எரிக்கும் துக்கம்

 

[2024 நவம்பர் நீலி இதழில் கவிஞர் பெருந்தேவி சிறப்பிதழில் வெளியான கட்டுரை]



குவிந்த உள்ளங்கை நிறைந்திருக்கிறதா அல்லது ஒன்றுமில்லாதிருக்கிறதா? அது எதையோ கொடுப்பதற்காக நீள்கிறதா அல்லது பெற்றுக்கொள்வதற்காக நீண்டிருக்கிறதா? இந்த சாத்தியங்களைப் போலவே கவிதை தன் சொல்லில் எதை கொண்டிருக்கிறது என்ற சாத்தியங்களும் பலவாறாக  உள்ளன. பெருந்தேவியின் கவிதைகளை அந்த குவிந்த உள்ளங்கையில் அள்ளிய வழிந்தோடக்கூடிய  நீர் எனலாம். சில நேரங்களில்  தொண்டையில் சிக்கிய முள் போல நம்மை தொந்தரவு செய்கின்றன. சிலதை துப்பிவிடலாம். சிலதை விழுங்கிவிடலாம். சில உறுத்திக்கொண்டே இருக்கின்றன இந்தக்கவிதை போல.

ஆமென்

இல்லைக்கும் இருப்புக்குமிடையே

குதித்தோடுது சாம்பல்வட்டம்

எரிபடாத பிணக்கணக்கில் இன்றென் பெயர்

ஆகுக.

ஒரு மெல்லிய சருகு மண்ணிற்கு தன்னை ஒப்புக்கொடுக்காமல் காற்றுக்கு  ஒப்புக்கொடுத்து அலைகழியும் வதைகளின் சொல்வடிவம் இந்தக்கவிதைகள். அந்த ஒற்றை சருகு பலவாக உருமாறி எதிர்காற்றில் சுழல்கிறது. காற்று நின்றால் தரையுடன் படிந்து விடக்கூடும். ஆனால் நிற்காத காற்று அதை சுழற்றிக்கொண்டே இருக்கிறது. மேலும் எங்கும் எதிலும் கவிஞர் உணரும் கருணையின்மை அவரை தொந்தரவு செய்கிற முக்கியமான விசை.  

எனக்கு இருப்பதெல்லாம் ஒரே கேள்வி

எப்போது

நம் சாமிகள் வெகுளித்னத்தை இழந்தன?

ஏனெனில் அதிலிருந்து தொடங்கியது

நம்முடைய இந்தச் சீரழிவு

இனி தொடர்வதில் அர்த்தமில்லை

படையலை ஔித்துவைத்துவிட

வேண்டியதுதான்.

சில கவிதைகள்  யானைக்காதுகள் போன்ற நம் அகத்தின் மென்மையான பகுதியை தொடுகின்றன. 

இதயம் துடிக்கும்

பின்னேர ரயிலின்

எதிர்காற்றில்

வாயிலில்

காற்றே நானுன் கற்பூரம்

எதன் முன்போ ஒன்றுமில்லாமல் போக சம்மதிக்கிறது இந்த மனம்.

உணர்வுகள் அபத்தமாதல் என்பது கவிஞரை சீண்டிக்கொண்டே இருக்கிறது. அது அலட்சியபாவத்துடன் கவிதையில் வெளிப்படும் இடங்கள் முக்கியமானவை.

என்மனம் முன்னர் அன்னப்பறவையாக இருந்தது

நல்ல நினைவுகளை மோசமானவற்றிலிருந்து

பிரித்தெடுப்பதைச் செய்து கொண்டிருந்தது

இப்போதோ

எப்போதாவது மழை பெய்யும்

மாநகரத்துச் சாக்கடையில் நீந்திச்செல்கிறது

அதையே குடிக்கிறது

நீங்கள் சொல்லலாம்

அது அன்னப்பறவையே இல்லையென

அதனால் எதுவும் மாறிவிடப்போவதில்லை.

எள்ளல் கவிதைகளாக தம்மை காட்டிக்கொள்ளும் கவிதையிலும் வலியின் ஒரு இழையை உணரமுடிகிறது. அது  ஒரு வலிமையான பட்டு இழையின் தன்மை கொண்டிருக்கிறது.

திரைப்பட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இசைக்கலைஞர் இளையராஜாவிடம் நேர்காணல் செய்யும் போது ஒரு கேள்வி கேட்கிறார்.

