Skip to main content

தமிழ் சிறுகதைகள் இன்று

 தமிழினி இதழில் 'தமிழ் சிறுகதைகள் இன்று' என்ற தலைப்பில் இன்றைய  சிறுகதையாளர்களை பற்றிய கட்டுரைத்தொடர் வெளியாகிறது.  

இதை எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் எழுதுகிறார்.

எழுத்தாளர்கள் தூயன்,சுரேஷ்பிரதீப்,சித்துராஜ் பொன்ராஜ்,ராம்தங்கம்,கிருஷ்ணமூர்த்தி,அனோஜன் பாலகிருஷ்ணன்,கார்த்திக் பாலசுப்ரமணியன்,சுனில் கிருஷ்ணன்,மயிலன் ஜி.சின்னப்பன் ஆகியோரது கதைகள் பற்றிய கட்டுரைகளை தமிழினியில் எழுதியுள்ளார்.

நவம்பர் இதழில் என் கதைகளை பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. என் பெரும்பாலான கதைகளை தேடி எடுத்து அதன் சிக்கல்களுக்கு தலைகொடுத்து ,சலிக்காமல் சிலமுறை வாசித்து அதற்குரிய அக்கறையை தந்து இந்தக்கட்டுரையை எழுதிய எழுத்தாளர் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு அன்பும் நன்றியும். தொடக்கத்திலிருந்து இதுவரை நான் எழுதிய கதைகள் பெரும்பாலானவற்றை கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

எழுத்தாளருக்கும் தமிழினி இதழிற்கும் நன்றி.

 https://tamizhini.in/2021/11/25/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95-2/

         கதை சொல்லாத கதைகள்

இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெண் சிறுகதையாளர்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது கமலதேவியின் பெயரை சுனில் கிருஷ்ணன்தான் பரிந்துரைத்தார். அதுவரை நான் கேள்விப்பட்டிராத பெயர். பதாகையில் வெளிவந்திருந்த ‘அலைவு’ கதையை வாசித்தேன். அதைத் தொடர்ந்து ‘ஜீவனம்’. அந்த இரண்டு கதைகளும் உடனடியாக வசீகரிக்கவில்லை. ஆனால், கிராமம் சார்ந்த சில நுட்பங்களும் இயல்பான அனுபவத்திலிருந்து வெளிப்படும் சொல்முறையும் கவனத்தைக் கவரும் வகையில் அமைந்திருந்தன. 

கதை என்பதே ஒரு சம்பவத்தைச் சொல்வதுதான். நடந்தது நடந்தபடியோ அல்லது கூட்டிக் குறைத்தோ அது விவரிக்கப்படும். சிறுகதையின் ஒரு பொதுவான, ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்கணம். வடிவமோ மொழியோ எப்படியாயினும் அதற்குள் ஒரு கதை இருக்கும். நம் மரபான கதை வடிவமே அவ்வாறானதுதான். பாட்டி சொன்ன கதையிலிருந்து விக்ரமாதித்யன் வேதாளம், ஆயிரத்தோரு அராபிய இரவுக் கதைகள் என்று எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. வாய்மொழி மரபிலிருந்து எழுத்து மரபுக்கு வந்து ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்டபோதும் அடிப்படையான ‘கதை’ என்பதில் மாற்றம் இல்லை. 

கமலதேவியின் கதைகளைப் படித்தபோது முதலில் பிடிபடவில்லை. என்னவோ ஒன்று குறைபடுகிறது, ஏதோவொன்று நழுவிப்போகிறது என்ற எண்ணமே எழுந்தது. இரண்டு முறை படித்த பிறகும் என்னவென்று அதைக் கண்டுணர முடியவில்லை. ஆனால், மீண்டும் ஒரு முறை கதைகளைப் படித்தபோதுதான் இதுவரையிலும் பிடிபடாது கைநழுவிப்போன அந்த குணாம்சத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. 

