அமுது
காரைக்கால் துறைமுகம் அந்திக்கு முந்தைய பரபரப்பில் இருந்தது. கடல்புறத்து அங்காடிகளையும், கடலையும் பார்த்தபடி புனிதவதி கடல்திசை நோக்கி திறந்திருந்த பூக்கண் சாளரத்தின் அருகில் நின்றாள். விரல்கள் சாரளங்களின் இடைவெளிகளை பற்றியிருந்தன. காரைக்கால் துறைமுகத்திலிருந்து பரமதத்தன் கடலேறி சென்று ஒரு திங்கள் ஆகியிருந்தது. கண் முன்னே கடல் தழும்பிக்கொண்டிருந்தது. பரதவர்கள் கட்டுமரங்களை கரையில் இழுத்துவிட்டுக்கொண்டிருந்தனர். பரமதத்தனை நினைக்கும் போதே அவளுக்கு தொண்டையில் விண்னென்று ஒரு வலி வந்து போனது. வரும் திங்களோடு அவளுக்கு பதினாறு அகவை திகைகிறது. கடல் அலைகளை பார்த்துக்கொண்டு வரையப்பட்ட ஓவியம் போல நெடுநேரம் நின்று கொண்டிருந்தாள். ஒரு சில கணங்கள் புறாவென தத்தும் விழிமணிகள் பின் கடலில் நிலைகொண்டன. மென்னிளம் மாங்கொழுந்தின் நிறம் அவளுக்கு. எதிரே மேற்கு சாளரத்தின் வழி வந்த ஔிப்பட்டு அவளின் மஞ்சள் பூசிய முகம் வியர்வையில் மினுங்கியது.
“இப்படியே நாள் பொழுது இல்லாமல் உப்புக்காற்றில் வெயில்பட நின்றால் உடல் வெம்பிப்போய் விடும் புனிதா,” என்று சொல்லியபடி பூங்கொடி உணவுத்தட்டை மனைபலகைக்கு கீழே வைத்தாள். புனிதவதி முகத்தை திருப்பாமல் அசைந்தாள். அழுத்தமான சங்கு வளைகளின் எழுப்பும் ‘மத்’ என்ற அழுந்திய ஓசையும்,காலில் அணிந்திருந்த தண்டைகள் உரசும் அழுத்தமான கிண் என்ற ஒலியும் எழுந்தது.
“உச்சிப்பொழுதில் இல்லம் வந்த சிவனடியார்களுக்கு அன்னமிட்டுவிட்டால் உன் வயிறு நிறைந்து விடுமா..”
பிறந்ததிலிருந்து கடல் அவளுக்கு அனைத்துமாக இருக்கிறது. உற்சாகத்துடனும் அழுகையிலும் தனிமையிலும் பார்ப்பதற்கு கண்ணெட்டும் தொலைவு வரை கடல் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அன்றுதான் பார்ப்பதை போன்று தோற்றம் காட்டும்.
“கடல் உனக்கு சலிக்கவே சலிக்காதா?”
“நிலம் போல அல்ல கடல். துள்ளிக்கொண்டே இருக்கும் உயிர்ப்பு…”என்றபடி புனிதவதி சாளரத்தில் முகத்தை சாய்த்துக்கொண்டாள். மென்முடிகள் கன்னத்து வியர்வையில் ஒட்டிக்கொள்ள அவள் முகம் சின்னஞ்சிறிய ஆலிலை தளிரைப் போல இருந்தது. கொழுவிய கன்னங்களும் பின்கழுத்து மென்முடிகளும் அவளை இன்னும் சிறுமியென காட்டின. கண்சுடரில், இதழில் ஔி பூக்கும் பருவம்.
“என்னிடம் மறைக்க வேண்டாம்…கடல் வணிகத்துக்கு சென்றவர் ஒரு திங்களில் மீளமுடியுமா…இதென்ன பித்து…”என்று கேட்டுக்கொண்டே பூங்கொடி அவளருகே வந்தாள். அவள் தோள்களை பற்றிக்கொண்டு சாளரத்திற்கு வெளியே பார்த்தவாறு, “அங்கே பார்…பிற்பகல் பணிமுடித்து மாற்று ஆட்கள் துறைக்கு வரத் தொடங்கி விட்டார்கள்…அங்காடிகளில் அந்தி சந்தைகளுக்கான ஆயத்தங்களை செய்கிறார்கள்..நீ இன்னும் உச்சிப்பொழுது உணவுகூட உண்ணவில்லை..”என்றாள். அங்கே தோளில் எடையுடன் ஆட்கள் நடந்து சென்றார்கள். அவர்களின் நடையில் அவர்கள் தூக்கும் எடை தெரிந்தது. புனிதவதி தலையசைத்துவிட்டு மனைப்பலகையில் உணவை எடுத்து வைத்து அமர்ந்தாள்.