 உங்களுடைய இசையின் ரகசியம் என்ன?

இளையராஜா வழக்கமான  சங்கோஜ சிரிப்புடன் நிதானித்து மெதுவாக கனவில் சஞ்சரிக்கும் கண்களுடன் கடலை பார்த்தபடி ஒரு சின்ன சோகம் உற்சாகமான பாடல்களில் கூட இருக்கும். எல்லா பாடல்களின் அடிநாதத்திலும் சோகத்தின் கலப்பு இருக்கும். டூயட்  பாடல்களும் விதிவிலக்கல்ல. அப்படித்தானே இருக்க முடியும் என்றார். 

அவர் சொல்வது போல துயரம் என்பதும் இயல்பு தானே. இயல்பான துயரம்  வலிமையானது. இயற்கையே அப்படித்தானே. அந்தி எத்தனை பெரிய துயரத்தின் வடிவம். பருவமழையை சோகத்தின் திரவவடிவம் என்று சொல்லலாம். கோடைகாலத்தின் முழு நிலாவிற்கு அந்த இயல்பு உண்டு. ஓவியங்களில் சாம்பல் வண்ணம் மனதை தொந்தரவு செய்யும். நாட்டியத்தில் கண்ணிமை தாழ்வில், உதடுகளின் குவிப்பில் கலைஞர்களால் அதை கொண்டு வர முடிகிறது. அதே போல பெருந்தேவியின் கவிதைகளில் கிட்டத்தட்ட அனைத்திலுமே அந்த தீற்றலை உணரமுடிகிறது. இருப்பின் வாதைகளின் முன்பும் இயற்கையின் கருணையின்மையின் முன்பும் கையறுநிலையை உணரும் தருணங்கள் கவிதைகளாகியிருக்கின்றன. மெல்லியல்புகளை நேரடியாக்காமல் அவற்றை மாற்றிப்போட்டும், அவற்றை கேள்விகேட்டும் அந்த துயரத்தின் இருப்பை சுட்டுகிறார். கவிதை என்பது திரும்பிக்கொள்ளும் முகவாய்க்கட்டையை திருப்பி நேர்பட உண்மையை சொல்லுதல் என்று பெருந்தேவி சொல்கிறார். அவ்வாறே அவர் கவிதைகள் முகத்தில் அறைகின்றன. 


                      கவிஞர் பெருந்தேவி

பெண்ணின் சங்கடங்கள், வாதைகள் என்று பெருந்தேவியின் பெண்சார்ந்த கவிதைகள் தனக்கென ஒரு கூறுமுறையை கொண்டுள்ளன. அவர் கவிதைகளில் முலைகள் மறுபடிமறுபடி வந்து கொண்டே இருக்கின்றன. கவிதை தொகுதிகளை வாசித்து முடிக்கும் போது முலைகள் ஒரு குறியீடாவதை தவிர்க்கமுடியவில்லை. 

முதலில் அது பெண்மையின் குறியீடு. பின்பு கண்ணகி திருகி எறிந்த முலை சினத்தின் குறியீடு. அவள் திருகி எடுத்ததை அவள் மகள்  கவிழ்த்து கருணையின் பாத்திரமாக்கினாள். அங்கே பெண்மை, தாய்மை என்ற கருத்தும் தலைகீழாக இன்னொரு வடிவை காட்டியது. மீண்டும் ஆண்டாள் ‘கொங்கை தன்னைக்  கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டவன் மார்பில் எறிந்தெனன் அழல் தீர்வேன்’ என்று தாபத்தின் குறியீடாக்கினாள். அப்போது அது பக்தியின் மலராகி கடவுள் மீது எறியப்பட்டது. பின்பு அது சமையலறை மேசையில் வெற்று கரண்டியாகி இன்று வெற்று சதையான அவலத்தை தன் கவிதைகளில் சீண்டுகிறார். இன்னும் நகர்ந்து அது யூஸ் அண்ட் த்ரோ வாக இருப்பதை தன் கவிதைகளில் அப்பட்டமாக்குகிறார். 

இந்தத் துப்பட்டா

கிட்டத்தட்ட சீட்டித்துணி

என் தோள்களில் நிற்கிறது

ஆடாது அசங்காது என்று நீ ளும் கவிதை ..

