்வதாவிடம் சொல்லியிருந்தேன். அதன் மொழி 'கல்கோணா' மாதிரி இருந்தது என்று. அவருக்கு அது பற்றி தெரியவில்லை. மெதுவாகக் கரையும் கடினமான இனிப்பு என்று சுற்றி வளைத்து சொன்னேன்.


          ரம்யா மானோகர்,நான்,ப்ரியம்வதா


அறைக்குள் கணிசமாக ஒன்றாக இருந்தாலும் வெளியே தனித்தனியாக திரிந்து கொண்டிருந்தோம். ப்ரியம்வதா பல வகுப்புகளுக்கு வந்திருப்பதால் அந்த இடம் பழகியிருந்தது. ஒரு நாள் தனியாக மலைக்கு கீழே இறங்கிவிட்டு வந்தார். ரம்யா, சபரீஷ் உட்பட நான்கைந்து பேர் இணைந்த ஒரு நடைக்குழு அமைந்தது. முதல் நாள் நானும் ,ரம்யாவும், வள்ளிராஜன் ,சபரீஷ் உடன் இணைந்து ஓடை ஒன்றை பார்க்க சென்றோம். வழி நன்கு அடர்ந்திருந்தது. நான் ஓடையை பார்த்துவிட்டு திரும்பிவிட்டேன். அவர்கள் கீழிறங்கி சென்றார்கள்.

முதல் நாளில் இருந்து மூன்றாம் நாள் வரை தினமும் காலைஉணவிற்கு பிறகு வகுப்பு தொடங்கும் முன்பு புத்தரிடமும் சாரதா தேவியிடமும் சென்று சற்று நேரம் அமர்ந்திருந்தேன். புத்தருக்கும் சாரதாதேவிக்கும் இடையில் தாவரங்கள் செறிந்த சிறு பகுதியில் மூன்று நாளும் கண்ணில் தென்பட்ட மயில் அலைபேசியை எடுப்பதற்குள் மறைந்து விடும். ஒருநாள் கழுத்து,ஒருநாள் கண்தலை,ஒரு நாள் தோகையில் கொஞ்சம் காட்டியது. ஆனால் மூன்றாம் நாள் எனக்கு ஒரு சிறு மயிலிறகு கிடைத்தது. தன்னை காட்டி காட்டி மறைந்த மயில் மனதில் ஒரு படிமமாகிவிட்டது.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்ததிலிருந்து வகுப்பு நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் வெள்ளிமலையையும் அதை சுற்றியும் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு மிக இளம் வயதிலிருந்தே இந்த பழக்கம் உண்டும். அம்மாச்சி ஊர் மலையடிவார கிராமம். எங்கள் ஊரும் மலையடிவார ஊர் என்பதால் எனக்கு பறவைகளை தாவரங்களை பூக்களை பார்த்தபடி இருப்பது இயல்பாகவே உள்ள பழக்கம்.

மற்றவர்கள் வெள்ளிமலை அடிவாரம் வரை கீழே இறங்கி ஏறிக்கொண்டிருக்க நான் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தேன். காலையில் எங்கிருந்தோ குரல்கள் கேட்கும். நம் ஆட்கள் தான் எங்காவது நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். தை மாதம் முதல் வாரம் என்பதால்  நல்ல பனி இருந்தது. அந்த அதிகாலை அமைதியில் பேச்சுக்குரல்கள் தனித்து கேட்பது புது அனுபவமாக இருந்தது.


புகைப்படத்தைஎடுத்தவர்: ரம்யாமனோகர்


முதல் நாள் காலையில் அறையின் வெளியே வந்து நின்ற போது சட்டென ஒருவேர் சிவ நடன   ஃபாவத்துடன் என் கண்களுக்கு தெரிந்தது. எங்கள் அறை மலைச்சரிவை ஒட்டியிருந்ததால் அறை முற்றத்திலிருந்து இருந்து குன்றின் சிகரத்தை அன்னாந்து பார்த்துக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. அதே போல உணவுகூடத்திற்கு பின்புறம் கை கழுவியப்பின் அந்த இடத்தை ஒட்டியே இருக்கும் குன்றின் சிகரத்தை சற்று நேரம் அன்னாந்து பார்த்துவிட்டு வருவது வழக்கமானது.  ஒவ்வொரு முறை உணவை முடித்த பின்னும் கைகழுவியப்பின் அங்கு நின்று அன்னாந்து சற்று நேரம் பார்த்தேன். கீழே ஒரு மாங்கன்று வளர்ந்து கொண்டிருக்கிறது.


