Skip to main content

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்

 நவம்பர் புரவி இதழில் வெளியான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் நேர்காணல். எழுத்தாளருக்கும் புரவிக்கும் அன்பு.

எஸ்.ரா என்று ப்ரியத்துடன் அழைக்கப்படும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இன்றைய தமிழிலக்கியத்தின் முதன்மை படைப்பாளிகளில் ஒருவர். நாதஸ்வர கலைஞர்கள் பற்றிய அவரின் சஞ்ரசாரம் எனும் நாவல் சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளது. நோய்கள் பற்றியும் அதன்வேர்க்காரணங்களாக இருக்கூடிய மனிதஆழ்மன சஞ்சலங்கள் பற்றியும்,எது நோய்மை? என்பது குறித்தும் விரிவான பின்புலத்தில் எழுதப்பட்டநாவல் ‘துயில்’. இது துயிலை மையப்படுத்திய நேர்காணல்.


எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் நேர்காணல்




1.நோய்மை என்பது வாதையா மீட்சியா என்ற கேள்வி நாவல் முழுக்க சுழன்று வருகிறது. வாதை என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அது எவ்வகையில் மீட்சியாக வாய்ப்புள்ளது? 

நோய் உடலுடன் தொடர்பு கொண்டது என்றாலும் அது நிறைய மாற்றங்களை மனதளவில் கொண்டு வருகிறது. நோயுற்ற தருணங்களில் நாம் வயதை இழந்துவி டுகிறோம். பிறரது அன்பிற்காக ஏங்குகிறோம். நோயுறும் போதெல்லாம் கடந்தகாலத்தை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிக்கிறோம். நோயிலிருந்து நலமடைந்தவுடன் சில முடிவுகளை எடுத்துக் கொள்கிறோம். அது எளிய உடற்பயிற்சியாகவும் இருக்கலாம். உறவில் யாரை எங்கே எப்படி வைக்க வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும் என்பதுமாகவும் இருக்கலாம். அதை தான் மீட்சி என்கிறேன். காய்ச்சலில் இருந்து விடுபட்டவுடனே உணவிற்கு புதுருசி உருவாகிவிடுகிறதில்லையா. அது போன்றதே இந்த மீட்சி.

2.நாவலில் ஏலன் பவர், பாதிரி லாகோம்பையிடம் கேட்பது போல நோய்மையை பாவ புண்ணியங்களுடன் இணைத்தது என்பது நடைமுறையில் சோர்வளிக்கக்கூடியதாக இருக்கிறது. நமக்கு அப்படி ஒரு மரபு இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

உலகில் எல்லா சமயங்களிலும் நோய் தீர்ப்பதை தனது அங்கமாகக் கொண்டிருக்கின்றன. அறிவியலின் வருகைக்கு முன்பு வரை கோவில்கள். தேவாலயங்கள் தர்காகள் தான் நோயாளிகளின் புகலிடம். மதம் மருத்துவத்தை கட்டுப்படுத்தி வைத்திருந்தது. அன்று நோய் என்பதை கடவுளின் சாபமாக புரிந்து கொண்டிருந்தார்கள். அறிவியலின் வருகை சமயத்திலிருந்து மருத்துவத்தை விலக்கியது. தனித்த அறிவுத்துறையாக மாற்றியது. தற்போது இந்த இரண்டுக்கும் நடுவில் ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கிறது. போப்பாக இருந்தாலும் உடல் நலமில்லை என்றால் மருத்துவரை அழைக்கிறார் தானே.  இந்திய மருத்துவத்திற்கு நீண்ட பராம்பரியமிருக்கிறது. அது இன்று நவீனமயமாக்கபட்டிருக்கிறது. அதே நேரம் பாரம்பரிய மருத்துவமுறைகளை ஆங்கில மருத்துவம்  நிராகரிப்பதையும் கேலிசெய்வதையும் காண முடிகிறது. நலமடைதல் என்பது மருத்துவம் சமூகம் இரண்டும் இணைந்து செய்ய வேண்டிய பணி.


3.நாவலில் துயில்தரும் மாதாவை தேடி எண்ணிலடங்காத ரோகிகள் வந்தபடியே இருக்கிறார்கள். துயில் என்பதை உறக்கம் மற்றும் இறப்பை வேண்டிவருபவர்களா?