பூங்கொடி அந்தகூடத்திலிருந்த விளக்குகளை துடைத்து எண்ணெயிட்டு திரிகளை ஊறவிட்டாள். அவள் தன் துணைவன் ரத்தினத்திடம் முன்தினம் பேசியதை நினைத்துக்கொண்டாள். “இப்பொழுதெல்லாம் எனக்கு புனிதவதியை நினைத்தால் மனதிற்குள் என்னவோ செய்கிறது?”
“ஏன்..அந்தப்பெண்ணிற்கு என்ன?”
“அவர் கப்பலேறியதிலிருந்து என்னவோ போல இருக்கிறாள். உணவு சரிவர உண்பதில்லை. கலகலப்பு குறைந்துவிட்டது..”
“வணிகக்குடியில் கடலேறி செல்வது வழக்கம் தானே..”
“ஆம்..”
“அத்தனை அன்பா…அந்த தாழையின் வாசம் இந்த நாரில் கொஞ்சமும் இல்லையே..’
“கேலி வேண்டாம்,”
“நம்மை விடு..புனிதவதிக்கு என்ன?”
“ஒருசொல் உருவெடுத்து வந்து நிற்பதை போல நேரகாலமில்லாமல் சாளரத்தின் அருகில் கடல்பார்த்து நிற்கிறாள். இப்படித்தான் பழம்பாடல்களில் கடற்கரையில் பிறந்த சேர்ப்பனின் மகள் கடலோடி சென்ற தலைவனுக்காக அந்தியில் அகலுடன் கடற்கரையில் நிற்பாள். இந்தக்கடல் பரப்பை விட என் நட்பு பெரிது என்பாள்,” என்று நிறுத்தினாள். அதை சொல்லும் போதே அவள் கண்கள் ஈரம் கொண்டது.
ரத்தினம் முகத்தில் எழுந்த புன்னகையை மறைத்துக்கொண்டு மேலும் சொல் என்றான்.
“எப்போதும் கடல் பார்ப்பவள் தான். ஆனால் ஏதோ சரியில்லை,”
“நீயாக எதையாவது உலறாதே..”என்றவாறு வேட்டியை வரிந்து கட்டினான்.
“தான் வளர்த்த புன்னையை தங்கையாக நினைக்கும் பெண் ஒருத்தி அதனடியில் அமர்ந்து தலைவனை நினைக்கத் தயங்குவாள். அது போல இவள் என்னை தவிர்க்கிறாள். என்னுடன் சங்குவிளையாட்டு விளையாடிய புனிதவதியா இவள்? கப்பலேறி பொருள் சேர்க்க சென்ற வணிகன் சிலநாட்களில் திரும்ப இயலுமா? அவன் என்ன மீனவனா..என்னாயின்று இவளுக்கு?”
“புனிதவதிக்கு ஒன்றுமில்லை. உனக்கு தான் ஏதோ ஆகிவிட்டது. கொஞ்சம் அவளை தனியாக விடு..நாள் முழுவதும் அவள் தோளில் கிளி போல தொத்திக்கொண்டிருக்காதே,”
அவள் சோர்ந்த முகத்துடன் அமைதியாக இருந்தாள்
“ உங்கள் இருவருக்கும் தமிழ் சொல்லிக்கொடுத்த பண்டிதரை சொல்ல வேண்டும்..எப்போதும் பாடல்களையே நினைக்காமல் சுயமான எண்ணமும் வேண்டும்..”
அவள் முறைத்தபடி அவனையே பார்த்துக்கொண்டிருத்தாள்.
“மேலும் நான் எளிய நகர் காவலன். கப்பலேறி எங்கும் செல்லப்போவதில்லை,”என்று சிரித்தபடி குறடுகளை கால்களில் மாட்டிக்கொண்டான். ஒருகையில் காவல்வேல் இருக்க இடதுகையில் அவள் தலையில் மெதுவாக தட்டி புன்னகைத்தபடி தெருவில் இறங்கினான். சட்டென்று புனிதவதி நினைவுக்கு வர பூங்கொடியின் கண்கள் கலங்கின. அனைத்தையும் பார்த்துக்கொண்டு திண்ணையில் அம்ர்ந்திருந்த மாமி, “உடம்பு என்றாலும் மனசு என்றாலும் யார் சுமையையும் யாரும் வாங்கமுடியாது. கலங்கின தண்ணிராக தன்னால் தெளியவிடனும்..நாமளும் சேர்ந்து சேறாக்கக்கூடாது ,”என்றவாறு தெருவைப் பார்க்கத் தொடங்கினாள். “அங்கே கடல். இங்கே தெரு..”என்று முணுமுணுத்தபடி பூங்கொடி உள்ளே சென்றாள்.
வேகமான கடற்காற்று கூடத்தினுள் புகுந்தது. அந்த அசைவில் திடுக்கிட்ட பூங்கொடி தன் நினைவிற்கு வந்தாள். உணவுத்தட்டை மூடி வைத்துவிட்டு புனிதவதி தரையில் படுத்திருந்தாள். அவள் மனது புனிதவதியில் எதையோ உணர்ந்து கொண்டது. ஆனால் அவள் சிப்பி போல பொத்தி வைப்பதை திறக்கத் தயங்கியது. பொழுது அந்தியாகி கரைந்து கொண்டிருந்தது.
கடற்கரையில் மனிதநடமாட்டங்களின் சந்தடிகள் அதிகமாயின. காற்றில் கள் மணம்.. தாழை மணம். நகரின் சந்தடிகளுக்கு சற்று தள்ளியிருந்த வணிகர் இல்லம் அது. புனிதவதியின் தந்தை தனதத்தன் மகளுக்காக அளித்தது. நெடிய மரங்களென தூண்கள் நிற்கும் கூடமும், வான் தெரியும் உள்முற்றமும், கடல் நோக்கிய மணல்முற்றமும், இருநிலை மாடமும் கொண்ட அந்த இல்லத்தை மௌனம் அழுத்திக்கொண்டிருந்தது. வெளியே கருங்கல் பாவிய சாலையில் பறவைகள் கலைவதைப் போன்று, பணிமாற்றும் காவலர்கள் வேல் ஊன்றி நடக்கும் ‘நங் நங்’ என்ற ஓசைகள் கேட்கத் துவங்கியதும் புனிதவதி எழுந்து கொண்டாள்.
குளித்து ஆடைமாற்றி முகம் திருத்திக் கொண்டு கீழ்தளத்திற்கு இறங்கினாள். சிவனுக்கான அந்தி பூசனைகளை செய்து முடித்து மணல்முற்றத்தின் தூணருகே வந்து நின்றாள். நினைக்கத்தெரிந்த நாளில் இருந்து மனதில் பதிந்திருந்த ஈசனின் உருவமாக வாழ்வில் வந்த பரமதத்தனை நினைத்த போது ஏதோ ஒன்று அவள் நெஞ்சை அழுத்தியது.
‘அவன் முகம் அன்று காண்பித்த உணர்வு என்ன? பூங்கொடி சொல்வது போல நான் என்ன பித்தியா? காரைக்காலின் மாபெரும் வணிகனின் மகளறியாத பிரிவா? இது அதுவல்ல. மனதை துணுக்குற செய்து சுடும் ஒன்று. அவன் என் முகம் பார்த்து இல்லை என்று சொன்னால் போதும். புன்னையின் சின்னஞ்சிறு பூக்கள் முற்றத்தில் உதிர்ந்து கிடக்கின்றன. இந்த மலர்களைப்போல எனக்காகவென அவனிடமிருந்த அன்பு சிலநாட்களில் உதிர, கடற்கரையில் விளையாடும் ஆமை ஓட்டினுள் ஒடுங்குவது போல ஆனது ஏன்’ என்ற கேள்வி அவளின் அன்றாட செயல்களுக்கு முன்னும் பின்னுமாக அவளுடன் நாள்முழுவதும் இருந்தது.
துறைமுகத்திற்கு வெளியே கூத்துத்திடலில் ஏதோ கூத்துநடக்கிறது. கூத்தனின் உரத்த குரல் இல்லம் வரை கேட்கிறது. இரவு வழிபாடுகளின் உற்சாக இரைச்சல். இந்த நகரளவே பெரிய சிவன் அவர்களிடமிருக்கிறான். சிவன் பெயராலேயே இங்கு அனைத்தும் நடக்கின்றன. பரமதத்தனும் அவ்வாறே சிவசங்கல்பம் என்று சொல்லி விடைபெற்றான்.
