இந்த ஆண்டு வெள்ளிமலை மரபிலக்கிய வகுப்புடன் தொடங்கியது.
வம்சவிருட்சம் _ எஸ்.எல் பைரப்பா
புத்தம் வீடு _ ஹெப்சிபா ஜேசுதாசன்
காவியம் _ ஜெயமோகன்
மீஸான் கற்கள்_ புனத்தில் குஞ்ஞப்பதுல்லா
நாலுகெட்டு _ எம்.டி.வாசுதேவன் நாயர்
பாத்துமாவின் ஆடு,மதிலுகள் _ வைக்கம் முகமது பஷீர் [இரண்டாம் முறை]
கூளமாதாரி _ பெருமாள் முருகன்
முனைவர் வேதாசலத்தின் நூல்கள்
நவீன தமிழிக்கிய அறிமுகம் [ மூன்றாவது வாசிப்பு]
மாகே கஃபே _அரிசங்கர்
பாரீஸ் _ அரிசங்கர்
நெருப்பு ஓடு _ தேவி லிங்கம்
சூன்யதா _ ரமேஷ் பிரேதன்
மௌனி சிறுகதைகள்
இந்த ஆண்டு வாசித்த நூல்களுள் இந்த நூல்கள் முக்கியமானவை.
கவிதை வாசிப்பனுபவங்கள்,இரண்டு சிறுகதைகள், எழுத்தாளர்கள் அ.வெண்ணிலா ,பெருமாள் முருகன் படைப்புகள் பற்றி கருத்தரங்க நிகழ்விற்கான கட்டுரைகளும்,நாவல் வாசிப்பனுபவங்களும் எழுதியிருக்கிறேன்.
2024 ம் 2025 ம் ஆண்டுகளின் அன்றாடத்தில் வாசிப்பிற்கும் எழுதிற்கும் இது வரை சந்திக்காத இக்கட்டுகளை, சூழல் காரணமான நெருக்கடிகளை உணர்ந்த ஆண்டுகள்.
இந்த ஆண்டில் இரண்டு சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறேன். வரண்டகாலத்தில் உயிர்ப்பிடிக்கும் சாப்பாத்திக்கள்ளி போல. 2015 ற்கு பிறகு எனக்கு வாசிப்பதற்கான நேரச்சிக்கல் தொடங்கியது. அதற்குமுன் வேலைக்கு செல்லும் போது வாரம் ஒரு முறை நூலகத்திற்கு சென்று புத்தகங்கள் எடுத்து வந்தும் அஞ்சலில் புத்தகங்களை வாங்கி வாசித்து கொண்டிருந்தேன்.
2015 பிறகு எனக்கு அன்றாட வாழ்க்கை வாசிப்பிற்கு சவாலாக ஆனது. அதற்கு முன் கல்லூரியில் படிக்கும் போது அதிகாலையில் ஒருமணி நேரம்,[பாரதி பாடல்களும், கம்பராமாயணமும்,கவிதை புத்தகங்களும்] கல்லூரிவிட்டதும் நூலகத்தில் ஒன்னறை மணி நேரம் [நாவல்கள்] விடுமுறையில் முழுநாளும் வாசிப்பேன்.
கல்லூரி விடுமுறை விட்டாலும் முதுநிலை ஆய்வு மாணவிகள் விடுதியில் இருந்தால் நானும் இருப்பேன். பகல் முழுவதும் நூலகம். பெரம்பலூர் புத்தக்கடையில் வாங்கி பெட்டியில் வைத்திருக்கும் நூல்களை அமைதியான கல்லூரி வளாகத்தில் வாசிக்க மிகவும் பிடிக்கும். கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் நாவலை கல்லூரி விடுமுறையில் வளாகத்தில் உள்ள கோவிலில் அமர்ந்து வாசித்தேன். இளநிலை முதலாம் ஆண்டில் விடுமுறையில் நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் நாவலை கல்லூரியின் முக்கிய கட்டிடத்தின் தரைதளத்தில் வராண்டாவின் கைப்பிடி சுவரின் மீது அமர்ந்து வாசிக்கும் போது கல்லூரி முதல்வர் மீனாட்சி வாங்கி பார்த்துவிட்டு தோளில் தட்டி, "படி..படி.."என்று சொன்னார். அதனால் நூலகரிடம் எனக்கு சலுகை உண்டு. எந்த நூலாக இருந்தாலும் 'பத்திரமாக கொண்டு வந்து கொடுக்கனும்' என்று சொல்லி என்னை நம்பி கொடுப்பார். எப்போதாவது வராண்டாவில் எதிர்ப்படும் கல்லூரி முதல்வருக்கு வணக்கம் சொல்லும் போது 'தொடர்ந்து புத்தகம் படிக்கிறியாம்மா.. 'என்று கேட்பார்.