துயில் என்பது தற்காலிக மரணம். அதிலிருந்து நீங்கள் விடுபட்டுவிடுவீர்கள். மனிதர்களை போலவே உலகிற்கும் துயில் தேவைப்படுகிறது. அது ஒரு ஒய்வு நிலை. விழிப்புற்றவுடன் நீங்கள் புத்துணர்வு கொள்கிறீர்கள். ஆழ்ந்த துயில் என்பது ஆரோக்கியத்தின் அடையாளம். துயிலின் வழியே உடல் தன்னை தானே நலப்படுத்திக் கொள்ளும். அதை நாடியே அவர்கள் வருகிறார்கள். பண்டைய தமிழில், தூங்குதல், தூக்கம் போன்ற சொற்கள் உறக்கம் என்ற பொருளில் பயன்படுத்தபடவில்லை. நித்திரை என்பது வடமொழிச் சொல். நான் சங்க இலக்கியத்திலிருந்தே துயில் என்ற சொல்லை தேர்வு செய்தேன். 

4.சிறுவனான அழகரிலிருந்து, பாலியல்தொழிலாளியான  ஜிக்கி வரை பசியும்,காமமும்,அச்சமும் அவர்களுக்கு குடும்பமும், சமூகமும் அளிக்கும் தீராத நோயாக உள்ளது. இந்த ஆதிஉணர்வுகளுக்கு மாற்று தேடித்தான் விவசாயமும்,கூட்டுவாழ்க்கையும் உருவாகியிருக்குமா?

அப்படி நினைக்கவில்லை. முதல் மனிதன் உலகில் உருவான நாளில் இருந்து இன்று வரை பசியும் காமமும் அச்சமும் தீராத பிரச்சனையாக தான் இருக்கின்றன. இதை ஒரு சமூகம் எப்படி அணுகுகிறது. புரிந்து கொள்கிறது. வழிகாட்டுகிறது என்பதில் தான் மாற்றங்கள் உருவாகின்றன. பண்பாடு இவற்றை ஒழுக்கவிதியாக மாற்றிவிடுகிறது. அதை மீறும் போது தண்டனை அளிக்கிறது. விவசாய வாழ்க்கையில் மனிதன் செல்வத்தை சேகரிக்க ஆரம்பித்தான். கால்நடைகளை பெருக்கிக் கொண்டான். அதனால் ஒரு சிலர் செல்வந்தர்கள் ஆனார்கள். ஆனால் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு இன்றி நோயில் மடிந்தார்கள். வறுமையை ஒரு நோயாக சமூகம் மாற்றிவிட்டது. அதிலிருந்து விடுபட முடியாதபடியான ஒடுக்குமுறையை அதிகாரம் தொடர்ந்து செலுத்தி வருகிறது. நோயை நாவலில் ஒரு குறியீடாகவும் சொல்லியிருக்கிறேன். 

5.’உவர்ப்பு நீரில் கிடக்கும் கடற்கன்னி’ என்ற படிமம் நாவல் முழுக்க வரும் அனைத்து பெண்களுக்கானதாக தோன்றுகிறது. நம் சமூகம் பெண்ணை நடத்தும் விதமே ஒரு நோய்க்கூறான மனநிலைதான் இல்லையா?

கடற்கன்னி என்ற படிமம் பன்முகத்தன்மை கொண்டது. ஒருவிதத்தில் அது சமூகம் பெண்ணை நடத்தும் அடையாளமாகவும் கொள்ளலாம். 

6.கொண்டலு அக்கா கதாபாத்திரத்திற்கான அடிநாதமாக இருந்த நபரோ, நிகழ்வோ உண்டா?

அப்படியாருமில்லை. கற்பனையாக தான் உருவாக்கினேன்.

7.தனிமனிதன் என்ற சிறுஅலகும்,உலகமயம் என்ற பேரலகும் முறுக்கி நிற்கும் நடப்பு காலத்தில் மனிதன் உணரும் பாதுகாப்பின்மை நோயாக மாறிக்கொண்டிருக்கிறது. நாம் காட்டில் வாழ்ந்த அந்த தனிமைக்கு, அச்சத்திற்கு,எச்சரிக்கைக்கு மீண்டும் திருப்புகிறோமா? 

