[ எழுத்தாளர் அரிசங்கரின் பாரீஸ் மற்றும் மாகே கஃபே என்ற இரு நாவல்களையும் எழுத்தாளர் தேவி லிங்கத்தின் நெருப்பு ஓடு நாவலையும் முன்வைத்து…]
சமூகமாக ஓரிடத்தில் நிலைகொள்வதும் இடம்பெயர்வதும் சமூகமாக தன்னை திரட்டிக்கொள்ளும் மானுடத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. நிறைந்த கலம் வழிந்து வெளியறுவதைப்போல அல்லது ஓட்டை விழுந்த கலத்திலிருந்து வெளியேறும் நீரைப்போல ஓரிடத்தில் நிலைத்து இருக்கும் எத்தனிப்பும் மறுபக்கம் இடப்பெயர்வும் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கிறது.
எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் அம்மன் நெசவு இடப்பெயர்வு பற்றிய நாவல். கி.ராவின் கோபல்ல கிராமம் இடப்பெயர்வு பற்றிய நாவல். ஒரு இனக்குழு போர் மற்றும் சமூக சூழலால் பலதலைமுறைகளாக நிலைத்து வாழ்ந்த நிலத்தை, அமைப்பை விட்டு வெளியேறுகிறது.
எழுத்தாளர் அரிசங்கர்
அரிசங்கரின் பாரீஸ் மற்றும் மாகே கஃபேவில் தனிமனிதர்கள் தங்கள் அகவாழ்க்கை சிக்கல்களினால், நவீன நுகர்வு காலகட்டம் ஏற்படுத்தும் சிக்கல்கள்களால் இடம்பெயர்கிறார்கள். முக்கியமாக வறுமையில் வாழும் இளைஞர்களுக்கு பாரீஸ் என்பது ஒரு இலட்சியக்கனவாக இருக்கிறது. பிரெஞ்சு காலனியாக இருந்த பாண்டிச்சேரி விடுதலையடையும் போது பிரெஞ்சு குடியுரிமையை பாண்டிச்சேரி மக்களுக்கு வழங்கிவிட்டு வெளியேறுகிறது. விவரம் தெரிந்தவர்கள் விண்ணப்பித்து குடியரிமை பெறுகிறார்கள்.
இதுவரை நாம் நிலம்,பொன்,இனம் ,பாலினம்,ஜாதி, பொருளாதாரம் போன்றவை சமூகத்தின் மீதும் தனிமனிதன் மீதும் செல்வாக்கு செலுத்துவதை அறிந்திருக்கிறோம். ஆனால் ஒரு காலனியாதிக்கநாடு அளித்து சென்ற குடியுரிமை என்ற சலுகை இங்குள்ள அடுத்தடுத்த தலைமுறையினரின் வாழ்க்கை முறையை,கனவை,சமூக மரியாதையை,பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. அதன் வழி திருமணம் ஒரு வணிகமாக மாறுகிறது. அது அந்த சமூகத்தின் பழக்கவழக்கம், வாழ்க்கை ,பெண் மீதான பார்வை, இளைஞர்களின் மனஓட்டம், வாழ்க்கை பற்றிய ஏக்கங்களை, சோர்வுகளை தீர்மானிக்கிறது.
மனித மனதிற்கும் வாழும் இடத்திற்கும் உள்ள தொடர்பு உளவியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நம்மால் ஏன் மற்ற மிருகங்கங்களைப் போல காட்டிற்குள் இருக்கமுடியவில்லை என்ற எளிமையான கேள்வியில் இருந்து, ஏன் வீட்டிற்குள் காட்டை வானத்தை செயற்கையாக உருவாக்க முயன்று கொண்டே இருக்கிறோம் என்ற அன்றாட கேள்விக்கு முதன்மையான பதில் பாதுகாப்பு. மனதிற்கும் உடலிற்குமான பாதுகாப்பு. அகத்திற்கும் புறத்திற்குமான பாதுகாப்பு. காட்டில் உள்ள எதிர்பாராத தன்மைக்கு புலன்களை கூராக்கி ஔிந்தும் ஓடியும் எதிர்த்தும் வாழ்வதற்கு மாற்றமாக நாம் சமூகவாழ்க்கையை உருவாக்கிக்கொண்டோம். மேய்ச்சல் நிலங்கள் நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருந்தோம். பின் வேளாண்மை செய்தோம். பின்பு குடும்பம் சமூகம் என்று பிரிந்தும் சேர்ந்துமாக ஒரு விளையாட்டு.