இந்த வாசிப்பு ஒழுங்கை அன்றாடமாக நிலைநிறுத்தி விட்ட மகிழ்ச்சி உள்ளது. காலையில் நாலறை ஐந்து மணிக்கு எழுந்ததும் தேநீருக்கு அடுத்து வாசல் தூய்மை செய்து கோலமிட்ட பின் ஏழு மணி வரை வாசித்துவிட்டு அம்மாவுடன் சமையல் வேலைக்கு செல்வேன். இந்த நேரம் எனக்கான நேரம். ஆனால் அதற்காக பிடிவாதமாக இருக்க வேண்டிருந்தது. இப்போது இயல்பாக ஆகிவிட்டது. 'காலை எழுந்தவுடன் படிப்பு' என்று பாரதி சொல்லிவிட்டு போய்விட்டார். அதை நடைமுறை படுத்திக்கொள்ள எவ்வளவு பாடு[ இந்த வரி குழந்தைகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தான்..]
அன்றாடம் என்பது ஒரு ரக்தபீஜன் போல தன்னுடைய ஒவ்வொரு சொட்டால் தானே பெருகி நம் நேரத்தை அழிக்கும். இந்த ஆண்டில் முனைவர் வேதாசலத்தின் நூல்களை வாசிக்கத்தொடங்கியது முக்கியமானது. மனதில் உள்ள வரலாற்று வெளியை அகலப்படுத்துகிறது.
மெது மெதுவாக மனதிற்குள் வாசிப்பால் நம் பண்பாடு வரலாறு இலக்கியம் ஆகியவற்றால் ஆன ஒரு வரைபடம் உருவாகிக்கொண்டிருக்கிறது. சிறுவயதிலிருந்து என் சூழல் சார்ந்த சமூகம் சார்ந்த விவசாயம் சார்ந்த கிராமங்கள் சார்ந்த அவதானங்கள் இந்த வரைபடத்துடன் இணைந்து கொள்கிறது.
வாசிப்பிற்கு சூழல் மிகமுக்கியம். அதைவிட அகஅமைதி முக்கியம். ஆனால் இவை தானே அமையாது. நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும்..வழக்கமாக பயன்படுத்தும் உவமை...பாசியை விலக்கிகொண்டே இருக்க வேண்டும்.
எல்லோரும் தாங்கள் செய்யும் சடங்கு சம்பிரதாயங்களில் மூடபழக்கவழக்கங்களில் இத்தனை பிடிவாதமாக இருக்கும் போது நாம் ஏன் வாசிப்பதில் பிடிவாதமாக இருக்கக்கூடாது என்ற கேள்விதான் சிறுவயதில் என்னுடைய தொடர்ந்த வாசிப்பிற்கான உந்ததுதலாக இருந்தது.
தனிபட்ட வாழ்வில் கௌரிஅம்மா இந்த டிசம்பர் 4 தேதி இறந்துவிட்டார். எழுபது வயது. அய்யாவின் தம்பி [சித்தப்பா மகனின்] மனைவி. ஆனால் அய்யாவிற்கு முன்பே அவருக்கு திருமணம் ஆனதால் இவரை பெரியம்மா என்றோ சித்தி என்றோ அழைக்கவில்லை. அம்மா தான். அம்மாவும் கௌரி அம்மாவும் நல்ல தோழிகள். தோழிகள் என்றால் மரியாதைக்குரிய அக்கா. கடைசிவரை ப்ரியமாக இருந்தார்கள்.
அவர்களின் வீட்டில் தான் நான் வறுமையின் உச்சத்தை நேரில் பார்த்து உணர்ந்தேன். நான் மதிக்கும் அம்மாக்களில் முதலில் இருப்பவர் கௌரிஅம்மா. தான் சாகும் வரை கணவரின் அத்தனை அட்டூழியங்களையும் சமாளித்து தனி ஆளுமையாக இருந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக புத்தகம் வாசிப்பவர். வயல் வேலைக்கு சென்று திரும்பி வீட்டிற்கு வந்து அய்யாவின் புத்தகஅடுக்கிலிருந்து புத்தகங்கள் எடுத்து செல்வார். இந்தியா டுடே சிறுகதைகள் வாசிப்பார். [ வயல் என்றதும் சொந்த வயல் என்று நினைக்கக்கூடாது. மற்றவர்கள் வயலிற்கு வேலைக்கு செல்வது]
வயல் வேலை இல்லாத நாட்களில் தலைகுளித்துவிட்டு நரைத்த சுருட்டை முடியில் மஞ்சள் படிந்திருக்க அவர் புத்தகத்துடன் அமர்ந்திருக்கும் காட்சியை மறக்கமுடியாது. அம்மா நல்ல கரிய நிறம். உயரம். கம்பீரமான குரல். எவரிடமும் நிமிர்ந்து பேசும் தைரியம் உண்டு. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக பொறுமை. அந்த பொறுமையை வாழ்நாள் முழுக்க சோதிக்க கணவர் ரூபமெடுத்து வந்தார்.