காட்டில் வாழ்ந்த வாழ்க்கை யாருக்கு அச்சமானது. நிலத்தில் வாழ்ந்தவர்களுக்கு தான். உழைப்பிலிருந்து விலகி வரவர உடல் நோயுறத் துவங்குகிறது. உடலைப் பராமரிப்பதில் அக்கறை கொள்ளாத சமூகமும், பண்பாடும் இன்று உருவாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் நுகர்வு கலாச்சாரம். நிறைய நோய்களை நாம் வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை. உடல் ரீதியான நோய்களை விடவும் அதிக அளவில் மனரீதியான நோய்கள் அதிகமாகிவிட்டன. அதன் பாதிப்பை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை காணமுடிகிறது. நோயை பற்றிய அச்சத்தை உருவாக்கியதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. இந்த பெருந்தொற்று பற்றி வெளியான வாட்ஸ்செய்திகளே உதாரணம்.






9.’இந்த உலகின் மீளவேமுடியாத நோய் நிர்கதி தான்’ என்று நாவலில் கொண்டலுஅக்கா சொல்வாள். நிர்கதியின்மையை நாம் நம் சகமனிதருக்கு தரமுடிந்தது தானே. ஏன் நமக்கு நம்மீதே இத்தனை நம்பிக்கையிழப்பு. இது இந்த காலகட்டத்தின் மனநிலையா?  இல்லை இது எப்போதும் மனிதகுலம் சந்தித்துக்கொண்டிருக்கும் இயல்பான நிலைதானா? இதிலிருந்து சற்றேனும் மீள்வதற்கான வழிகள்…

ஒரு மனிதன் நிர்கதியை உணரும் போது உலகின் மீது நம்பிக்கையற்றவனாகி விடுகிறான். தன்னை ஏன் உலகம் கைவிட்டது என்று வருந்துகிறான். போக்கிடம் தேடியோ, மீட்சி தேடியோ அலையத்துவங்குகிறான். நிர்கதியுற்ற மனிதனை புரிந்து கொள்ளவும் அவனது குரலை உலகின் காதுகளில் கேட்க வைக்கவும் இலக்கியம் முயற்சிக்கிறது. மனிதன் வெறும் நிழலில்லை. போரும், வன்முறையும் துவேசங்களும் மனிதனை வேட்டையாடிக் கொண்டேயிருக்கும் சூழலில் இதனால் பாதிக்கபடும் மனிதனுக்கு வாழ்க்கையை பற்றிய நம்பிக்கையை எப்படி உருவாக்குவது. அதை தான் தீவிர இலக்கியங்கள் முயற்சிக்கின்றன.

10.நன்மை, தீமைக்கும், நோய் என்ற மூன்றையும் நாம் ஏன் தொடர்புபடுத்திக்கொள்கிறோம்? 

மதமும் பண்பாடும் தான் இந்த தொடர்பை ஏற்படுத்தியது. தீமை செய்தவன் ஒரு நாள் மோசமாக நோயுறுவான் என்ற நம்பிக்கை எல்லா தேசங்களிலும் இருக்கிறது. கொள்ளை நோய் போன்ற பெரும் நோய்கள் பாவத்தின் காரணமாக உருவாகின்றன என்கிறது மதம் ஆனால் உண்மையில் இதன் காரணங்கள் ஆழமாக வேர்விட்டிருக்கின்றன. சமூகாரணிகளை மறைத்துக் கொள்ள இது ஒரு உபாயம்.

