என்னுரை _ பெருங்கனவின் வெளி [கட்டுரைத்தொகுப்பு]
எழுத்தாளர் அம்பைக்கு சமர்ப்பணம்.
வாசகியாக மட்டும்…..
கட்டுரைகள் எழுதும் போது ஒரு வாசகியாக மட்டும் இருக்கிறேன். அது ஒரு ஒப்புக்கொடுத்தல் நிலை. வாசகநிலை என்பது படைப்புகளுக்கு முழுவதுமாக மனதை கொடுத்தல்.
பெருங்கனவின் வெளி என்ற தலைப்பில் இந்த நூலில் ஒரு கட்டுரை உள்ளது என்றாலும் இந்த நூலிற்கு இந்த தலைப்பை வைப்பதற்கான காரணம் வேறு.
ஒவ்வொரு புத்தகமும் வாசிப்பவர்களின் அகத்தில் விரிக்கும் கனவு வெளி வெவ்வேறானது. ஒருவர் வாசிப்பது அவருக்கு மட்டுமேயான அனுபவம். அவருக்கு மட்டுமேயான கனவு பரப்பு. நம்முடைய கை ரேகை கண்ரேகைகள் போல தனித்துவமானது. வாசிப்பவர்களுக்கிடையே சில ஒற்றுமைகள் இருக்கும் என்றாலும் கூட வாசிப்பு அவரவருக்கு உரியது. வாசிப்பவரும், அந்த புத்தகம் விரிக்கும் கனவும் இணைந்தது. இந்த இயல்பே புத்தகங்களை நமக்கு நெருக்கமாக்குகிறது. நம் நடைமுறை தினசரி வாழ்வில் இருந்து ஒரு எம்பு எம்பி அந்த கனவு வெளிக்கு சென்று திரும்புகிறோம். வாசிப்பு என்பது ஒரு பெருங்கனவு வெளி.
எனில் வாசிப்பு என்பது கனவு மட்டுமா? என்று கேட்கலாம். கனவு என்பது நம் ஆழ்மனம். கனவு என்பது நம் கற்பனை. கனவு என்பது நம் அறிவு. கனவு என்பது நம் எண்ணங்கள். மேலும் கனவு என்பது நம் பௌதீக எல்லைகளை தாண்டுவது. கனவு என்பது நம் மன எல்லைகளை விரிப்பது.
அப்படி என் கனவை விரித்த கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் சிலவற்றை பற்றிய வாசிப்பனுபவ தொகுப்பு இந்த நூல். இந்த கட்டுரைகளில் வாசிப்பனுபவங்களில் முழுக்க ஒரு வாசகியாக மட்டுமே என் மனம் செயல்பட்டுள்ளது. ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தப்பின் அதை வாசிப்பதற்கு முன்பிருந்த நம் மனம், அறிவு, கற்பனை போன்றவை சற்று மாறியிருக்கும். அது தரும் மகிழ்ச்சியும், மனநிறைவும்,உற்சாகமும் நம்மை அடுத்த புத்தகத்தை நோக்கி நகர்த்தும். வாசிப்பு என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒரு தேடல்.
என்னுடைய எட்டாவது வயதில் அய்யாவின் [அப்பா] வலது கையை பிடித்துக்கொண்டு ஒரு பெரிய வீட்டின் மாடியில் இருந்த அரசு பொது நூலகத்திற்கு சென்ற அந்த நாளை நினைவுகூர்கிறேன்.
