[2025 மார்ச் சென்னை மாநிலக் கல்லூரியில் எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் படைப்புகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கு நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வில் எழுத்தாளரின் படைப்புகள் குறித்த ‘ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை’ என்ற விமர்சன கட்டுரை நூல் வெளியிடப்பட்டது. அந்தத்தொகுப்பில் உள்ள நீரதிகாரம் பற்றிய கட்டுரை.]
பகீரதனின் பகீரதி
எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் நீரதிகாரம் நாவலை வாசிக்கும் போது நம் புராணத்தில் உள்ள பகீரதன் கதை மனதில் வந்தது. பகீரதன் இஷ்வாகு குலத்தை சேர்ந்த ராமனின் முன்னோர். பகீரதனின் முன்னோர்கள் அஸ்வமேத யாகத்தின் பொருட்டு திக்விஜயத்திற்காக அனுப்பிய யாகக்குதிரை திரும்பி வர தாமதமாகிறது. அதை தேடியலைகிறார்கள். கபிலமுனிவரின் குடில் வாயிலில் குதிரை நிற்கிறது. முனிவர் குதிரையை கட்டி வைத்திருக்கிறார் என்று நினைத்து அவரின் தவத்தை கலைப்பதால் முனிவரின் சாபத்திற்கு ஆளாகி எரிந்து சாம்பலாகிறார்கள். அவர்கள் சாபவிமோஷனம் பெற்று விண்ணுலகம் எய்துவதற்கு கங்கை பூமிக்கு வரவேண்டும். தலைமுறைகள் காலமாக முயற்சித்தும் அதை செய்யமுடியவில்லை. பகீரதன் தன் முன்னோர்களுக்காக கங்கையை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவமிருக்கிறார். கனிந்த ஆகாய கங்கை பூமிக்கு வர சம்மதிக்கிறாள். ஆனால் அவள் பாய்ந்து வரும் வேகத்தை தாங்குவதற்கு பூமிக்கு வலிமை இல்லை. எனவே பகீரதனிடம் சிவனை நோக்கி தவமிருக்க சொல்கிறாள். மீண்டும் தவமிருக்கிறார். ஈசன் மனம் கனிந்து தன் தலையில் கங்கையை தாங்கி பூமியில் விடுகிறார். கங்கை நீர் சாம்பலில் பாய்ந்து செல்ல முன்னோர்களின் சாபம் நீங்குகிறது. கடினமான விடாமுயற்சியை ‘பகீரதப்ரயத்தனம்’ என்று பேச்சுவழக்கில் சொல்வதுண்டு. ஒரு புராணகதையை ஒற்றை சொல்லாக மாற்றி புழங்குபவர்கள் நாம்.
ஆகாயகங்கை என்பது புராணபடிமம். அது மழை,அருள், அன்னை என பலவாக தன்னை நமக்கு புலப்படுத்துகிறது. ஆகாயகங்கை என்பது பிரபஞ்சமாகவும் இருக்கலாம். அது ஆயிரகணக்கான ஆண்டுகளாக கனிந்து பெய்து நிறைந்ததால் பூமியும் உயிர்களும் தோன்றின. அவள் ஒரு பேரன்னை. பேரன்னை பல முகங்கள் கொண்டவள். கருணை போலவே கருணையின்மையும் அவளின் குணாம்சம். உண்மையில் மழை என்பது பூமிக்கான முலைப்பால் தானே. இப்படி நம் முன்னோர்கள் தாங்கள் உணர்ந்த ஒரு பிரபஞ்சலீலையை பகீரதனின் கதையாக்கியிருக்கிறார்கள். வெங்களமான பூமி குளிர்ந்த கதை அது. தத்துவத்திலிருந்து வரலாறு ஞானம் வரை நமக்கு அனைத்தும் கதைகள் தான். நம் முன்னோர்கள் தங்களின் வாழ்க்கையில், அகத்தில், இயற்கையில் உணர்ந்தவற்றை புராண இதிகாச கதைகளாக,படிமங்களாக மாற்றி இருக்கிறார்கள். அவை தலைமுறைகளை கடந்து இன்று நம்மிடம் வந்திருக்கின்றன. நாளையும் இருக்கும். கதையான எதுவும் இங்கு அழியவில்லை.
தேக்கடி, தேனி ,கம்பம் ,மதுரை போன்ற இடங்களில் உள்ள விவசாய மக்கள் இன்று பிரிட்டிஷ்இந்திய பொறியாளர் ஜான் பென்னி குயிக்கை பொங்கல் வைத்து தங்கள் குலதெய்வம் போல வழிபடுகிறார்கள். பென்னி போலவே எத்தனையோ மாபெரும் காரியங்களை செய்தவர்களுக்கு கிடைக்காத மரியாதையும், நேசமும் மக்களிடமிருந்து பென்னிக்கு கிடைப்பது எப்படி…அவருடன் இணைந்து அணைக்கட்டுமானத்தில் வேலை செய்த ஆயிரகணக்கான மக்கள் சொல்லிய கதைகளின் வழியே ஜான் பென்னிகுயிக் லார்ட் பென்னி குயிக்காக மாறியிருக்கிறார்.