இப்போது

நானொரு நெற்குதிர்

வெளியே வருகிறேன்

ஹீல்ஸ் அணிந்த நெற்குதிர்

இப்போது

நீங்கள் கண்ணெடுக்காமல் பார்ப்பது

நெற்குதிரே தான்

சந்தேகமே வேணாம்.


உள்ளங்கையின் நூறுகிருமிகளோடு ஒருதுளி டெட்டால் போரிடுகிறது என்று எழுத ஒரு மனம் எத்தனை பெண்களாய் மாறியிருக்க வேண்டும். இந்த தன்மை தான் பெருந்தேவியை முக்கியமானவராக்குகிறது. உள்ளங்கைக்குள் ஒரு போர். அதை இன்றைய அகத்துக்கும் புறத்துக்குமாக விரித்து உதற முடியும். அலகிலா விளையாட்டில் டெட்டால் தான் கடவுள் அதனிடமின்றி வேறொரு இடதில் சரணடைவதற்கில்லை என்று பெருந்தேவி சொல்லும் போது மனதில் சட்டென்று காளி தோன்றுகிறாள்.

அதே காளி தன் கிளியிடம்,

கிளியே 

நீ திசைமாறி வந்துவிட்ட முட்டாள்கிளி

நீ இருந்த வீடு இது அல்ல

நானும்தான்

அடுத்த நான் அடுத்த நானென்று

போகட்டும்

வேறே தோளுக்கா பஞ்சம்

நீ சந்தோஷம் தொற்ற

செல்லக் கிளியே

என்று மீனாட்சியாகி கனிகிறாள். இந்த மீனாட்சி வெகுளிதனத்தை தொலைக்க கட்டாயமாக்கப்பட்டவள்.  கவிதை தொகுப்புகள் எங்கும் இதே போன்ற கனிவும் உக்ரமுமாக மாறி மாறி நடக்கும் காலடியோசை கேட்கிறது.

நான் பகலில் நிகழ்காலத்தில் வாழ்கிறேன் இரவில் முதுமக்கள் தாழியிலிருந்து எட்டிபார்க்கிறேன் என்று சொல்லும் கவிஆழம் எதைத்தான் தன்னுள் கரந்துள்ளது.?

அது சதைபிண்டத்தை, யூஸ் அண்ட் த்ரோ கப்பை, கரண்டியை, அகப்பையை கண்டுகொள்ளாத தன்மையை கொண்டுள்ளது.  சற்று முன்னால் சென்று சரணடைதலையும் தவிர்க்கிறது. அதற்கும் முன் சென்று தன் இயல்பை அடைய விழைகிறது. வறுமுலை தொங்க வரையாட்டின் மீதேறி செல்லும் அதன் காடு இன்றில்லை என்றாலும் அது விழைவது அதையே.

என் நினைவிலும் இருக்கிறது ஒரு காடு

அதில்

நெடிதுயர்ந்த மரங்களை விடுங்கள்

சில்லறை புதர்கள் கூட இல்லை

ஆனால் அதைக் காடு என்றுதான்

சொல்லிக்கொள்கிறேன்

வெட்டவெளி

என்றாலும்

என் நினைவில் இருப்பது காடுதான்

அப்படி நினைத்துக்கொள்வது

ஒரு பழக்கமாகி விட்டது.

இவர்கள் நரகத்திற்கு சென்றாலும் ஒரே எண்ணெய் சட்டியில் தான் வார்க்கப்படுவார்கள் என்று பெண் ஒன்று போலவே குடும்பத்திற்காக வார்க்கப்படுவதை சொல்லி சலிக்கிறார்.

இதற்கெல்லாம் மத்தியில் அந்த  சருகுகளை சுழல்விக்கும் அச்சாக காதல் உள்ளது. அந்த வெற்றிடத்தை மையமாகக் கொண்ட கவிதைஉலகம் இது. தேன் பரப்பி்ல் கால் பதித்த சின்ன பூச்சியாக மனதை உணர செய்யும் காதலை,

 ‘நாம் என்றால் தீயில் கலந்த அமிர்தம்

நாம் என்றால் கடலின் சரிபாதி உப்பு’

என்ற  இந்த இரண்டுக்கும் நடுவில் ஒரு வரி உள்ளது. அந்த வரிதான் பெருந்தேவியை வித்தியாசப்படுத்திகிறது.