மறுபடி அவள் மனம் சொற்களில் குவியத்தொடங்கியது. ‘ஆம் என்று ஒரு முறை சொல்லும் மனதை இல்லை என்று ஓராயிரம் முறை மறுக்கிறது இன்னொரு மனம். அதற்கு வலுவிருந்தால் அந்த கடலலைகளின் மீதேறி சென்று பாய்மரத்தின் மீதமர்ந்து காற்றிடம் யாசிக்கலாம். கடல் கரையில் நின்று அலைகளிடம் பலநூறு முறை இல்லை என்று சொல்லக்கேட்கலாம். உடலில் ஒட்டிப்படியும் உப்புகாற்றை இல்லை என்று சொல் என ஆணையிடலாம். ஆனால் கடல் மணலை குவித்து செய்து வைத்த பாவை போல அது சரிவதை உணர்ந்தபடி இங்கிருக்கிறது. அதை தவிர்க்கும் வாதை ஒரு வண்டு போல மனதை குடைகிறது. நான் உணர்ந்த உன்னை என்னிடமிரும் இழுத்து செல்லும் அலைநீரின் கரம் எது? அதை சரிக்கும் காற்றின் விரல் என இருப்பது ஊழா’என்று நினைத்தபடி முற்றத்து வாயிலில் வந்து நின்றாள். நங்கூரத்தின் பிடி இழக்கும் கப்பல் என நெஞ்சிலாடும் மஞ்சள்சரடை உணர்ந்தாள். கடல் சூழ்ந்து நிற்கும் போது பலமிழக்கும் நங்கூரத்தால் ஆகக்கூடுவது என்ன? பலமிழக்கும் நங்கூரமா இது? அன்று பரமதத்தன் பார்வையில் இருந்தது என்ன? ஆம் அதுவே தான். சட்டென்ற விலக்கம். அன்றே வெகுதூரம் சென்று விட்டான்’ என்று நினைத்தபடி முற்றத்திற்குள் நடந்தாள். சற்று தொலைவில் மீனவர்கள் அகல் ஏற்றி வலைகளை உதறிக்கொண்டிருந்தார்கள்.
சிவனடியாருக்கு மாங்கனி தந்து பசி தீர்த்த அன்று இன்னொரு கனி கேட்ட பரமதத்தன் பாதிஉணவில் எழுந்து கொண்டான். உணவுண்டு செல்லுமாறு அவன் கைகளை பிடித்தாள். கைகளை மெல்ல விலக்கி நகர்ந்தவன் அடுத்த சில நாட்களில் கடல் வணிகத்திற்கு ஆயத்தமானான். அந்த நாளை நினைத்தபடி இரவுஉணவிற்காக யாராவது வருகிறார்களா என்று பார்க்க முன்முற்றத்திற்கு சென்றாள்.
‘அந்த நாட்களில் அவனிடமிருந்தது இருந்தது என்ன? விடுவித்து கொள்ளும் பாய்மரத்தின் இறுக்கமா? என் அன்பில் அவன் கண்டது என்ன? விலகி செல்லும் கரையின் பதற்றங்களையா? எத்தனை கனிந்தும் அவனுக்கு உவர்ப்பு வர காரணம் என்ன? சாம்பலின் உவர்ப்பு. என்மகள் பக்தி கடல் என்று தந்தை சொல்வாரே..அதுவா? ‘ என்ற எண்ணங்களால் அவள் மனம் சுழன்று கொண்டே இருந்தது.
முன்முற்றத்து இரவு விளக்கிற்கு எண்ணெய்யிட வந்த பூங்கொடி சில கணங்கள் அவளை பார்த்தடி நின்றாள். இந்த இல்லத்திற்கு வந்த நாளின் பூரிப்பை தாளமுடியாது இதே இடத்தில் மல்லிகை கொடி போல தன் தோள்களில் சாய்ந்து, “அந்தியில் இந்த முற்றம் எத்தனை அழகாய் உள்ளது பார்த்தாயா பூங்கொடி,” என்று கூறியதை நினைத்துக்கொண்டாள். அவள் அருகில் நின்றதை உணராமல் புனிதவதியின் உள்ளம் தன்னுள்ளே பேசிக்கொண்டிருந்தது.
‘நான் உணரும் சிவம் இந்த கடற்காற்றில்.. தாழை மணத்தில்.. சின்னஞ்சிறிய புன்னை மலரில் இருக்கிறது. அவன் உருவில் கண்டதும் அதைத்தான். எங்கே கரையிருக்க வேண்டும் என்பது நியதி. நான் ஒரு கொஞ்சம் முன்நகர்ந்த கடலா’என்று சொற்களால் பெருகிக்கொண்டிருந்தாள். அந்த முற்றத்திற்கு அப்பால் கடல் சுழன்றடித்து காற்று திசையழிந்து சென்றது. ஒரு சில தினங்கள் அவளுக்கு கடல் வெறும் கானலாகியது. விலக்கம் ஏன்? என்ற ஒரே கேள்வியை கேட்டு பதிலை அடைந்து அதை ஏற்க மறுத்து மீண்டும் அதே கேள்வியை கேட்பது அவள் மனதிற்கு வாடிக்கையானது.
விண்மீன்கூட்டங்கள் மரங்களை மொய்ப்பதைப்போல புன்னைகள் பூத்தன. காற்றில் உதிர்ந்தன. எஞ்சியவை காய்த்தன. இலையுதிர்த்தன. தழைத்தன. மீண்டும் பூத்தன. உவர்கழிகள் நிறைந்தன. உப்புவயல்கள் காய்ந்து பாலங்களாகி பெயர்ந்தன. உப்பு மலைகளாகி பின் ஒன்றுமில்லாமலாயின.