இப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நிலைத்த பொருளியலை,உறவுகளை உருவாக்கிக்கொண்ட குடும்பம் சிதறி போகும் கதை தேவிலிங்கத்தால் நெருப்பு ஓடு என்ற நாவலாக ஆகியிருக்கிறது. நெருப்பு ஓட்டின் சின்னஞ்சிறு குகையில் வைக்கப்பட்ட தங்கம் உருகுவதைப் போல சமூக அமைப்பில் வைக்கப்பட்ட மனிதமனம் விதவிதமாக மாறுகிறது. அன்பால், காதலால், பொறாமையால், அவமானத்தால், சினத்தால், காமத்தால் ஆன சின்னஞ்சிறு நெருப்புக் குழம்பு அனைவர் மனதிலும் உண்டில்லையா?
தேரின் வடத்தை யார் இழுக்கிறார்கள் யார் இழுக்கவில்லை அல்லது யாரால் இழுக்க முடியவில்லை என்று தெரியாது. தேர் நகர்ந்து கொண்டிருக்கும். அந்தத்தேர் போலத்தான் கூட்டுக்குடும்பங்களும். கந்தசாமி பத்தரின் வாழ்க்கை அவர் பெயரன் கதிரின் பார்வையில் சொல்லப்படுகிறது. மூத்த மகன் குடியால் மனநலம் சரியில்லாதவராகிறார். ஒருவர் பொருப்பில்லாமல் சுற்றுகிறார். மற்றொருவர் நகைத்தொழில் வேண்டாமென்று அரசு வேலைக்கு செல்கிறார். படிப்படியாக அந்தக்குடும்பமும் தொழிலும் நசிகிறது. இந்தநாவலில் வீடும் நகைபட்டறையும் கதை நிகழும் களங்களாக உள்ளன.
எழுத்தாளர் தேவி லிங்கம்
நெருப்பு ஓடு நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் வரும் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களின் பெயர்கள் ஏதோ ஒருவகையில் அந்த அத்தியாயத்திற்கு சிறிய மின்னல் வெட்டாய் சிறு வெளிச்சம் காட்டுகின்றன. உதாரணத்திற்கு இரட்டை வடம் என்று ஒரு அத்தியாயத்தின் தலைப்பு உள்ளது. அதில் ஒரு வெளிச்சமில்லாத அறையில் பெரிய இரட்டை வடசங்கிலி கிடக்கிறது. அலட்சியாமாக வீசப்பட்ட சங்கிலி அல்லது கவனக்குறைவாக விடப்பட்ட பொன் சங்கிலி. அங்கு படுத்திருக்கும் அந்த பெண்ணும், தர்காவில் மனநலம் சரியில்லாமல் இருக்கும் அவள் கணவனும் நமக்குள் ஒரு துணுக்குரலை ஏற்படுத்துகிறார்கள். அத்தியாய தலைப்புகளாக விதவிதமான ஆபரணங்களின் பெயர்கள் உள்ளன. நாவல் முழுவதும் உள்ள உவமைகள் நாவல் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகின்றன. நகை நுணுக்கங்கள் போல நாவல் முழுதும் உவமைகள். அவை நாவலில் துறுத்திக்கொண்டு நிற்கவில்லை. இயல்பாக உள்ளன. உதாரணத்திற்கு புளியமரத்தை காட்டும் போது அடர்ந்த முடி கொண்ட அப்பத்தா முடியை விரித்து போட்டிருந்தது போல அம்மரம் இருந்ததாக தேவிலிங்கம் எழுதுகிறார். நாவலில் பெரும்பாலும் உவமையில்லாமல் முக்கியமான இடங்கள் இல்லை.
