அகமும் புறமும் : என்னுரை

 நாளை என்னுடைய முதல் கட்டுரை தொகுப்பான அகமும் புறமும் வெளியாகிறது.

சமர்ப்பணம்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு….


நன்றி

வாசகசாலை நண்பர்களுக்கும், வாசகசாலை இணைய இதழில் தொடராக வெளியான போது வாசித்து பின்னூட்டம் அளித்த வாசகநண்பர்களுக்கும் அன்பும் நன்றியும். இந்த நூலை பிழை நோக்கி உதவிய நண்பர்களுக்கும்,அட்டைப்பட வடிவமைப்பாளருக்கும் அன்பும் நன்றியும்.


என்னுரை


கடலும் மலையும்

சங்க இலக்கியம் மீது பள்ளி வயதில் இருந்து ஈடுபாடு உண்டு. அதற்கு காரணம் என்னுடைய தமிழாசிரியர்கள். மருதை அய்யா, இராஜாராமன் சார்,மதர் அல்ஃபோன்ஸ் சிஸ்ட்டர்,தமிழ் விரிவுரையாளர் ராதா ஆகியோர்களை நினைத்துக் கொள்கிறேன்.

அதற்கு பிறகு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் ‘சங்க சித்திரங்கள்’ கட்டுரைத்தொகுப்பு மீண்டும் சங்கஇலக்கிய வாசிப்பை தூண்டுவதாக இருந்தது.  தொடர்ந்து சங்கப்பாடல்களை வாசிக்கிறேன். வாழ்நாள் முழுவதும் வாசிப்பேன் என்றே நினைக்கிறேன். மொழியழகும்,பாடல்கள் மனதில் வரையும் காட்சிகளும் சங்கப்பாடல்களை நோக்கி மீண்டும் மீண்டும் என்னை ஈர்க்கின்றன. 

புறப்பாடல்களில் சங்ககாலத்தின் அறம்,மன்னர்கள்,போர் பற்றிய தகவல்கள் நம் ஆர்வத்தை தூண்டுபவை. ஆனால் அகப்பாடல்களில் காதல் உணர்வை மட்டும் சலிக்கவிடாமல் எப்படியெல்லாம் விதவிதமாக சொல்ல முடிகிறது என்ற வியப்பு இன்று வரை உண்டு.

இந்தக்கட்டுரைகள் ஒரு வாசகியின் பகிர்தல்கள். நான் சங்க இலக்கியத்தின் வாசகி மட்டுமே. மொழி அழகின் மீது காதலும், பித்தும், கிறுக்கும் கொண்ட வாசகி.

ஊரில் கட்டிடங்கள் எழ எழ கண்முன்னே கொல்லிமலை அங்கங்கே மறைவதை பார்க்க ஏக்கமாக இருக்கிறது. சிறுவயதில் கூரைவீடுகள், ஓட்டு வீடுகளாக இருக்கும் போது எதிர்சந்தின் இறுதியில் கொல்லி மலை இருப்பதாக நினைப்பேன். ஒரு வகையில் உண்மைதான். எதிர்சந்திலிருந்து நேர்க்கோட்டில் நடந்தால் ஒரு மைல் தொலைவுதான் இருக்கக்கூடும். என் சிறுவயதில் கதை சொல்லும் அய்யாவிடம், “ அர்ஜூனர் நம்ம முடக்குல இருந்து அம்பு விட்டா சர்ன்னு போய் கொல்லி மலையில குத்திருல்லங்கய்யா,” என்று கேட்பேன்.

அது போல இலக்கியம் காலத்திற்கும் மனதிற்குமான ஒரு நேர்கோட்டு வழி என்று சங்கப்பாடல்களை வாசிக்கும் போது தோன்றும். காட்சிகள் வேறுபட்டுக்கொண்டே இருக்கிறது. உணர்வுகள் அப்படியே தான் இருக்கிறது. இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் கூட காதலின் அடிப்படை மனநிலை சங்கப்பாடல்களில் உள்ள மனநிலையாகத்தான் இருக்கும். வீட்டில் இருந்து பார்த்தாலும்,தெருக்களை, வயல்பதைகளை சுற்றி சுற்றி சென்றாலும் தரிசிப்பது அந்த மாமலையை தான். அது என்றும் அங்கிருக்கிறது. இலக்கியம் என்ற கையை பிடித்துக்கொண்டால் இரண்டாயிரம் ஆண்டு ஒன்றும் தூரமில்லை. 

அங்கு சென்று நிற்கும் போது அதன் பிரமாண்டமும் பேரெழிலும் நம்மை பரவசம் கொள்ள செய்பவை. நம்மை மலர்த்த வல்லவை. சங்கஇலக்கியம் நம் மொழியின் மாமலை.

இன்னொரு வகையில் கவிதைகள் தீராத கடல் போன்றவை. நாம் கடையக் கடைய அது திரண்டு கொண்டே இருக்கும். சங்கஇலக்கியம் நம் மொழியின் தீராத பாலாழி.

இது என்னுடைய முதல் கட்டுரைத்தொகுப்பு. எழுத்து மூத்தவர்களுக்கு அன்பும்,வணக்கங்களும்.

                                          அன்புடன்,

                                        கமலதேவி

                                            பா.மேட்டூர்

                                          [11/12/2023]

Kamaladevivanitha@gmail.com


இந்த நூலுடன் மேலும் ஐந்து நூல்கள் வெளியாகின்றன. அதில் எழுத்தாளர் கா.சிவாவின் முதல் நாவலான 'தண்தழல்' வெளியாகிறது. எழுத்தாளர் பத்மகுமாரியின் முதல் சிறுகதை தொகுப்பு வெளியாகிறது. மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று.




                                                      


Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்