‘நாம் என்றால்  கரண்ட் கம்பத்தில் உரசும் மாடு’ என்ற எதார்த்தத்தை எதிர் கொள்ளும் போது கரிப்பின் கடல் உள்ளங்கைகளில் அலையடிக்கிறது.



அது காதல் என்ற உணர்வுக்கானது மட்டுமல்ல. நம்முடைய உணர்வுகள் அனைத்துமே அவமதிக்கப்படுவதை, கரிப்பாவதை பெருந்தேவி தொட்டுக் காட்டுகிறார். உதாரணமாக இவரின் கவியுலகில் காதலுக்கு நிகராகவே மக்களாட்சி என்ற emotion னும் இருக்கிறது. 

‘எல்லா சிவனும் கைவிட்டுவிட்டான்’ என்று ஒரு கவிதை கசியும் போது அடுத்தடுத்த வரிகளில் அவர் சொல்லும் விசாரணைகளை மனம் சென்று தொடுவதற்கு மிகவும் தாமதமாகிறது. இந்த வரியிலிருந்து ஒரு உலுக்கு உலுக்கியே மனதை விழிக்க செய்ய வேண்டியிருக்கிறது. உடனே அடுத்த கவிதையில்,

உங்கள் வீட்டு கொல்லையில்

கத்தரிக்காய் செடியைப்போல

நீங்கள் கேட்பதெல்லாம் காய்ப்பதாகவே இருக்கட்டும்…..

……

இப்படித்தான்

எளிதாகக் கிடைப்பதை

உங்களுடையதாக்கிக் கொள்கிறீர்கள்

உங்கள் இதயத்தின் இருளுக்கு முன்

ஊழியின் இருள் நாணுகிறது.

எனும் கவிதையில் பேசப்படுவது பெண் மட்டுமல்ல. 

இங்கு கவிதையாவது தனியொரு பாலினம் மட்டுமல்ல. பயன்படுத்தி கொள்ளுதல் என்ற குணாம்சம் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு உறவில் வெவ்வேறு உணர்வுகளில் எப்படி வன்முறையாகிறது என்றே இந்தக்கவிதைகள் கவலைப்படுகின்றன. அதற்காக இந்தக்கவிதைகள் விரித்துக்கொள்ளும் முட்களாக வார்த்தைகளும் குறியீடுகளும் உள்ளன. 

இதை நெருஞ்சி என்று சொல்லலாம். தன் சின்னஞ்சிறு  இலைகளுக்கும் காப்பாக கூர் விரித்த நெருஞ்சி. அந்த நெருஞ்சி விரிந்த தரைக்கு மேலே  கிளைவிரிக்கின்றன நேசத்தின் கைகள்.

ஆதியும் அந்தமும் இல்லாத அந்த நேசத்திலிருந்து தவறிய மலர் விழுந்து கொண்டே இருக்கிறது. வெறுமையே நிலைக்கும் வெளியாக, விழுந்து கொண்டிருத்தலே நிலையாக அது கொள்ளும் தனிமை சூன்யத்தின் வெளி.

ஒற்றை மரத்தின் ஒரே இலை விழுகிறது

சிறுதுண்டு பூமியும் இல்லை

விழுந்து கொண்டிருக்கிறது.

இந்தத் தனிமையும்,சுழற்றும் வெறுமையும் பெருந்தேவியின் கலகங்களுக்கு பின்பே ஒரு அந்தியின் திரையை விரிக்கிறது. அந்த அந்தியை நாம் உணரும்  போது ஏன் இத்தனை எள்ளல் ,ஏன் கரைகள் மீது இத்தனை ஆவேசம் என்று புரிகிறது.

உதைக்கும் பயிற்சிக்கே தேவைப்படுகிறது மைதானமும் பந்தும் என்று பெண் நிலையில் இருந்து தொடங்கி உயிர்களை நோக்கி நகர்ந்து யாவற்றையும் காயும் இயற்கையின் முன் கையறுநிலையில் நிற்கிறது.

சின்னஞ்சிறு இரையையும்

அதை நோக்கி நகரும் புழுவையும் ஒன்றே போல் எரிக்கிறது சூரியன்

இரக்கமில்லாமல்.

 ஒரு கட்டத்தில் கவிதை பிரார்த்தனையாகிறது.

சின்ன ஆன்மாக்கள் அழுகின்றன

பெரிய ஆன்மாக்கள் மன்னிக்கின்றன

இடைப்பட்டவை மறுகுகின்றன

அவமானத்தில் அச்சத்தில்.