அரிசங்கரின் பாரீஸ் நாவலில் இளைஞர்கள் பாண்டிச்சேரியிலிருந்து பாரீஸ் செல்வதை வாழ்க்கை கனவாக வைத்திருக்கிறார்கள். காதல் திருமணம் பொருளீட்டுதல் போன்ற அனைத்தும் ஒரு பாரீஸ் குடியுரிமை உள்ள குடும்பத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்வதால் நிறைவேறும் என்று அந்தக்குடியுரிமை உள்ள பெண்ணாகப் பார்த்து பையன்கள் காதலிக்கும் சூழல் உள்ளது. அந்தக்குடியுரிமை உள்ள குடும்பத்தில் பிறந்த பெண் ஒரு பொருள் ஈட்டும் கருவியாக பிறந்தவீட்டிற்கு இருக்கிறாள்.மூன்று நான்கு விவாகரத்துகளும் திருமணங்களும் அவளுக்கு நடக்கின்றன. அவ்வளவு பொருள் கொடுத்து அந்த பெண்ணை மணம் முடிக்கும் ஆண்கள் தங்களுக்கு குடியுரிமை கிடைத்ததும் அவளை விவாகரத்து செய்துவிட்டு தங்களுக்கு பிடித்த பெண்ண திருமணம் செய்து கொள்கிறார்கள். பெண்களும் தன் பொருளாதார பலத்தை உயர்த்திக்கொள்ள மீண்டும் மீண்டும் திருமணம் செய்கிறார்கள். இந்த சூழலில் வறுமையான சூழலில் பிறந்து பாண்டிச்சேரியில் வளரும் பையன்களின் வாழ்க்கை காட்டப்படுகிறது.
அரிசங்கரின் இந்த இரண்டு நாவல்களிலும் பாண்டிச்சேரி ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது. உண்மையில் இந்த மண்ணிலும் கடற்கரையிலும் திரிந்து அலையும் சிறு பூச்சிகளாக மனிதர்கள் தெரிகிறார்கள். நால்களை வாசித்தப்பின் பாண்டிச்சேரியே இறுதியில் நம் மனதில் நிற்கிறது. அங்கு வாழ்க்கை போராட்டத்தில் அலைவுறும் மக்கள். மாகே கஃபேயில் பாண்டிச்சேரியை நோக்கி வரும் மக்களின் கதை உள்ளது.
பாரீஸ் நாவலில் பாண்டிச்சேரியில் இருந்து கிளம்பும் பையன்களின் வாழ்க்கை காட்டப்படுகிறது. பாண்டிச்சேரியிலிருந்து சற்று தள்ளி உள்ள வேதாரண்ய பகுதியை கதைகளமாகக்கொண்ட நெருப்பு ஓடு நாவலில் ஓரிடத்தில் நின்று நிலைபெற்றுவிட்ட வாழ்க்கை சிதறும் சித்திரம் உள்ளது.