மூன்றுநாள் வகுப்பும் 'கவிதையும் கவிதை சார்ந்தும்'. 

பாடலாசியர் வைரமுத்துவிலிருந்து தொடங்கி சங்கப்பாடல்கள்,திருக்குறள்,இளங்கோ, சீத்தலை சாத்தனார் வரை. மலையேறி செல்வதைப்போல.

முத்தய்யாசார் கவிதையை சொல்லும் போது அளிக்கும் அழுத்தம்,சொற்பிரிப்பு,குரலின் ஃபாவம்,நெடிலிற்கு கொடுக்கும் நீளம் என்று இன்னும் சில கவனிப்புகள் கவிதையின் உணர்வை எட்டுவதற்கு உதவின. 'கற்றலின் கேட்டல் நன்று' என்ற வரியை அனுபவப்பூர்வமாக மூன்று நாட்கள் உணர்ந்தோம்.


தெரிந்த பாடல்களை சொல்வதில் கேட்பதில் உள்ள பயன் என்னவென்றால் நாம் எதை தவறவிடுகிறோம் என்று புரிந்தது. நமக்கு தெரிந்த வரிகளில் உள்ள நாம் உணராத நுட்பம் இந்த வகுப்பை சுவாரஸ்யமாக்கியது. ஆசிரியரின் நினைவு திறன் குறித்து அனைவருமே தேநீர் இடைவேளைகளில் அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தோம். அவர் இந்தப்பாடல்கள் அனைத்தும் தன் பள்ளி வயதில் பயின்றது என்றார். நானும் ரம்யாவிடம் அதையே சொல்லிக்கொண்டிருந்தேன். 'சார் டீன்ஏஜ்ல படிச்சிருப்பார்' என்று.

மேலும் திருக்குறள்களுக்கு சமகால பொருத்தமாக தன் வாழ்க்கை அனுபவத்திலிருந்து பல சம்பவங்களை கூறினார். 

ஒரு நாள் வெண்பா எழுத வைத்தார். ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரிடம் சென்று காட்டினோம். ரம்யா, ஸ்ரீகாந்த் போன்றவர்கள் வெண்பா எழுதுவதில் ஈடுபாட்டுடன் இருந்தார்கள்.


[ நான் எழுதிய முதல் வெண்பா...இது ஆசிரியர் திருத்தி எழுதியது என்பதால் வடிவம் அவருடையது. உள்ளிருக்கும் காட்சி என்னுடையது.

தள்ளிசெல்லும் காற்றசைக்கும் மஞ்சு நிறைகின்ற

வெள்ளி ஔிவீசும் வான்திகழும் மீன்பார்க்க

கள்ளிசெடி காணா கசிவுள்ள மென்நிலம்

வெள்ளிமலை போகும் வழி]

ஸ்ரீகாந்துக்கு வெண்பா ஜுரமே வந்து விட்டது. அடுத்த நாள் காலையில் ஒரு புல்லட்டை பார்த்துவிட்டு வந்து புல்லட் வெண்பா எழுதினான். அவரின் தாத்தா வீட்டின் பின்புறம் உள்ள கல்லில் தினமும் அபிராமி அந்தாதியின் ஒரு பாடலை எழுதுவாராம். அங்கிருந்து ஸ்ரீகாந்திற்கு கவிதை மீது ஆர்வம் வந்திருக்கிறது. ஸ்ரீகாந்தும் சபரீஷ்ம் இந்த குழுவில் மிக இளையவர்கள். கல்லூரி மாணவர்கள்.

வெண்பா எழுதும் போது ஒருவர் வெண்பாவை மற்றவர் பார்த்து கேட்டு பகிர்ந்ததில் குழுவின் மௌனம் கலைந்தது. அனைவரிடமும் அனைவரும் பேசத்தொடங்கியிருந்தோம். சிறிய குழு என்பதால் அனைவரிடமும் பேசமுடிந்தது.