அவள் அந்த இல்லத்தை விட்டு வேறெங்கும் செல்லவில்லை. எங்கோ ஒரு முனையில் அந்த இல்லம் அவர்களை பிணைக்கும் என்று நினைத்தாள். அவன் வந்தப்பின் அவனிடம் சொல்லவென ஓலைகளில் புன்னைகள் பூத்ததை, பசு ஈன்றதை, தாழை மலர்ந்ததை எழுதி வைத்தாள். வந்து வந்து சென்ற உறவுகள் மெல்ல ஓய்ந்தன. தாயும் தந்தையும் இவளின் அளந்தெடுத்த வார்த்தைகளுக்கு தலையசைத்துவிட்டு பூங்கொடியுடன் நெடுநேரம் பேசிச் சென்றார்கள். பூங்கொடி தாயானாள். விழாக்கள் வந்து சென்றன. உறவுகளில் பிறப்புகளும் இறப்புகளுமாக சுழன்றன நாட்கள். இப்போதெல்லாம் முற்றத்தில் உணவுண்ண வரும் ஆட்களின் சந்தடிகள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. பெண்கள் குழந்தைகள் வணிகத்தெருவின் ஆட்கள் அந்த முற்றம் நோக்கி வந்து கொண்டேயிருந்தார்கள்.
புனிதவதி சிலநாட்கள் உப்பரிகையிலிருந்து கண்ணெடுக்காமல் உப்புவயல்களை பார்த்துக்கொண்டிருப்பாள். அவள் தோளை பற்றிய பூங்கொடியிடம் உவப்பும் ஈசனின் சுவை என்று ஒருநாள் சொன்னாள். பூங்கொடி சொல்லால் தொடுகையால் சிரிப்பால் அணைப்பால் அவளை நோக்கி வந்துகொண்டே இருந்தாள். அவளின் குழந்தை புனிதவதியின் மடியிலிருந்து இடைக்குத்தாவி பின் அவள் கைப்பிடித்து கடற்கரைக்கு அழைத்து சென்றாள். சிறிய கைகள் நிறைய சிப்பிகளும் சங்குகளும் கொண்டுவந்து கலைத்து வீசி இல்லத்தின் ஒழுங்கை குழைத்தாள்.
புனிதவதிக்குள் யாருமறியாது தழும்பிக்கொண்டிருந்த கடல் மொத்தமும் உறையும் நேரம் பட்டென ஒரு மின்னல் வந்து அத்தனையையும் ஔியாக்கியது. அவள் மணலில் தாழைகள் பூத்தன. அவள் கப்பலின் பாய்மரங்கள் சட்டென்று வரிந்தன. அமரமுனை பாய்ந்தது. அந்த செய்தி அவளின் உறைந்திருந்த மனதை கதிரென தொட்டது.
அன்று பரமதத்தனை பாண்டிய நாட்டு வணிகத்தெருவில் கண்டோம் என்று மாமன்கள் குதூகலத்துடன் ஓடிவந்தார்கள். அவளுக்காக ஏதா ஒன்றை சொல்லமுடிந்த உற்சாகம் அது. வரம் கிடத்ததை போல திருப்பித்திருப்பி அதையே சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவள் தலையசைப்பிற்காக காத்திருந்தார்கள். அவர்களுக்கு மனதின் ஒரு மூலையில் உறுத்திக்கொண்டிருந்த முள்ளை பிடுங்கி எறியும் ஆவேசம்.
உற்சாகமாக பொன்னும் மணியும் முத்தும் என எத்தனை முடியுமா அத்தனையும் இல்லம் வந்தன. அவளுக்கான சிவிகை முற்றத்தில் இறங்கியது. அன்று புனிதவதி ‘சிவனே என் கடல் கரை கடக்கவில்லை’ என்று தனக்கே சொல்லிக்கொண்டாள். இவற்றை எல்லாம் பார்த்து அழுதுகொண்டிருந்த பூங்கொடியின் மகளை அணைத்துக்கொண்டு இரண்டு இரவுகள் கதைகள் சொன்னாள். புறப்படும் நாளில் மங்கை பருவத்தினளான அவள் முழுவதுமாக செந்நிற ஆடையில் தன்னை மறைந்தபடி சிவிகையில் அமர்ந்தாள். பூங்கொடி மட்டுமே அந்தக்கூட்டத்தில் பதைத்து கொண்டிருந்தாள். துடிக்கும் மீனாய் தன்னை உணர்ந்தாள். அழுகைக்கு முன்னே நின்று கொண்டாள். எதையும் குலைக்க வேண்டாம் என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள். அவன் இவளைக் கண்டால் என்ன நடக்குமோ என்று கலங்கினாள்.