இந்த வாசிப்பில் எனக்கு பாண்டிச்சேரியின் சித்திரம் முக்கியமானது. பாரதியின் குயில்பாட்டில், கட்டுரைகளில் அவர் என் மனதில் வரைந்திருக்கும் பாண்டிச்சேரியின் சித்திரம் மாயக்கோல் பட்டது போல இந்த நாவல்களால் திரைமாறி வேறொரு சித்திரம் கிடைக்கிறது. எழுத்தாளர் நீல பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம் நாவலில் அனந்தன்நாயரின் திருவனந்தபுரமே அவரின் கார்த்தியாயனியாக உருமாறி நிற்கும். அனந்தன் நாயரின் திருவனந்தபுரம் அவரின் காதலால், நினைவுகளால், காயத்தால் ஆனது. இங்கு அரிசங்கரின் நாவல்களில் பாண்டிச்சேரி பல மனிதர்களின் ஒரு நகரம். இடம் அப்படியே இருக்க மனிதர்கள் தங்கள் வாழ்க்கைப்பாடுகளுடன் சஞ்சலங்களுடன் மிகச்சிறியவர்களாக ஊர்ந்து செல்கிறார்கள். பள்ளிகொண்டபுரத்தில் அந்த ஊரின் அளவுக்கே விரியும் மனம் ஒன்று நாவலுக்குள் செயல்படுகிறது. அரிசங்கரின் நாவல்களில் மனிதர்கள் சுருங்கி அலைமோதுகிறார்கள். நாவலாசிரியர் அந்த அலைமோதலை தான் தன் எழுத்தில் எத்தனித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
இந்த நாவல்களில்வரும் பாண்டிச்சேரி அங்குள்ளவர்களின் வறுமையை பயன்படுத்திக்கொள்கிறது. மிகஅருகில் உள்ள சென்னையில் தரப்படும் சம்பளத்திற்கும் வேலைக்கும், இங்குள்ள சம்பளத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதீத உப்புடைய காய்ந்த மீனை கழுவி பயன்படுத்துவதைப்போல அந்த வாழ்க்கையின் உவர்ப்பை கசடுகளை அவர்கள் இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள். அந்த சூழலில் இருந்து விலகி செல்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர்கள் எதிலும் உழல்வதில்லை.
பாரீஸ் நாவலில் தவறான சீ.டிக்களை விற்று பணக்காரராக மாறும் ஒரு வணிகரின் மகன் ஓரினஈர்ப்பாளனாக ஊரை விட்டு விலகி செல்கிறான். அவனுடைய அப்பாவால் மிகுந்த அவமானப்படுத்தப்பட்ட அவனுடைய இணையுடன் இரவில் கடற்கரையில் அமர்ந்திருக்கிறான். ஒருவனுக்குள் தற்கொலை எண்ணம் தலைதூக்கிறது. இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள செல்லும் இன்னொருவனை காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் விடுகிறார்கள். இதை ஏன் செய்கிறோம் என்று அவர்களுக்கே வியப்பாக இருக்கிறது. ஆனால் அந்த நிகழ்வு தான் அவர்களின் வாழ்வையும் காப்பாற்றுகிறது. அவமானத்திற்காக நாம் ஏன் சாகவண்டும் என்று சென்னைக்கு செல்கிறார்கள்.
மாகே கஃபேயில் அப்பாவை இழந்து பங்காளிகளால் துரத்தப்படும் வினயன் பாண்டிச்சேரிக்கு டீக்கடை வேலைக்கு வந்து தன் சொந்த ஊரில் தனக்கான வீட்டை கட்டுகிறான். காதல் திருமணம் செய்து தன் ஊருக்குத்தப்பி பாண்டிசேரிக்கு ஓடி வரும் அப்புண்ணியும், வியாபாரத்தில் நிலைக்கமுடியாத சந்திரனும் குடும்பத்துடன் சென்னையிலிருந்து பண்டிசேரிக்கு வருகிறார்கள். சில சமயங்களில் மனிதர்களுக்கு தங்களின் அடையாளங்களை அழித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அரிதாக பால் அடையாளத்தையும் கூட. வலி நிறைந்த இந்த இடப்பெயர்வை அவர்கள் செய்தே ஆக வேண்டியிருக்கிறது.
