Skip to main content

2023 ன் ஊசல்

 இந்த ஆண்டு முழுவதும் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். சங்கஇலக்கிய கட்டுரைகளில் இருந்து கி.ரா,கு.அழகிரி சாமி நூற்றாண்டு கட்டுரைகள் வரை. 

நீலியில் அம்பையின் படைப்புகள் பற்றி தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். இடையில் உமாமகேஸ்வரி சிறப்பிதழிற்காக அவரின் நாவல்கள் பற்றிய 'வீடும் வீடு சார்ந்தும்' கட்டுரை எழுதினேன். 

இடையில் நண்பர்களுடன் அலைபேசியில் உரையாடும் போது கட்டுரை நிறைய எழுதினால் புனைவு எழுதறது சிரமமாயிடுமா? என்று நானே கேட்டுக்கொண்டிருந்தேன். சுனில் கிருஷ்ணன் இந்த ஆண்டு தொடக்கத்தில்... கட்டுரைகளில் இருந்து அவரை விடுவிக்குமாறு வாட்ஸ்ஆப் ஸ்டேட்ஸில் கேட்டிருந்தார்.  புனைவு எழுத வருமா என்ற ஐயம் வந்துவிட்டது? என்று ஜெ விடம் கேட்டதாக '2022 நினைவின் பாதையில்' என்ற பதிவில் எழுதியிருந்தார். நான் அப்போதுதான் இரண்டு கட்டுரை தொடர்கள் எழுதிக்கொண்டிருந்தேன். நீலியில் கட்டுரை எழுதுவதற்கு சரி சொல்லியிருந்தேன்.

நம் வகுப்பில் நிதானமான ஒரு படிக்கற பிள்ளையோ,பையனையோ நாம் கவனித்துக்கொண்டே இருப்போம்.ஏனென்றால் நான் ஒரு அவசரக்குடுக்கை இல்லையா? அதனால் வரும் கவனம் அது. அவன் விளையாடும் போது எங்காவது இடித்துக்கொண்டால் நமக்கு மைதானத்தில் அந்த இடம் பற்றிய கவனம் வந்துவிடும். 

கட்டுரைத் தொடர்கள் எழுதத் துவங்கும் போதே மைதானத்தின் மையத்தில் விளையாடும் பையனிடம் இருந்து போதுவான எச்சரிக்கை வந்துவிட்டது. ஆனாலும் நமக்குள்ளே உள்ள ஒன்று நம்மை விடுவதில்லை. தொடர்ந்து நானாகவும் இதழ் ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டதன் பேரிலும் கட்டுரைகளின் ஆண்டு இது. கதைகள் கணிசமாக குறைந்து விட்டது. 2022 ல் எழுதிய கதைகளின் எண்ணிக்கையில் 2023 ல் சரிபாதி குறைந்திருப்பது சிறுகதை தொகுப்பு தொகுக்கும் போது தெரிந்தது. இந்த ஆண்டு பத்து கதைகள் எழுதியிருக்கிறேன். பத்தாவது கதை இந்த வாரத்தில் வெளியாகும். 

புனைவை போலவே கட்டுரைகள் எழுதுவதில் நல்ல மகிழ்ச்சி உண்டு. இன் னொரு எழுத்தாளரின் படைப்பை பற்றி எழுதும் போது உண்டாகும் நிறைவுக்காகவே கட்டுரைகள் எழுதினால் தொடர்ந்து கட்டுரைகளையே எழுதிக்கொண்டிருக்கத் தோன்றுகிறது. மேலும் கட்டுரைகள் எழுதியதும் ஒரு 'எழுத்துதிடம்' மனதில் உருவாகிறது. பொதுவாக வாசிப்பு அதிகமாகிறது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக வாசித்திருக்கிறேன். கட்டுரைக்காக ஒரு புத்தகம் வாசித்தால் அதிலிருந்து அடுத்தது என்று ஒரு தாவல் நடப்பதை உணர்ந்தேன். 

சிற்றில் சார்ந்து இராசேந்திரசோழன் அவர்களின் படைப்புலம் குறித்த 'எட்டா வாழ்வை எட்டும் கதைகள்' என்ற கட்டுரை தொகுப்பை தொகுத்தது புது அனுபவம். லாவண்யா சுந்தரராஜன் எழுத்தார்களிடம் கட்டுரைகளை கேட்டு வாங்குவது,பிழைப்பார்ப்பது என்ற அனைத்திலும் என்னை வழிநடத்தினார்.

