Skip to main content

நீலபத்மநாபன்

 [ எழுத்தாளர் நீலபத்மநாபனிற்கான தமிழ்விக்கி பக்கத்தை பார்த்துவிட்டு எழுத்தாளர் ஜெயமோகனிற்கு எழுதிய கடிதம். 11/11.2022 ல் எழுதிய கடிதம்]




அன்பு ஜெ,


வணக்கம்.
நலம் விழைகிறேன்.


அதிகாலையில் மழை
பெய்கிறது. மூன்று மாதங்களாக இப்படிதான். பெரும்பாலும் காலையில் எழுந்ததும் மதியம் சாயுங்காலம் என்று மழை இயல்பாகிவிட்டது. மழையின் சலசலப்பிற்கு இடையே சேவல் ஒன்றின் கம்பீரமாக குரல். கிச்கிச்சென்று சிட்டு்குருவிகள். மிக சன்னமான நான் வாசிக்கும் அறையின் தலைக்கு மேல்  சன்னலில் அருகில் பால் கரக்கும் ஓசை தனித்து கேட்கிறது. [பசுவை வயலிற்கு ஓட்டிச்செல்லும் வழியில் அவசரத்திற்கு குழந்தைப்பால் கேட்டிருப்பார்கள்] பசுவின் பாலும் ஒரு வகையில் மழை தானே. உடன் எழுத்தாளர் நீல.பத்பநாபனின் விக்கிப்பக்கம்.

கல்லூரியின் இறுதிஆண்டு மற்றும் கல்லூரி முடித்த ஆண்டில் பள்ளிகொண்டபுரம்,தலைமுறைகள்,தேரோடும்வீதி மற்றும் இலையுதிர்காலம் நாவல்களை தொடர்ந்து வாசித்தேன். கல்லூரி நூலகத்தில் முதலிரண்டு நாவல்கள். ஊர்நூலகத்திலிருந்து எடுத்த அடுத்த இரண்டு நாவல்கள். தேரோடும் வீதி நாவலை மட்டும் மறுபடி மறுபடி என்ட்ரி போட்டு மிக மெதுவாக வாசித்தேன். அம்மாச்சி ஊரின் சிறு நூலகத்திலிருந்து எடுத்தேன். அம்மாச்சியுடன் இருமாதங்கள் தங்கயிருக்க வேண்டியிருந்தது. வயல்காட்டில் தனித்த வீடு. அந்த ஊருக்கு முதலாக நிற்கும் நூலகத்தில் இருபது ரூபாய் அளித்து நூலகஅட்டை வாங்கிக்கொண்டேன். தேரோடும் வீதி அதன் தன்மையால் நம்மையும் மிக மெல்ல வாசிக்க வைத்துவிடும். இது ஒரு மாயம் தான். ஆனால் எனக்கு அந்த காலகட்டத்தில் அந்த நிதானமான சலிப்பும் நீண்ட யாதார்த்தள வாசிப்பும் தேவையாக இருந்தது.
எனக்கு பள்ளிகொண்டபுரம் மிகவும் பிடித்தநாவல். அதன் மொழிநடை வசீகரிப்பது. திருவனந்தபுரம் ஒரு கனவு போல விரியும். 
இந்த நான்கு நாவல்களின் தொடர்ந்த வாசிப்பு அவற்றுடன் இருந்த மிக நிதானமான ஆளாக மாறினேன். தலைமுறைகள் _இரணியல் ஆசிரிய இளைஞனின் வாழ்வு,பள்ளிகொண்டபுரம்_ நொய்மையான உடல் மனம் கொண்ட கணவனின் ,தந்தையின் வாழ்வு,தேரோடும் வீதி_ ஒரு எழுத்தாளன் பொறியாளனின் நீண்ட வாழ்வு,இலையுதிர் காலம்_ முதியவர்களின் வாழ்க்கை .அந்த வயதில் அதிர்ச்சி தந்த நாவல். சொல்லப்போனால் முதுமையை அந்தரங்கமாக உணர்ந்து புரிந்து கொண்டு அவர்களை அணுக ,நேசிக்க அவர்களும் குழந்தைகள் என அந்த வயதில் உணர உதவியது. நான் அம்மாச்சியுடன் நெருக்கமான நாட்கள் அவை. அடுத்த பத்து ஆண்டுகள் எங்களுக்குள் ஒருவித 'ப்ரியநட்பு' இருந்ததற்கு இந்த நாவல் ஏதோ ஒரு காரணம் என்று நினைக்கிறேன். மிகச் சிறிய நாவல். நம் மனதை எங்கேயோ சூட்சுமமாக மாற்றிப்போடும். எல்லாம் எதார்த்தம் என்று காட்டும். முதியவர்களின் சிக்கல்களை கண்டு முகம் சுழிக்க வைக்காது. அதை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். பள்ளிகொண்டபுரமும் அப்படித்தான்.
ஒரு வகையில் மத்தியதர ஆண்களை புரிந்து கொள்ள உதவியது. நம் மனதில் கல்லூரி காலகட்டத்தில் உள்ள நாயக பிம்பத்திற்கு மாற்றான அசல் மனிதர்கள். இந்த அசல் மனிதர்களை நேசிக்க அவர்களின் இயலாமையை ரசிக்கவும் ,அப்படித்தான் என்று ஏற்றுக்கொள்ள முடியும்.
இதை எல்லாம் கடந்து யாதார்த்தவாத நாவல்கள் என்றாலும் அதன் 'மலையாள டச்' உடைய மொழி கவித்துவமானது. அந்த கவித்துவம் ஒரு வாசகியாக என்னை மலர வைத்துகொண்டே இருந்தது.
ஒரு எழுத்தாளரின் பல்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட நான்கு நாவல்களை தொடர்ந்து வாசிக்க கிடைத்ததும், அந்த வயதில் வாசித்ததும் எனக்கான ஆசி என்றே இப்போதும் தோன்றுகிறது. மழை இன்னும் நிற்கவில்லை. தொடர் மழைக்கான முதல் குடை அவரின் எழுத்துக்கள் என்று தோன்றுகிறது.