ஒரு விடுமுறை நாளின் காலை பொழுதில் நானும் அய்யாவும் வயல்வெளிகளுக்கு நடுவில் உள்ள கிணற்றுக்கு சென்றோம். அது அகலமான ஆழமான செவ்வக வடிவாக ‘கல்லுகட்டு கிணறு’. கிணற்றுக்குள்ளேயே சுற்றுதிண்டும் படிகளும் செதுக்கப்பட்டது. ஐந்தாறுபடிகளுக்கு கீழே நீர் தழும்பிக்கொண்டிருந்தது. தண்ணீரில் நனைத்து தூக்கி அப்படியே வெயிலில் வைக்க வேண்டிய ஆள் நான். சட்டென்று என்னை குளிக்கவைத்து துண்டு போர்த்தி திண்டில் அமர வைத்துவிட்டு அவர் நீரில் மணிக்கணக்கில் திளைப்பார். கிணற்றின் மேலே ஒரு வேப்பமரமுண்டு. அதில் ஏறி கிணற்றில் குதித்து மூச்சுப்பிடித்து மண் கல் எடுத்து வருவது அவருக்கு பிடித்த விளையாட்டு. அந்த பயிற்சி அவருக்கு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்தவர்களை, தவறி விழுந்தவர்களை தூக்குவதற்கு பயன்பட்டது. அன்றும் மரத்திலிருந்து கிணற்றில் குதித்து விளையாடிய பின்னர் நடுகிணற்றில் தலையை மட்டும் நீட்டி , “இன்னிக்கு லைப்ரரிக்கு போலாமா சாமி,”என்று சிரித்தபடி உற்சாகமாக கேட்டார்.
அப்படி நூலகத்தையும் புத்தகங்களையும் எனக்கு அறிமுகப்படுத்தி தொடர்ந்து வாசிக்கவும், ஒரு பெண்ணாக எனக்கு வாசிப்பதில் ஏற்பட்ட புறத்தடைகளில் இருந்து எனக்கான நேரத்தை எனக்கு ஏற்படுத்தி தந்தார். என் வயது பிள்ளைகள் பையன்கள் பள்ளிக்கூட நேரம் தவிர மற்ற நேரங்களில் வீட்டிலும் வயலிலும் அவரவர் வயதிற்கு தக்க வேலைகள் செய்வது இயல்பாக உள்ள சூழலில் பத்துநபர்களுக்கும் அதிமாக உள்ள குடும்பத்தில் வாசிப்பிற்கான நேரம் அம்மாவால் கிடைத்தது. அய்யா சொல்வதை புரிந்து கொண்டு அம்மா சூழ்நிலையை சரிசெய்து கொள்வார். அய்யாவின் கயிற்றுகட்டில் தான் பதினைந்து வயது வரை நான் வாசிக்கும் இடம். அதற்கு மேல் ஒரு மேஜைவிளக்கு உண்டு. ட்யூஷன் முடிந்து வந்ததும் உணவு முடிந்து, அய்யாவின் படுக்கையில் அமர்ந்து கதை புத்தகங்கள் வாசிப்பேன். வீடு அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும். அவர் இரவு நடை முடித்து திரும்பி வந்து நான் வாசித்து முடிக்கும் வரை கட்டிலில் அந்தப்பக்கம் அமர்ந்திருப்பார். முடித்து என் படுக்கைக்கு உறங்கச்செல்லும் முன் வாசித்துக்கொண்டிருப்பதற்காக ஒரு அணைப்போ, முத்தமோ கிடைக்கும். ஒரு குழந்தைக்கு புத்தகங்களும், வாசிப்பு பழக்கமும் பெற்றோர் அளிக்கும் ஆகச்சிறந்த ஆசிகளுள் ஒன்று.
சிறுவர் சிறுமியாக நாம் புத்தகத்தை எடுத்து சஞ்சரிக்கும் வெளியானது படிப்படியாக விரிந்து கொண்டே செல்கிறது. வாசிப்பை சஞ்சரிப்பு என்றும் சொல்லலாம். கனவு வெளியில் சஞ்சரித்தல். புத்தகத்தை ‘மொழி பிரபஞ்சம்’ என்று சொல்லலாம். அது நம் அகத்தை பிரபஞ்சமாக மாற்றும் இயல்பு கொண்டு குட்டி பிரபஞ்சமாக நம் கைளில் தவழ்வது. அதற்காக நம் கைகளும் மனமும் காத்திருக்கட்டும்.
இந்த நூலை எழுத்தாளர் அம்பைக்கு சமர்பிக்கிறேன். இந்த ஆண்டு எண்பதாவது வயதை கடந்து செல்லும் அம்பைக்கு வணக்கங்களும் அன்பும்.
இந்த நேரத்தில் எழுத்து முன்னோடிகளை வணங்குகிறேன்.
அன்புடன்,
கமலதேவி
பா.மேட்டூர்
22/11/2024
Comments
Post a Comment