'அந்தியூர் பெற்ற மணி' என்ற ஈற்றரடி கொடுத்து விளையாட்டாகவும் காரியமாகவும் ஒரு வெண்பா எழுதிபார்த்தோம். மணி அண்ணாவுடன் எப்போதும் யாராவது பேசிக்கொண்டிருந்தார்கள். மூன்றாம் நாள் காலையில் நானும் காரைக்காலம்மை பற்றி அவரிடம் பேசினேன். இரவு உணவிற்கு பி்ன் ஆசிரியர் உட்பட அனைவரும் உணவுகூடத்தின் வராண்டாவில் அமர்ந்து பேசினார்கள். நான் வெறுமனே கவனித்துக்கொண்டிருந்தேன்.

ஆசிரியர் கவிதை வரிகளை சொல்லச்சொல்ல திருப்பி சொல்வது கவனத்தை ஒருங்கமைப்பதாக இருந்தது. மேலும் மரபுகவிதைகளை எப்படி சொல்ல [பாட] வேண்டும் என்பதற்கு உதாரணமான பாட்டுகளை சொல்ல வைத்தார்.

இரண்டாம் நாள் காலை வகுப்பில் கம்பராமாயணம்,வில்லிபாரதம் வந்த போது நண்பர்கள் அனைவருமே ஆழ் நிலையில் இருந்தார்கள். அது அப்படித்தானே இருக்க முடியும் என்று தோன்றியது. அவர் எடுத்து வைத்த பாடல்களும் அப்படி. 'உறங்குகின்ற கும்பகர்ணனை' எழுப்பும் பாடலில் இருந்து கும்பகர்ணன் விபீஷ்ணரிடம் பேசும் குணஉயர்வு வரை சென்று தொட்டார். ராமர், சீதை ,தாரை, லட்சுமணன் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு சில பாடல்கள். வில்லிபாரதத்தில் கர்ணன். கர்ணன் வந்ததும் வெண்முரசும் நித்யா அரங்கிற்குள் வந்துவிட்டது. அங்கிருந்து அன்று இரவு திருக்குறள் வரை கர்ணன் வந்து கொண்டே இருந்தான். ரம்யா நான் ப்ரியம்வதா மூவரும் கர்ணனனுக்காக கண்கலங்கியிருந்தோம். மற்றவர்களும் அப்படித்தான் இருந்திருக்கக்கூடும். ஆசிரியர் உணர்வுப்பூர்வமாக சொல்லிய பாடல்களே அந்த உணர்வு நிலைகளுக்கு காரணம். 

தேநீர் இடைவேளையின் போது தனியாக மலையை பார்த்து நின்ற ரம்யாவை அழைத்த ஆசிரியர், "ரம்யா...கர்ணன் கதை எப்போதோ முடிஞ்சாச்சு...இன்னும் ஏன் அழறீங்க..இங்க வாங்க," என்று அழைத்தார். மூன்றுநாள் வகுப்பில் அந்த காலை வகுப்பு ஒரு மேஜிக்கல் மொமெண்ட். 

அங்கிருந்து கர்ணனை இரவுவகுப்பிற்கு ப்ரியம்வதாவும் நானும் திருக்குறளிற்கு இழுத்து வந்தோம்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு

என்ற குறளை ப்ரியம்வதா கர்ணனிற்கு உதாரணமாகக் காட்டினார். சட்டென்று எனக்குள்,

என்பி லதனை வெயில்போலக் காயுமே 

அன்பிலதனை அறம்

என்ற குறள் பளிச்சிட்டது.

குந்தி தன் மகன்களின் உயிர்காக்க கர்ணனிடம் நயமாக இரண்டு வரங்கள் கேட்டாள். ஆனால் அறம் அப்படி நிற்பதில்லை. பெற்ற பிள்ளைகளை விட பேரப்பிள்ளைகள் பெரிது என்று சொல்லுவார்கள். அந்த முதிய வயதில் பேரப்பிள்ளைகள் ஐவரையும் இழப்பதில் உள்ளது அறத்தின் கூர்முனை. அன்பில்லாததை காய்ந்த அறம் என்று சொன்னேன். சார்..தலையாட்டினார்.

அடுத்த நாள் காலை வரை ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஒன்றிரண்டு குறள்கள் இருந்தன. 

முத்தய்யா சார்," திருக்குறள் ஒரு பர்சனல் காப்பி [பிரதி]" என்று சொல்லியதை அனைவரும் எங்களுக்குள் உணர்ந்தோம்.

உங்களுக்கு பிடித்த குறள்களை வரிசையாக சொல்லுங்கள் என்று கேட்டதும் நான், 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற

என்று சொன்னேன். அவர் மறுமுறை அக்குறளை இருமுறை சொன்னார்.