புனிதவதி மனதில் எதையும் தக்க வைக்காது மணல் போல இருந்தாள். மாற்றி மாற்றி உவர்ந்தும், நனைந்தும், குளிர்ந்தும் ,கசிந்தும் கூட எதுவும் அவள் தன்மையாக இருக்கவில்லை. சிவிகை ஆண்டுகள் சிலவற்றை கடந்து அவனை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்ற நினைத்தவளாக சிவிகைக்கு வெளிப்புறம் கண்களை ஓட்டினாள். செந்நிற ரேகைகள் விரிய குன்றின் பின் மறைந்து கொண்டிருந்தான் சூரியன். பின்னால் குதிரையிலிருந்து ஒரு குரல், “இன்னும் ஒரு நாழிகைக்குள்,”என்றது.
அந்தி மங்கத்துவங்கிய நேரத்தில் மெதுவாக தயங்கிய சிவிகை ஓரிடத்தில் இறக்கி வைக்கப்பட்டது. சந்தடிகளினால் அது வணிக வீதி என்று புனிதவதி உணர்ந்தாள். குரல்கள் கலைந்தும் ஒன்றன் பின் ஒன்றாகவும் கேட்டன. மீண்டும் சிவிகை தூக்கப்பட்டதில் உடல் முழுவதும் ஒரு முறை தடுமாற சிவிகைத்தளத்தில் கைகளை ஊன்றிக்கொண்டாள். சந்தடிகள் குறைந்து பூமணம் அடர்ந்து பின்வாங்கியது. கோயில் மணிஓசை கேட்டது. ஆட்களின் குரல்கள். குழந்தைகளின் கலகலப்பு. சந்தடிகள் குறைந்த இடத்தில் சிவிகை நின்றது.
பேச்சுக்குரல்களுக்கிடையில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. சிவிகை இறக்கப்பட்டு திரை விலக்கப்பட்டது. முதலில் பூங்கொடி இறங்கி நின்றாள். புனிதவதி இறங்கிய உடன் தன் கால்களில் ஒரு குளிர் தொடுகையை உணர்ந்து திடுக்கிட்டு உதற முற்பட்டாள். அந்த திடுக்கிடலில் தடுமாறியவளை பூங்கொடி பிடித்துக்கொண்டாள். ஆனால் அந்த கரங்கள்…அதற்காகத்தானே இத்தனை நாள். அவள் உடல் நடுங்கி தளர்ந்தது. தலைக்கு மேல ஏதோ அறியாத எடை ஒன் று அழுத்தியதில் பின் கழுத்து நடுங்கியது. தலையை நிமிர்த்த முடியவில்லை. அடுத்து ஒரு பெண்ணுடைய கரம். அதை ஒட்டிக்கொண்டு தாமரை இதழ் போன்ற ஒரு சிறு கை. வளையணிந்த சிறுமியின்கரம். அதை எடுத்து நெஞ்சில் வைத்துக்கொண்டால் என்னுள் அனைத்தும் அணைந்துவிடும் என்று ஓடிக்கொண்டிருந்த அவள் மனதை ஒரு குரல் கலைத்தது.
‘தெய்வம் போன்ற பெண்ணை இல்லாளாக நடத்த இயலாத தவிப்பில் கடல் கடந்து ஓடினேன். பொருள் ஈட்டினேன். காரைக்காலை தவிர்க்கவே பாண்டிய நாடு வந்தேன். இங்கு இவளை மணந்து பெண்குழந்தைக்கு தந்தையானேன். குழந்தைக்கு புனிதவதி என்று பெயரிட்டுள்ளேன். தெய்வமாக இருந்து என் குடியை காக்க வேண்டும் ‘என்று சொல்லும் பரமதத்தனின் குரலைக் கேட்டு புனிதவதியின் உடல் சில்லிட்டது. என் குடி காக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை கால்களை தொட்ட அவன் கரங்களை தலையை நிமிர்த்தாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். என் குடி… என் குடி…அந்த ஒற்றை சொல் வண்டு போல அவள் தலையை குடையத்தொடங்கியது. அங்கங்கே ஊசியால் குத்தியத்தை போன்று உடல் விதிர்த்தது. ஒரு பேரலை வந்து கால்களை தொட்டு அவளை முழ்கடித்து நிர்வாணமாக்கியது. சட்டென அடித்துச்சென்றது. பாதங்களுக்கு அடியில் நழுவிச்செல்லும் நிலத்தை, தலைமேல் தழுவிச்செல்லும் கடலை உணர்ந்தபடி சரிந்தாள்.