எது நன்மை எது தீமை என்ற வரையறையை விட எது யாருக்கு நன்மை, யாருக்கு தீமை என்றதாக இன்று கேள்வி திரும்பியிருக்கிறது. சாக்ரடீஸ் காலம் தொட்டு இன்று வரை பலரும் நன்மை தீமைகளை வரையறை செய்ய முயன்று கடைசியில் தோற்றுப் போயிருக்கிறார்கள்.  . ஆனால் அன்றிலிருந்து இன்று வரை நோயுடன் அதை தொடர்பு படுத்துவது மாறவேயில்லை. வேடிக்கை என்னவென்றால் மருத்துவர்களில் பலரும் இதை நம்புகிறார்கள் என்பதே

11.தனிமை நோயாகுமா? நம் முன்னோர்கள் அதை கண்டடைதல் மற்றும் அமைதிக்கான பாதையாகவே பார்த்தார்கள். நாம் இயற்கையை விட்டு வெகுவாக விலகிவந்து விட்டதால் தனிமை நோயாகிவிட்டதா? நாவலில் ஒருரோகிக்கு கிடைக்கும் சேவல் ஒன்று அவன் வலியை குறைத்துவிடும்? நாம் இப்படியான ஆறுதல்களை விலகி வந்துவிட்டதால் தான் தனிமை பெருநோயாகிவிட்டதா? இதனால் வன்முறை அதிகமாகிறதா?

தனிமை என்பது நீங்கள் பிறந்தது முதல் இறப்பு வரை எப்போதும் தொடரக்கூடிய நிரந்தர நிலை. இதை ஏன் வெறுக்க வேண்டும்.  அஞ்ச வேண்டும். தனித்திருத்தல் என்பதும் கூடியிருந்தல் என்பது உறவுநிலைகள் மட்டுமே. தனித்திருக்க பயப்படுகிறவன் தனிமையை கண்டு பயப்படுவதாகச் சொல்கிறான். அது வேறு இதுவேறு. ஆயிரம் பேர்கள் உடனிருந்தாலும் உங்களைப் போல நீங்கள் ஒருவர் தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு நகல் கிடையாதே. நான் அதையே தனிமையாக உணருகிறேன். 

நம்மோடு உரையாடவும் உறவாடவும் இன்னொரு நபரோ, நிறைய மனிதர்களோ தேவைப்படுகிறார்கள். அது கிடைக்காத போது வருத்தமடைகிறோம். உண்மையில் நாம் ஒரு போதும் தனித்திருக்க இயலவே இயலாது. நம்மை சுற்றி இயற்கையின் பேருலகம் நம்மை அரவணைத்துக் கொண்டு சதா இயங்கிக் கொண்டிருக்கிறது. கடலில் வசிக்கும் மீன் தான் தனியாக இருப்பது போல உணர்வது போன்றது தான் நாம் பேசுவதும்.  பேச்சுத்துணை, வாழ்க்கை துணை. அறிவுத்துணை என பல்வேறு துணைகள் ஒரு மனிதனுககு தேவைப்படுகிறது. அது கிடைக்காத போது தான் ஏங்கத்துவங்குகிறான். இந்த ஏக்கம் நாளடைவில் தீராத மனக்குறையாகிவிடுகிறது.


12.உங்களின் அனைத்துப்படைப்புகளிலும் வெயில் அதன் பேசுபொருளின் அகமாய் விரிகிறது. இந்தநாவலில் நோய்மையின் வேதனையாக, வலியாக, வாதையாக வெளிப்படும் வெயில் வாசிப்பவரை தொந்தரவுக்குள்ளாக்குகிறது. உங்கள் எழுத்திற்கு வெயில் தீர்ந்து போகாத அட்சயப்பாத்திரம் போன்றது இல்லையா…

நான் வெயில் குடித்து வளர்ந்தவன். வெயில் என் ரத்தஅணுக்களுக்குள் கரைந்திருக்கிறது. வேண்டும் என்றோ, அழகிற்காகவோ வெயிலை எழுதுவதில்லை. சில தாவரங்கள் வெயில் கொண்ட நிலத்தில் மட்டும் தான் வாழ முடியும். நான் அப்படியான ஒருவன். என் எழுத்தில் வெயில் தான் முடிவற்ற ஒரு நதி.

13.வெயில் மனிதர்களின் அகத்தை கூறும் புறமாக நாவல் முழுவதும் காய்வதை வாசிக்கும் போது நாவலின் களம் சங்கஇலக்கியத்தின் பாலை சுரமாக தோன்றியது. தன்மக்களுக்காக கொற்றவை சாந்தம் கொண்டு துயில் தரும் மாதாவாக அருள எழுந்து வருகிறாள்…கொண்டலுஅக்காவாக சேவை செய்ய வழியோரம் காத்திருக்கிறாள். நம் சங்கஇலக்கியத்தின் பாலைத்திணையின் நீட்சியாக இந்த நாவலை வாசிக்க முடிகிறது. நாவல்களத்தை குறிஞ்சியும் முல்லையும் சற்றே திரிந்த பாலையாக எடுத்துக்கொள்ளலாமா சார்?