'அனைத்தறன்' என்பதை பிரித்து அழுத்தி சொல்ல வேண்டியதன் அவசியத்தை சொன்னார். மற்றவர்கள் கூறிய குறள்களையும் எப்படி சொல்ல வேண்டும் என்று சொல்லிக்காட்டினார்.

மூன்றாம் நாள் முந்தின நாள் வகுப்பின் திருக்குறள்களில் சில,சங்கப்பாடல்கள்,சிலம்பும்,மணிமேகலையும். முதல்நாள் வகுப்பை போலவே உணர்வுபூர்வமான கவிதை வரிகள். அவரவர்கள் சிலம்பு பற்றி தெரிந்ததை கூறினோம். எனக்கு பிடித்த தற்குறிப்பேற்றணி பற்றி கூறினேன்.

கோவலனும் கண்ணகியும் மதுரை வரும் போது மதில் மேல் இருந்த கொடிகள் ,"வாரல் என்பது போல் மறித்து கைகாட்ட' என்ற வரிகளை சொல்லியதும் ஆசிரியர் கம்பராமயணத்தில் அது போன்ற இரண்டு இடங்களை கூறினார்.

தற்குறிப்பேற்றணி என்பதன் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஒரு வாசகியாக ஒரு பிரதியை சில சமயங்களில் அப்படித்தான் வாசிக்கிறேன் என்று தோன்றும். அது சரியா என்று தெரியவில்லை. நடப்பது அது தானோ?

இன்னொரு விதத்தில் புனைவு எழுத்து அது நாவலோ சிறுகதையோ எதுவானாலும் அது ஒரு புனைவாசிரியரின் தற்குறிப்பேற்றணி விரிவாக செயல்படும் களம் தானே. எழுதுபவருடைய புனைவு பரப்பும், நிகழ்வுகளும் ,கதைமாந்தர்களும் புனைவாசிரியரின் தற்குறிப்பேற்றவர்கள் தானே. அது 'தான்' அல்ல 'தற்குறிப்பு'.

ஆசிரியர் உதாரணங்களுடன் சொல்லிய மரபு எழுதும் கவிகளின் 'ப்ரயோக விவேகம்' மற்றும் 'குணவினோதங்கள்' போன்றவை என்னுள் பதிந்துவிட்டது. கவிதைக்கான 'சாவி'கள்.

வகுப்பு முடியும் போது ஜெ வின் நினைவு வந்தது. இயல்பாகவே சிலம்பு வரும் போது கொற்றவை வந்து விட்டாள். முத்தய்யா சார் நீலி பாத்திரத்தை வியந்து சொன்னார். எனக்கு இன்னொன்றும் மனதை வியாபித்தது. அங்கு சொல்ல நினைத்து ஏனோ சொல்லவில்லை.

பின் குழு புகைப்படம் எடுக்கும் போது சரியாக முத்தய்யாசாரின் கீழே அமர்ந்து கொண்டேன். மனதிற்கு தோன்றுதை செய்து விட வேண்டும். சபரீஷ் நீங்க 'அங்க போங்க' என்று என்னிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தான். 

அவன் முதல்நாள் மதியஉணவு இடைவேளைக்கு பிறகு வகுப்பு நடக்குமிடத்திலிருந்த கட்டிலில் தூங்கிவிட்டான். சார் வந்தது தெரியவில்லை. நான் 'எந்திரிடா... ' என்று மெதுவாக சொல்லி தட்டி எழுப்பினேன். அப்படி தொடங்கிய நட்பு இப்படித்தான் இருக்கும்.

ரம்யா என்னை கொஞ்சம் வாசித்திருந்தார். அதே போல முத்து என்னுடைய கதைகளை வாசித்திருந்தார். நித்யவனத்தில் முதன்முதலாக என் கதையை வாசித்ததாக கூறியவர். 'நம்மளையும் வாசிச்சிருக்காங்க' என்று நினைத்துக்கொண்டேன். வகுப்பிற்கு செல்லும் சரிவு பாதையின் ஓரிடத்தில் ஆனந்தகுமார் அவர்களுடன் முனை இயக்கம் பற்றி கொஞ்சம் பேச்சு வந்தது. அப்போதும் முத்து அடுத்ததா என்ன எழுதுவீங்க? என்று கேட்டார். '24 ல் கட்டுரைகள் எழுதினேன். சிறுகதைகள் எழுதனும். நாவல் எழுதலான்னு...'என்று இழுத்தேன். புன்னகையுடன் தலையசைத்தார். வாசகர்.