கண்விழித்த போது பூங்கொடியின் மடியிலிருந்தாள். தலையிலிருந்த ஆடை முற்றிலும் விலகியிருந்தது. அவளை பார்த்த கண்கள் அனைத்தும் மிரண்டிருந்தன. திருமங்களநாளில் கண்ட புனிதவதியா இவள்? என்ற மிரட்சி அனைவருக்கும் உண்டானது. மாந்தளிர் நிறம் கருத்து, உடல் வற்றி,அவள் கண்ணில் உள்ள வெளிச்சம் மட்டும் பதைத்து அலைந்தது. குழிவிழுந்த கன்னங்கள். வறண்ட இதழ்கள். அவர்களின் கண்களை கண்ட அவள் எங்கிருந்தோ வீசப்பட்டவள் என விசையுடன் எழுந்தாள். பூங்கொடியிடம் ‘குழந்தை காத்திருப்பாள். இவர்களுடன் செல்..நம் முற்றம் எப்போதும் நிறையட்டும்’ என்று சொல்லி விட்டு தெருவை கடந்து நடந்தவளை யாரும் தடுக்க முடியாது என்று உணர்ந்து கொண்டார்கள்.
அந்தி எரிந்து விலகியதும் குளிரத்துவங்கியது நிலம். நடந்து வரும் வழியில் அந்த செவ்வாடை எங்கோ நழுவியிருந்தது. நடந்து கொண்டே இருந்தாள். குனிந்த தலையை நிமிர்த்தாமல் பாதையை பார்த்து நடந்தாள். நடுநிசியில் பாதையோரத்து கல்மண்டபத்தில் படுத்துக்கொண்டாள். சுற்றிலும் நீர் தேங்கிய நெல்லம் வயல்களின் குளிர் காற்று மண்டபத்தை மோதியது. மார்கழி மாதத்து பனியில் சில்லிட்டு கிடந்தது கல்மண்டபம். அயர்ச்சியில் விழிகள் தானாக மூடிக்கொண்டன.
தேகமற்று பனிமலைகளில் நடந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு மடிப்பு வீதம் மலைகளை தாண்டிக்கொண்டிருந்தாள். மேகங்கள் திரண்டு மலைகளாயின. தாவி வந்த தமிழ் அவளின் அருவத்தை அணைத்துக்கொண்டது. அவள் மொழியானாள். சொல்லும் சொல்லனைத்தும் அவனுக்கே. காணும் காட்சி எல்லாம் அவனே. உணரும் உணர்வெல்லாம் அவனே. திசைகள் அழிந்த வெளி.
‘சாம்பல் பூத்த இணைக்கழலன்றி எதில் படியும் என் சிரம். சிவனே.. என் சீவனுக்கென்று யாருண்டு...’ ‘நானுண்டு அம்மையே..தாயிலி நான்..ஆலங்காட்டில் உனக்காக காத்திருக்கிறேன்’ என்று ஒரு குரல் உயிரை தொட்டு சில்லீட வைத்தது. கல்மண்டபத்திலிருந்து பதைத்து எழுந்த அம்மை மீண்டும் நடக்கத்தொடங்கினாள்.
அவள் உடலில் ஒரு இனிய உளைச்சல். உள்ளம் நிறைந்து தழும்பியது. தவிப்பு கால்களை பின்னச்செய்தது. வானெங்கும் செந்நிறம் வழிய உதித்த சூரியனின் கதிர்கள் மண் தொடும் நேரத்தில் அந்த ஆலங்காட்டில் கால் வைத்தாள் அம்மை. ஒற்றை விருட்சத்தின் எண்ணற்ற விழுதுகளின் காடு அது. ஒவ்வொரு விழுதும் ஒரு விருட்சமென நின்றது. எது அன்னைவிருட்சம் என்று திகைக்கும் படி அத்தனை விழுதுகளும் விருட்சங்களாக தூர்கட்டி நின்றன. ஒரு விருட்சம் இதோ நான்…அதுவும் நான் என்று பல விருட்சங்களாக மாயம் காட்டியது.
அந்தக்காட்டில் சூரிய ஔி தயங்கித்தயங்கி அங்கங்கே ஔிவில்லைகளாக விழுந்திருந்தன. தண்மை…பெரும்தண்மை. கால் வைக்கும் மண்ணில் தண்மை. சிரசை தொடும் காற்றில் தண்மை. உடல் தொட்டு உயிர் தொட்ட தண்மையில் அம்மை கனிந்து அமுதானாள். அது அமிழ்தமிழ் தமிழ்து என்றாகி பெருக்கெடுத்தது. அவனே இருசுடர் தீ ஆகாசம் ஆவான். அவனே புவி புனல் காற்று…என்று அம்மையின் அமுதம் ஆலங்காடெங்கும் பாய்ந்து பெருக்கெடுத்தது. அம்மை ஒரு தூரில் முதுகு சாய்த்து அமர்ந்தாள். ஏதோ ஒரு மந்தி புடைத்திருந்த வேரில் கொண்டு வந்து போட்டிருந்த மாங்கனி அவளின் சிறுபசிக்கென அங்கு கிடந்தது.