இது உங்கள் வாசிப்பின் வெளிப்பாடு. நிலத்தின் கதையை எழுத முற்படும் போது மரபின் தொடர்ச்சி வெளிப்படுவது இயல்பு தானே. 

14.அந்த மனிதர்களின் இயல்பும் புரிந்துகொள்ள மிகக்கடினமானதாக இருக்கிறது. அழகர் தன் பதின்வயதில் முதன்முதலாக பார்க்கும் நிர்வாண பெண்உடலை போர்த்திவிடத்தோன்றும் அவன் மனதின் ஈரமும்,பெண்உடலை அவனுக்கு அறிமுகமாக்கும் ஒருத்தியே அவன்மீது  அன்னையின் வாஞ்சையுடன் இருப்பதும் என்று நாவல்முழுக்க மனிதஇயல்புகளும் புரிதலுக்கு சிக்காததாகவே உள்ளது…

மனித இயல்புகளை எவராலும் வரையறை செய்துவிட முடியாது.  காமமும் பசியும் மனிதனை எந்த நிலைக்கும் கொண்டு செல்லும். இந்த இரண்டும் விரும்பி அளிக்கபட வேண்டும் என மனிதன் விரும்புகிறான். இதில் ஏற்படும் நிராகரிப்பு. அலைக்கழிப்பு, ஏமாற்றங்களை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆழமான கசப்புணர்வும் கோபமும் கொண்டு எதிர்நிலை கொள்கிறான். அது குற்றமாக உருமாறுகிறது. வாழ்க்கை தேவைகள் அழகரை வழிநடத்துகின்றன. இயல்பில் அவன் உணர்ச்சிபூர்வமானவன். அவன் தன்னை உணரும் போது நாவல் முடிந்துவிடுகிறது. ரயிலுக்காக அவன் காத்திருப்பதில் துவங்கி ரயில் அவனை நோக்கி வருவதில் நாவல் நிறைவுபெறுகிறது. அழகரை போன்று தான் பெரும்பான்மையினர் இருக்கிறார்கள். நடந்து கொள்கிறார்கள்.

15.ஏன் இப்படி ஓரிடத்தில் நிலைக்கமுடியாது வெயிலைப்போல அலைந்து திரியும் வாழ்க்கை…இந்த மனநிலைகள் எல்லாம் அந்த கொற்றவையின் வரண்ட மண் உருவாக்குவது தானே…மண்தான் மனித இயல்புகளை நிர்ணயிப்பதாக நினைக்கிறீர்களா? பாலைநிலத்து தாவரங்களைப்போல கிளைகளை மறுத்து, இலைகளை முட்களாக்கிக் கொள்ளும் வாழ்க்கை…

மண் தான் மனிதனை உருவாக்கிறது. எளிய வாசகமாக இருந்தாலும் அது தான் உண்மை. பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கும் இது பொருந்தும். ஊரின் இயல்பும் வேகமும் ஆசைகளும் மனிதர்களின் மீதும் படிந்துவிடுகிறது. மனிதர்கள் காற்றிலும் வேர்விட்டு வளரக்கூடிய தாவரம் போன்றவர்கள். எந்த சூழலிலும் அவர்களால் வாழ முடியும். அவர்களை வழிநடத்துவது கனவுகள் மற்றும் ஆசைகள். ஆசைகளின் பட்டியல் முடிவற்றது. ஆசைக்கும் அதை அடைவதற்குமான வழிகள் எளிதானதில்லை. இந்த போராட்டத்தில் ஒருவன் நிறைய இழக்கிறான். குறைவான மகிழ்ச்சி அடைகிறான். இந்த நாவல் பல்வகை ஆசைகளையும் அதனால் ஏற்பட்ட வீழ்ச்சியினையும் பேசுகிறது. உலகியல் செயல்களுக்கும் நோய்களுக்குமான உறவை பேசுகிறது. மருத்துவமனைகளின் தோற்றம் பற்றி எழுதும் போது பூக்கோ மருத்துவரின் வீடும் மருத்துவமனையும் தனித்தனியாக மாறிய பிறகு அது வணிகமாக துவங்கிவிட்டது என்கிறார். மருத்துவத்தோடு எந்த தொடர்பும் இல்லாத ஒருவர் பணமுதலீடு செய்து இன்று மருத்துவமனை நடத்த முடியும். காரணம் அது ஒரு வணிகமாக கருதப்படுகிறது. மருத்துவம் இப்படி மாறியிருப்பது அபாயகரமானது.