கமலதேவியின் கதைகளில் கதையே இல்லை. அதனால்தான் அது பிடிக்குக் கிட்டவில்லை. கதை இல்லாமல் ஒரு கதையா? எப்படி அது சாத்தியம் என்ற கேள்வி எழுந்தது. கமலதேவியின் கதைகளில் கதை எதுவுமே முழுமையாகச் சொல்லப்படுவதில்லை. உடைந்த கண்ணாடிச் சில்லுகளாகி கதை அங்கங்கே சிதறிக் கிடக்கிறது.  மையக் கதாபாத்திரத்தின் உணர்வுகளின் வழியே ஒளிர்ந்தும் மறைந்தும் கதை கண்ணாமூச்சியாடுகிறது. இந்த ஆட்டத்தைப் புரிந்துகொள்ள முடியாதபோது அது நழுவியோடுகிறது. 

இத்தனைக்கும் கமலதேவி கதைகள் நேரடியானவை. எளிமையும் நேர்த்தியும் கொண்ட கதைமொழி. இயல்பான சித்தரிப்புகள். சற்றே நீண்ட உரையாடல்கள். மெனக்கெட்டு கதையை ஒளித்துவைக்கும் சித்துவிளையாட்டு இல்லை. ஏதேனும் ஒரு வரியில், உரையாடலில் போகிற போக்கில் இடம்பெறுகிறது கதையின் முடிச்சு. ஆனால், அதன் பிறகு வேறெங்கும் அதைப் பற்றி விளக்கவோ விவரிக்கவோ முனையாமலே கதை முடிந்துவிடுகிறது.  உதாரணமாக, ‘ஜீவனம்’ கதையில் என்ன காரணத்துக்காக அம்மா, அப்பாவின் திதியையோ, சாவுக்குப் பிறகான சடங்குகளையோ செய்ய மறுக்கிறாள் என்பது சொல்லப்படுவதில்லை. 

வெவ்வேறு தருணங்களில் கதாபாத்திரங்களின் பல்வேறு உணர்வு நிலைகளே கதை மொத்தத்தையும் ஆக்கிரமிக்கின்றன. இனி சேர்ந்து வாழ்வதில்லை என கணவனும் மனைவியும் பிரிய முடிவெடுத்திருக்கும் கனமான பின்னணியில் சொல்லப்படும் ‘நிலவறையில் ஒற்றை ஒளிக்கீற்று’ கதை நெடுக மூன்று கதாபாத்திரங்களின் மன அலைவுகளே சித்தரிக்கப்பட்டுள்ளன. பிரிவதற்கான காரணத்தைப் பற்றிய சிறு குறிப்புகூட சொல்லப்படுவதில்லை. அதுவே கதைகக்கு வலு சேர்க்கிறது. கதையின் முடிவில் மூவரும் மழையில் ஒதுங்கி அது ஓய்வதற்காகக் காத்திருக்கிறார்கள். 

முன் எப்போதோ நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் துண்டுத் துண்டான சித்திரங்களை கதைக்கு நடுவே கோர்த்துத் தரும்போது முன்னும் பின்னுமான காலத்தில் உணர்வுகளிலும் பார்வையிலும் ஏற்படும் மாற்றங்களை பக்குவங்களைச் சொல்வது எளிதாகிவிடுகிறது. ‘அந்தியில் பச்சை மலையின் மண் மலைக்குன்றின் அடிவாரத்திலிருக்கும் தாத்தா வீட்டுக் களத்தில் கட்டிலில் அமர்ந்திருந்தேன். கிழக்கே குச்சி வள்ளிக் கிழங்கு செடிகளின் பெரிய கை போன்ற இலைகள் காற்றிலசைந்து கொண்டிருந்தன’ (கிரகணப் பொழுது) என்று தொடங்கும் தாத்தாவைப் பற்றிய நினைவு மெல்லத் திரண்டு பாட்டிக்கும் அவருக்குமான இணக்கம், மனிதர்களின் மீதான நம்பிக்கை, வாழ்வின் பொருள், இழந்துவிட்ட மதிப்பீடுகள் என மேலும் மேலும் துலக்கம் பெறுவதைக் காணமுடிகிறது. 