இருட்டும் வெளிச்சமுமாக அந்த இடத்தில் பொழுது திகைத்தது. குளிரும் தண்மையும் வெம்மையும் மாறி மாறி விளையாடின. மண்ணில் சூடும், வேரில் ஈரமும், விழுதில் வறட்சியும், மேலே பச்சை வெளியுமாக இருக்க அம்மை கண்கள் கூசி நிலைகுழைந்தாள். எதிரே அவளின் சின்னஞ்சிறு சிவன் லிங்கவடிவில் வீற்றிருந்தான்.
அம்மையின் மனம் குதித்தது. கொஞ்சியது. பாடியது. கூத்தனின் கால்கள் எழுந்தன. அங்கு நிற்கும் விழுதுகள் அனைத்தும் அவன் கால்களாக ஆடினான். குதூகலித்து துள்ளின பாதங்கள். எம்பிக்குதித்து தாவின. கால்களை பார்த்தபடி பாடினாள் அம்மை. மீண்டும் மீண்டும் ஊற்றுக்கண்கள் சுரந்து ஆலம்விழுதுகளை நனைத்தன. இவள் பாடினாள். அவன் ஆடிக்கொண்டிருந்தான். பறவைகளின் இரைச்சல் கேட்கத்துவங்கியது. பின் அதுவும் இல்லை.
அந்த எத்தன் அவளை ஏமாற்றுவதற்காக வலது காலை ஊன்றி இடது காலை சட்டென்று தூக்கினான். குனிந்தே இருந்த அம்மையின் கண்கள் நிமிர்ந்தன. இலைகளும் கிளைகளும் வழிவிட்ட வானத்தை நோக்கி காட்டின பாதங்கள். பரவசத்தில் எழுந்த அம்மை வான் நோக்கினாள். நட்சத்திரங்கள் மினுக்கென இடம் மாறின. சந்திரன் ஔிர்ந்தான். வால்நட்சத்திரங்கள் வீச்சுடன் கடந்தன. அவன் ஒற்றை மீனாக மோனத்தில் அமர்ந்தான். ஆயிரம் கைகளை வீசி எழுந்தான். தன் இடைச்சதங்கையின் கிண்கிணிகளை வீசி விண்மீன் கூட்டங்களாக்கினான். வெடித்து சிரித்து விண் அதிர்த்தான். நெற்றிக் கண் அழல் வீசி ஆதவன்களாக்கி சுழற்றினான். கால் வீச்சை மாற்றி போட்டு முடிவின்றி சுழன்றான்.
அந்தரத்தில் தூக்கிய அவனுடைய சின்னஞ்சிறு இடதுகாலை தொடுவதற்காக உயர்ந்து நீண்ட இடது மணிக்கை ஒரு கண இடைவெளியில் நின்று கொண்டது. நின்றது நின்றபடியிருக்க அம்மை தன் கசிந்த அந்திகளால் அந்த இடைவெளியை நிறைத்துப் பாடினாள். அலையலையாக தன்னை சுற்றி கோட்டை கட்டினாள். சட்டென்று மேகங்களில் விரைந்தாள். பின் அவள் மண்ணை நோக்கவே இல்லை. அதற்கப்பால் அவளுக்கான முடிவிலா கடுவெளி விரிந்து பரந்தது. அங்கே ஆடிக்கொண்டிந்தான் ஆடல் வல்லான். அன்னை கைத்தாளம் போட்டுப் பாடினாள். பாம்பை கழுத்தில் வைத்து என்ன விளையாட்டு என்று கடிந்தாள். அவன் அவளுக்கு கடுவெளி நிறைத்து வேடிக்கை காட்டி கொண்டிருந்தான். அவள் அலைசத்தம் கேட்காத தொலைவில் அவன் முன்னால் அமர்ந்தாள். உன்னை மறவாமை வேண்டும் என்று அவள் கைத்தாளம் போட்டு பாடிக்கொண்டிருக்கிறாள். அவன் சிறு பாதங்களுடன் இன்னொரு இணைபாதங்களும் தெரிகிறது. இடி மின்னலும் வெயிலும் மழையும் மாறி மாறி அடிக்கிறது. அதன் துளிகளில் எல்லாம் அவன் நடனம். தாழை பூக்கிறது. புன்னை தழைக்கிறது. சிறு புன்னை மலர்களிலெல்லாம் அவள் முகம்.
[ வாசகசாலை 2025 ஜனவரி இதழில் வெளியான சிறுகதை]
Comments
Post a Comment