அவ்வகையில் பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாற்றில் அடிக்கோடிடப்பட்ட சாதனையாக, தகவலாக இருக்கும் ஜான் பென்னிகுயிக்கும் அவரின் பகீரதியும் எழுத்தாளர் வெண்ணிலாவின் கைகளில் விரிந்து பரந்த நீரதிகாரம் என்ற வரலாற்று புனைவாகியிருக்கிறது. பென்னிகுயிக்கும் அவர் தலைமை பொறியாளராக இருந்து பேரியாற்றில் கட்டிய முல்லை பெரியாறு அணைக்கட்டும் நீரதிகாரம் நாவலின் மையசரடு. இந்த இருவித்திலை தண்டிலிருந்து பெரியவிருட்சத்தின் கிளைகள் போல கதைகள் விரிந்து காடு போல தளைக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இராமநாதபுரம் பிரதானி முத்துஇருளப்ப பிள்ளையின் யோசனையில் உதிக்கும் பேரியாற்று அணைத்திட்டம் தொண்ணூறு ஆண்டுகளாக பல பொறியியலாளர்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்களின் கைகளில் திட்டமாக வளர்ந்து முயற்சியாக மட்டுமே இருக்கிறது. நிதி, இயற்கை,தவறான கணிப்பு போன்ற பலகாரணங்களால் தடைபட்டு நிற்கும் அந்தத்திட்டம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மெட்ராஸ் பிரசிடென்ஸியில் ஏற்பட்ட பஞ்சத்தால்1880 களில் ராயல் என்ஜினியர் ஜான் பென்னிகுயிக்கின் கைகளுக்கு வருகிறது. அவருடைய வாழ்நாள் கனவாகிறது.
பிரிட்டீஷ் இந்திய பஞ்சக்கதைகள், மதுரையின் தாயாதி சண்டைகளால் மேற்குதொடர்ச்சி மலை காட்டில் பூஞ்சாறு சமஸ்தானம் உருவாகிற கதை,பிரிட்டிஷ் அதிகாரத்தின் கதைகள், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கதைகள், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பேரியாற்றின் காடுகளில் வாழும் பழங்குடிகளின் கதைகள், மதுரையை சுற்றியுள்ள நிலபகுதிகளின் கதைகள் என்று நாவலின் களமான மெட்ராஸ்ப்ரசிடன்ஸி மற்றும் திருவனந்தபுரம் சமஸ்தானம் முழுவதும் கதைகளாக நாவலில் கிளைத்து கொண்டே இருக்கிறது. கண்ணகி அய்யப்பன் போன்ற தெய்வங்களின் புராண கதைகளும் இவற்றுடன் இணைகின்றன. நாவலை வாசிக்கும் போதே மதுரையின் தொல்கதைகள் நம் மனதில் முட்டிமோதுவதை தவிர்க்க முடியவில்லை. நீரதிகாரத்தின் கிளை கதைகள் வாசிப்பவர் மனதில் ஒரு பெரிய கதைகளின் சித்திரத்தை விரிக்கிறது.
பதினெட்டாம் நூற்றாண்டின் நிகழ்காலத்திலிருந்து முன்னும் பின்னுமாக கதை நிகழ்கிறது. கடுமையான மதுரை பஞ்சத்தின் விளைவாக தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் கோப்பாகவே இருக்கும் பேரியாறு அணைத்திட்டத்தை பிரிட்டிஷ் அரசு கையிலெடுக்கிறது. மெட்ராஸ் பொதுபணித்துறையின் தலைமை பொறியாளரான ஜான்பென்னிகுயிக் மெட்ராஸ் பிரசிடென்சியிடமும், திருவிதாங்கூர் சமஸ்தானத்திடமும் அணைக்கட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து பெறும் காலகட்டத்தில் தொடங்கும் நாவல், பேரியாறு அணை கட்டிமுடிக்கப்படுவதுடன் நிறைவுபெறுகிறது.