அன்புடன்,
கமலதேவி.

Comments

Popular posts from this blog

டமருகத்தின் தாளமானவள்

 திரியை மட்டும் திரும்பத்திரும்ப மாற்றி..  ஒவ்வொரு முறையும் எரியும் சுடர் ஒன்றே தானா.. ?  வேறு.. வேறா..                             _  சம்யுக்தா மாயா நம் கவிதை மரபில் காதலுக்கும் பக்திக்கும் இடையில் ஈசலின் சிறகு போன்ற மெல்லிய தடுப்பே உள்ளது. அது இருபக்கமும் ஊடுருவும் சவ்வு. பக்தி அதிகமானால் காதல். காதல் அதிகமானால் பக்தி. இந்த மாற்றம் புதிரானது.  அதே போல நாயகன் நாயகி ஃபாவம். அரங்கனை நோக்கி பாடப்பட்ட பாடல்களில்  நாயகி ஃபாவம் மேலோங்கி உள்ளது. ஈசனுக்கு பித்தா..பிறைசூடா என்று சக்ய ஃபாவம் இயல்பாக வருகிறது.  ஈசனை காதலனாக ஃபாவிப்பது என்பது முன்னால் நின்று அவனை பாடுவது அல்ல. அவன் பாதியாகவே ஆவது. ருத்ரனின் பகுதி என்பது அத்தனை எளிதல்ல என்பதாலோ என்னவோ பெண்களில் திலகவதி மட்டுமே பாடியிருக்கிறார்.  காரைக்காலம்மையால் அவனை விளையாட்டு பிள்ளையாக்கி ஆட வைக்க முடிகிறது. ( பொதுவாகவே ஈசன் மீது பாடப்பட்ட பாடல்களில் நாயக நாயகி ஃபாவம் குறைவு)  பெண்கவிகளில் ருத்ரனுக்கு இணையான காளியை சம்யுக்தாவின...

லில்லி மலர் பூக்கும் நிலம்

  ( முனைவர் யோ . ஞான சந்திர ஜாண்சன் அவர்களின் கிறித்தவக்காப்பியங்கள் நூலை   முன் வைத்து … ) காப்பியம் என்பதும் காவியம் என்பதும் ஒரே பொருள்படுபவை . வடமொழியில் காவியம் . தமிழில் காப்பியம் . தமிழில்   1. ஐம்பெருங்காப்பியங்கள் 2. ஐஞ்சிறுகாப்பியங்கள் 3 . சமயகாப்பியங்கள் என்ற வகைமைகள் உள்ளன . சமய காப்பியங்களுள் கிருத்துவ காப்பியங்கள் வருகின்றன . சைவ வைணவ காப்பியங்கள் பக்தி காலகட்டத்தை சேர்ந்தவை . இதன் காலம் தோராயமாக பத்தாம் நூற்றாண்டிலிருந்து பனிரெண்டாம் நூற்றாண்டு வரை.  கிருத்தவக்காப்பியங்களின் காலம் கிருத்தவர்கள் நம் நாட்டிற்குள் வந்த காலகட்டத்தில் துவங்குகிறது . இந்தியாவில் முதன்முதலாக அச்சான மொழி தமிழ் . இயேசு சபை துறவியான ஆன்ட்ரிக் அடிகளார் கோவாவில் தமிழில் உலோக அச்சுகள் உருவாக்கி பயன்படுத்தி தமிழ் அச்சு வரலாற்றை தொடங்கி வைக்கிறார் . 1570 களில் இந்த தொடக்கம் நிகழ்ந்து விட்டது . கொல்லத்தில் முதல் நூலான தம்பிரான் வணக்கம் அச்சடிக்கப்படுகிறது . தமிழில் அச்சு நூலாக வந்த முதல் நூல் ஒரு மொழி ...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...