1.7எஸ்.ராவும் கூட அந்த மண்ணில் அவர்களுடனிருந்து கொண்டலுவாக,ஏலனாக கனிந்ததுதான் துயிலாக மாறியிருக்கிறது என்று தோன்றுகிறது. அந்த உணர்தலை பகிர முடியுமா? 

ஒரு எழுத்தாளனாக துயில் எழுதி முடிக்கும்வரை ரோகிகளில் ஒருவனாக நானும் தெக்கோடை நோக்கி சென்றேன். துயில்தரு மாதாவை தரிசனம் செய்தேன். நாவலில் நான்கு வகையான பெண் அடையாளப்படுத்தபடுகிறார்கள். ஒன்று புனிதமான துயில்தரு மாதா. இரண்டாவது கொண்டலு அக்கா என்ற அன்னையின் வடிவம். மூன்று கடற்கன்னி என்ற மனைவியின் வடிவம். நான்கு ஆலன் பவர் என்ற மகளின் வடிவம். அவள் எங்கோ பிறந்து இங்கே வந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சேவை செய்கிறாள். இந்த நான்கு பெண்களுக்குள் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.  இன்னொரு பக்கம் ரோகிகள். அவர்கள் கடந்தகாலத்தின் நினைவுகளுடன் அலையாடுகிறார்கள். நோயை விடவும் உலகத்தால் புறக்கணிக்கபடுகிறோம் என்பதே அவர்களை அதிகம் வேதனைப்படுத்துகிறது. 

18.நாவலை முதன்முறை வாசித்துமுடிக்கும்வரை என் பொதுபுத்தி இடையில் நின்று மறுதலித்து கொண்டே இருந்தது. நாவலை வாசித்துமுடிக்கும் போது என்னை அறியாமலேயே அந்த கரடுமுரடான இயல்புகள் மேல் இருந்த பார்வை கனிந்திருந்ததை பதட்டத்துடன் உணர்ந்தேன்… தவறுகள்,குற்றங்கள் என்று கறாராக நமக்கு கற்பிக்கப்பட்டவைகளை என்புத்தி மறுபரிசீலனை செய்யத்தொடங்கியது. குற்றங்கள் பின்உள்ள ஆதாரங்களை நாவல் நமக்கு புரிய வைப்பதால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. எஸ்.ராவின் எழுத்தின் அடிநாதமாக இதை கொள்ளலாமா?

நோயை விடவும் அதைப்பற்றி அச்சத்தால் நாம் அதிகம் பீடிக்கப்பட்டிருக்கிறோம். நோய் வந்துவிடுமோ எனப் பயந்து எதையெதையோ செய்கிறோம். நோயிற்கு சிகிட்சை எடுக்கும் போதும் மருத்துவரிடம் நம்பிக்கை வருவதில்லை. புதிது புதிதாக மருத்துவர்களை தேடிக் கொண்டேயிருக்கிறோம். நோயிலிருந்து உடனே விடுபட வேண்டும் என்று துடிக்கிறோம். இந்த நாவல் அந்த மனத்தடைகளை கேள்வி கேட்கிறது. மருத்துவர்கள் உடலை ஆய்வு செய்வது போல நிதானமாக, கவனமாக அக்கறையுடன் புரிதலை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

19.நிலம் மாறுபாடுகளை உருவாக்க கூடியதா, ஏதோ ஒருதன்மையில் எந்த நிலமும் வாழ்வளிப்பதாகவே உள்ளது என்பதுதான் நிலத்தின் ஆதாரத்தன்மை இல்லையா?