திட்டத்திற்கு அனுமதி வாங்குவதற்காக பிரிட்டிஷ் பிரசிடென்சிக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையில் பென்னி தன் திட்ட அறிக்கைகளை விளக்கிக்கொண்டே இருக்கிறார். தொடக்கத்திலேயே திருவனந்தபுரம் சமஸ்தானத்தின் அரசர் விசாகம் திருநாள் இறக்கிறார். கண்ணகி கோயில் மூழ்கும் என்று கண்ணகி கோயில் பூசாரியான தேவந்தி தீய நிமித்தங்களை உணர்கிறாள். அணையின் அமைவிடமான பூஞ்சாறு சமஸ்தானத்தின் சம்பத்துகள் நீர் வழி போகும் என்று பூஞ்சாறு சமஸ்தானத்தின் அரசரான ராமகோடவர்மாவிற்கு சாஸ்தா [ஐய்யப்பன்] கோயிலில் வாக்கு கிடைக்கிறது. இந்த சூழலில் கையெழுத்தாகும் இந்தத் திட்டம் அணைகட்டிமுடிக்கப்படும் வரை அனுதினமும் பல தடைகளை எதிர்கொள்கிறது. அதிகாரிகள், அரசுகள், அரசியல் சூழ்நிலைகள், நிதிவசதி, ஜமீன்கள் ஏற்படுத்தும் தடைகளுக்கும் மேலாக மேற்குதொடர்ச்சிமலையின் சூழலும், காலநிலையும், சீறும் பேரியாறும்,சட்டென்று வரும் பெருமழைகளும் மனித பிரயத்தனங்களை தாண்டிய ஊழாக செயல்படுகின்றன. அதே நேரம் அணைக்கட்டு கையெழுத்தாகும் நேரத்தில் யோசித்தாலும் பின்பு அணைக்கட்டு திட்டத்தை தங்கள் உள்ளுணர்வால் சென்று தொடும் அரசர்களான விசாகம் திருநாள், ராமகோடவர்மா ,அரசு அதிகாரிகளான ஹானிங்டன்,ராமய்யங்கார் போன்றவர்கள் திட்டத்திற்கு உறுதுணையாக நிற்கிறார்கள்.
மொக்கையதேவர்,எஸ்தரான மீனாட்சி,பேயத்தேவன் பார்வதி,சாமி போன்ற நூற்றுகணக்கான எளிய மக்களும்,ரத்தினம் பிள்ளை போன்று எந்த பொறுப்பிலும் பொருந்தும் நிர்வாகிகளும்,கணக்கர்களும் வேலை என்பதை கடந்து தங்களை பேரியாற்று திட்டத்திற்கு சமர்பிக்கிறார்கள். வறுமையில் வாடும் மக்கள் கூலிக்காக, உணவிற்காக அணைக்கட்டும் வேலைக்கு வந்தாலும் கூட காலப்போக்கில் மானசீகமாக அந்த வேலையில் இணைந்துவிடுகிறார்கள்.
வரலாற்றிலிருந்து எழுந்து நாவலில் வந்து அமர்ந்திருக்கும் வறுமையின், பஞ்சத்தின் சித்திரத்திற்கு கண்ணீரின் நிறம். எழுத்தாளர் ஜெயமோகனின் நாவலான வெள்ளையானையில் வரும் பஞ்சவர்ணணையை இதற்கு நிகராக சொல்லலாம். கால் வயிற்று கஞ்சிக்காக பஞ்சத்தில் இறந்த தன் மக்களை மொத்தமாக புதைக்க குழிவெட்டி கூலி வாங்குவது, பஞ்ச காலத்தில் பிணங்களை புதைப்பதற்கான வேலை செய்தே கால்வளைந்து போனவர்கள், விதைத்த தானியங்களை இருளில் பொறுக்கும் மக்கள் என்று பஞ்சவர்ணனை உண்மையான மானுட துயரத்தை சென்று தொடுகிறது. இந்த உணர்வுபூர்வமான மானுட துயரம் இந்த நாவலை உயிர்ப்புள்ளதாக்குகிறது.
அத்தனை பசுமையும், அடர்ந்த காடும், பேரியாறும், தொடர் மழையும் உள்ள அடர்ந்த காட்டின் பல முகங்கள் நாவலில் உள்ளன. நாவல் முழுவதும் கிட்டதட்ட பத்துஆண்டுகள் பருவத்திற்கு ஏற்ப பேரியாறும், காடும் தன்னை திருப்பி திருப்பி வேறு வேறாக காட்டுகின்றது. அணைக்கட்டும் போது இறப்பு அன்றாடமாகிறது. வேலையாட்களுக்குள் பரிவிற்கு இணையாகவே சாதி வேறுபாடுகளும் அதன் சிக்கல்களும் உருவாகின்றன. பேரியாறும் தன் பங்குக்கு தொடக்கத்தில் எடுக்கும் முயற்சிகளை மணல்வீடுகளை போல கலைத்து போடுகிறது.