2022  ஆண்டில் விஷ்ணுபுரம் விழாவின் தொடர்ச்சியாக எனக்கு வாசகநண்பர்கள் சிலர் கிடைத்தது இந்த ஆண்டில் முக்கியமானது.

செப்டம்பரில் கவிஞர் ஃபரான்சிஸ் கிருபா பெயரில் வழங்கப்படும் விருது எனக்கு அளிக்கப்பட்டது. கிருபா பெயரில் வழங்கப்படும் முதல் விருது. ஒரு விருது நமக்கு முன் யாருக்கு கொடுக்கப்பட்டது என்பது முக்கியம் என்று பொதுவாக எழுத்து மூத்தவர்கள் சொல்வார்கள். எனக்கு முதலில் அளிக்க ஒத்துக்கொள்கிறேன் என்பதில் எனக்கு தயக்கம் இருந்து. ஆனால் 'கிருபா விருது' என்ற பெயரில் உள்ள கவிஞர் என் வணக்கத்திற்கும் அன்பிற்கும் உரியவர். அந்த விருதை பெற்றப்பின் இரவில் ரயிலில் திரும்பும் போது நான் உறங்கவே இல்லை. கிருபாவின் வாழ்க்கையும், மனஅலைவுகளும், கவிதைகளும் மனதிற்குள் சுழன்று கொண்டே இருந்தன. என் கல்லூரி நூலகத்தில் அவர் பேட்டி ஒன்றை விகடனில் முதன்முதலாகப் பார்த்தேன். ஊதா நிற சட்டை ,நிறைய தலைமுடியுடன் கூடிய புகைப்படம். இப்போதுள்ள புகைப்படம் மனதில் வந்தது. எப்படி பத்துஆண்டிற்குள் எத்தனை யுகங்களை கடந்த களைப்பு என்று மனதிற்குள் ஓடியது. எனக்கு எதிரில் மேல் பெர்த்தில் தங்கை உறங்கிக்கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரில் பெர்த்தில் தங்கையின் கணவர் உறங்கிக்கொண்டிருந்தார். அவர் நான் உறங்காததை அடிக்கடி திரும்பி கவனித்துக்கொண்டிருந்தார். நாங்கள் பேசிக்கொள்வது குறைவு. அவர் சொந்த ஊரில் பல ஆண்டுகள் கழித்து நடக்கும் கோவில் கும்பாபிஷேகத்திற்கு செல்லாமல் எங்களுடன் வந்தது எனக்கு மனதிற்கு சங்கடமாக இருந்தது.ஆனால் அவரின் கல்லூரி பேராசிரியரும்  எழுத்தாளருமான பெருமாள் முருகனை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். குமார் கள்ளமில்லாது தூங்கும் இயல்புள்ளவர். முப்பத்தெட்டு வயதில் நிற்கும் அவர் இப்போது தான் புலம்பத் தொடங்கிருக்கிறார்.

ஸ்கூலுக்கு பசங்க குடிச்சுட்டு வராங்கப்பா என்று நிவேதாவிடம் ஆரம்பிப்பார்.

எங்க ஸ்கூல்ல மட்டும் என்ன... சிகரெட்டை சீலிங் ஃபேன் கப்புல ஔிச்சு வச்சிருக்கானுங்க

இந்த கூல்லிப் பெல்லாம் எப்படி சகஜமா பசங்களுக்கு கிடைக்குது பாரு

நம்மளாள ஒன்னுமே பண்ணமுடியல 

அதுக்கு காரணம் என்ன..எந்த நல்லது கெட்டதுனாலும் வீட்டுலயும் சொந்தத்துலயும் என்ன நடக்குதுன்னு விவரம் தெரிஞ்சதுலருந்து பாக்கறானுங்கல்ல...அவன மட்டும் சொல்லி என்ன பண்றது

என்று ஒருமணி நேரமாவது உரையாடல் நீளும். [கூல் லிப் என்றால் என்ன என்று இவர்கள் மூலம் தான் தெரிந்தது]

காலையில் திருச்சியில் இறங்கியதும் நல்ல கழுத்து வலி. ரயில் நிலையத்தில் பல்துலக்கியதும் நிவேதாவிடம் சாப்பிடனும் என்றேன். காலை ஐந்தரை மணி. குமார் கொஞ்சம் ஆச்சரியமாக பார்த்தாலும் ' உக்காருங்க' என்று சொல்லிவிட்டு நான்கு இட்லிகளை வாங்கி வந்தார். 