இறை

(ஒன்று இருந்தால்)

சின்னவற்றை தேற்றட்டும்

பெரியவற்றைப் பொறுக்கட்டும்.

தவறினாலும்

ஒன்றை மட்டும் செய்துவிடட்டும்

இடைப்பட்டவற்றை

சிறிதாகவோ

பெரிதாகவோ

ஆக்கிவிடட்டும்

ஒரு கவிஞரின் அகம் மீள மீள எதை சென்று தொடுகிறது என்பது முக்கியமானது. ஏனெனில் கவிதை மற்ற இலக்கிய வடிவங்களை போலல்ல. எதையும் தானாகவே உணரும் வரமோ சாபமோ தான் கவிதையாகிறது. ஆகச்சிறந்த காதல் நிகழும்இடம் என்பது கவிஞர்களின் மனம் என்று சொல்லலாம். அங்கே தான் என்பதற்கும் கவிதையாகும் ஒன்றுக்கும் இடையில் உள்ள கோடு முற்றிலும் அழிகிறது.

 அப்படி பெருந்தேவி என்ற கவியின் அகமானது ஐம்புலனும் உணரும் உணர்வுகளையும், அவை மலினமாக்கப்படுவதன் வாதைகளையும் சென்று தொட்டு தன்வயமாக்குகிறது. அது தனியொரு ஐம்புலன் இல்லை. அது காளியின் ஆயிரம் கண்களை, கைகளை போன்ற ஒன்று. சக்தி எப்போது காளியாகிறாள்? காளி என்பது பெண் என்ற ஒற்றை நிலையா?

 காளி துக்கம் சினமாகும் இடத்தில் பிறந்தவள். அவள்  குடிகொள்ளாத மனம் இல்லை. உணர்வுகளின் உச்சத்தில் இருக்கும் நிலை. அங்கு துணையென எதுவுமில்லை. அது  மானுட துக்கம் மட்டுமல்ல. அங்கு மெல்லுணர்வுகள் என்று எதுவுமில்லை. உண்மையில் மெல்லுணர்வுகளின் சாக்காட்டில் எழுபவளே அவள். 

மறதி சிறு பறவை

[படபடக்கிறது]

அது எடுத்துவந்த

மயிலிறகு

தொலைத்ததல்ல.

மறதி நல்ல ஒப்பனை

[அழகன்களின்]

கண்ணுக்கு அடியில்

அவலத்தின்

ஆரங்களைக்

காண முடியாது.

மறதி அறைக்குள் அறை

காரணமில்லாமல்

[அதற்குள்]

அற்ப ஆயுள்.

மறதி இன்னொரு பெயர்.

இப்போது நாம் மறந்து விட்டவற்றை பலதருணங்களின் வழியே அடித்து எழுப்பும் குரல் இது. மறதிக்கு இன்னொரு பெயர் சாக்காடு. அங்கிருக்கும் தெய்வம் அளிப்பது பிறப்பா? இறப்பா?. சாக்காட்டின் இருளும் செத்தவற்றை புதிதாய் பிறக்க வைக்கும் கருவறை இருளும் ஒன்றே. கவிதையின் இருள் என்பது கண்மறைக்கும் வெளிச்சமாகவும் இருக்கலாம்.

சிவன் கோலங் கண்டுன் கனல் செய் சினமும் விலகும் - கையைக்

கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக் கூத்திடுவாய்

என்று பாரதி சொல்வதைப்போல காளி அன்னையும் கூட. 

இன்று பெருந்தேவியின் குரல் தனி ஒருவருடையது இல்லை. அது பெண்குரல் மட்டுல்ல. அது ஒட்டுமொத்தமாக உயிர்களின் உணர்வுகள் மீது சத்தமில்லாமல் நடக்கும் வன்முறையை சாற்றும் குரல். சாற்றுதல் என்பது மௌனத்தை அறுத்தல். கிட்டத்தட்ட உறுமல்.அதனடியில் இருப்பது தீயுறை துக்கம். கண்ணகியின் தீயில் உறைந்த துக்கம் போல. பெருந்தேவியின் குரலில் சொல்வதானால் கண்ணகி என்பவளை கற்புடன் மட்டும் பொருத்திக்கொள்வது ஆகப்பெரிய மடமை.











Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

பெருகும் காவிரி

கர்ணனின் கவசகுண்டலங்கள்