ஆயிரக்கணக்கில் மக்கள் வேலைசெய்யும் மேற்குதொடர்ச்சி மலை அதன் அசாதாரண இயல்புடன் நாவலில் வெளிப்படுகிறது. திட்டத்தில் உள்ள அத்தனை ஆய்வறிக்கைகளுக்கு பின்பும் அணைகட்டும் போது அந்த இடம் தன்னை வேறொன்றாக காட்டி பொறியியளாலர்களை பதைக்கவைக்கிறது. சிறுகச்சிறுக அந்த மலையிடத்தை, ஆற்றை, மண்ணை, பாறைகளை தெரிந்து கொண்டு பென்னியின் குழு அணையை எழுப்புகிறது. சீற்றம் மிகுந்த கோதாவரியில் உள்ள அணைகட்டுமானத்தின் பொறியாளரான அர்த்தர்காட்டன் பென்னியிடம் மேல்மலை பேரியாற்றில் கடவுளால் கூட அணைகட்ட முடியாது என்கிறார். பென்னிக்குள் உறைந்திருக்கும் போரில் ஈடுப்பட்ட ராணுவவீரரின் இயல்பும், அதற்கு சமமாக அவருக்குள் அவர் தாய் ஏற்படுத்திய மனவலிமையும், பொறுமையும் பென்னிக்கு உள்ளுறையும் பலமாக அமைகிறது. மேலும் நாவலில் வெளிப்படும் பென்னியின் குணாம்சம் ஒரு இலட்சியவாதியை கண்முன்னே காட்டுகிறது. சிக்கல்களை, பிரச்சனைகளை அவர் கையாளும் லாவகத்தில் உள்ள தலைமை பண்பின் வலிமையை உணரமுடிகிறது. இயற்கையின் முன்பு சின்னஞ்சிறிய மனிதன் தன் திட்டத்துடனும், சிலஆயிரம் ஆட்களாலான தன் குழுவுடன் நிற்பதில் உள்ள சவால் தன்மை பரவசமானது. ஆனால் பென்னி பெரும்பாலான பிரிட்டிஷார் போல இயற்கையை பயன்பாட்டு பொருளாக மட்டும் காண்பதில்லை. அதன் முன் பணிகிறார். ஹானிங்டன், விசாகம்திருநாள் போன்று அரசுஅதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இயற்கை மீதுள்ள காதலை போன்றே பொறியியாளாலரான பென்னிக்கு இயற்கை முன்பு ஏற்படும் பணிவானது அவர் காரியவெற்றிக்கு சாதகமாக மனநிலையை அவருக்கு அளிக்கிறது. பிரிட்டிஷார்க்கு பணியாத பிறப்பால் ஸ்காட்லேண்டிய பின்புலம் கொண்ட பென்னி, தன்னை ஆளும் பிரிட்டிஷ் அரசிக்கு நேர்மையாக ஊழியம் செய்யும் உணர்வுள்ளவராகவும் இருக்கிறார்.
இந்த நாவலில் உள்ள அணைகட்டும் நிகழ்வை எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமத்தில் வரும் ஒரு நிகழ்வுடன் ஒப்பிடலாம். மேய்ப்பர்களான தெலுங்கர்கள் முகலாய படையெடுப்பின் காரணமாக தங்கள் நிலத்தை விட்டு தமிழகத்தில் மக்கள் வசிக்காத வரண்ட பகுதிக்கு வந்து வாழ்வை தொடங்கும் போது, மந்தை உருவாக்குவதற்காக கருவுற்ற காட்டு பசுவை மிகுந்த பிரயத்தனப்பட்டு பிடித்து சுற்றிலும் முளைகள் அடித்து கட்டுவார்கள். அதன் அருகில் யாருமே செல்ல முடியாது. அதை சுற்றி குடிசை வேய்ந்து காவல் இருந்து பாதுகாப்பார்கள். இறுதி வரை அது மனிதகைகளுக்கு கட்டுப்படாத காட்டு பசுவாகவே இருக்கும். ஆனால் அதன் கன்று அவர்கள் கைகளில் அடங்கும். அதிலிருந்து தங்களுக்கான மந்தையை உருவாக்குவார்கள். அது போல பேரியாறு பேரியாறாகவே தான் இருக்கிறது. அதன் ஒரு காம்பை மதுரைக்கு திருப்பிவிட ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே புதைகிறார்கள். அழுகி சாகிறார்கள். காட்டு உயிர்களுக்கு இரையாகிறார்கள். பாதங்கள் இற்று விழுந்து மடிகிறார்கள். எளிய மக்களின் இளைத்த உடலை தின்று எழும்பும் ஒரு அன்னை யட்சியாக அணைகட்டு நமக்கு தோற்றமளிக்கிறது.