எழுத்தாளர் ரமேஷ் பிரேதன்
ஆனால் எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் சூன்யதா நாவலில் ஒரு மனிதன் அவனுக்குள்ளேயே இடம்பெயர்கிறான். தன்மையாக முன்னிலையாக படர்க்கையாக தன்னை மாற்றி மாற்றி வைத்து ஒரு ஆடுபுலி ஆட்டம் ஆடுகிறான். ஆணாக பெண்ணாக இரண்டுமற்றும் தன்னை மாற்றி மாற்றி தூக்கிப்போட்டு விளையாடும் ஒரு சொக்கட்டான் ஆட்டம் அது. மதுரை சொக்கன் தன் மனைவி மீனாட்சியுடன் ஆடிய ஆட்டம் அது. அதை மனதிற்குள்..தன் உணர்விற்குள் இடம்பெயர்த்து சொற்களாக வைத்து அச்சுக் கல் ஆட்டம் போன்ற ஒன்றை ரமேஷ் பிரேதன் ஆடுகிறார். அச்சுக்கல் விளையாட்டிற்கு எத்தனை கூலாங்கற்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். குறைந்தபட்சம் நூறு. ஆனால் விளையாட்டு தொடங்குவது என்னவோ இரண்டு கற்களை வைத்து தான். ஒற்றை கல்லை தூக்கிப்போட்டு அது கைகளுக்கு வருவதற்குள் எத்தனை கற்களை வேண்டுமானலும் அள்ளி எடுக்கலாம்.தவறி விழும் போது ஆட்டம் மாறும். அது வரை நம் கூண்டிற்குள் காய்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். அப்படி பெண்ணாக மாறும் விழைவையும் ஆணாக இருக்கும் நிலையையும் வைத்து சொற்களால் மனதை இடம் மாற்றி வரலாற்றில் போட்டு தானே பெருகிப்பெருகி நாவலை நிறைக்கிறார். அதுவும் இடப்பெயர்வு தானே. ஆனால் அதில் நிலம் இல்லை. மனதை நிலமும் காலமுமாக மாற்றி அவர் தன்னுடன் தானே விளையாடுகிறார். சொக்கன் தன் பாதியுடன் தான் விளையாடி அயர்ந்து அமர்வதை எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம் தன் சிறுகதையில் எழுதியிருக்கிறார். ரமேஷ் பிரேதன் சூன்யதா நாவலில் சொக்கனாட்டத்தை இன்னொரு வகையில் ஆடுகிறார்.
லா.ச.ராவின் பாற்கடல் என்ற சிறுகதையையும் பாற்கடல் என்ற தன்வரலாற்று நாவலையும் தேவிலிங்கத்தின் நெருப்பு ஓடு நாவலுடன் மனம் இணைத்துக்கொள்கிறது. இவை குடும்பத்தின் சிக்கல்களும் இழப்புகளும் வலிகளும் பிரிவுகளையும் பேசுபொருளாகக் கொண்டவை. மழைநாளில் குடைபிடித்தபடி பெயரனை அழைக்க மகன்வீட்டு வாசலில் வந்து நிற்கும் கந்தசாமி பத்தரும் அவரின் மனைவி ஐெயலட்சுமி அம்மாவின் குணவியல்புகளும் நம் மனதை தொந்தரவு செய்பவை. கடைசி நேரத்தில் கூட மகன் குடும்பத்தின் தேவைக்காக தலையணை அடியில் பணம் வைத்திருக்கும் கந்தசாமி பத்தர் போன்ற எத்தனையோ தந்தைகளால் உருவாக்கப்பட்டது தான் நம் தந்தைகளின் வாழ்க்கை. அதிலிருந்துதான் இன்றைய சமூகம் உருவாகியிருக்கிறது.
