மார்ச் 2025 கவிதைகள் இதழில் வெளியான வாசிப்பனுபவம்...
ஔியிடமிருந்து கற்றுக்கொள்ள
எதுவும் இல்லை.
எல்லாவற்றையும்
ஔி இருளிடமிருந்துதான்
கற்றுக்கொண்டிருக்கிறது.
ஒரு கவிஞரை,ஒரு படைப்பாளியை படைப்பில் தொடர்ந்து வரும் வாசகர் பதறி நிற்கும் இடங்கள் மிகமுக்கியமானவை. ஏனென்றால் படைப்பாளியும் வாசகரும் ஒரே இடத்தில் வெவ்வேறு தளங்களில் நிற்கிறார்கள். அந்த படைப்பாளரால் வாசகர் கண்டுகொள்ளும் அல்லது படைப்பால் வாசகர் உணர்ந்து கொள்ளும் ஒன்று தத்தி நிற்கும் இடம் அது. அங்கு வாசகர் உணர்வது எதுவென்றாலும் அது அசாதாரணமானது.
எழுத்தாளர் வண்ணதாசனின் கனியானப் பின் நுனியில் பூ என்ற என்ற வரி [சிறுகதையின் தலைப்பு] அவருடைய எழுத்தின் வழி நாம் உணரும் உச்சத்தை கண் முன்னே காட்டும் காட்சி படிமம் எனலாம். கனிந்தப்பின் பூத்தல். கனிந்த பின் உதிர்தலோ முளைத்தலோ அல்ல அது. அழுகி இல்லாமலாகி வேறொன்றாகி முளைப்பது அல்ல. கனிந்த பின்னும் பூத்தல்.
கவிஞர் கல்யாண்ஜியின் அண்மையை தொகுப்பான ‘காற்றை கேட்கிறவன்’ என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளில் வெளிப்படும் கவிஞர் கல்யாண்ஜி அசாதாரணமானவர். அவர் தான் தொடங்கிய இடத்திற்கே இன்னொரு வழியில் வந்து நின்று ஒளியை சுட்டுபவர். மீண்டும் மலர்தல் அல்லது மலர்ந்து கொண்டே இருத்தல். உதாரணத்திற்கு இந்த வாசிப்பனுபவத்தில் குறிப்பிட்டுள்ள கவிதைகளை சொல்லலாம். பாலையில் பூக்கும் இந்தப் பூ கவியின் ஆன்மாவிற்குள் மலர்வது மட்டுமல்ல உடன்பயணித்த அனைவருக்குள்ளும் மலரும் மலர். ஒரு பாம்பு தன் வாயால் தன் வாலை கவ்வும் முழுவட்டம் போல.
இந்த அனுபவத்தை ஒரு அனுபவம் மூலம் சொல்லலாம். நாம் ஒரு பாட்டனாரிடம் கதை கேட்கிறோம். அவர் சொல்வது இராமாயண கதை என்று வைப்போம். அவர் கதை சொல்ல சொல்ல நேர்நிலைக்கு எதிரான ஒரு சின்னஞ்சிறு முள் நமக்குள் நம்மையறியாமலே ஒரு ஓரமாக முளைக்கும். ஒரு கட்டத்தில் ‘இதுக்கு என்ன சொல்றீர்?’ என்று உணர்ச்சிவசப்பட்டு கேள்விகள் கேட்பாம். அது சீதையின் அக்னி பிரவேச தருணமாகவோ, சீதை கர்ப்பவதியாக தனித்து மீண்டும் வனம் புகும் தருணமாகவோ அல்லது வேறெதாகவோ இருக்கலாம். கேள்விகள் அவரவருக்கென்று தனியானது. அந்த இடத்தில் வெற்றிலை சிவந்த வாயும் ,வெண்நரை மென்தாடி மறத்துகாட்டும் புன்னகையுடன் ‘யார்டா இது அறியா பிள்ள.. ராமன் சீதை பிரேமமே அந்த புரியறதும், பிரியறதும் தானே’ என்று சொல்லி அவர் சிரிக்கக்கூடும். அது போன்ற ஒரு அனுபவத்தை காற்றை கேட்கிறவன் தொகுப்பை வாசிப்பவர் உணரலாம். பாலையிலும் சோலையை உணர்ந்த, உணர்த்திய ஈராயிரம் ஆண்டு நீண்ட மரபின் நுனியில் மலர்ந்த சின்னஞ்சிறு அனிச்சத்தின் முன் நாமும் ஈரத்துடன் புன்னகைத்து சுகந்தமாக மலரும் அனுபவம் அது.
ஒன்றுமே நிகழவில்லை
என்று தவிக்கையில்
ஏதேனும் ஒன்று நிகழ்ந்து
புலன் உச்சியில் எரிகிறது.
இடப்புறம் முழுவதும்
தொடர் சப்பாத்திக்கள்ளி
முளைத்துகிடந்த நெடும்பயணத்தில்
பரவசம் உண்டாக்கியது
ஒரே ஒரு சப்பாத்திப்பூ.
ஒரு பாழின் முடிவில்
ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது
ஓர் அருட்பெருஞ் சோதி.
Comments
Post a Comment