அணைக்கட்டும் நேரத்தில் தடுப்பமைத்து தண்ணீர் தேக்கிவைக்கப்படுகிறது. அதில் முறிந்த கிளைகளும் பச்சை மரங்களும் விழுந்து அழுகி நொதித்து நாற்றமெடுக்கிறது. யாராலும் சகிக்க முடியாத நாற்றம். நாவலின் அந்த பகுதியை வாசிக்கும் போது பிரிட்டனின் காலனியாதிக்கத்தின் இந்தியாவை, பஞ்சத்தை அந்த தேங்கிய நீருடன் இணைத்து உணர முடிந்தது. அந்த நிகழ்வு ஒரு ப்ரிட்டிஷ்இந்திய படிமம் போல உள்ளது.
வரலாற்று நாவல்களில் தகவல்களின் கணிசமான பங்களிப்பை தவிர்க்க முடியாது. இந்த நாவல் அணைக்கட்டுமானம் பற்றிய நாவல் என்பதால் தகவல்களின் ஆதிக்கம் உள்ளது. இந்த ஆதிக்கத்தை கடந்து, தகவல்கள் விரிக்கும் கற்பனை நாவலை அவரவர்களுக்குரிய வகையில் உயிர்ப்புள்ளதாக ஆக்கக்கூடும். மேலும் தகவல் பெருக்கின் இருகரை போல ஏராளமாக கதைகளும் நிகழ்வுகளும் நாவலில் உள்ளன. வரலாற்று நாவல்களுக்கு முன்னுதாரணமான ‘சிக்கவீர ராஜேந்திரேன்’ நாவலில் முழுமையான ஒரு வாழ்க்கை உள்ளது. அதில் தகவல்களை விட வாழ்க்கை தான் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் நீரதிகாரம் எதிர்கொள்ளும் சவால் என்பது அது ஒரு அணைக்கட்டின் நாவல் என்பதே. அதை ‘கதைசொல்லும் உரையாடல்கள்’ மூலம் நாவலாசிரியர் எதிர்கொண்டுள்ளார். பேச்சில் கதைகளை அடுக்கிக்கொண்டே செல்லும் தென்மக்களின் இயல்பை நாடிபிடித்தது நாவலாசிரியருக்கு உதவியாக இருந்திருக்கிறது.
ஒரு வரி தகவல்கள் சில நேரம் வாசிப்பவரின் கற்பனையை விரிக்கின்றன. உதாரணத்திற்கு பஞ்சகாலத்தில் திருவிதாங்கூர் அரசர் கப்பலில் மரவள்ளி கிழங்கின் இருபது செடிகளை வரவழைத்து தன் சமஸ்தானத்து மக்களின் பசியை போக்கினார் என்ற தகவல் வருகிறது. மரவள்ளிக்கிழங்கு விவசாயம் பற்றி தெரிந்தவர்களுக்கு இந்த தகவல் விரிக்கும் சித்திரம் அழகானது. ஒரு ஆள்காட்டி விரல் அளவிற்கான தண்டு மரவள்ளிகிழங்கு நாற்றுக்கு போதுமானது. பேச்சு வழக்கில் ‘கிள்ளிவச்சா வளர்ந்திரும்’ என்பார்கள். ஆனால் வளர்ந்து முற்றியதும் ஒரு செடியை பிடுங்குவதற்கு இரண்டு ஆள் வேண்டும். திருவிதாங்கூர் போன்ற வளமான மண்ணில் வளர்ந்து வெளிவரும் தூர்விட்ட கிழங்குகளின் கொத்தை கற்பனை செய்யும் போது அந்த காட்சி சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. வளமில்லாத மண்ணிலேயே ஒரு செடிக்கு ஐந்தாறு கிழங்குகள் கிடைக்கும். அந்த செடிகளை நாற்றுகளாகி பஞ்சகாலத்தில் மலையாள மண்முழுக்க செடிகள் பரவும் சித்திரம் ஒரு விவசாய பின்புலத்தில் வசிக்கும் எனக்கு மிகப்பெரிய பரவசத்தை கொடுக்கிறது. இது போன்று அத்தியாயங்கள் தோறும் தகவல்களும், நிகழ்வுகளும் நிறைந்திருக்கின்றன.