ஊருக்கு கிளம்புவதற்காக பைகளை எடுத்து வைத்துவிட்டு நானும் ரம்யாவும் உணவுகூடத்திற்கு வந்தோம். எங்களைத்தவிர அனைவரும் கிளம்பும் அவசரத்தில் வராண்டாவில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். என்னை பார்த்த முத்தய்யாசார் சிரித்தபடி, "கர்ணன் கவச குண்டலத்தை கழட்டிட்டான்," என்றதும் அனைவரும் சிரித்தார்கள். நான் அன்று காலையில் ப்ரியம்வதாவிடம் , "கர்ண கவச குண்டலம் மாதிரி எனக்கு இந்த ஸ்வட்டர்,"சொல்லி சிரித்தேன். நான் மலையேறியதிலிருந்து தலையை மறைக்கும் அந்த உடுப்பை உடுத்தியபடியே தான் இருந்தேன். 

 உண்மையில் இலக்கியம் அப்படியானது தானே? நம்முடைய கவச குண்டலம். நம்மை கர்ணனனாக்குவது. கர்ணன் என்றால் வள்ளல் என்ற பொருளில் அல்ல. அன்றாடத்தில், வாழ்வில்... எத்தனை இழப்புகள், அவமானங்கள்,இயலாமைகள்,கைவிடப்படுதல்கள் இன்னும் பலவற்றிற்கும் அப்பால் நம்மை நிமிர்ந்து நிற்க செய்வது. இலக்கியம் ஒரு கவச குண்டலமும் கூடத்தான் என்று அந்த உணவுஅறையில் தோன்றியது. சூழலில் இருந்து நம் ஆத்மாவை காக்கும் அருள். நாம் யாரோ அதை அப்படியே பொத்தி வைக்கும் சிப்பி.

நம்மை நமக்கு தெரியாமலேயே வனைவது இலக்கியம். காரில் பின்இருக்கையில் ஹரிக்கும் ராம்ப்ரசாத்திற்கும் இடையில் நான். துவார 'பாலகர்கள்'. முன்இருக்கையில் ரம்யா. அந்தியூர் வரும் வரை இலக்கியம் சார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எங்கே இருந்து வாசிக்கத் தொடங்கினோம் என்று மூவருமே சொல்லிக்கொண்டோம். அதிலிருந்து ஜெ வரை. பின் எப்போதோ அமைதியாகிவிட்டோம். 

ஈரோடு நெருங்கும் போது இடது பக்கம் ஒரு சுவற்றோரம் அடர் வாடாமல்லி நிறத்தில் காகித மலர்கள் சுவர் முழுக்க விரிந்து பரந்து பூத்திருந்தன.

"அந்த காகித பூக்களை பாத்தீங்களா," என்று கேட்டேன். இல்லை என்றார்கள்.

"ஐெ பொங்கலன்று 'பொன் என..' என்று முடிப்பதற்குள் ரம்யா 'பொன் என பொலிக' ன்னு ஒரு வீடியோ போட்டிருந்தார் கேட்டேன்," என்றார். 

அந்தப்பூக்களை பார்த்ததும் அந்த காணொளி ஞாபகம் வந்தது. அதை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். 

ஈரோடு பேருந்து நிலையத்திற்கு முதல் முறை வருகிறேன். பெரிய பேருந்து நிலையம். ஒரு முறை நின்ற இடத்திலிருந்து சுற்றி பார்த்தேன். பொங்கல் விழாவிற்கு ஊர் வந்து திரும்பும் கும்பல். மழை பெய்து கொண்டிருந்தது. பேருந்திற்காக ஓடிக்கொண்டிருந்தார்கள். துப்பட்டாவை தலையில் தூக்கிப்பிடித்தபடி மெல்ல நடந்தேன். கும்பலாக இருப்பதால் துறையூர் பேருந்தில் போகலாம்...நாமக்கலில் இன்னும் கூட்டமாகும் என்று தோன்றியது. பின் துப்பட்டவிலிருந்து கையை எடுத்துவிட்டு  மழைக்கு தலையை காட்டினேன். 