உலகமயமாக்கலின் விளைவாக ஏற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களால் விழுங்கப்பட்ட சிறுதொழில்களில் ஒன்று தங்கநகை செய்யும் தொழில். கடைகள் என்று கூட சொல்ல முடியாது…வீட்டு திண்ணையில் ஒரு நெருப்பு ஓடும், சிறு இரும்பு ஊதுகுழலும், பக்கத்தில் தவிடும், உமியும், கரியும் இருக்க அமர்ந்திருந்த பத்தர்களின் வாரிசுகள் இன்று நகைக்கடையில் சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள். சிறு சிறு தொழில்கள் பெருநிறுவனங்களாகும் போது நகை செய்வது போன்ற நுட்பமும் கற்பனை திறனும் வாய்ந்த தொழில் செய்பவர்கள் சம்பளத்திற்கு வேலையாளாகும் நிலை ஏற்படுகிறது. அது அவர்களை மனநிறைவு அடையாத ஒரு நிலைக்கு தள்ளுகிறது. ‘பத்தரே நீங்க செய்த தாலி …நீங்க செய்த நகை..’ என்றோ சொல்ல ஆளில்லை. சமூகத்தின் குழுவூக்குறி [ சமூகத்திற்கென்ற பிரத்தியேகமான பேச்சு வழக்கு] நாவலில் ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. செங்கலை அச்சுவார்க்கும் போது மண்குழைவை தட்டித்தட்டி சமப்படுத்துவது மாதிரி இன்று வீடுகள், பழக்கவழக்கங்கள் ,மொழி, ஆடை என்று அனைத்தும் சமப்படுத்தப்படும் காலம். இன்றைக்கான தேவை இது. தவிர்க்கமுடியாது. ஆனால் இது போன்ற நாவல்கள் தன்னுள் வைத்திருக்கும் வாழ்க்கை முக்கியமானது.
நெருப்பு ஓடு நாவலின் மாற்று திசையில் நிற்பது அரிசங்கரின் மாகே கஃபே. பிழைக்க வந்த ஊரில் தத்தளித்து வாழ்க்கையை நடத்தும் மனிதர்கள். பாரீஸ் நாவலில் பிறந்த ஊரிலிருந்து வெளியேற துடிக்கும் இளைஞர்கள். கிழக்கு கடற்கரையோரம் உள்ள நகரத்தின் கொந்தளிப்புள்ள வாழ்க்கையையும் பல சமூகமக்களையும் அவர்களின் அலைமோதல்களையும் கொண்டவை அரிசங்கரின் நாவல்கள்.
நாம் குடும்பமாகவும் சமூகமாகவும் தனிமனிதனாகவும் பிரிந்தும் சேர்ந்தும் வாழும் ஒரு கூட்டு சித்திரத்தை இந்த நாவல்கள் அளிக்கின்றன. அலைமோதும் மனித உணர்வுகளும், எதிர்பாராத நிகழ்வுகளும், சரிவுகளும், ஏமாற்றங்களும், வாழ்க்கைப்பாடுகளும், தனிமனித அகப்பாடுகளுமாக மனிதர்களை தம்முள் நிரப்பிக்கொண்டிருக்கும் நாவல்கள் இவை.
வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன? என்று காலகாலமாக நாம் மனம் கேட்கும் ஆதிக்கேள்வியுடன், இந்த நாவல்களில் உள்ள அப்புபுண்ணி நாயரும், சந்திரனும், கந்தசாமி பத்தரும் இறுதியில் அடையும் அலையடங்கிய மனதை கவனிக்கிறோம். ஊரால் ஆன கதையும்,வீட்டால் ஆன ஒரு கதையும் நம்மை பார்த்து புன்னகைக்கின்றன.
கரையில் நின்று கடலை பார்ப்பது போன்றது வாசிப்பு. அதில் முழுகுவதும் கால்நனைப்பது அலைகளாக பெருகுவது என்று எல்லாமே வாசிப்பவர்களுக்கு நடக்கிறது. ஏனெனில் கடலை அகத்தில் கொண்டவர்கள் நாம். கடல் ஈன்ற மிச்சத்தில் நின்று கடலை பார்ப்பவர்கள். காடு ஈன்ற மிச்சமும் இதில் சேரும். அந்தக் கடலால் காட்டால் ஆனது நமது கதைகள். இச்சைகளும்[விழைவுகளும்] விதிமுறைகளும் இரு கரைகளாக்கி சமூகமாக நகரும் நமக்கு அந்த ஆதிக்கேள்வி அப்படியே தான் இருக்கிறது. இதற்காகத்தான் சூன்யதாவின் தந்தைகள் காலமெல்லாம் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இனிமேலும் சொல்வார்கள்.




Comments
Post a Comment