அதே போல அங்கங்கே வந்து போகும் நிகழ்வுகளின் உன்னதங்களையும் சொல்லலாம். உதாரணத்திற்கு அணைகட்டுமிடத்தில் அன்றாடம் பெருகும் ஊழல்களையும் கடத்தல்களையும் கண்காணிக்க நேர்மையான இந்திய கணக்கர் வருகிறார். ஒவ்வொரு கணக்கு வழக்காக சரிசெய்கிறார். அங்கு வேலை செய்யும் மக்களுக்கு தினமும் அரிசி வினியோகிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. அதில் குறிப்பிட்டளவு மூட்டைகளுக்கு கணக்கு கிடைக்கவில்லை. எந்தப்பக்கம் துலக்கினாலும் அவருக்கு துப்பு கிடைக்காமலிருக்கிறது. சட்டென்று ஒரு நாள் கழுதையில் அரிசி எங்கோ செல்கிறது என்று கூலி ஆட்கள் மூலம் கண்டுபிடித்து ஒரு கூலிஆளின் உதவியுடன் கழுதையை பின் தொடர்ந்து செல்கிறார். கழுதை சென்று நிற்குமிடம் பேரியாற்றின் நதி மூலம். அங்கு சிறு சுனையாக ஊற்றாக பேரியாறு கருவிலிருந்து வெளிவரும் குழந்தை போல இருக்கிறது. அந்த ஊற்றை நம்பி சில குடும்பங்கள் வசிக்கிறார்கள். அங்கு உள்ள வறுமையை சொல்லும் சிலவரிகள் உக்கிரமானவை. பெண்களும் குழந்தைகளும் அந்த கழுதையிலிருக்கு அரிசியை எடுக்க தவிக்கும் காட்சி மறக்க முடியாதது. அங்கிருந்து அணைக்கட்டு வேலைக்கு வரும் இரண்டு ஆண்களுக்கு தங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு தாங்கள்மட்டும் அரிசிகஞ்சி குடிப்பது குற்றவுணர்வை தருகிறது. கேப்பை, கம்பு போன்ற உணவுப்பயிர்கள் விளையும் இடம் அது. தங்கள் குடும்பத்திற்காக பாண்டியன் என்ற பெயர் கொண்ட அந்த இருவரும் பல பாண்டிய பெயர்களை உருவாக்கி கங்காணிகளிடம் கணக்கு காட்டி அரிசி வாங்கி கழுதையில் ஏற்றி ஊருக்கு அனுப்புவது கணக்கருக்கு தெரிந்துவிடுகிறது. அவர் அமைதியாக திரும்பி அந்த விஷயத்தையே அறியாதவர் போல வழக்கமான கணக்கை எழுதுகிறார். நாவலின் உன்னதமாக தருணங்களில் ஒன்று. நேர்மை அறமாகும் தருணம்.இது போன்ற தருணங்கள் அங்கங்கே வருகின்றன. நாவலை வாசிக்கும் போது ஒரு பெரிய மானுடநாடகம் என்ற உணர்வை தவிர்க்கமுடியவில்லை. காவியங்களை வாசிக்கும் போது ஏற்படும் உணர்வு இது. இந்தத்துயரமும் வலியும் கண்ணீரும் உண்மை என்ற நம்பகத்தன்மை நாவலின் உணர்வுதளத்திற்கு மிகப்பெரிய பலம். வரலாற்று கதை சொல்லலின் சாதக அம்சம் இது. பேரியாற்று வெள்ளம் போல உணர்வுகள் கொந்தளிக்கும் வெளியாக நாவல் உள்ளது. உதாரணத்திற்கு டெய்லர் என்ற பொறியியளாலரின் மரணம். அவருடன் அன்பாயிருக்கும் மொக்கைய தேவருடன் இணைந்து விபத்தில் இறக்கிறார். அணைகட்டும் வேலையின் போதும், வெள்ளத்திலும் மக்கள் மாய்கிறார்கள். அங்கு இறப்பு அன்றாடமாக இருக்கிறது. ஆனால் தற்செயலாக நடக்கும் கோரவிபத்தை அவர்களால் கடக்கமுடிவதில்லை.ஒரு அடி பின்னாடி இருந்திருந்தால், ஒரு எட்டு வைக்காமல் இருந்திருந்தால் உயிர்தப்பியிருக்கலாம் என்ற தவிப்பை நாவல் மாந்தர்களே கடக்கமுடியாமல் தடுமாறுகிறார்கள்.
உன்னத தருணங்கள் என்று சொல்லும் போது நாவலில் உள்ள பீபத்ச அம்சத்தையும் இணைத்து சொல்லவேண்டும். உதாரணத்திற்கு வெள்ளம் சூழ்ந்த கூலிகளின் குடியிருப்பை சொல்லலாம். அங்கேயே மலஜலம் உணவு எல்லாம் நடக்கிறது. இது நாவலில் வரும் உக்கிரமான பீபத்ஸ பகுதி. அதிலிருந்து காலரா பரவி கூட்டம் கூட்டமாக வேலையாட்கள் இறக்கிறார்கள்.