கதை முழுமையாகச் சொல்லப்படாமல், உணர்வுகள் மட்டுமே காட்டப்படுவதால் பெரும்பாலான கதைகளில் கதாபாத்திரங்களும்கூட  மெல்லிய கோட்டுச் சித்திரங்கள்போலவே அமைந்துள்ளன. கொல்லிமலை அடிவார கிராமமொன்றின் எளிய மனிதர்கள் என்று தொகுத்துச் சொல்லலாம். பல கதைகளிலும் பெண்களே முதன்மை கதாபாத்திரங்கள். எல்லாக் கதைகளில் இருப்பதும் ஒரே பெண்தான் என்று நினைக்கிற அளவுக்கு அவை பொதுவான குணாம்சங்களுடன் வனையப்பட்டிருக்கின்றன. பொதுவாக புனைவில் இது மிக பலவீனமான ஒன்று. ஆனால், உணர்வுகளின் பல்வேறு அலைகழிப்புகளை மையமாகக் கொண்டுள்ள கமலதேவியின் புனைவுலகில் அந்த பலவீனம் பொருட்படுத்த வேண்டாத ஒன்றாகிவிடுகிறது. 

நேர்கோட்டில் கதை சொல்லப்படாமல், கச்சிதமான கதாபாத்திரங்களின்றி சொல்லப்படும் கதைகள் வாசகரின் கவனத்தில் குவியாமல் சிதறி அலைவுறும் அபாயம் உண்டு. ஆனால், கமலதேவி அமைக்கிற இயல்பான நிகழ்களமும் சூழலும் கதைகளை திண்மையாக்கி கவனத்தை சிதற விடாமல் கூர்மைப்படுத்துகின்றன. 

தமிழ்ச் சிறுகதைகளில் அரிதாகக் காணப்படும் கிராமத்துச் சித்திரங்கள் கமலதேவியின் கதைகளில் மிக இயல்பாக இடம்பெற்றுள்ளன. உழவர்களும் பாட்டாளிகளும் வயல்வெளியும் மலைச்சரிவும் கதைகளின் பகுதிகளாகவே அமைந்திருக்கின்றன. 

‘ஏதோ ஒரு பசு இட்ட சாணியிலிருந்து எழும் நீராவி தெருவிளக்கு வெளிச்சத்தில் கண்களுக்கு புலப்பட்டது. கழுநீர்ப்பானையில் நீர் ஊற்றிவிட்டு அருகிலிருந்த நித்யமல்லிச் செடியின் வெண்மலர்களின் செறிவைப் பார்த்து நின்றேன். எதிர்வீட்டு பொற்கிளியம்மா சாணியை உருட்டி கையிலெடுத்து நடக்கையில் புல் நொதித்த மணமும் உடன் சென்றது.’ ( புலன் விசாரணை )

இதுபோன்ற சூழலைப் பின்னணியாகக் கொண்டு உணர்வுகளைச் சொல்லும்போது அவை மேலும் அழுத்தம்பெறுகின்றன. 

’நிலவின் ஒளி மெல்லிய படலமாக விரிந்து நிற்கும் இரவு அது. இடதுபறம் பச்சைமலைக் குன்றுகள் நிழலாக எழுந்து நின்றிருந்தன. மெல்லிய தண்காற்று. மேட்டுநிலம் பையப் பைய சரியும் பாதை அது. காளை ஒரே தாளத்தில் நடந்துகொண்டிருக்க அதன் திமிலசைவு நடனம்போல இருந்தது.’ (நீலகண்டன்)

