இற்றைத்திங்கள் அந்நிலவில் 5

          [நவம்பர் 2023 சொல்வனம்  இதழில் வெளியான  கட்டுரை]

காத்திருப்பின் கனல்

சங்கப்புலவர்களுள் ஒருவரான கச்சிப்பேட்டு நன்னாகையார் காஞ்சிபுரத்தில் உள்ள கச்சிப்பேட்டு என்ற ஊரில் பிறந்தவர். இவர் குறுந்தொகையில் எட்டுப்பாடல்கள் பாடியுள்ளார். எட்டுப்பாடல்களும் தலைவனை பிரிந்த தலைவியின் பிரிவு மனநிலையை குறித்தப் பாடல்கள்.

இந்தப்பாடல்களில் உள்ள பிரிவை, பொருள் தேட சென்ற தலைவனின் பலநாட்களின் பிரிவாக மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

‘பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய

வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட’ 

 [குறுந்தொகை : 30]

 பொய்க்கூறுவதில் வல்லவனான அவன் மெய்யாகவே தழுவுதல் போல கனாகண்டேன் என்று தலைவி தோழியிடம் சொல்கிறாள். மெய்யாகவே நடந்தது எதுவும் இல்லை. மணப்பதாக சொன்னவன் இன்னும் வரவே இல்லை. அதனாலயே அவள் பொய்வலன் என்று சொல்கிறாள். வண்டு சூழாத குவளை மலரின் தனிமை அவளுடையது. பாலைத்திணை பாடலில் குவளையும் குளமுமாக இருப்பது என்ன? மனமும் அது நிறைக்கும் உணர்வுகளும் ஈரமான கண்களுமா? அல்லது குறிஞ்சியும் முல்லையும் திரிந்த நிலத்தின் பழைய நினைவா?

‘பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்

வருவீர் உளீரோ எனவும் வாரார்’

 [குறுந்தாகை: 118]

பறவைகள் மாமரத்தில் கூடடையும் அந்தியின் புலம்பல் கேட்கிறது. அப்புலம்பல் ஓய்ந்து அமைதியான இரவும் வந்து விட்டது. இன்னும் தலைவன் வரவில்லை. கடைசி பேருந்தும் கடந்து சென்ற  ஒலியை கவனிக்கும் இன்றைய தலைவியின் மனநிலை கொண்ட பாடல் இது. 

சங்ககாலத்தில் இரவில் வீட்டு கதவை அடைக்கும் முன் வெளியே யாரும் உணவிற்காக, இருப்பிடத்திற்காக நிற்கிறார்களா? என்று கேட்கும் வழக்கம் உள்ளதை இப்பாடல் வழி அறிகிறோம். அவ்வாறு கதவடைக்கும் நேரம் வரை அவன் வரவில்லை என்கிறாள் தலைவி.

யானைக்கூட்டம் புகுந்த கரும்பு வயலில் ஒடிந்து வீழ்ந்த கரும்பின் கணுவை போன்ற, இளம்குருத்துவிடும் மூங்கில் வளரும் வழியை கடந்து சென்றவர் பொருள் ஈட்டினாரோ? என்னவோ? என்று தலைவி புலம்புகிறாள்.

கரும்பின் கண்ணிடை அன்ன

பைதல் ஒருகழை நீடிய சுரன்

 [குறுந்தொகை: 180]

தலைவி ‘பைதல் ஒருகழை’ என்று சொல்கிறாள். பைதல் என்றால் மூங்கில் குருத்து. வளரும் அன்பு வாடும்படி பிரிந்து சென்றவன்.

 ‘மின்னின் தூவி இருங்குயில் பொன்னின்

உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை

நறுந்தாது கொழுதும் பொழுதும்

வறுங்குரல் கூந்தல் தைவருவேனே’

 [குறுந்தொகை: 192]

இந்தப்பாடலும் நீண்ட நாள் பிரிவைப் பாடும் பாடல். மாமரத்தின் கிளையில் மின்னும் கரியநிறத்தில் குயில் அமர்ந்திருக்கிறது. அந்தக்குயிலை பார்த்தபடி தென்னம் நெய்யிட்டு வாரப்படாத தன் கூந்தலை வருடிய தலைவி பிரிவை நினைத்து கலங்குகிறாள். மாம்பூக்களின் மஞ்சள் நிற மகரந்ததுகள்கள் கரியகுயில் மீது படிந்திருக்கிறது. மகரந்தப்பொடி படிந்த குயில் பார்ப்பதற்கு, பொற்கொல்லர் பொன் உரசும் கட்டளைக்கல் போல உள்ளது. ஔிரும் தங்கம் போன்றே ஔிரும் கருமை. அப்படி நெய்யாலும், மஞ்சள் மலர்கள் சூட்டியும் ஔிர வேண்டிய அவளுடைய கருங்கூந்தல் நெய்ப்பின்றி வறட்சி கொண்டுள்ளது. விரல் தொட மலரும் கூந்தல் என்றும் சொல்லலாம். சட்டென்று நமக்கு விண்மீன்களில்லாத வானம் என்று மனம் தாவும். ஒரு பிரிவு மெல்ல மெல்ல ஏகாந்தத்தை நோக்கி நகர்வதை இந்தப்பாடலில் உணரமுடிகிறது.

தலைவனைப் பிரிந்த தலைவி தலைவனில்லாத குளிர்காலம் வந்து கொண்டிருப்பதை…

‘கூதிர் உருவின் கூற்றம்

 காதலர்ப் பிரிந்த என்குறித்து வருமே’

 [குறுந்தொகை: 197]

 என்கிறாள். வருவது குளிரல்ல கூற்று என்கிறாள். கூற்றம்_கொல்லக்கூடிய ஒன்று. இந்த இடத்தில் இறப்பு என்ற நேர்ப்பொருளாக மட்டும் கொள்வது கவிதைக்கான பாதைகளை அடைத்துவிடும். கூற்றின் அளவுக்கான வருத்தம் தரக்கூடிய ஒன்று அவளை நோக்கி வருகிறது. அது நினைவாக, கனவாக, அவன் வரவில்லாத பிரிவாக என்று எதுவாக இருந்தாலும், அந்த காலம் தரும் துயரின் உச்சத்தை அவள் கூற்றம் என்கிறாள்.

பிரிவை இத்தனை கொடியதாக உணர வேண்டும் எனில் தராசின் மறுபக்கம் நிற்கும் எடை என்ன ? மறுபக்கம் இருப்பது இருவரும் இணைந்திருக்கும் அன்றாடவாழ்க்கை தான். ஓரிடத்தில் ஒன்றாக இருக்கும் அன்றாடம் எளிதாக வாய்க்காத போது அன்றாடம் என்பது அவ்வளவு எளிதில்லையே. பிரிவே வாழ்வாக கொண்ட வெளிநாட்டு வாழ்க்கை,கடலோடும் வாழ்க்கை அமையப் பெற்றவர்களின் பாடலாக கொள்ளலாம்.


அடுத்தப்பாடலில் ‘உன்னை பிரிந்து நெடுந்தொலைவு  போகிறேன்… போகப்போகிறேன்..இன்று போகிறேன்…நாளை கட்டாயம் சென்றுவிடுவேன்’ என்று தலைவன் ஏமாற்றுகிறான்.  ‘போய்த்தொலை’ என்று தலைவன் அருகில் இருக்கும் போது சொல்லிய தலைவியிடமிருந்து, தலைவன் ஒருநாள் உண்மையாகவே பிரிந்து செல்கிறான். முதலில் ஏமாற்று என்று நினைத்த அவள் தன்னை ஏய்க்கும் உண்மையான பிரிவை எண்ணி நாள்தோறும் அழுகிறாள். அது அவளுக்கு முதல் பிரிவாக இருக்கலாம்.

‘மாயச் செலவாச் செத்து மருங்கற்று

மன்னிக் கழிகென் றேனே அன்னோ

ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ’ [குறுந்தொகை: 325]

விளையாட்டாய் சொல்லும் பொய் பயணத்தை நன்நாகையார் ‘மாயச்செலவு’ என்கிறார். என் தந்தை போன்ற அவன் எங்குள்ளானோ என்கிறாள். அவள் அழுத கண்ணீர் குளம் போல நிறைந்தது என்ற அடுத்த வரியில் பிரிவை ஆற்றாமல் அழுது அடம் செய்யும் குழந்தையாக தலைவி இருக்கிறாள். தலைவனுமே விளையாட்டாய் மாயச்செலவு சொல்லும் மாயன் தான்.

‘வருகிறேன்’ என்று சொல்லி கிளம்பிச்செல்லும் ஒருவனின் ஒற்றை சொல்லின் முடிவிலிருந்து பெருகி நிறைகிறது பிரிவு சொற்களின் குளம். 

தொடர்புறுத்தலுக்கு எந்த கருவியும் இல்லாத அந்த நாட்களின் பிரிவு மிகத்தூயது. அந்தத் தூயபிரிவே குயிலையும், மரத்தையும், குவளைமலரையும் தன்னை போலவே காண்கிறது. இந்தப்பாடலில் தலைவனை தந்தையாக நினைக்கும் பிரிவுத் தொடும் அன்பின் எல்லையில், காதல்  பருவடிவான உடலை கடக்கிறது என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. 

இத்தனை பெரிய பிரவாகமான ஒரு உணர்வு பொய்க்காது என்றே தோழியும் சொல்கிறாள்.

அம்ம வாழி தோழி காதலர்

இன்னே கண்டுந் துறக்குவர் கொல்லோ

முந்நாற் றிங்க ணிறை பொறுந் தசைஇ

ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்

கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு

விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்

செழும்பல் குன்றம் நோக்கிப்

பெருங்கலி வான மேர்தரும் பொழுதே [குறுந்தாகை: 287 ]

நிறைமாத கர்ப்பிணிகள் போல நீர் தாங்கிய மேகங்கள் செழுமையான குன்று நோக்கி சூழும். நிறைமாத கர்ப்பிணிக்கு புளியங்காய் மீது ப்ரியம். சூழ் கொண்ட மேகத்திற்கு குன்று நோக்கிய திசை ப்ரியம். அதே போல கனத்து முற்றிய ப்ரியம் கொண்ட தலைவனும் உன்னை துறப்பானோ? என்று தோழி கேட்கிறாள்.

ஆனால் இன்னொரு தலைவி தன் காத்திருப்பை,

‘ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த

உலை வாங்கு மிதிதோல் போலத்

தலைவரம்பு அறியாது வருந்தும் என்நெஞ்சே’

 [குறுந்தொகை:172]  என்கிறாள்.

பழுத்த மரங்களைத் தேடி வௌவ்வால் தன் சிறகுகளை விரித்து செல்லும் இரவும் வந்து விட்டது. அவர் தனியராக இருப்பதில் இனிமை கொண்டவராக மாறிவிட்டாரா? என்று தலைவி நினைக்கிறாள்.  ஏழு ஊர்களுக்கு பொதுவான கொல்லன் பட்டறையின் துருத்தி போல முடிவில்லாமல் அவனை நினைத்து வருந்துகிறது அவள் நெஞ்சம்.

‘உலைவாங்கு மதிதோல் போல’ என்ற உவமையில் இருந்து தோலால் செய்யப்பட்ட துருத்தியானது கால்களால் இயக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அடிகுழாயை இயக்குவது போன்று மேல் கீழாக இயக்கப்பட்டிருக்கலாம். அல்லது நீர் இறைக்கும் ஏற்றம் போன்று முன் பின்னாக, சென்று சென்று திரும்பும் ஒன்றாக இருக்கலாம். அது தரக்கூடிய காற்றால் அணையாத ஒரு கனல். அது அவள் மனமே.

‘ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த’ என்ற வரி திரும்பத்திரும்ப மனதில் வந்து கொண்டே இருந்தது. கச்சிப்பேட்டு நகையாரின் எட்டுப்பாடல்களும் இந்த துருத்தியின் கனலே என்று நினைத்துக்கொண்டேன். தூயபிரிவு தரும் ஔியே அகப்பாடல்களின்  மொழியை அணையாமல் காக்கிறது. உணர்வுகள் ஏற்றப்பட்ட சொற்கள்.

கொல்லன் உலையின் மிதி தோல் போல ஓயாத நினைவுகள் சூழும் மனதின் பாடல்களுக்கும்  காலகாலமாக ஓய்வில்லை.


                 கவிஞர் பொன்முகலி


விண்மீன்கள் உன் கண்களாய் மாறி

என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிற

இவ்விரவில்,

நான் எப்படி அமைதியுறுவேன் சொல்?

அந்தியின் வழிநடந்து

ஆதவன் அடைகிறான்.

நிலவு ஒரு தும்பை பூவைப்போல

வானத்தில் மலர்கிறது.

நீயும் நானும்

காலத்தின் ஓயாத பாடலில்

ஒலிக்கத் தொடங்குகிறோம்

                _ கவிஞர் பொன்முகலி





Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்