தடைகளை எதிர்கொண்டு ஒவ்வொரு முறையும் பென்னி எடுத்து வைக்கும் அடுத்த அடி நாவல் வாசிப்பை வேகப்படுத்துகிறது. சவாலான அணைதிட்டத்தின் தலைமை பொறியாளரான பென்னிகுயிக் அவருக்கான வெளிச்சத்தை பெரும்பாலும் சூழலில் இருந்து பெறுகிறார். அதே போல இருளையும் பெறுகிறார். பொறியியல் அறிவு, திட்டமிடல்களை கடந்து கட்டுமானத்திற்கான வெளிச்சம் என்பது திட்டம் செயலாகும் சூழலில் தானே வர இயலும். அவர் அந்த சுற்றுவட்டார மக்களின் பட்டறிவை உதாசீனம் செய்வதில்லை. ஒரு ராணுவ போர்வீரனின் பிடிவாதமும், அந்தந்த கணத்தை நம்பும் தன்மையும் பென்னியை செயல் வீரராக்குகிறது. அணைகட்டுதலின் சிக்கல்கள் போரின் தற்செயலை போன்றவை. பென்னி ஒரு ராணுவவீரரும் கூட என்பதால் அதை அவர் அன்றாடத்தில் அதிக பதட்டமின்றி எதிர்கொள்கிறார்.
உதாரணமாக திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு வாங்கும் துவக்க அத்தியாயம் ஒன்றில் மனம் சோர்ந்து மெட்ராஸ் பிரசிடென்சியின் பொதுப்பணித்துறை கட்டிடத்திற்கு வெளியே மரத்தடியில் நின்று பென்னி கடிதமெழுதுகிறார். அவருக்கு அங்கே தனி அறை, பணிசெய்ய தனிகுமாஸ்தா உள்ளிட்ட வசிதிகள் உண்டு. என்றாலும் அங்கேயே நின்று கடிதம் எழுதிவிட்டு வெளியேறுகிறார். துவக்கத்தில் தன் அலுவலகத்திற்கு வெளியே மரத்தடியில் நிற்கும் பென்னி, இறுதி அத்தியாயங்களில் மலையுச்சியில் நின்று அணை நிறைவு பெறுவதை, ஆயிரக்கணக்கில் ஆட்கள் வேலை செய்வதை மனநிறைவுடன் பார்க்கும் இடம் முக்கியமானது.
அணைகட்டுவதால் காட்டில் ஏற்படும் மாற்றங்களும், காட்டுயிர்களின் பதற்றங்களும், அங்குள்ள பழங்குடி மனிதர்களின் தவிப்புகளும் நாவலில் உள்ளது. அணை வளர்ந்து வரும் அத்தியாயங்களில் ஈடுபாட்டுடன் வேலை செய்யும் அங்குள்ள அனைவருமே பென்னிகள் என்று தோன்றும். பென்னியின் செயலை பகீரத பிரயத்தனம் என்று சொல்லலாம். காட்டாற்றை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்ததை ஒரு வகையில் பெண்ணை கொண்டு சமூகம் உருவாக்கியதுடன் ஒப்பிடலாம். ஆற்றங்கரைகளில் உருவான மனித நாகரீகத்தின் கதைகள் நம்மிடம் நிறைய உண்டு. மனிதன் தன் எத்தனத்தால்ஆற்றை தன் போக்கிற்கு வளைத்து வாழ்க்கையை வளப்படுத்திக்கொண்ட கதை இது. பிரிட்டிஷ் ஆட்சி இங்கு உருவாக்கிய பஞ்சங்களால் ஊர்ஊராக மக்கள் அழிந்தார்கள். நாட்டை விட்டு வெளியேறினார்கள். ஆள்வதற்கு நிலமும் மக்களும் இல்லாமல் போகலாம் என்று அணைத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. என்றாலும் கூட மக்களுக்கான செயல்களுக்கு அதற்கே உரிய ஔி உண்டு. அந்த செயல்ஔி இந்த நாவலின் ஔியாகவும்,பென்னி குயிக்கின் ஔியாகவும் இருக்கிறது.
ஆயிரத்து ஐநூறு பக்கங்களில் உள்ள நாவல், அதே அளவு மனிதர்களாலும், தருணங்களாலும், உணர்வுகளாலும், இயற்கையாலும், வரலாற்றாலும் விரிந்திருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் நடக்கும் பெரிய கதையாடல். 1893 ஆம் ஆண்டு சித்திரை திருநாளிற்கு பேரியாற்றுநீர் மதுரை வைகையில் வந்து சேர்வதுடன் நாவல் முடிகிறது.
வைகையில் கலக்கும் பேரியாற்று நீர் அது தொடும் வேர்கால்களில் உண்டாக்கும் தரிசனத்திற்கு ஒரு சிற்றடி முன்பே நாவல் நின்றுவிட்டது. பென்னியும் கூட தன் ஆழ்ந்த நிலைக்கு ஒரு அடி முன்பே திரும்பிவிட்டார். மோகமுள்ளில் தி.ஜாவிற்கு நிகழ்ந்ததும் இதுவே. நாவலை முடிக்கும் போது பேரியாற்று நீரும் பென்னியும் சென்று சேரும் கடல் எது? என்ற கேள்வி எழுகிறது. வைகை கடலில் கலக்கிறதா என்ற நடைமுறை சார்ந்த கேள்வி அல்ல இது.