விவசாயத்தையும் அதைச் சார்ந்த சிறு தொழில்களையும் கைவிட்டு பிழைப்புக்காக கிராமங்களிலிருந்து வெளியேறி திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு இடம் பெயரும் அவலமும் கையறு நிலையும் பல கதைகளின் மையமாக அமைந்துள்ளன. ஆனால், அந்த அவலத்தை கண்ணீர் ததும்பும் சித்திரங்களாகவோ புகார்கள் உரத்தொலிக்கும் விமர்சனங்களாகவோ சொல்லப்படுவதில்லை. மாறாக, உலர்ந்த கண்ணீரின் உப்புத் தடங்களின் மீது ஒரு கணம் விழும் வெளிச்சமாகவே காட்டப்படுகிறது. ‘எஞ்சும் சூடு’ கதை ஒரு கச்சிதமான உதாரணம். 

காற்றால் திசையழிந்து ஆடிய சோளக்காட்டின் சத்தம் விலங்கின் ஓலம் என கேட்டது. “என்னா வேகம் பாரு. இப்ப சருகு ஒன்னொன்னும் சவரகத்தியாகும்,” “அறுக்கறது தெரியாம அறுத்திரும்,”என்று புன்னகைத்தான். (அலைவு)

‘சருகு ஒன்னொன்னும் சவரக் கத்தியாக்கும்’ என்ற வரி திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது. தேவையற்ற பழக்கங்களால் சீரழிந்து நகரத்தின் ஜவுளிக் கடையில் வேலை செய்யும் ஒரு கூத்துக் கலைஞன் கிராமத்துக்குத் திரும்பி வந்து தன் உறவுகளைக் காணும் ஒரு தருணத்தில் அவனுக்குள் தத்தளிக்கும் கொந்தளிப்புகளை சூழலின் அழுத்தத்தை கதையினூடாக வெளிப்படுத்தியிருக்கும் விதம் நுட்பமானது. 

‘ஜீவனம்’, ‘செங்காந்தளின் ஒற்றை இதழ்’ போன்ற கதைகள் இயல்பாகவே பெரும் உணர்ச்சி மோதல்களையும் உறவுகளுக்குள் நிகழும் சிக்கல்களையும் கொண்ட களங்கள். பெண்களின் அகத்தில் உறைந்திருக்கும் உறுதியையும் புறத்தில் அது வெளிப்படுத்தும் மௌனத்தையும் மிக அடங்கிய தொனியில் பேசுபவை. அதனால் வெகு சாதாரணமாக எழுதப்படும் காட்சிகளும்கூட கூடுதல் செறிவு பெற்றுவிட முடிகின்றன.  

பெண்களின் அகம் சார்ந்த புதிர்களைத் தொடும்போது கதைகள் தம்மளவிலேயே ஆழம் பெற்றுவிடும் என்பதற்கான உதாரணங்களாக ‘பூ முள்’, ‘உள் புண்’, ‘நெடுஞ்சாலைப் பறவை’ போன்ற கதைகளைச் சுட்டலாம். உறவுகளையும் குறிப்பாக ஆண்களைச் சார்ந்திருக்கும் தளையிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ள விழையும் பெண்ணின் முனைப்பை கமலதேவியின் கதைகள் வெவ்வேறு விதங்களில், களங்களில் முன்னிறுத்துகின்றன.

இவர்கள் யாவரும் சராசரியான நிலையில் வாழ்வின் கடும் சவால்களை எதிர்கொள்பவர்கள். பணியிடங்களிலும் குடும்பத்திலும் சூழலிலும் வெவ்வேறுவிதமான அழுத்தங்களை சமாளிப்பவர்கள். கல்வியும் வேலைவாய்ப்பும் அளித்திருக்கும் சாத்தியங்களைக்கொண்டு தங்களுக்கான புழங்குவெளியை விசாலப்படுத்த முயல்பவர்கள். அன்றாடம் பேருந்துகளிலும் அலுவலகங்களிலும் கடைத் தெருக்களிலும் களைத்த முகத்துடன் காண நேரும் பெண்களே கதாபாத்திரங்கள். 

