என் கதைகளை,கட்டுரைகளை வாசிப்பவர்கள் அவ்வப்போது எனக்கு மின்னஞ்சல் செய்கிறார்கள். என் மூன்றாவது தொகுப்பான கடுவழித்துணைக்கு முதல் வாசகர் கடிதம் வந்ததாக நினைவு. உறுதியாக நினைவில் இல்லை. இது வரை என் முதல் தொகுப்பான 'சக்யை' க்கு அதிகக்கடிதங்கள் வந்துள்ளன. இனி கடிதங்களை தளத்தில் பதிய வைக்கலாம் என்று தோன்றியது.
வணக்கம் அக்கா.
தொடர்ந்து உங்களது சிறுகதைகள் வாசித்து வருகிறேன். உங்கள் எழுத்து நல்ல அனுபவத்தைத் தருகிறது. வாசகசாலையில் சமீபத்தில் வெளிவந்த நாயகி சிறுகதையில் ரீல்ஸ் செய்பவர்களின் வாழ்வை நீங்கள் காட்டியது நன்றாக இருந்தது. துணிக் கம்பெனி, சிங்கிள் பேரண்ட் போன்ற விஷயங்கள் ரீல்ஸ் வீடியோக்கள் செய்யும் ஜெகதீஸ்வரி என்பவரை நினைவுபடுத்தின. சிறப்பான சிறுகதை. வாழ்த்துகள்.
-ந.சிவநேசன்
சேலம்
வணக்கம் தம்பி,
நலம் விழைகிறேன்.
கதையை வாசித்து கடிதம் எழுதி உங்கள் எண்ணங்களை பகிர்ந்தது குறித்து மகிழ்ச்சி. அப்படி ஒருவரை குறிக்கும் கதை அல்ல அது. நான்கைந்து பேரின் கலவையில் உருவான கதாப்பாத்திரம் அது. அப்படி ஒருவர் ரீல்ஸ் பண்ணுவதே எனக்குத் தெரியாது. ஒரு கதையை வாசிக்கும் போது நமக்குத் தெரிந்த யாரோ ஒருவர் நினைவுக்கு வருவது இயல்பானதே..
வாழ்த்துகள். என்னுடைய கதை என்றில்லை..நல்ல புத்தகங்களை தேடி தொடர்ந்து வாசிங்க.
அன்புடன்,
கமலதேவி
Comments
Post a Comment