அந்தக் காலத்தில் காசநோய் கொண்டவர்களுக்கு இதமான சூழல் கொண்ட இடங்களில் போய் ஒய்வெடுக்கச் சொல்வார்கள். ஆன்டன் செகாவ்  காசநோயோடு போராடிய போது பேடன்பேடன் என்ற சுகவாசஸ்தலம் ஒன்றில் தங்கி சிகிட்சை பெற்றிருக்கிறார். இப்படி நிலம் மாறும் நோய் குறிகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும் என்பது பொதுவான நம்பிக்கை. உண்மையும் கூட. புதிய நிலவெளியில் வாழ முற்படுகிறவர்களில் சிலர் தான் அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்கள். உடலும் ஒத்துப்போகிறது. பலருக்கு அது ஒவ்வாமை தான். குளிர்ச்சியான இடங்களை தேடி வெள்ளைக்காரர்கள் ஒடியது இப்படி தானே. நிலத்தை இன்றைய மனிதன் புரிந்து கொள்ளவில்லை. அதன் குரலுக்கு இடமேயில்லை. நிலம் தான் கனியாகிறது. மலராகிறது. தானியமாகிறது. இதை மனிதர்கள் உபயோகப் பொருளாக மட்டுமே நினைக்கிறார்கள். இயற்கையின் கருணையை, அன்பை புரிந்து கொள்ளாத சமூகம் பேரிழப்பை சந்திக்கும் என்பதே வரலாறு. 



20.இத்தனை கடும்சுரத்தின் நடுவே ஒருவர், பெயர் ஊர் எதுவும் தெரியாத ஒரு பெண்ணிற்காக வாழ்நாளின் வயோதிகம் வரை அவள் நோயின்றி வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதற்காக வருகிறார்…நோய்மைகளில் நிறைவான நோயாக இருக்கிறதே என்று தோன்றியது. மனிதர்களின் விசித்திரங்கள் முடிவே இல்லாதவை இல்லையா?

இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமாக மனிதர்கள் வசிக்கிறார்கள்  என்றால் நூறு கோடிக்கும் மேலான விசித்திரங்கள் இருக்கின்றன என்றே அர்த்தம் 

மனித விசித்திரங்களால் உருவாகும் நெருக்கடிகளும் பாதிப்புகளும் நினைத்துப் பார்க்க முடியாதவை. சிலர் வயதாக வயதாக கனிந்துவிடுகிறார்கள். சிலர் மூர்க்கமாகியும் விடுகிறார்கள்.  இந்த நாவலை வாசித்த ஒரு மனநல மருத்துவர் இதன் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் என்ன வகையான மனநலப்பிரச்சைன உள்ளது. அதற்கு என்ன மருந்து என ஒரு பட்டியல் அனுப்பி வைத்திருந்தார். எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. நான் எழுதி மனித விசித்திரங்களைப் பற்றி மட்டுமே.

21. விருப்பு, வெறுப்பு, அச்சம்,கோபம், தாபம், காமம்,பணம் மனித உணர்வுகள் அனைத்துமே நோயாகும் வாய்ப்புள்ளவை என்று நாவல் உணர்த்துகிறதே?

அடக்கிவைக்கபட்ட எல்லா உணர்ச்சிகளும் ஒருவகையில் நோயாக வெளிப்படுகின்றன. உரையாடலும் கூடி மகிழ்வதும். ஆடிப்பாடுவதும் சேர்ந்து பயணிப்பதும், சுதந்திரமாக விரும்பியதை அனுபவிப்பதும் இதற்கான வடிகாலாக கருதப்பட்டன. பொருளியல் தேடலில் இன்று அதிகம் அடிப்படை உணர்வுகள் ஒடுக்கபடுகின்றன. தான் சுதந்திரமாக நடத்தப்படவில்லை என்ற உணர்வு பலருக்கும் இருக்கிறது. ஒடுக்கப்படுதல் எல்லா நிலைகளிலும் நடைபெறுகிறது. அது போலவே வேலைப்பளு, அதிகார துஷ்பிரயோகம். பணத்தாசை, பேராசை இவை மனிதரிகளின் உடலையும் மனதையும் மோசமாக பாதிக்கிறது. வீழ்ச்சியுற்ற ஒவ்வொரு மனிதனும் சொல்வதற்கு நிறைய கதைகள் வைத்திருக்கிறான். அதை தான் இந்த நாவலில் காணுகிறோம். 