நான் 'சாப்பிட முடியாது எனக்கு ரெண்டு போதும்,' என்றதும் கடுப்பாகி  நிவேதாவை பார்த்தார். உடனே நிவேதா 'நானும் சாப்பிடுவேன்,' என்றாள். 'அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து நம்மளை கோபப்படவும் விடாதுங்க..'என்று நினைத்திருப்பார். 

மறுபடி நிவேதா, " எங்க ரெண்டு பேருக்கும் டீ வேணும்..உங்களுக்கும் வேணுன்னா வாங்கிக்கங்க..போங்கன்னா," என்றாள். அப்பா இல்லாத வீட்டின் மூத்த ஆண்பிள்ளை என்ற கறார் முகமெல்லாம் எங்களிடம் செல்லுபடி ஆகாது. மூவருக்குள்ளும் மூன்று ஆண்டுகளுக்குள்ளான வயது வித்தியாசம் தான் என்பதால் விளையாட்டுதனமான ஒரு நட்பு எங்கள் மூவர்க்குள்ளும் உண்டு. ஈகோ சிக்கல்கள் இருக்காது. 

கைகழுவிவிட்டு வந்து மாத்திரைகளை துலாவும் என்னை பார்த்துக் கொண்டிருந்தார். நான் மெதுவாக 'விடியகாத்தாலேயே ஒரு மாத்திரை முழுசா போட்டா தூக்கிரும்...அரை மாத்திரை போட்டா வலி குறையுமான்னு தெரியலை' என்று சிரித்தேன். நிவேதாவிற்கு என்னை பற்றி நன்றாகத் தெரியும். இவருக்கு எப்போதும் குழப்பம்.

ஏற்கனவே ஜூனிலிருந்தே சின்னய்யாவின் இறப்பு பற்றிய பதற்றம் அன்றாடம் இருந்து கொண்டே இருந்தது. ஏற்கனவே தெரியும் என்றாலும் கூட நெருங்கி வரும் போது பதற்றத்தை தவிர்க்க முடியவில்லை. சரியாக என் பிறந்த நாளன்று காலையில் அவருக்கு மூக்கிலிருந்து இரத்தம் அதிகமாக வெளியேற தொடங்கியது. அன்று அமாவாசை விரதம். விரதம் முடிந்ததும் அவரை பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே மாடியிலிருந்து தடதட வென்று ஓடி வந்த தம்பியின் மனைவி, "மாமாவுக்கு ரொம்ப முடியலைங்க," என்று சொல்லிவிட்டு ஓடினாள். 

எனக்கு 'மெதுவா படியேறனும்' என்ற எச்சரிக்கை உள்ளே சட்டென்று தோன்றியது இன்னும் வியப்பு தான். நான் போய் நிற்கும் போது ஒரு கைக்குட்டை முழுவதும் ரத்தமாகியிருந்தது.

"இனிமே தாங்காது," என்று சொன்னவரின் "ஒன்னுமில்லைங்கய்யா கார் வந்துரும்... ஹாஸ்பிடல் போகலாம்," என்று தோளை வருடி பிடித்து நானும் தம்பியும் சட்டை போட்டுவிட்டோம். நாம் சில சூழ்நிலைகளை எதிர்கொள்வது குறித்து நமக்கே வியப்பாக இருக்கிறது. அடுத்து ஜூலை வரை இதே பதட்டம் அன்றாடம் இருந்தது. எல்லாம் முடிந்து ஆகஸ்ட்டில் அவருக்கான முப்பதாம் நாள் வழிபாட்டின் போது 'அழுகை வந்தா அழுதுட்டா என்ன' என்று சித்தி  என்னைப்பற்றி கோபமாக சொன்னார்.

நான் அவரின் இறப்புக்கோ அடுத்தடுத்த சடங்குகளுக்கோ ரொம்ப அழவில்லை. அவ்வப்போது மீறி அழுத சில தருணங்களை தவிர்த்து சும்மா எதையாவது பார்த்துக்கொண்டிருந்தேன். ஐந்தாண்டுகளாக வீட்டில் அய்யா,சின்னய்யா சார்ந்த பதட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. சிறிய சத்தம் கூட சில நேரங்களில் என்னை ஸ்தம்பிக்க செய்யும். அதனால் உள்ளே ஒன்று விழித்துக்கொண்டே இருக்கிறது. அது என்னை எச்சரிக்கை செய்வதை உணர்ந்து கொண்டே இருக்கிறேன். உள்ளே சென்றால் வெளியே மீள முடியாது என்ற எச்சரிக்கை. 

ஆனால் இந்த ஆண்டுகளில் தான் தொடர்ந்து எழுதி சிறுகதை தொகுப்புகள் வெளியாகின்றன. விடாமல் தொடர்ந்தும் வாசிக்கிறேன்.