கொஞ்சம் அலைச்சலிற்கு பிறகு துறையூர் பேருந்தை கண்டுபிடித்து அமர்ந்தேன். ஒரு சாக்லெட்டை வாயில் போட்டபடி தங்கையிடமும் அம்மாவிடமும் பேசிவிட்டு நண்பர்களின் வாட்ஸ்ஆப் கேள்விகளுக்கு பதில் அளித்தப்பின் அலைபேசியை பையில் போட்டு மூடினேன்.

பேருந்து கிளம்பி மெல்ல செல்லத்துவங்கியது. மழை பெய்து கொண்டிருந்தது. வெளியே ஒரு செம்பருத்தி செடி அத்தனை பூக்களுடன் கைநீட்டிக் கொண்டிருந்தது. 

வகுப்பு நிறைவடைந்து மதியம் அறைக்கு வரும் போது ப்ரியம்வதாவிடம் , "சிலம்பு பத்தி பேசறப்ப ஜெ எழுதினது ஞாபகம் வந்தது. அந்த இட்லி பூக்கொத்தை பாருங்க ...என்ன சிவப்பு...எல்லா சிவப்பும் உந்தன் கோபம் ன்னு வைரமுத்து ஒரு பாட்டில் எழுதியிருப்பார். கண்ணகி கோயிலுக்கு போறப்ப அந்த வரி நினைவுக்கு வந்ததா ஜெ எங்கேயோ எழுதியிருந்தார்," என்றேன்.

ப்ரியம்வதா தலையாட்டியபடி  '..ம்' என்று மட்டும் சொன்னார். அறைக்குள் சென்று ரம்யா வரும் வரை எதுவும் பேசவில்லை.

கவிதை....

எனக்கு சொல்லின் சுவையை நாக்கில் வைத்தவர் என்று பாடலாசிரயர் வைரமுத்துவை சொல்வேன். நான் நுழைந்த வாயில். எனக்கு கிடைத்த முதல் பிடிக்கயிறு. முத்தய்யா சாரிடம் இதை சொல்லிய போது 'அப்படித்தானே இருக்க முடியும்...எங்களுக்கு கண்ணதாசன்..உங்களுக்கு வைரமுத்து...அவர் சரியான தொடக்கம் தான்' என்றார்.

எனக்கு ஒரு திருப்பிப் பார்த்தல் தேவையாக இருந்தது. திருப்பி பார்த்தலிற்குள் நான் அறிந்தவையும் அறியாதவை சரிசமமாக இருந்தது என்பது முக்கியமானது. மூன்று நாளின் சுருக்க சித்திரம் இது. தனித்தனியாக அப்துல், ஹரி ,பறவை பார்க்கும் அருள் போன்றவர்களிடம் உள்ள தனித்திறன்களை கவனித்துக்கொண்டிருந்தேன். 

சமைக்கும் இருவரிடமும் ரம்யா 'சட்னி ரெசிபி' கேட்டுக்கொண்டிருந்தார். 'சாம்பார்' என்பதை நம்மவர்கள் கிண்டலிற்கு பயன்படுத்துகிறார்கள். உண்மையில் அன்றாடத்தில் சாம்பார் சுவையாக இருப்பதே நல்ல சமையலின் அடையாளம். இங்கு அந்த சுவை இருந்தது. கிளம்பிய பின் அந்த அய்யா 'சாப்டீங்களா பாப்பா' என்று கேட்டு தலையாட்டினார். தினமும் காலையில் நான் முதன்முதலாக காஃபிக்கு செல்லும் ஆள். அவருடன் வராண்ட்டாவில் அமர்ந்து சேர்ந்து பேசியபடி மஞ்சு சூழ்ந்த மலையை பார்த்தவாறு காஃபி குடித்து வருவது மூன்றுநாள் வழக்கமானது.

கவிதை மட்டும் போதும் என்று பல நேரங்களில் உணர்ந்ததுண்டு. அந்த மூன்று நாட்களும் அப்படியானது. ஔவையும், கபிலனும், வள்ளுவனும், கம்பனும், பாரதியும் எங்கள் அனைவருக்கும் அருள்க என்று நினைத்துக்கொண்டேன். மழையின் மெல்லிய தண்மை. இரவு ஒன்பது மணிக்கு அரசுபேருந்தில் ஊர் வரும் வரை அந்தத் தண்மை உடனிருந்தது.








வையகத்தில்

அன்பின் சிறந்ததவமில்லை அன்புடையார்

இன்புற்று வாழ்தலியல்பு

_ பாரதி.







Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

பெருகும் காவிரி