22.குரூரம் என்பதை வாழ்வின் நடைமுறையாக மாற்றி வைத்திருக்கிறது இயற்கை என்று நாவலில் வரும் இடத்தை முக்கியமாக நினைக்கிறேன். இப்படியாக இருக்கும் போது மனிதர்கள் மேல் அவனுடைய செய்கைகளுக்கான பழியை முழுவதுமாக சுமத்த முடியாது என்றே தோன்றுகிறது

இயற்கை எப்போதும் கனிவானதில்லை. அது மூர்க்கமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். ரம்மியமான கடலில் தான் சுனாமி தோன்றுகிறது. அமைதியான பூமி தான் பூகம்பத்தில் மனிதர்களை வாறி விழுங்குகிறது. இயற்கை வளங்களை நாம் சூறையாடுகிறோம். சமயத்தில் அதுவும் நம்மை சூறையாடிவிடுகிறது. இயற்கையை புரிந்து கொள்வது காலம் காலமாக மனிதர்கள் மேற்கொண்டு வரும் முயற்சி. இத்தனை நூற்றாண்டுகளை கடந்தும் அதில் மனிதன் முழுமையாக வெற்றி கொள்ளவில்லை. இயற்கையின் புதிர்தன்மையில் கொஞ்சம் விலகி இருக்கிறது அவ்வளவு தான். இந்த நூற்றாண்டில் இயற்கை அழிக்கப்பட்டது போல உலகில் எப்போதும் அழிக்கப்பட்டதில்லை. இதன் விளைவுகளை தான் நாம் இப்போது அனுபவித்து வருகிறோம்.

23.சகிப்புத்தன்மை ,காத்திருப்பு என்பது இயற்கையின் மாறாத செயல். அதையே இந்த மண்ணின் மக்கள் தங்கள் இயல்புகளாக கொண்டுள்ளதாக நாவல் சொல்கிறது. நாவல் நெடுக இந்த ஆதாரம் தான் அவர்கள் பிழைத்திருப்பதற்கான வலிமையாக கொள்ளலாமா?

உண்மை தான். விவசாயிகளை போல காத்திருப்பவர்களை காணவே முடியாது. அவர்களுக்கு எதுவும் எளிதாக கிடைத்துவிடவில்லை. அது போலவே எளிய மனிதர்கள் உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கலை பெரிதாக்குவதில்லை. விட்டுக் கொடுக்கிறார்கள். சகித்துக் கொள்கிறார்கள். அல்லது ஒதுங்கிக் கொள்கிறார்கள். இன்று எதற்காக இவ்வளவு பரபரப்பான வாழ்க்கையை மேற்கொள்கிறோம் என எவருக்கும் தெரியவில்லை. பாஸ்ட்பார்வேடில் சினிமா பார்ப்பது போல உள்ளது. கொஞ்சம் நிதானமாக, அமைதியாக, எளிமையாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் திண்டாடுகிறார்கள்.  இந்த வேகம் பரபரப்பு பேராசை உங்களை எங்கே கொண்டு செல்லும் என்பதை துயிலில் காணலாம்

24.நாவலில் உள்ள மருத்துவமுறைகள் பற்றி….

இந்த நாவலில் மூன்று வகை மருத்துவத்தை பற்றி எழுதியிருக்கிறேன் . மதமும் மருத்துவமும் பற்றிய விவாதமும் நடக்கிறது. ஒரு நாவல் என்பது என்வரையில் கதையை மட்டும் சொல்வதற்காக வடிவில்லை. கதையின் வழியே அது நிறைய பேச வேண்டியிருக்கிறது. விவாதிக்க வேண்டியிருக்கிறது. அதை தான் துயில் செய்துள்ளதாக நினைக்கிறேன்.


•••

இந்த நேர்காணல் புத்தகமாக வந்துள்ளது.

https://kamaladeviwrites.blogspot.com/2022/02/blog-post_13.html












Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...