புத்தக வாசிப்பும் எழுத்தும் இந்த சுழலில் இருந்து என்னை கரைசேர்ப்பதை நன்றாக உணரமுடிகிறது. இதை எழுதும் போது புன்னகைக்கிறேன். 'விசிறியடிக்கப்பட்ட வண்ணக்கலவைகள்' என்ற அம்பையின் படைப்புலகம் பற்றிய கட்டுரை முடித்தப்பின் சின்னய்யாவை பார்த்துவிட்டு வந்து படுக்கலாம் என்று மாடிக்கு சென்றேன். சாயுங்காலத்தை விட நிலைமை மோசமாக இருந்தது. அன்று இரவுதான் அவர் இறந்தார்.

மூன்றாம் நாள் உறவினர்கள் சென் றப்பின் ஐந்தாம் நாள் புத்தகத்தை எடுத்தேன். எனக்கு வெளியேற வேறுவழி தெரியாது. அதிகபட்சமாக சொல்வதாக நினைக்கக்கூடாது. என்னுடைய தனிப்பட்ட விஷயம்  இலக்கியம் மட்டுமே. வீட்டில் பத்து பேருடன் பேசி விட்டு வந்து புத்தகத்துடன் கொஞ்ச நேரம் அமர்ந்தால் தான் எனக்கு நல்லது. ஆனால் அந்த சில நாட்களில் ஒரு சடங்கு போலதான் புத்தகத்துடன் அமர்ந்தது. மண்டைக்குள் ஒன்றும் ஏறவில்லை. 'ஜெ' வின்  கட்டுரைகளுக்குள் திரிந்து கொண்டிருந்தேன். எதிலிருந்தும் முழுதாக வெளி வர முடியாது என்றாலும் அதிலேயே இருக்கவும் முடியாது. நாமே இயல்பாக வெளியே வந்து விடுகிறோம்.

மீள முடியாத துயரென்று ஒன்றில்லை... வலி அதிகம், கொஞ்சம் குறைச்சல் என்று மட்டும் பிரிக்கலாம் என்று இன்னும் சில ஆண்டுகளில் தீர்மானமாக சொல்ல முடியலாம். சில தீவிர மனநிலைகளுக்கு தவிர்க்காமல் நம்மை ஒப்புக்கொடுப்பதன் மூலம் விரைவாகவே வெளியே வந்துவிடலாம் என்று நினைக்கிறேன். வலி பிரச்சனைகள் வந்தாலும் கூட மனம் தெளிவாகவே இருக்கும். எதையும் தவிர்த்து பிளாஸ்டிக் தன்மையுடன் இருப்பதை விட அன்பால், நம்பிக்கைகளால்,எண்ணங்களால்,யோசனைகளால் அலைபாய்ந்து திரும்புவதும், மீண்டும் செல்வதுமாக இருப்பதும் நல்லது தான்.

waves nothing but water..so is the sea 

என்று 'ஜெ' தளத்தில் சில ஆண்டுகளூக்கு முன் மூன்று நான்கு முறை பார்த்த வாக்கியத்தின் முனை கொஞ்சமாக இப்போது தான் பிடிகிடைக்கிறது.

இந்த ஆண்டின் இறுதியில் சங்கஇலக்கிய கட்டுரை தொகுப்பான அகமும் புறமும் நேற்று வெளியாகியுள்ளது. 

பெரும்பாலும் புதுஆண்டில் நினைத்துக்கொள்ளவது தான் இந்த ஆண்டும். முடிந்த வரை நிறைய வாசிக்க வேண்டும். புதிதாக எழுத முயற்சிக்க வேண்டும். 

 'வாசிப்பும் எழுத்தும்' வழக்கமான புத்தாண்டு உறுதி மொழி என்றாலும் எப்போதும் பரவசமான புதிதான விஷயம் தான். வாசிப்பு மறுபடி மறுபடி நம்மை வகுப்பறை பிள்ளையாக மாற்றும்  மாயசக்தி. இலக்கியம் நம்மை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் அருள். அதிலிருந்து அதிகமாக எடுத்துக்கொள்ளவும்,ஒரு துளி  கொடுக்கவும் முடிந்தால் இந்த வாழ்க்கை பொருள் உள்ளது என்று நம்புகிறேன்.

இந்த ஆண்டை சுரேஷ்ப்ரதீப்பின் கிளைக்கதை நாவலை வாசிக்கப்போகும் மகிழ்ச்சியுடன் தொடங்குகிறேன்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளும்,அன்பும்.







Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...