வரலாற்றை எழுவது என்பது சவாலானது. தரவுகளுக்கான பயணங்கள், வாசிப்பு என்று நம்மை ஒப்புகொடுக்க வேண்டும். முல்லை பெரியாறு அணைபோலவே வரலாற்று மொழிதலில், விஸ்தீரத்தில், கதை சொல்லலில் எழுந்து நிற்கும் நாவல் இது. ஒருவகையில் அன்னையை அழைத்து வரும் மகனின் நாவல் என்றும் சொல்லலாம். தன் தவவலிமையால் கங்கையை பகீரதன் பூமிக்கு அழைத்து வருவதை மகாபலிபுரத்தில் பாறையில் செதுக்கியிருக்கிறார்கள். ஓவியங்களாக வரைந்திருக்கிறார்கள். சிறுவயதில் பகீரதன் கங்கையை அழைத்து வரும் கதையை வாசித்த போது அந்த புத்தகத்தில் உள்ள பகீரதனின் பின்னால் வரும் கங்கையின் ஓவியம் மனதில் இருக்கிறது. அது தரும் பரவசம் ஒன்றுண்டு. பகீரதன் நடக்க நடக்க பின்னால் பகீரதி வருவாள். அது போன்ற ஒரு பரவசத்தை நீரதிகாரத்தை வாசிக்கும் போது உணரமுடிந்தது.
கேரள மலையுச்சியில் உள்ள வலிமையான காட்டாறான பேரியாற்றின் சிறுபகுதியை அணைகட்டி தடுத்து அதன் போக்கை சற்று திருப்பி, சிறுபகுதி நீரை கிழக்கே தேக்கடி, தேனி, கம்பம் வழி மதுரை, ராமநாதபுரம் வரை கொண்டு வருவதில் ஒரு பண்பாட்டு புன்னகை உள்ளது. கேரள அன்னை தமிழக அன்னையாகும் இடம் அது. மதுரையிலுள்ள மீனாட்சியும் நாயக்கர் ஆட்சிகாலத்தில் கேரளத்திலிருந்து திரும்பியவள் தானே. இரண்டு அன்னைகள் சூழ்ந்த மதுரை. மதுரையை எரித்துவிட்டு இங்கிருந்து சென்ற கண்ணகிஅம்மை மேல்மலையில் உள்ள விண்ணேற்றி பறையில் சென்று நிற்கிறாள். நீண்ட காலம் சென்று அவள் குளிர்ந்து மீண்டும் பஞ்சத்தில் எரிந்து தீய்ந்த மதுரை நோக்கி வருகிறாள். இது ஒருமாதிரி தென்னிலத்து அன்னைகள் மலையறுவதும் இறங்குவதுமான சித்திரத்தை நமக்கு அளிக்கிறது. நாவலின் இறுதியில் வெம்மணலால் உறிஞ்சப்பட்டு நின்று நின்று மெதுவாக வரும் பேரியாறு ‘தென்னவன் தீதிலன் யான் அவன்தன் மகள்’ என்று சொல்லிய இளங்கோவின் [சேரஇளவல்] கண்ணகியாக இருக்கலாம். இந்த நாவல் வாசிப்பில் நம் மனம் இலக்கியம் வழியாக, புராணங்கள் வழியாக, சேரர்களுக்கும், பாண்டியர்களுக்கு இடையே உள்ள உணர்வு பெருக்குள்ள நாடத்தருணங்களை இணைத்துக்கொள்ளும் உள்ளுணர்வு, அகம் சார்ந்த ஒரு பிணைப்பை உணரமுடிகிறது.
நாவலை வாசித்து முடித்தப்பின் புத்தகத்தைமூடி வைத்ததும் மனம் மீண்டும் மதுரைக்குள் சென்றது. வைகையில் தண்ணீர் வருகிறது. மதுரைக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் வயல்காட்டில் மடைவாய் திருப்பி மனம் குளிர்ந்த பாட்டனார் ஒருவர் தன் பேரனிடம் ‘ஆத்தாவுக்கு நம்ம மேல கோவம் இல்ல அப்பு…கோவத்துல போனவ நம்ம பாடு தாங்காம நம்மள மன்னிச்சு திரும்பி வந்துட்டா’ என்று அகம் கசிந்திருக்கூடும் என்று தோன்றியது. எழுத்தாளர் அ.வெண்ணிலாவிற்கு அன்பும் வாழ்த்துகளும்.

Comments
Post a Comment