நா.பார்த்தசாரதி கல்கி அகிலன் ஐெயகாந்தன் நாவல்களை பற்றி ஆசையாக பேசுவார். தற்பொழுது என் புத்தகங்களை வாசித்தார். அம்மாவிடம் நான் எழுதிய குருதியுறவு புத்தகம் கடைசி வரை இருந்தது. கூட்டுக்குடும்பம் உடைந்த போது நாள்கணக்கில் சோர்வாக இருந்த என்னிடம் கோபமாக , " ஏம்மா..பொம்பள பிள்ளைக்கு தைரியம் வேணாம்?...வாழ்க்கையில இன்னும் எவ்வளவு இருக்கு," என்று கடிந்து கொண்டார். பின்பு ஒரு மணி நேரம் போல பேசினார். மனதில் அவருடைய வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு வேளை எழுதினாலும் எழுதுவேன் என்று தோன்றுகிறது.
கொரானா காலகட்டத்தில் எழுத்தாளர்களை புரவிக்காக நேர்காணல்கள் செய்ய தொடங்கினேன். ஒன்னறை ஆண்டுகள் ஒன்பது எழுத்தாளர்களை நேர்காணல்கள் செய்திருக்கிறேன். அந்த நேர்காணல்களின் தொகுப்பு 2026 ஜனவரியில் ' தும்பி அறியும் பெருங்காடு' என்ற புத்தகமாக வாசகசாலை பதிப்பகம் வெளியிடுகிறது.
தும்பி அறியும் பெருங்காடு என்பது இந்த நேர்காணல்களுக்கான தலைப்பு மட்டுமல்ல. இலக்கிய வாசிப்பிற்கான தலைப்பு. அந்தக்காடு தும்பிக்கு முடிவதில்லை.
கலைந்து கிடக்கும் புத்தக மேசையை அடுக்குவதைப்போல வாசிப்பு அடுக்கு ஒன்று உருவாகியிருக்கிறது. புனைவுகள் வரலாறு பண்பாடு கவிதைகள் என்று மனம் அடுக்கிக்கொள்கிறது.
தன் ஊற்றை மறைக்கும் பாறை இடுக்குகளில் வழிதேடி கசிந்து வந்து பின் பெருக்கெடுக்கெடுக்கும் நதியாக வாழ்க்கை இருக்கிறது. சராசரி தன்மையை பாராட்டிபாராட்டியே வீட்டு வேலைகள், குடும்பம், சடங்குகள் என்று தன்னை குடும்பத்தார் மாற்றிவிட்டார்கள் என்று ஐம்பது வயதிற்கு மேல் உணர்ந்த பெண்களின் ஆதங்க குரல்கள் கேட்கின்றன. அறிவு சார்ந்த ஆர்வம் உள்ள பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். அந்த ஆர்வத்தை கூர் மழுங்க வைப்பது எப்படி என்று இன்று சமூகம் கற்றுக்கொண்டு விட்டது. குடும்பமும் தனிநபர்களும் கற்றுக்கொண்டுவிட்டார்கள்.
டிசம்பர் மாதத்தொடக்கத்தில் இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் வெளியாகும் நூல்களில் தஞ்சை ப்ரகாஷ் அவர்கள் க.நா.சு பற்றி எழுதிய புத்தகத்தை வாசித்தேன். புத்தகஅடுக்கை பார்த்துகொண்டிருந்த போது சட்டென்று இந்த புத்தகம் கண்களில்பட்டது. வாசித்தப்பின் அரிசங்கர் தேவிலிங்கம் நாவல்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதிய பின்பும் க.நா.சு மனதில் இருந்தார். க.நா.சு வின் நாவல்,கட்டுரைகள்,க.நா.சுவை பற்றிய கட்டுரைகளை வாசித்திருந்தாலும் இந்த நூலை தொடர்ந்து க.நா.சு வின் மனைவி ராஜீ அவர்கள் பற்றி தேடிய போது எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் தளத்தில் அவர்களின் நேர்காணலை வாசித்தேன்.
ஆண்டு இறுதியில் தூக்கணாங்குருவி என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். வாசகசாலை ஜனவரி இதழில் வெளியாகும்.
ஆண்டின் நிறைவு புத்தகமாக லா.ச.ராவின் பாற்கடல் வாசித்தேன். இறுதி தான் தொடக்கமும். அவரின் சிறுகதைகளின் முழு தொகுப்பு இரண்டு பாகங்களாக வந்துள்ளது. சில கதைகள் வாசித்து நின்று போனது. மறுபடி இந்த ஆண்டின் முதல் புத்தகமாக வாசிக்க வேண்டும்.
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி
மாநிலங் காக்கும் வலியே சக்தி
தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி
சஞ்சல நீக்குந் தவமே சக்தி
வீழ்வு தடுக்கும் நிறலே சக்தி
விண்ணை யளக்கும் விரிவே சக்தி
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி
உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி.
_ பாரதி
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளும் அன்பும்.
வழக்கம் போல இந்த ஆண்டின் புகைப்படம்
1.தொடக்கம்



தொடர்ந்து ஊக்கத்துடன் வாசிக்கவும் எழுதவும் வாய்க்கட்டும்... புத்தாண்டு இனிதே அமைய வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பும் நன்றியும் சார். தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDelete