Skip to main content

தொடக்கம்

 

2021 ன் தொடக்கத்தில் எனக்கான ஒரு வலைப்பூவை தொடங்கி எழுத வேண்டும் என்பதே என் முதல் எண்ணமாக இருந்தது. ஜூலை மாதம்தான் எழுதத் துவங்கினேன். 

தாமதம் என்று நினைக்கலாம். என்னைப் பொருத்தவரை இது இயல்பானதே. எதையும் நினைத்ததும் செய்யக்கூடிய இயல்பு எனக்குக் கிடையாது. உணர்ச்சிவசப்பட்டு செய்கிறேனா என்ற பரிசீலனைக்குப் பிறகே எப்போதும் செய்கிறேன். எழுத்து மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு.

இப்படி ஒவ்வொரு செயலையும்,ஒவ்வொரு வார்த்தையையும் பலமுறை யோசித்தே தீர வேண்டிய வாழ்க்கை சூழல் பெண்களுக்குரியது. பெண்ணியம் பேசுவதாக சலித்துக்கொள்ள வேண்டாம். இந்த இயல்புதான் என் எழுத்து செயல்பாட்டின் ஆதாரமாக சொல்வேன். இல்லை என்றால் என் வாழ்க்கை எழுத்தல்லாத பாதையில் எங்கோ சென்று ஒன்றுமில்லாததாக மாறியிருக்கும்.

இங்கு பெண்களின் சிறு சிறகசைப்பும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அது மிகச்சரியாக அவர்கள் அறியாமலேயே களையப்பட வேண்டியதாக முதலில் தாய்  தந்தையர்களை சமூகமும், குடும்பமும் எச்சரிக்கின்றன. "பொம்ளப்பிள்ளய எதுக்கு பள்ளிக்கூட புத்தகத்து மேல கதை புத்தகங்கள் படிக்கவிடனும். சொன்னப்பேச்சு கேக்காது ...வீட்டு வேலையப்பழக்குங்க...என்பதை எங்கள் அய்யா அதிகமாக கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன். 

தோட்டச்செடிகளை அளவாக இடத்திற்கு ஏற்ப வெட்டுவதைப்போல பெண்கள் குடும்பத்திற்கு ஏற்ப வார்க்கப்பட வேண்டியவர்கள் என்ற மனநிலை வலுவாக இருக்கும் சூழலில் தான் இன்னும் இருக்கிறேன். வேலைக்கு செல்வதற்காக படிக்கலாம். மற்றபடி வாசிப்பதெல்லாம் வேலையற்ற வேலை அல்லது வேலையில்லாதவர்கள் நேரத்தை கழிப்பதற்காக செய்வது. கல்லூரி முடித்து விடுதியிலிருந்து வீட்டிற்கு வந்ததிலிருந்து வாசிப்பதை பின் எழுதுவதை அழுத்தமானதாக உணர்ந்தேன். தற்பொழுது அழுத்தமில்லாததாக எனக்கு நானே மாற்றிக்கொண்டிருக்கிறேன்.

ஆண்களுக்கு என்ன மாதிரியான சிக்கல் என அவர்கள்தான் எழுத வேண்டும்.

இந்த ஆண்டு எனக்கு, எழுத்தில் மீண்டும் புதிய நம்பிக்கையை,புதிய சாளரங்களை திறந்த ஆண்டு என்று சொல்வேன். தொடர்ந்து சிறுகதைகளையும், அவ்வப்போது வாசிப்பனுபவக் கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருந்த நான் புரவி இதழிற்காக நான்கு நேர்காணல்கள் செய்தேன். 

நான் வாசித்த நாவல்களில் என் ரசனைக்கும் வாசிப்பிற்கும் உகந்த நாவல்களை மனதில் கொண்டு செய்த நேர்க்காணல்கள் இவை. அந்தந்த நேரத்தில் மனதில் எழுந்த நாவல்களை கருத்தில் கொண்டு, மனதை மறுக்காமல் மனதிற்கு நேர்மையாய் செய்யப்பட்டவை.

முதன்முதலாக எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் நேர்காணல். அவரின் அம்புப்படுக்கை சிறுகதை தொகுப்பையும்,நீலகண்டம் நாவலையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இரண்டாவதாக எழுத்தாளர் ம.நவீன் நேர்காணல். அவரின் பேய்ச்சி நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. மூன்றாவதாக எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல் அவரின் கானல் நதி நாவலை மையப்படுத்தியது. நான்காவதாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணலானது அவரின் துயில் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த நேர்க்காணல்கள் எனக்கு முக்கியமானவை.


ஏனெனில் என் வாசிப்பு என்ற அகவயமான ஒன்றை புறவயமாக்கி கேள்விகளாக முன்வைக்க முடியும் என்று அதற்கு முன் நான் நம்பியிருக்கவில்லை. இந்த நேர்காணலிற்கான புத்தகங்களை தேர்வு செய்யும் சுதந்திரத்தை புரவிஆசிரியர் கார்த்திகேயன் வெங்கட்ராமன் எனக்கு அளித்திருந்ததால் இதை செய்தேன். இல்லையென்றால் மறுத்திருக்க வாய்ப்புண்டு.

எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் ,தமிழினி இணையஇதழில் 'சிறுகதை இன்று' என்ற கட்டுரைத் தொடர் எழுதுகிறார். அதில் என் கதைகளை குறித்து கதைசொல்லாத கதைகள் என்ற கட்டுரை வெளியாகியுள்ளது . மூத்த எழுத்தாளர் ஒருவருக்கு... என் எழுத்தின் மீதான புரிதல் உற்சாகத்தை அளிக்கிறது.

தொடர்ந்து சிறுகதைகள் எழுதியபடி இருக்க வேண்டும் என்று நான் எழுத தொடங்கிய போது நினைத்துக் கொண்டேன். அதை இந்த ஆண்டும் செய்யமுடிந்திருக்கிறது.

2012 லிருந்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆசிரியவேலைகளுக்கான தேர்வுகளில் ஓரிரண்டு மதிப்பெண்களில் தவறிக்கொண்டிருந்தேன். அந்த காலகட்டத்தில் இலக்கிய புத்தக வாசிப்பை நிறுத்தி வைத்திருந்தேன். வாசிக்கத்துவங்கியதிலிருந்து இத்தனை மாதங்கள் தொடர்ந்து வாசிக்காமல் இருந்ததில்லை.

அரசியல் ஆடுகளத்தில் சில காய்கள் வெட்டுபடத்தான் செய்யும் என்பது புரிந்த பிறகு தேர்வுக்காக படித்த புத்தகங்களை கட்டி எடுத்து அதை இன்னொருவருக்கு மொத்தமாக கொடுத்துவிட்டேன். அதற்குள் உள்ளே ஏற்பட்டிருந்த  என் உடல்நல பாதிப்பை நான் அறியவில்லை. 

மிக உற்சாகத்துடன் எழுத்தாளர் ஜெயமோகனின் 'நாவல் கோட்பாட்டிலிருந்து' மீண்டும் வாசிப்பை தொடங்கினேன். ஒருக்கட்டத்தில் வாசிக்க முடியாமல் ஆனது. வலிப்பிரச்சனைகளால் இருமுறை அவசரசிகிச்சை பிரிவிற்கு செல்ல வேண்டியிருந்து. அந்த நாட்களில் எழுதத்தொடங்கலாம் என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். 

தீவிரமாக மருந்து எடுத்துக்கொண்டிருந்த ஆண்டுகளில் காடு,விஷ்ணுபுரம்,வெண்முரசு,துயில், கானல்நதி,புதுமைப்பித்தன் கதைகள், இன்னும் பல நாவல்களை அதே தீவிரத்துடன் வாசித்தேன்.

2016 டிசம்பரில் என் முதல் கதை 'விடாய்' சொல்வனத்தில் பிரசுரமானது. 2019 ல் ஜனவரியில் என் முதல் சிறுகதை தொகுப்பான 'சக்யை' வாசகசாலை பதிப்பாக வெளியானது. தொடர்ந்து குருதியுறவு,கடுவழித்துணை என அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறுகதை தொகுப்புகள் வெளிவந்தன. 

கடல் சிறுகதை தொகுப்பு 2022 ஜனவரி இரண்டாம் நாள் வாசகசாலை வெளியீடாக வருகிறது. 



2012 லிருந்து 2021 வரை ஒரு சுற்று தீவிரமான வாழ்க்கை நகர்ந்திருக்கிறது. இன்று அதற்கு முன் இருந்த  sofisticated ஆன பெண் அல்ல நான். புறத்தில் அதிக எண்ணிக்கையிலான உறவுகள் சூழ, அகத்தளவில் மிகத்தனித்தவளான எனக்கு, வாழ்க்கை சில கேள்விகளை பரிசாகத் தந்திருக்கிறது. இலக்கியம் இன்னும் இன்னும் தீவிரமான நிகர் அனுபவங்களை ஏராளமாக வழங்கியிருக்கிறது.

 இந்த ஆண்டும் அதே பழைய கனவுதான். மிகஇளமையிலிருந்தே என் கனவான 'எழுத வேண்டும்' என்பது.  இதில் அடுத்ததாக என்ன செய்யமுடியும் என்று முயற்சிக்க வேண்டும். எழுத்து வாசிப்பு சார்ந்தே என் வாழ்வின் முக்கியமான முடிவுகளை எடுக்கிறேன். அவை எந்த அளவிற்கு லௌகீக தெளிவுள்ளவை என்று தெரியவில்லை.

ஒரு சாதாரண நடுத்தரவர்க்க பெண் இங்கே தனிப்பட்ட கலைஇலக்கிய செயல்பாடுகளுக்கான இடத்தை அடையவேண்டுமென்றால், சமூகத்தை, வீட்டை பொறுமையாக, அமைதியாக கையாள்வதே புத்திசாலித்தனம் என்று சொல்வேன். தன்னை விமர்சனம் செய்பவர்களை, தன்னுடைய அறிவு செயல்பாடுகளுக்காக தன்னை புண்படுத்த நினைப்பவர்களை அன்பின் பெயரால் மன்னிக்க வேண்டியிருக்கிறது.

ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாது எழுத்து கலை சார்ந்த செயல்பாடுகளில் உள்ள அனைவருக்குமே இது மாதிரியான சவால்கள் நிறைய உண்டு.

அதையெல்லாம் கடந்துதான் ....எழுத்தெல்லாம் சுடராகி எரிய வேண்டும் என்று கவிஞன் உரத்துசொல்கிறான்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.



Comments

  1. எண்ணியவையெல்லாம் ஈடேற இனிய வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. புத்தாண்டு வாழ்த்துகள் பத்மகுமாரி ரமணி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...