இளமைக்காலத்தில் பெண்களின் ஆளுமையை உருவாக்குவதில் பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் தோழிகள், ஆசிரியர்களுக்கு முக்கிய பங்குண்டு. கல்விக்கூடங்களிலும் விடுதிகளிலும் அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்கள் பல மனத்துள் ஆழமாக பதிந்துவிடுகின்றன. பின்னாட்களில் வாழ்வின் பல்வேறு சூழல்களிலும் அவை மேலெழுகின்றன. உறவுகள் சார்ந்த திருகல்கள் தோழிகளிடமிருந்து தொடங்கி சொந்தபந்தங்கள் வரையிலும் நீளும் புதிரை நுட்பமாகச் சொல்லும் ‘மித்ரா’ கதை அதன் பல்வேறு சாயல்களை நேர்த்தியாகத் தந்திருக்கிறது. இவ்வனுபவம் வாழ்வைக் குறித்த பெரும் திறப்பாக அல்லது பார்வையாக உச்சம் பெறும்  கதையாக அமைந்திருப்பது ‘நெடுஞ்சாலைப் பறவை’. 

0

‘குருதியுறவு’, ‘சக்யை’, ‘சுடுவழித் துணை’ என கமலதேவியின் மூன்று தொகுப்புகளை வாசக சாலை வெளியிட்டுள்ளது. குறுகிய காலத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியிருக்கிறார். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அவரது கதைகள் வெளிவருகின்றன. பதாகை, சொல்வனம் ஆகிய இரு இதழ்களிலேயே அவரது அதிகக் கதைகளும் வெளியாகியுள்ளன. ஒன்றிரண்டு மட்டுமே பிற இதழ்களில் வெளியாகியுள்ளன. அவரது கதைகள் இன்னும் பிற இணைய, அச்சு இதழ்களிலும் வெளியாகுமென்றால் இன்னும் பலருக்கு அவரைத் தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். 

கதைகள் எளிமையாகவும் இயல்பாகவும் அமைந்திருக்கும் அதே நேரத்தில் ‘சுடுவழித் துணை’, ‘நிலவறையில் ஒற்றை ஒளிக்கீற்று’, ‘செங்காந்தளின் ஒற்றை இதழ்’ போன்ற தலைப்புகள் கமலதேவியின் கதை உலகத்துக்கு பொருந்தாதவையாக உள்ளன. 

இயல்பும் நேரடித்தன்மையும் கொண்ட யதார்த்தமான கிராமத்துச் சித்திரங்களின் வழியாகக் கமலதேவி காட்டும் பெண்களின் அக உலகம் தமிழ்ச் சிறுகதைக்கு முக்கியமானது. வீழ்ந்துவிட்ட கிராமப்புறப் பொருளாதாரத்தையும் அதன் காரணமாக வாழ்வுதேடி இடம்பெயரும் உழைப்பாளிகளின் அவலத்தையும் அவரது சிறுகதைகள் செறிவும் துலக்கமுமான புனைவு மொழியில் அக்கறையுடன் வெளிப்படுத்துகின்றன. 

சிறுகதை வடிவத்தின் வலுவைப் புரிந்துகொண்டு அதனை தனக்கேயான புனைவுத்தியுடன் அணுகுகிறார் கமலதேவி. அதன் வழியாக அவர் எழுப்ப முனையும் கேள்விகள் சமகாலத்தன்மையுடனும் தீவிரத்துடனும் உள்ளன. இயல்பும் எளிமையும் கொண்டவை கமலதேவியின் கதைகள் என்பதால் அவற்றைச் சுலபமாக வாசித்துவிட முடியாது. தோற்றப்பிழையினால் குறைத்து எடைபோட்டுவிடக்கூடிய அபாயம் உண்டு. மொழியும் வடிவமும் நேரடியானது போல தோற்றமளித்த போதும் கதையின் ஊடுபாவுகளையும் சிதறுண்டு கிடக்கும் முடிச்சுகளையும் கவனமான வாசிப்பின் மூலம் மட்டுமே கண்டடைய முடியும்.

*



Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...